Friday, October 27, 2017

04.01 – புறம்பயம் (திருப்புறம்பயம் - 'திருப்புறம்பியம்' )

04.01புறம்பயம் (திருப்புறம்பயம் - 'திருப்புறம்பியம்' )


2013-07-20
புறம்பயம் (திருப்புறம்பயம் - இக்காலத்தில் 'திருப்புறம்பியம்'))
----------------------------------
(எழுசீர் ஆசிரிய விருத்தம் - 'விளம் மா விளம் மா விளம் விளம் மா' - வாய்பாடு)
(சம்பந்தர் தேவாரம் - 3.120.1 - "மங்கையர்க் கரசி வளவர்கோன் பாவை" என்ற பதிகத்தின் யாப்பை ஒத்தது)


1)
எதுநமன் வருநாள் என்றெவர் அறிவார்
.. என்பதை நினைமட நெஞ்சே
மதுமலர்க் கொன்றை கூவிளம் மத்தம்
.. வார்சடை யிற்புனை மைந்தன்
பதுமநற் பாதம் பரவிடும் அன்பர்
.. பழவினை தீர்ப்பவன் பதிதான்
புதுமலர் நாடி மதுகரம் பாடும்
.. புறம்பயம் தொழப்பயம் போமே.


மைந்தன் - இளைஞன்; வீரன்;
மேவுதல் - உறைதல்; விரும்புதல்;
மதுகரம் - தேனீ;
நாடுதல் - கிட்டுதல் ( To reach, approach); ஆராய்தல்; விரும்புதல்;
பயம் - அச்சம்;
போம் - போகும் - நீங்கும்;


எது நமன் வரு நாள் என்று எவர் அறிவார் என்பதை நினை மட நெஞ்சே - "எந்த நாள் காலன் வரும் நாள் என்று யார் அறிவார்" என்பதை என் பேதைமனமே, நீ நினைவாயாக;
மதுமலர்க் கொன்றை கூவிளம் மத்தம் வார் சடையிற் புனை மைந்தன் - தேன் நிறைந்த கொன்றைமலர், வில்வம், ஊமத்தமலர் இவற்றையெல்லாம் நீள்சடையில் அணியும் வீரனுடைய;
பதும நற் பாதம் பரவிடும் அன்பர் பழவினை தீர்ப்பவன் பதிதான் - தாமரைமலர் போன்ற நல்ல திருவடியைப் போற்றும் பக்தர்களது பழைய வினைகளையெல்லாம் தீர்க்கின்ற சிவபெருமான் உறையும் தலம் ஆன;
புதுமலர் நாடி மதுகரம் பாடும் புறம்பயம் தொழப்பயம் போமே - புதிய மலர்களை அடைந்து வண்டுகள் ரீங்காரம் செய்யும் திருப்புறம்பயத்தைத் தொழுதால் நம் அச்சம் நீங்கும்;


2)
மாமலர் ஐந்தை வாளியா ஏந்தி
.. வந்தொரு கணைதனை எய்த
காமனைக் காய்ந்த கண்ணுதல் அண்ணல்
.. கையினில் மூவிலை வேலன்
தூமறை நாவன் துணையிலாத் தேவன்
.. தொல்வினை தீர்ப்பவன் பதிதான்
பூமரு வறுகால் காமரம் பாடும்
.. புறம்பயம் தொழப்பயம் போமே.


மாமலர் ஐந்து - மன்மதன் பூங்கணைகள் -
வாளி - அம்பு;
மூவிலை வேலன் - திரிசூலம் ஏந்தியவன்;
துணை - ஒப்பு; நிகர்;
பூ மருவு அறுகால் - பூவை அடையும் வண்டு;
காமரம் - சீகாமரம் - ஒரு பண்ணின் பெயர்; வண்டின் ரீங்காரத்தைச் சுட்டியது;


மாமலர் ஐந்தை வாளியா ஏந்தி வந்து ஒரு கணைதனை எய்த – அழகிய ஐந்து பூக்களை அம்புகளாக ஏந்திவந்து ஓர் அம்பினை ஏவிய;
காமனைக் காய்ந்த கண்ணுதல் அண்ணல் - மன்மதனைச் சாம்பலாக்கிய நெற்றிக்கண்ணுடைய தலைவன்;
கையினில் மூவிலை வேலன் - கையில் திரிசூலத்தை ஏந்தியவன்;
தூமறை நாவன் - தூய வேதங்களைப் பாடியருளியியவன்;
துணை இலாத் தேவன் - ஒப்பற்ற தேவன்;
தொல்வினை தீர்ப்பவன் பதிதான் - பக்தர்களது பழவினையைத் தீர்க்கின்ற சிவபெருமான் உறையும் பதி ஆன;
பூ மருவு அறுகால் காமரம் பாடும் புறம்பயம் தொழப் பயம் போமே - பூக்களை அடைந்து வண்டுகள் இன்னிசை பாடுகின்ற திருப்புறம்பயத்தைத் தொழுதால் நம் அச்சம் நீங்கும்;


(சுந்தரர் தேவாரம் - 7.51.2 - "ஐவணமாம் பகழியுடை அடல்மதனன் "
அப்பாடலின் குறிப்புரையிற் காண்பது:
'வண்ணம்' என்பது, வகையைக் குறித்தது. 'மன்மதன் ஐந்து வகையான மலர்களையே அம்பாக உடையவன்' என்பதும், அம் மலர்கள், 'தாமரை, மா, அசோகு, முல்லை, நீலம்' என்பதும், அவை முறையே, 'உன்மத்தம், மதனம், மோகம், சந்தாபம், வசீகரணம்' என்னும் பெயருடையனவாய், 'சுப்பிர யோகம், விப்பிர யோகம், சோகம், மோகம், மரணம்' என்னும் அவத்தைகளைச் செய்யும் என்பதும், அவ்வவத்தைகள்தாம், பேச்சும் நினைவும், மிகுதலும், பெருமூச்செறிதலும், உடல் வெதும்பி உணவை வெறுத்தலும், அழுது பிதற்றுதலும், மூர்ச்சையுறுதலுமாம் என்பதும் செய்யுள் வழக்காதலின், அவை எல்லாம் அடங்க, 'ஐவணமாம் பகழியுடை' என்றும், அவனை வென்றார் உலகத்து அரியராகலின், 'அடல் மதனன்' என்றும், .... அருளினார்.
);

3)
பற்றிய பாம்பு சுற்றிய மலையால்
.. பாற்கடல் கடைந்தவர் அஞ்ச
உற்றவி டத்தைத் துற்றருள் செய்த
.. ஒருமணி திகழ்திரு மிடற்றன்
பெற்றமு கந்த கற்றையஞ் சடையன்
.. பெண்ணொரு பங்கமர் பெருமான்
புற்றர வணிந்த நற்றவன் மேவும்
.. புறம்பயம் தொழப்பயம் போமே.



உற்ற விடத்தைத் துற்று அருள்செய்த - எழுந்த நஞ்சை உண்டு அருள்புரிந்த;
ஒரு மணி திகழ் திருமிடற்றன் - ஒப்பற்ற நீலமணி திகழும் திருநீலகண்டன்;
பெற்றம் உகந்த கற்றை அம் சடையன் - இடபத்தை வாகனமாக விரும்பும், அழகிய கற்றைச் சடையை உடையவன்;
புற்றரவு அணிந்த நற்றவன் - புற்றில் இருக்கும் தன்மை உடைய பாம்பை அணியும், சிறந்த தவம் உடையவன்;



4)
மானமர் கரத்தன் ஏனம ருப்பு
.. மாசுணம் திகழ்திரு மார்பன்
கானகத் தாடி ஆனமர் செல்வன்
.. கரியுரி மூடிய ஒருவன்
வானவர் எம்பெம் மானருள் என்று
.. மலரடி போற்றவன் னஞ்சைப்
போனகம் செய்த தேனவன் மேவும்
.. புறம்பயம் தொழப்பயம் போமே.



ஏன மருப்பு - பன்றிக்கொம்பு;
மாசுணம் - பாம்பு;
கானகத்து ஆடி - சுடுகாட்டில் நடம்செய்பவன்;
ஆன் அமர் செல்வன் - இடபத்தை ஊர்தியாக விரும்பும் செல்வன்; (சம்பந்தர் தேவாரம் - 1.61.9 - "ஆனூரா வுழிதருவான்..." - ஆன் ஊரா ஊழி தருவான் - இடபத்தை ஏறிச் சுற்றுவான்.);
கரியுரி - யானைத்தோல்;
வன்னஞ்சு -கொடிய விடம்;
போனகம் செய்தல் - உண்ணுதல்;
தேனவன் - தேன் போல் இனிமை பயப்பவன்;



5)
பங்கினில் மலையான் மங்கையை வைத்த
.. பரிவினன் பாலன நீற்றன்
செங்கதிர் வண்ணன் கங்குலைக் காட்டும்
.. திருமிட றுடையவன் எந்தை
மங்கலம் எல்லாம் தங்கிடம் ஆனான்
.. வார்சடை மேல்வளர் திங்கள்
பொங்கர வணிந்த சங்கரன் மேவும்
.. புறம்பயம் தொழப்பயம் போமே.



பரிவு - அன்பு (Affection, love);
பால் அன நீற்றன் - பால் போன்ற வெண்திருநீறு பூசியவன்;
கங்குல் - இருள்;



6)
பறைபல ஆர்த்துப் பாரிடம் சூழப்
.. பல்பிணக் காட்டினில் ஆடும்
மறைமொழி நாவன் நறைமலர் தூவி
.. வானவர் தம்குறை யிரப்ப
அறைகடல் நஞ்சின் கறையணி கண்டன்
.. அண்டிய தொண்டருக் கென்றும்
பொறைமிக உடைய இறையவன் மேவும்
.. புறம்பயம் தொழப்பயம் போமே.



ஆர்த்தல் - ஒலித்தல்;
பாரிடம் - பூதம்;
பல்பிணக் காட்டினில் ஆடும் - பல பிணங்களையுடைய காடே அரங்கமாக ஆடுகின்ற; (சுந்தரர் தேவாரம் - 7.98.4 - "பாடிய நான்மறையான் படு பல்பிணக் காடரங்கா ஆடிய மாநடத்தான் ")
மறைமொழி நாவன் - வேதநாவன்;
நறை - தேன்; வாசனை;
குறையிரத்தல் - தன்குறைகூறி வேண்டுதல் (To beg, supplicate, petition for one's wants);
அண்டுதல் - சரண்புகுதல்; ஆசிரயித்தல்;
பொறை - பொறுமை (Patience; forbearance); அருள்; (6.56.9 - "பொய்யாநஞ் சுண்ட பொறையே போற்றி")
(8.24.2 - திருவாசகம் - அடைக்கலப்பத்து #2 - "வெறுப்பனவே செய்யும்என் சிறுமையைநின் பெருமையினாற் பொறுப்பவனே");



7)
நீற்றினைப் பூசி ஆற்றினைத் தாங்கி
.. நேரிலன் ஏரியல் கயிலை
வீற்றிருந் தருளி தோற்றமும் ஏற்று
.. வெண்டலை உண்பலி தேர்வான்
கூற்றுதை காலன் மாற்றிலாச் செம்பொன்
.. குவிகரத் தொடுநிதம் பணிந்து
போற்றுவார்க் கருளும் ஏற்றினன் மேவும்
.. புறம்பயம் தொழப்பயம் போமே.



நேர் இலன் - ஒப்பு இல்லாதவன்;
ஏர் இயல் கயிலை வீற்றிருந்து அருளி - அழகிய கயிலைமலையில் சிறப்போடிருந்து அருள்பவன்; (ஏர் - அழகு; நன்மை); (வீற்றிருத்தல் - சிறப்போடிருத்தல் - To sit in state or majestically);
(அருளி - அருள்பவன்); (சம்பந்தர் தேவாரம் - 2.73.9 - "இரக்கமுடை யிறையவனூர் .... அரக்கன்விற லழித்தருளி கழுமலமந் தணர்வேத மறாதவூரே." - அருளி - சிவன்);
தோற்றமும் ஏற்று - இறைவனுக்குத் தோற்றம் இன்மையும் இதனால் பெறப்பட்டது;
வெண்டலை உண்பலி தேர்வான் - பிரமனின் வெள்ளை மண்டையோட்டில் பிச்சை ஏற்பவன்;
மாற்று இலாச் செம்பொன் - உரைத்து மாற்றுக் காணுதற்கரிய, மிக உயர்ந்த பொன்;
ஏற்றினன் - எருதை வாகனமாக உடையவன்; (சம்பந்தர் தேவாரம் - 2.108.5 - "கடிய ஏற்றினர் கனலன மேனியர்");



8)
பருப்பதம் அசைத்த அரக்கனை நெரித்துப்
.. பண்ணிசை கேட்டும கிழ்ந்தான்
விருப்பொடு நாளும் திருப்புகழ் பாடின்
.. மேனிலை கொடுப்பவன் ஏன
மருப்பணி மார்பன் அரப்புனை முடியன்
.. வானதிச் சடையினன் கயிலைப்
பொருப்பினன் கண்ணில் நெருப்பினன் மேவும்
.. புறம்பயம் தொழப்பயம் போமே.



பருப்பதம் - பர்வதம் - மலை;
திருப்புகழ் பாடின் - சிவபெருமானது திருப்புகழைப் பாடினால்;
(சுந்தரர் தேவாரம் - 7.69.2 - "கூடிய இலயஞ் .... திருப்புகழ் விருப்பால் பாடிய அடியேன் படுதுயர் களையாய் ...");
மேனிலை - மேல் நிலை - உயர்ந்த பதம்;
ஏன மருப்பு அணி மார்பன் - பன்றியின் கொம்பை மார்பில் அணிந்தவன்;
அரப் புனை முடியன் - பாம்பை முடிமேல் அணிந்தவன்;
"அர = பாம்பு" என்ற பிரயோக உதாரணங்கள்: (சம்பந்தர் தேவாரம் - 1.98.9 - "அரப்பள்ளியானு மலருறைவானு மறியாமைக்..." - அரப்பள்ளியான் - பாம்பைப் படுக்கையாகக் கொண்ட திருமால்;
திருவாசகம் - அன்னைப்பத்து - 8.17.4 - "ஆடரப் பூணுடைத் தோல்பொடிப் பூசிற்றோர்..." - அர - 'அரா' என்பதன் ஈற்று அகரம், செய்யுளிடத்துக் குறுகிநின்றது;
திருவாசகம் - நீத்தல் விண்ணப்பம் - 8.6.48 - "தாரகை போலுந் தலைத்தலை மாலைத் தழலரப்பூண் வீர...")
வானதிச் சடையினன் - கங்கைச் சடையன்;
கயிலைப் பொருப்பினன் - கயிலைமலையான்;






9)
அரியயன் நேடித் திரிந்தடி போற்ற
.. அண்டமெ லாங்கடந் தோங்கும்
எரியவன் எல்லாம் உரியவன் அன்பர்க்
.. கெளியவன் இறைஞ்சினாள் மகிழக்
கரியென அன்று வன்னியும் கிணறும்
.. காட்டிய ருள்புரி அண்ணல்
புரிதரு சடையன் பெரியவன் மேவும்
.. புறம்பயம் தொழப்பயம் போமே.



அரி அயன் நேடித் திரிந்து அடி போற்ற - திருமாலும் பிரமனும் அடிமுடி தேடித் திரிந்து பின் அடிபோற்றும்படி;
எரியவன் - நெருப்பு உருவினன்;
கரி - சாட்சி;
புரிதரு - முறுக்குண்ட; (புரிதல் - முறுக்குக்கொள்ளுதல் - To be twisted; to curl);
(தருதல் - ஒரு துணைவினை - An auxiliary added to verbs);


* திருப்புறம்பயத் தலத்து ஈசன் திருநாமங்களுள் சாட்சிநாதர் என்பதும் ஒன்று. வன்னிமரமும் கிணறும் இலிங்கமும் சாட்சி சொன்னதைத் திருவிளையாடற்புராணத்திற் காண்க.



10)
நேர்வழி ஆன நீர்மலி சடையன்
.. நீற்றினைப் பூசிட மாட்டார்
ஓர்வழி அறியார் கார்மலி நெஞ்சர்
.. உரைக்கிற பொய்களை ஒழிமின்
தார்விட நாகம் மார்பினில் புரளத்
.. தண்மதிப் பிறையினைச் சூடிப்
போர்விடை ஏறி ஊர்பவன் மேவும்
.. புறம்பயம் தொழப்பயம் போமே.



நேர்வழி - செந்நெறி - Path of virtue, the right way, especially in religious sense; சன்மார்க்கம்;
நீர் மலி சடையன் - கங்கை திகழும் சடையை உடையவன்; (பெரியபுராணம் - "உலகெலாம்... நிலவு லாவிய நீர்மலி வேணியன்"); (மலிதல் - மிகுதல்; நிறைதல்);
கார் மலி - இருள் மிகுந்த;
தார் விட நாகம் - விஷப்பாம்பு மாலை;



11)
பண்ணியல் தமிழால் மண்ணவர் வாழ்த்தப்
.. பலவரம் நல்கிடும் வரதன்
அண்ணலின் நாமம் எண்ணிய சிந்தை
.. இருவிழிக் கசிவொடு பூசை
பண்ணினார் தம்மை நண்ணிய நமன்மேல்
.. பாய்ந்தவன் மார்பிலு தைத்த
புண்ணியன் திங்கட் கண்ணியன் மேவும்
.. புறம்பயம் தொழப்பயம் போமே.



பண் இயல் தமிழால் - தேவாரம், திருவாசகம் இவற்றை இசையோடு பாடி;
புண்ணியன் - புண்ணிய ( அற ) வடிவினன்;
திங்கட் கண்ணியன் - பிறைச்சந்திரனைக் கண்ணிமாலையாக முடிமேல் அணிந்தவன்;



அன்புடன்,
வி. சுப்பிரமணியன்



பிற்குறிப்பு :
1) யாப்புக்குறிப்பு :
எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் - 'விளம் மா விளம் மா விளம் விளம் மா' - என்ற வாய்பாடு;
2) யாப்புக்குறிப்பு :
இப்பதிகத்தில் பல பாடல்களில் பல அடிகளில் முதற்சீர் - மூன்றாம் சீர் இடையே எதுகைத்தொடை அமைந்துள்ளது. இதனைத் தாஅவண்ணம் என்பர்.
3) திருப்புறம்பயம் - சாட்சிநாதேஸ்வரர் கோயில் - தினமலர் தளத்தில்: http://temple.dinamalar.com/New.php?id=962
புறம்பயம் - தேவாரம் தளத்தில்: http://www.thevaaram.org/thirumurai_1/koil_view.php?koil_idField=209

----------- --------------

No comments:

Post a Comment