Friday, June 21, 2019

04.65 – வலிதாயம் (பாடி)


04.65 – வலிதாயம் (பாடி)



2014-06-01
வலிதாயம் (திருவலிதாயம் - பாடி) (இது சென்னைப் புறநகர்ப் பகுதியில் உள்ளது. 'திருவல்லீஸ்வரர் கோயில்')
----------------------------------
(ஆசிரிய இணைக்குறட்டுறை. யாப்புக் குறிப்பைப் பிற்குறிப்பிற் காண்க. )
(சம்பந்தர் தேவாரம் - 1.56.1 - காரார் கொன்றை கலந்த முடியினர்)
(சம்பந்தர் தேவாரம் - 1.57.1 - ஒள்ளி துள்ளக் கதிக்கா மிவனொளி )



1)
பிறையன் பேதை பிரியாப் பெருமையன்
மறையன் மேய வலிதாயம்
நறையம் போதொடு நாடி வணங்கிடப்
பறையும் பாவம் பழிகளே.



பிறையன் பேதை பிரியாப் பெருமையன் - சந்திரசேகரன், உமையொரு பங்கன்;
மறையன் மேய வலிதாயம் - வேதமுதல்வன் உறையும் திருவலிதாயத்தை;
நறை அம் போதொடு நாடி வணங்கிடப் - அழகிய வாசமலர்களால் விரும்பி வழிபட்டால்; (நறை - தேன்; வாசனை); (அம் - அழகு); (போது - பூ; மலர்);
பறையும் பாவம் பழிகளே - பாவங்கள் பழிகள் எல்லாம் அழியும்;



2)
பித்தன் பேய்க்கணம் சூழ நடம்புரி
மத்தன் மேய வலிதாயம்
சித்தம் ஒன்றித் திருவடி போற்றிடும்
பத்தர் வல்வினை பாறுமே.



பித்தன் - பேரன்பு உடையவன்;
பேய்க்கணம் சூழ நடம்புரி மத்தன் மேய வலிதாயம் - பூதகணங்கள் சூழத் திருநடம் செய்பவனும் ஊமத்த மலரை அணிந்தவனுமான சிவபெருமான் உறையும் திருவலிதாயத்தில்;
சித்தம் ஒன்றித் திருவடி போற்றிடும் - மனம் ஒன்றித் திருவடியை வணங்கும்;
பத்தர் வல்வினை பாறுமே - பக்தர்களது வலிய வினைகள் அழியும்;



3)
அண்ணல் ஆறணி வேணியன் ஆரழல்
வண்ணன் மேய வலிதாயம்
நண்ணி நாண்மலர் தூவி வலஞ்செயல்
மண்ணில் வாரா வழிதானே.



அண்ணல் ஆறு அணி வேணியன் - தலைவன், கங்கைச்சடையன்;
ஆர் அழல் வண்ணன் மேய வலிதாயம் - தீவண்ணன் உறையும் திருவலிதாயத்தை;
நண்ணி நாண்மலர் தூவி வலஞ்செயல் - அடைந்து புத்தம்புது மலர்களைத் தூவி வலம்வருதல்;
மண்ணில் வாரா வழிதானே - பிறவாநிலையைப் பெறும் உபாயம்;



4)
பொறிய ராவணி புண்ணியன் கையில்மான்
மறியன் மேய வலிதாயம்
வெறியி லங்கு மலரிட்டு வேண்டுவார்
உறுவி னைத்தொடர் ஓயுமே.



பொறி அரா அணி புண்ணியன் - புள்ளிகளை உடைய பாம்பினை அணிந்த புண்ணியமுர்த்தி; (பொறி - பாம்பின் படத்தில் உள்ள புள்ளிகள்);
கையில் மான்மறியன் மேய வலிதாயம் - மான்கன்றை ஏந்தியவன் உறையும் திருவலிதாயத்தை;
வெறி இலங்கு மலர் இட்டு வேண்டுவார் - வாசனை கமழும் பூக்களைத் தூவி இறைஞ்சும் அடியவர்களது;
உறு வினைத்தொடர் ஓயுமே - மிக்க பழவினைப் பந்தமனது அழியும்;



5)
ஆனஞ் சாடும் அடிகள் விடையேறி
வானன் மேய வலிதாயம்
தேனன் மாமலர் சேவடித் தூவிட
ஈன மாயின இல்லையே.



ஆன் அஞ்சு ஆடும் அடிகள் - பஞ்சகவ்வியத்தால் அபிஷேகம் செய்யப்பெறும் இறைவன்; (ஆன் அஞ்சு - பசுவிடமிருந்து பெறப்படும் பால், தயிர், நெய் முதலிய ஐந்து பொருள்கள்);
விடையேறி - இடபவாகனன்;
வானன் மேய வலிதாயம் - சிவலோகன் உறையும் திருவலிதாயத்தில்; (அப்பர் தேவாரம் - 5.4.2 - "வான னைம்மதி சூடிய..." - வானன் - பரமஆகாசம் எனப்படும் சிவலோகத்துள்ளான்; ஆகாயத்தை வடிவாகக் கொண்டவன் எனினும் அமையும்);
தேனன் மாமலர் சேவடித் தூவிட- தேனும் வாசனையும் பொருந்திய சிறந்த அழகிய பூக்களைச் சிவந்த திருவடியில் தூவி வழிபட்டால்; (தேனன் மாமலர் - தேன் நன் மா மலர்);
ஈனமாயின இல்லையே - குறைகள்/குற்றங்கள் தீரும்;



6)
நதியன் வேணியில் நாகம் நறுங்கொன்றை
மதியன் மேய வலிதாயம்
புதிய பூவொடு போற்றிசெய் வாரருள்
நிதியர் ஆவது நேருமே.



நதியன் வேணியில் நாகம் நறுங்கொன்றை மதியன் மேய வலிதாயம் - சடையில் கங்கை, பாம்பு, வாசமலர்க்கொன்றை, பிறைச்சந்திரன் இவற்றைச் சூடிய பெருமான் உறையும் திருவலிதாயத்தை;
புதிய பூவொடு போற்றிசெய்வார் - அன்று புத்த பூக்களால் வழிபடும் பக்தர்கள்;
அருள் நிதியர் ஆவது நேரும் - அருள்நிதியைப் பெற்றவர்கள் ஆவது நிகழும்; (நேர்தல் - நிகழ்தல்);



7)
உரகத் தாரினன் என்றும் ஒளிப்பிலா
வரதன் மேய வலிதாயம்
பரவிப் பாடிப் பணிந்தெழு பத்தரை
விரவி டாவல் வினைகளே.



உரகத் தாரினன் - பாம்புமாலை அணிந்தவன்; (உரகம் - பாம்பு); (தார் - மாலை);
என்றும் ஒளிப்பு இலா வரதன் மேய வலிதாயம் - வஞ்சனையின்றி வரங்களை வாரி வழங்கும் பெருமான் உறையும் திருவலிதாயத்தை;
பரவிப் பாடிப் பணிந்தெழு பத்தரை - போற்றித் துதித்து வணங்கும் பக்தர்களை;
விரவிடா வல்வினைகளே - வல்வினைகள் நெருங்கமாட்டா; (விரவுதல் - அடைதல்);



8)
அஞ்சொ டஞ்சு தலையை அடர்த்தருள்
மஞ்சன் மேய வலிதாயம்
நெஞ்சில் அன்பொடு போற்றி நினைந்திட
வஞ்ச வல்வினை மாயுமே.



அஞ்சொடு அஞ்சு தலையை அடர்த்து அருள் - பத்துத்தலைகளை உடைய இராவணனை நசுக்கி அருள்செய்த;
மஞ்சன் மேய வலிதாயம் - வீரனான சிவபெருமான் உறையும் திருவலிதாயத்தை; (மஞ்சன் - மைந்தன் - வீரன்);
நெஞ்சில் அன்பொடு போற்றி நினைந்திட - மனத்தில் பக்தியோடு தியானித்தால்;
வஞ்ச வல்வினை மாயுமே - தீய வலிய வினைகள் அழியும்;



9)
அன்னம் பன்றி அறிவொணாச் சோதியாம்
மன்னன் மேய வலிதாயம்
உன்னி ஏத்திடும் உள்ளம் உடையவர்
முன்னை வல்வினை முஞ்சுமே.



அன்னம் பன்றி அறிவு ஒணாச் சோதியாம் - பிரமன் திருமால் இவர்களால் அறிய இயலாத சோதி ஆன;
மன்னன் மேய வலிதாயம் - தலைவன் உறையும் திருவலிதாயத்தை;
உன்னி ஏத்திடும் உள்ளம் உடையவர் - தியானிக்கும் நெஞ்சு உடைய பக்தர்களது; (உன்னுதல் - தியானித்தல்; எண்ணுதல்);
முன்னை வல்வினை முஞ்சுமே - பழவினை அழியும்; (முஞ்சுதல் - சாதல் (To die); (திருவாசகம் - போற்றித் திருவகவல் - 8.4 - அடி 19 - “அஞ்சு திங்களின் முஞ்சுதல் பிழைத்தும்”);



10)
கள்ளம் பேசும் கயவர்சொல் நீங்குமின்
வள்ளல் மேய வலிதாயம்
உள்ளம் ஒன்றி உகந்துரை செய்திட
விள்ளும் தொல்லை வினைகளே.



கள்ளம் பேசும் கயவர் சொல் நீங்குமின் - வஞ்சனை பேசும் தீயவர்களது சொற்களை நீங்குங்கள்;
வள்ளல் மேய வலிதாயம் - வள்ளலான சிவபெருமான் உறையும் திருவலிதாயத்தை;
உள்ளம் ஒன்றி உகந்து உரை செய்திட - மனம் ஒன்றி மகிழ்ந்து துதித்தால்; (உகத்தல் - விரும்புதல்);
விள்ளும் தொல்லை வினைகளே - பழவினைகள் நீங்கும்; (விள்ளுதல் - நீங்குதல்); (தொல்லை - பழைய);



11)
ஐயன் தேவர்க் கருள்புரி கண்டத்தில்
மையன் மேய வலிதாயம்
நையும் நெஞ்சொடு நாளும் தொழுதெழ
வெய்ய வல்வினை வீடுமே.



ஐயன் - தலைவன்;
தேவர்க்கு அருள்புரி கண்டத்தில் மையன் மேய வலிதாயம் - தேவருக்கு அருள்புரிந்த நீலகண்டன் உறையும் திருவலிதாயத்தை;
நையும் நெஞ்சொடு நாளும் தொழுதெழ - மனம் உருகித் தினமும் வழிபட்டால்;
வெய்ய வல்வினை வீடுமே - கொடிய வினைகள் அழியும்; (வெய்ய - கொடிய; வெப்பமான); (வீடுதல் - விடுதல்; அழிதல்);



அன்பொடு,
வி. சுப்பிரமணியன்



பிற்குறிப்புகள் :
1) யாப்புக் குறிப்பு :
ஆசிரிய இணைக்குறட்டுறை. 1, 3-ஆம் அடிகள் - அளவடி. 2, 4-ஆம் அடிகள்: சிந்தடி.
அடி 1 & 3: தான தானன தானன தானன
அடி 2 & 4: தான தானன தானானா
ஒவ்வோர் அடியிலும்:
  • 2-ஆம் சீர் நேரசையில் தொடங்கும்.
  • 2, 3, 4-ஆம் சீர்களிடையே வெண்டளை பயிலும்.
  • ஈற்றுச்சீரைத் தவிர மற்ற சீர்களில் விளச்சீர் வரும் இடத்தில் மாச்சீர் வரலாம். அப்படி அங்கு மாச்சீர் வரின் அதே அடியில் அடுத்த சீர் நிரையசையில் தொடங்கும்.
  • விளச்சீர் வரும் இடத்தில் ஒரோவழி மாங்காய்ச்சீரும் வரும்.
அதாவது:
  • 1, 3-ஆம் அடிகள் - திருக்குறுந்தொகை அமைப்பு; 2, 3, 4-ஆம் சீர்களுக்கிடையே வெண்டளை பயிலும். நேரசையில் தொடங்கில் அடிக்குப் 11 எழுத்து / நிரையசையில் தொடங்கில் அடிக்குப் 12 எழுத்து.
  • 2, 4-ஆம் அடிகள் - அதே போல் - 2,3 சீர்களுக்கிடையே வெண்டளை பயிலும். நேரசையில் தொடங்கில் அடிக்கு 8 எழுத்து / நிரையசையில் தொடங்கில் அடிக்கு 9 எழுத்து.



உதாரணங்கள்:
a) சம்பந்தர் தேவாரம் - 1.57.1 -
"ஒள்ளி துள்ளக் கதிக்கா மிவனொளி
வெள்ளி யானுறை வேற்காடு
உள்ளி யாருயர்ந் தாரிவ் வுலகினில்
தெள்ளி யாரவர் தேவரே.");
b) சம்பந்தர் தேவாரம் - 1.56.1 -
காரார் கொன்றை கலந்த முடியினர்
சீரார் சிந்தை செலச்செய்தார்
பாரார் நாளும் பரவிய பாற்றுறை
ஆரா ராதி முதல்வரே.



2) திருவலிதாயம் - (பாடி) - வல்லீஸ்வரர் கோயில் : தினமலர் தளத்தில் : https://temple.dinamalar.com/New.php?id=13
தேவாரம் தளத்தில்: http://www.thevaaram.org/thirumurai_1/koil_view.php?koil_idField=246
----------- --------------

No comments:

Post a Comment