Saturday, June 8, 2019

04.61 – கற்குடி (திருக்கற்குடி) ('உய்யக்கொண்டான்மலை')


04.61 – கற்குடி (திருக்கற்குடி) ('உய்யக்கொண்டான்மலை')

2014-05-03
கற்குடி (திருக்கற்குடி) (திருச்சிராப்பள்ளி அருகுள்ள 'உய்யக்கொண்டான்மலை')
----------------------------------
(எழுசீர்ச் சந்த விருத்தம் - 'தான தானன தான தானன தான தானன தானனா" என்ற சந்தம்.
ஒரோவழி 'தான' என்பது 'தனன' என்று வரும்.
(சம்பந்தர் தேவாரம் - 3.39.1 - "மானி னேர்விழி மாத ராய்வழு திக்கு மாபெருந் தேவிகேள்")
(சுந்தரர் தேவாரம் - 7.48.1 - "மற்றுப் பற்றெனக் கின்றி நின்திருப் பாத மேமனம் பாவித்தேன்")

1)
பத்தி யாலொரு பித்தன் என்கினும் அத்தன் என்கினும் அன்பனாய்
முத்தி நல்கிடும் முக்கண் நாயகன் ஒப்பி லானொரு மூப்பிலான்
மத்த மாமலர் வன்னி வாண்மதி சூடி வானவர் வாழவே
கைத்த நஞ்சினை உண்ட அற்புதன் நல்ல கற்குடி வெற்பனே.

பத்தியால் ஒரு பித்தன் என்கினும் அத்தன் என்கினும் அன்பனாய் முத்தி நல்கிடும் முக்கண் நாயகன் - அடியவர்கள் அன்போடு பித்தன் என்றாலும் தந்தை என்றாலும் அன்புடையவன் ஆகி அவர்களுக்கு முக்தியைக் கொடுக்கும் முக்கட்பெருமான்; (பத்தி - பக்தி); (அத்தன் - தந்தை);
ஒப்பு இலான் ஒரு மூப்பு இலான் - ஈடில்லாதவன், என்றும் இளமையோடு இருப்பவன்;
மத்த மாமலர் வன்னி வாள்மதி சூடி - ஊமத்தம்பூவையும் வன்னி இலையையும் ஒளியுடைய திங்களையும் சூடியவன்;
வானவர் வாழவே கைத்த நஞ்சினை உண்ட அற்புதன் - தேவர்கள் உய்யும்பொருட்டு கசப்பான ஆலகால விடத்தை உண்ட அற்புதன்;
நல்ல கற்குடி வெற்பனே - நல்ல திருக்கற்குடி மலையில் எழுந்தருளிய சிவபெருமான்;

நல்ல கற்குடி - (சம்பந்தர் தேவாரம் - 2.70.3 - “புகலி சிரபுரம் … நல்ல கழுமலநாங் கைதொழுது பாடு மூரே” - நாம் கைதொழுது பாடும் ஊர் புகலி முதலாக பூந்தராய் உள்ளிட்ட பன்னிரு திருப்பெயர்களைக்கொண்ட, சிவபெருமானுக்கு இன்பம் தரும் நல்ல கழுமலமாகும்);
(அப்பர் தேவாரம் - 5.43.10 - “...நல்ல நல்ல மெனும்பெயர் நாவினால் சொல்ல வல்லவர் தூநெறி சேர்வரே.”);

2)
ஆல நஞ்சது கோல மஞ்சன நீலம் ஆக்கிய கண்டனே
பால நேத்திர சூல மேந்திய பண்ப னேபிறை சூடினாய்
ஓலம் என்றவர் அச்சம் அற்றுயிர் வாழ ஓச்சிய காலினால்
காலன் நெஞ்சிலு தைத்த அற்புதன் நல்ல கற்குடி வெற்பனே.

ஆல நஞ்சு அது கோல மஞ்சு அன நீலம் ஆக்கிய கண்டனே - ஆலகால விடத்தை அழகிய மேகம் போலக் கண்டத்தில் கரிய மணி ஆக்கியவனே;
பால நேத்திர - நெற்றிக்கண்ணனே; (பாலம் - நெற்றி; भालम् - 1 The forehead; भाललोचनः an epithet of Śiva):
சூலம் ஏந்திய பண்பனே - சூலபாணியே;
பிறை சூடினாய் - சந்திரசேகரனே;
ஓலம் என்றவர் அச்சம் அற்று உயிர் வாழ - ஓலம் என்று உன்னைச் சரணடைந்த மார்க்கண்டேயர் பயம் நீங்கி என்றும் உயிரோடு வாழும்படி; (ஓலம் - அபயம் வேண்டும் குறிப்புமொழி);
ஓச்சிய காலினால் காலன் நெஞ்சில் உதைத்த அற்புதன் - உயர்த்திய திருவடியால் கூற்றுவனின் மார்பில் உதைத்த அற்புதன்; (ஓச்சுதல் - உயர்த்துதல்);
நல்ல கற்குடி வெற்பனே - நல்ல திருக்கற்குடி மலையில் எழுந்தருளிய சிவபெருமான்;

3)
வேளை வந்தது கொல்ல என்றொரு மேதி மேல்வரு காலனே
மாள மார்பினில் அன்று தைத்தவன் அங்கை மான்மழு வாளினான்
கோள ராவொடு கொன்றை சூடிய கூத்தன் ஆழ்கடல் நஞ்சினால்
காள கண்டமி லங்கும் அற்புதன் நல்ல கற்குடி வெற்பனே.

வேளை வந்தது கொல்ல என்று ஒரு மேதிமேல் வரு காலனே மாள மார்பினில் அன்று உதைத்தவன் - உயிரைப் பறிக்கும் தருணம் வந்தது என்று ஓர் எருமையின்மேல் வந்த காலனே இறக்கும்படி அவன் மார்பில் முன்பு உதைத்த பெருமான்;
அங்கை மான் மழுவாளினான் - கையில் மான்கன்றையும் மழுவையும் ஏந்தியவன்;
கோள் அராவொடு கொன்றை சூடிய கூத்தன் - கொடிய பாம்பையும் கொன்றைமலரையும் சூடிய நடராஜன்; (கோள் அரா - கொல்லும் பாம்பு );
ஆழ்கடல் நஞ்சினால் காளகண்டம் இலங்கும் அற்புதன் - ஆழம் மிக்க கடலில் விளைந்த விடதால் கரிய கண்டம் விளங்குகின்ற அற்புதன்; (காளகண்டம் - நீலகண்டம்);
நல்ல கற்குடி வெற்பனே - நல்ல திருக்கற்குடி மலையில் எழுந்தருளிய சிவபெருமான்;

4)
நடலை ஒன்றில ராகி நாடொறும் நாவி னால்தமிழ் ஓதினால்
உடலை நல்கிடும் முன்னை வல்வினை ஓட்டி உம்பரும் நல்குவான்
சுடலை நீறணி சூலன் அஞ்சடை மீது தூமதி சூடினான்
கடலின் நஞ்சினை உண்ட அற்புதன் நல்ல கற்குடி வெற்பனே.

நடலை ஒன்று இலர் ஆகி நாள்தொறும் நாவினால் தமிழ் ஓதினால் - சிறிதும் வஞ்சம் இல்லாமல் தினமும் தமிழ்ப்பாமாலைகளைப் பாடி வழிபட்டால்; (நடலை - பொய்; வஞ்சம்); (தமிழ் - தேவாரம், திருவாசகம்);
உடலை நல்கிடும் முன்னை வல்வினை ஓட்டி உம்பரும் நல்குவான் - பிறவிகளைத் தருகின்ற பழவினையைத் தீர்த்து அவ்வடியார்களுக்கு (இப்பிறவி இன்பங்களும் பிறகு) சிவலோகமும் அருள்பவன்;;
சுடலை நீறு அணி சூலன் - சுடுகாட்டுச் சாம்பலைப் பூசிய சூலபாணி; (சுடலை - சுடுகாடு);
அஞ்சடைமீது தூமதி சூடினான் - அழகிய சடையின்மேல் தூய திங்களை அணிந்தவன்; (அம் - அழகிய);
கடலின் நஞ்சினை உண்ட அற்புதன் - ஆலகால விடத்தை உண்ட அற்புதன்;
நல்ல கற்குடி வெற்பனே - நல்ல திருக்கற்குடி மலையில் எழுந்தருளிய சிவபெருமான்;

(சிவபோகசாரம் - # 101 -
சும்மா தனுவருமோ? சும்மா பிணிவருமோ?
சும்மா வருமோ சுகதுக்கம்? நம்மால்முன்
செய்தவினைக் கீடாச் சிவனருள்செய் விப்பதென்றால்
எய்தவனை நாடி யிரு.);

5)
பெரிய முப்புரம் எய்த வன்பிறை கொன்றை சூடிய பிஞ்ஞகன்
நரியை யும்பரி ஆக்கு வான்அரு நட்டம் நள்ளிருள் ஆடுவான்
அரியன் அன்பரின் நெஞ்சில் நின்றவன் அண்டு வானவர் உய்யவே
கரிய நஞ்சினை உண்ட செய்யவன் நல்ல கற்குடி வெற்பனே.

பெரிய முப்புரம் எய்தவன் - வலிய முப்புரங்களை ஓர் அம்பால் எய்து அழித்தவன்;
பிறை கொன்றை சூடிய பிஞ்ஞகன் - பிறைச்சந்திரனையும் கொன்றைமலரையும் சூடிய தலைக்கோலம் உடையவன்; (பிஞ்ஞகன் - தலைக்கோலம் உடையவன்);
நரியையும் பரி ஆக்குவான் - நரிகளைக் குதிரைகள் ஆக்குபவன்; (திருவிளையாடற் புராணத்திற் காண்க);
அரு நட்டம் நள்ளிருள் ஆடுவான் - நள்ளிரவில் அரிய கூத்தினை ஆடுபவன்;
அரியன் - அரியவன்;
அன்பரின் நெஞ்சில் நின்றவன் - பக்தர்களது நெஞ்சில் நீங்காமல் உறைபவன்;
அண்டு வானவர் உய்யவே கரிய நஞ்சினை உண்ட செய்யவன் - சரணடைந்த தேவர்கள் உய்யும்படி கரிய ஆலகால விடத்தை உண்ட செம்மேனியன்; (அண்டுதல் - ஆசிரயித்தல்; சரணடைதல்); (செய்யவன் - செம்மேனி உடையவன்);
நல்ல கற்குடி வெற்பனே - நல்ல திருக்கற்குடி மலையில் எழுந்தருளிய சிவபெருமான்;

6)
நாம ணத்திட நால்வர் இன்தமிழ் ஓதி நாள்தொறும் அன்பினால்
தாம ரைப்பதம் ஏத்து வார்வினை சாய்த்து வான்தரு சங்கரன்
மாம றைப்பொருள் ஆயி னான்மலை மங்கை பங்குடை எம்பிரான்
காம னைப்பொடி செய்த கண்ணுதல் நல்ல கற்குடி வெற்பனே.

நா மணத்திட நால்வர் இன்தமிழ் ஓதி நாள்தொறும் அன்பினால் - நால்வர் அருளிய தேவாரம் திருவாசகம் இவற்றைத் தினமும் நாவாரப் பாடி பக்தியோடு;
தாமரைப்பதம் ஏத்துவார் வினை சாய்த்து வான் தரு சங்கரன் - திருவடித்தாமரையை வழிபடும் பக்தர்களது வினைகளையெல்லாம் அழித்து அவர்களுக்கு வானுலக வாழ்வைத் தரும் சங்கரன்; (சாய்த்தல் - அழித்தல் To destroy);
மாமறைப்பொருள் ஆயினான் - நால்வேதங்கள் போற்றும் மெய்ப்பொருள்;
மலைமங்கை பங்குடை எம்பிரான் - உமையை ஒரு பங்கில் உடையவன் எம்பெருமான்;
காமனைப் பொடி செய்த கண்ணுதல் - மன்மதனை நெற்றிக்கண்ணால் எரித்துச் சாம்பலாக்கியவன்;
நல்ல கற்குடி வெற்பனே - நல்ல திருக்கற்குடி மலையில் எழுந்தருளிய சிவபெருமான்;

7)
கூனி லாவொடு கோள ராவினை வேணி மேற்குடி ஏற்றினான்
வானி லோடிய வல்ல ரண்களை மாய்த்த மாமலை வில்லினான்
தேனி லாவிய செந்த மிழ்த்தொடை செப்பு வார்வினை தீர்ப்பவன்
கானி லாடலு கந்த கண்ணுதல் நல்ல கற்குடி வெற்பனே.

கூன் நிலாவொடு கோள் அராவினை வேணிமேற் குடி ஏற்றினான் - வளைந்த பிறைச்சந்திரனோடு கொடிய பாம்பையும் சடைமேல் வாழவைத்தவன்; (கூன் - வளைவு); (கோள் அரா - கொல்லும் பாம்பு ); (வேணி - சடை);
வானில் ஓடிய வல்லரண்களை மாய்த்த மாமலை வில்லினான் - எங்கும் பறந்து திரிந்து இடர்செய்த வலிய முப்புரங்களை மேருமலையை வில்லாக ஏந்தி ஓர் அம்பால் அழித்தவன்;
தேன் நிலாவிய செந்தமிழ்த்தொடை செப்புவார் வினை தீர்ப்பவன் - இனிமை மிக்க செந்தமிழ்ப் பாடல்களைப் பாடி வழிபடும் பக்தர்களது வினைகளைத் தீர்ப்பவன்;
கானில் ஆடல் உகந்த கண்ணுதல் - சுடுகாட்டில் கூத்தாடுதலை விரும்பிய நெற்றிக்கண்ணன்;
நல்ல கற்குடி வெற்பனே - நல்ல திருக்கற்குடி மலையில் எழுந்தருளிய சிவபெருமான்;

8)
இறையும் எண்ணுதல் இன்றி ஏசிவி லங்கல் வீசமு னைந்தவன்
இறைகள் பத்தொடு பத்தை ஓர்விரல் இட்ட டர்த்திசை கேட்டுநாள்
நிறைய ஈந்தவன் நீறு பூசிய நெற்றி மேலொரு நேத்திரன்
கறையும் ஓர்மணி ஆன அற்புதன் நல்ல கற்குடி வெற்பனே.

இறையும் எண்ணுதல் இன்றி ஏசி விலங்கல் வீச முனைந்தவன் - கொஞ்சங்கூட எண்ணிப் பாராமல் இகழ்ந்து பேசிக் கயிலைமலையைப் பெயர்த்து எறிய முயன்ற இராவணனது; (இறையும் - சிறிது; சற்றும்); (விலங்கல் - மலை);
இறைகள் பத்தொடு பத்தை ஓர் விரல் இட்டு அடர்த்து - இருபது கைகளையும் திருப்பாத விரல் ஒன்றை ஊன்றி நசுக்கி; (இறை - முன்கை; கை); (அடர்த்தல் - நசுக்குதல்);
இசை கேட்டு நாள் நிறைய ஈந்தவன் - அவன் பாடிய இசையைக் கேட்டு அவனுக்கு நீண்ட ஆயுளைத் தந்தவன்;
நீறு பூசிய நெற்றிமேல் ஒரு நேத்திரன் - திருநிற்றைப் பூசிய நெற்றிமேல் ஒரு கண்ணை உடையவன்;
கறையும் ஓர் மணி ஆன அற்புதன் - ஆலகால விடத்தின் கறையை ஒரு நீலமணிபோல் அணிந்த அற்புதன்; (மணி - நீலமணி; ஆபரணம்);
நல்ல கற்குடி வெற்பனே - நல்ல திருக்கற்குடி மலையில் எழுந்தருளிய சிவபெருமான்;

9)
ஓத வண்ணனும் வேத னுங்கழல் உச்சி நேடிட ஓங்கினான்
நாத னேயருள் நம்ப னேயென நாவி னால்துதி பாடினால்
வாதை யேதரு பண்டை வல்வினை யாவும் மாய்த்தருள் நோக்குவான்
காத லிக்கொரு பங்க ளித்தவன் நல்ல கற்குடி வெற்பனே.

ஓத வண்ணனும் வேதனும் கழல் உச்சி நேடிட ஓங்கினான் - கடல்போல் கரிய நிறம் உடைய திருமாலும் பிரமனும் அடிமுடி தேடும்படி எல்லையின்றி ஓங்கியவன்;
நாதனே அருள் நம்பனே என நாவினால் துதி பாடினால் - "தலைவனே; நம்பனே; அருளாய்" என்று வாயார வாழ்த்தி வணங்கினால்; (நம்பன் - விரும்பத்தக்கவன்; சிவன் திருநாமம்)
வாதையே தரு பண்டை வல்வினை யாவும் மாய்த்து அருள் நோக்குவான் - துன்பமே செய்யும் பழைய வலிய வினைகள் அனைத்தையும் அழித்து அருட்கண்ணால் நோக்குபவன்; (வாதை - துன்பம்); (அப்பர் தேவாரம் - 5.47.7 - "மூக்கு வாய்செவி கண்ணுடல் ஆகிவந்து ஆக்கும் ஐவர்தம் ஆப்பை அவிழ்த்தருள் நோக்குவான்...");
காதலிக்கு ஒரு பங்கு அளித்தவன் - உமைக்குத் தன் திருமேனியில் ஒரு பாகத்தைக் கொடுத்தவன்; (காதலி - மனைவி);
நல்ல கற்குடி வெற்பனே - நல்ல திருக்கற்குடி மலையில் எழுந்தருளிய சிவபெருமான்;

10)
பொய்யை யேஉரை புல்லர் ஒண்திரு நீறு பூசிட அஞ்சுவார்
உய்ய வேண்டிலொ துக்கு வீர்அவர் ஓட்டை வார்த்தையை நாவினால்
ஐய னேஅதள் ஆடை யாயெனும் அன்பர் ஆரிடர் நீக்குவான்
கையி லோர்மழு வாள்த ரித்தவன் நல்ல கற்குடி வெற்பனே.

பொய்யையே உரை புல்லர் - எப்போதும் பொய்களையே பேசும் கீழோர்;
ஒண் திருநீறு பூசிட அஞ்சுவார் - ஒளியுடைய திருநீற்றைப் பூச அஞ்சுபவர்கள்;
உய்ய வேண்டில் ஒதுக்குவீர் அவர் ஓட்டை வார்த்தையை - அவர்களது பொருளற்ற வார்த்தைகளை, உய்யும் விருப்பம் உடையவர்களே, நீங்கள் நிராகரியுங்கள்;
நாவினால் ஐயனே அதள் ஆடையாய் எனும் அன்பர் ஆரிடர் நீக்குவான் - "நாதனே; தோலை ஆடையாக உடுத்தியவனே" என்று வாயாரப் போற்றி வழிபடும் பக்தர்களது பெரும் துன்பத்தைத் தீர்ப்பவன்; (அதள் - தோல்);
கையில் ஓர் மழுவாள் தரித்தவன் - கையில் மழுவாயுதத்தை ஏந்தியவன்;
நல்ல கற்குடி வெற்பனே - நல்ல திருக்கற்குடி மலையில் எழுந்தருளிய சிவபெருமான்;

11)
அங்கை யைக்குவி அன்பர் வாழ்வினில் இன்ப மேதரும் அங்கணன்
செங்கை யிற்றலை ஏந்தி உண்பலி தேர முன்றிலை நாடுவான்
மங்கை யைப்புடை வைத்து வான்மதி வன்னி கூவிளம் மாசுணம்
கங்கை யைச்சடை வைத்த சங்கரன் நல்ல கற்குடி வெற்பனே.

அங்கையைக் குவி அன்பர் வாழ்வினில் இன்பமே தரும் அங்கணன் - கைகூப்பி வணங்கும் பக்தர்களது வாழ்வில் இன்பமே பொங்க அருள்கின்றவன்; (அங்கணன் - அருள்நோக்கம் உடையவன் - சிவன்);
செங்கையில் தலை ஏந்தி உண்பலி தேர முன்றிலை நாடுவான் - சிவந்த கையில் பிரமன் மண்டையோட்டை ஏந்திப் பிச்சை ஏற்க வீட்டு வாயிலை அடைபவன்; (முன்றில் - வீட்டின் முன்னிடம்);
மங்கையைப் புடை வைத்து - உமையை ஒரு பக்கத்தில் கூறாகக் கொண்டு;
வான்மதி வன்னி கூவிளம் மாசுணம் கங்கையைச் சடை வைத்த சங்கரன் - அழகிய வெண்திங்கள், வன்னியிலை, வில்வம், பாம்பு, கங்கை இவற்றையெல்லாம் சடையில் அணிந்தவன், நன்மை செய்பவன்; (வான்மதி = வான் மதி / வால் மதி); (வான் - வானம்; அழகு); (வால் - வெண்மை); (மாசுணம் - பாம்பு );
நல்ல கற்குடி வெற்பனே - நல்ல திருக்கற்குடி மலையில் எழுந்தருளிய சிவபெருமான்;

அன்பொடு,
வி. சுப்பிரமணியன்

பிற்குறிப்பு :
1) கற்குடி - திருக்கற்குடி - இக்காலத்தில் 'உய்யக்கொண்டான்மலை ' என்ற பெயரில் வழங்குகின்றது. இத்தலம் திருச்சிராப்பள்ளி அருகே உள்ளது - உஜ்ஜீவநாதர் கோயில் - தினமலர் தளத்தில்: https://temple.dinamalar.com/New.php?id=154
திருக்கற்குடி - தேவாரம் தளத்தில்: http://www.thevaaram.org/thirumurai_1/koil_view.php?koil_idField=82
----------- --------------

No comments:

Post a Comment