04.04 - சேறை (திருச்சேறை) - தொல்வினைத்தொடர் இம்மையில்
2013-08-10
சேறை (திருச்சேறை)
----------------------------------
(எழுசீர்ச் சந்த விருத்தம் - தான தானன தான தானன தான தானன தானனா) ;
(சுந்தரர் தேவாரம் - 7.48.1 - "மற்றுப் பற்றெனக் கின்றி")
(சம்பந்தர் தேவாரம் - 3.39.1 - "மானி னேர்விழி மாத ராய்வழு திக்கு")
1)
தொல்வி னைத்தொடர் இம்மை யிற்பல
.. துன்ப மேதரக் கண்டுநான்
வெல்வி டைக்கொடி வேந்த னேசரண்
.. வேண்டி வந்தடி போற்றினேன்
வில்வ ளைத்தெரி அம்பி னைப்புரம்
.. வேவ எய்தமுக் கண்ணனே
செல்வ னேயருள் நல்கி டாய்அணி
.. சேறைச் செந்நெறி யப்பனே.
தொல்வினைத்தொடர் இம்மையில் பல துன்பமே தரக் கண்டு நான் - பழவினைகளின் தொகுதி இப்பிறப்பில் பல துன்பங்களைத் தருவதை உணர்ந்து நான்; (தொல்வினை - பழவினை); (இம்மை - இப்பிறவி);
வெல்விடைக்கொடி வேந்தனே, சரண் வேண்டி வந்து அடி போற்றினேன் - வெற்றியுடைய இடபச்சின்னம் பொறித்த கொடியை உடைய அரசனே, அடைக்கலம் வேண்டி வந்து உன் திருவடியை வழிபட்டேன்; (சரண் - அடைக்கலம்);
வில் வளைத்து எரி அம்பினைப் புரம் வேவ எய்த முக்கண்ணனே - முப்புரங்களும் வெந்து அழியும்படி மேருமலையை வில்லாக வளைத்து எரிக்கின்ற கணை ஒன்றை ஏவிய நெற்றிக்கண்ணனே;
செல்வனே, அருள் நல்கிடாய், அணி சேறைச் செந்நெறி அப்பனே - செல்வனே, அழகிய திருச்சேறையில் உறையும் செந்நெறி அப்பனே, அருள்வாயாக; (அணி - அழகிய);
2)
ஆவி யைத்தொடர் முன்வி னைத்தொடர்
.. அல்ல லேதரக் கண்டுநான்
நாவி னில்திரு வைந்தெ ழுத்தினை
.. நம்பி வைத்துனைப் போற்றினேன்
பாவி னால்புகழ் பாடு வார்க்கருள்
.. பண்ப னேகறைக் கண்டனே
தீவி னைக்கொரு தீர்வி னைத்தரும்
.. சேறைச் செந்நெறி யப்பனே.
ஆவியைத் தொடர் முன்வினைத்தொடர் அல்லலே தரக் கண்டு நான் நாவினில் திரு-ஐந்தெழுத்தினை நம்பி வைத்து உனைப் போற்றினேன் - உயிரைத் தொடரும் பழவினைச்சங்கிலி துன்பமே தரக் கண்டு நான் என் நாவில் திருவைந்தெழுத்தைத் தாங்கி உன்னை வணங்கினேன்; (அல்லல் - துன்பம்); (நம்புதல் - விரும்புதல்; நம்பிக்கை வைத்தல்);
பாவினால் புகழ் பாடுவார்க்கு அருள் பண்பனே - பாமாலைகளால் துதிப்பவர்களுக்கு அருள்பவனே;
கறைக்கண்டனே - நீலகண்டனே;
தீவினைக்கு ஒரு தீர்வினைத் தரும் சேறைச் செந்நெறி அப்பனே - தீவினைகள் நீங்க அருளும், திருச்சேறையில் உறையும் செந்நெறி அப்பனே; (தீர்வு - நீங்குகை; பரிகாரம்);
3)
துன்னி வல்வினை துன்ப மேதரத்
.. தொய்யும் என்குறை தீர்த்திடாய்
முன்னம் வானவர் வந்தி றைஞ்சவும்
.. முப்பு ரம்பொடி ஆக்கினாய்
மின்னல் நுண்ணிடை மாதி னுக்கிடம்
.. மேனி யில்தரும் அன்பினாய்
சென்னி யிற்பிறை பின்ன ராவணி
.. சேறைச் செந்நெறி யப்பனே.
துன்னி வல்வினை துன்பமே தரத் தொய்யும் என் குறை தீர்த்திடாய் - வலியவினை சூழ்ந்து துன்பமே தருவதால் தளரும் என் குறைதீர்த்தருள்க; (துன்னுதல் - நெருங்குதல்; அடைதல்); (தொய்தல் - இளைத்தல்; சோர்தல்);
முன்னம் வானவர் வந்து இறைஞ்சவும் முப்புரம் பொடி ஆக்கினாய் - முன்பு தேவர்கள் வணங்க, இரங்கி முப்புரங்களைச் சாம்பலாக்கியவனே;
மின்னல் நுண்-இடை மாதினுக்கு இடம் மேனியில் தரும் அன்பினாய் - மின்னல் போன்ற சிற்றிடை உடைய உமைக்குத் திருமேனியில் இடப்பக்கத்தைத் தந்த அன்பனே;
சென்னியில் பிறை, பின்னு-அரா அணி சேறைச் செந்நெறி அப்பனே - திருமுடிமேல் பிறைச்சந்திரனையும், பின்னிப் பிணைகின்ற பாம்பையும் அணிகின்ற, திருச்சேறையில் உறையும் செந்நெறி அப்பனே;
4)
பாவ மாயின பாற வேவுனைப்
.. பாடி வந்தடி போற்றினேன்
மேவ லர்புரம் வேவ அன்றொரு
.. மேரு வில்லினை ஏந்தினாய்
சேவ லார்கொடிச் சேந்த னைத்தரும்
.. தேச னேஉமை நேசனே
சேவ தேறிய தேவ னேஅணி
.. சேறைச் செந்நெறி யப்பனே.
பாவம் ஆயின பாறவே உனைப் பாடி வந்து அடி போற்றினேன் - பாவமெல்லாம் அழிய உன்னைப் பாடி வணங்கினேன்; (பாறுதல் - அழிதல்);
மேவலர் புரம் வேவ அன்று ஒரு மேரு வில்லினை ஏந்தினாய் - பகைத்த அசுரர்களது முப்புரம் வெந்து அழிய முன்பு ஒப்பற்ற மேருமலையை வில்லாக ஏந்தியவனே; (மேவலர் - பகைவர்);
சேவல் ஆர் கொடிச் சேந்தனைத் தரும் தேசனே - சேவற்கொடி உடைய முருகனை ஈன்ற ஒளிவடிவினனே; (தேசன் - ஒளியுருவினன்; தேசு - தேஜஸ் - ஒளி);
உமை நேசனே - உமைக்கு அன்பனே;
சே-அது ஏறிய தேவனே - இடபவாகனம் உடைய தேவா; (சே - இடபம்);
அணி சேறைச் செந்நெறி அப்பனே - அழகிய திருச்சேறையில் உறையும் செந்நெறி அப்பனே;
5)
நித்த லுந்துயர் நல்கு தீவினை
.. நீங்க நின்னடி போற்றினேன்
கத்து மாகடல் கக்கு நஞ்சினைக்
.. கண்டம் இட்டிருள் காட்டினாய்
மத்த னேமதி சூடி னாய்மழு
.. வாளி னாய்சரண் நீயெனச்
சித்தம் ஒன்றிய பத்தர் ஏத்திடும்
.. சேறைச் செந்நெறி யப்பனே.
நித்தலும் துயர் நல்கு தீவினை நீங்க நின் அடி போற்றினேன் - எந்நாளும் துன்பம் தரும் தீவினை தீர உன் பாதத்தைப் போற்றினேன்;
"கத்து மா-கடல் கக்கு நஞ்சினைக் கண்டம் இட்டு இருள் காட்டினாய் - "அலைகள் ஆர்ப்பரிக்கும் பெரிய பாற்கடல் உமிழ்ந்த விஷத்தைக் கண்டத்தில் வைத்து அங்கே கறுப்புநிறத்தைக் காட்டியவனே;
மத்தனே - ஊமத்தமலரைச் சூடியவனே;
மதி சூடினாய் - பிறையைச் சூடியவனே;
மழுவாளினாய், சரண் நீ" எனச் சித்தம் ஒன்றிய பத்தர் ஏத்திடும் - மழு ஏந்தியவனே, நீயே எம் புகல்" என்று மனம் ஒன்றி நினையும் அன்பர்கள் துதிக்கும்; (அப்பர் தேவாரம் - 4.81.2 - "ஒன்றியிருந்து நினைமின்கள் உந்தமக்கு ஊனமில்லை");
சேறைச் செந்நெறி அப்பனே - திருச்சேறையில் உறையும் செந்நெறி அப்பனே;
6)
கெழுமு தீவினை யாவும் வேரொடு
.. கெட்டு நற்கதி எய்தவே
கழும லத்தவர் கோன்த மிழ்த்தொடை
.. காத லாய்நினைந் தேத்தினேன்
மழுவி னாய்தொழு மாணிக் காநமன்
.. மாள வீசிய தாளினாய்
செழுவ யல்புடை தழுவு சீரணி
.. சேறைச் செந்நெறி யப்பனே.
கெழுமு தீவினை யாவும் வேரொடு கெட்டு, நற்கதி எய்தவே - என்னைப் பொருந்தியுள்ள தீவினையெல்லாம் அடியோடு அழிந்து, நான் நன்னிலை அடைய; (கெழுமுதல் - பொருந்துதல்); (கெடுதல் - அழிதல்);
கழுமலத்தவர் கோன் தமிழ்த்தொடை காதலாய் நினைந்து ஏத்தினேன் - (கழுமலம் என்ற பெயரும் உடைய) சீகாழியில் அவதரித்த திருஞானசம்பந்தர் பாடியருளிய தமிழ்ப்பாமாலைகளை அன்போடு பாடித் துதித்தேன்;
மழுவினாய் - மழு ஏந்தியவனே;
தொழு மாணிக்கா நமன் மாள வீசிய தாளினாய் - தொழுத மார்க்கண்டேயரைக் காப்பதற்காக எமனை மாளும்படி மார்பில் உதைத்தவனே;
செழு-வயல் புடை தழுவு சீர்-அணி சேறைச் செந்நெறி அப்பனே - வளவயல் சூழ்ந்த அழகிய திருச்சேறையில் உறையும் செந்நெறி அப்பனே; (தழுவுதல் - சூழ்தல்); (சீர் - அழகு; பெருமை);
7)
அரித்த லேபுரி பண்டை வல்வினை
.. அற்றி டப்பரி வெய்திடாய்
தரித்த கங்கையின் நீர்ந னைத்திடு
.. சங்க ராமத மாகரி
உரித்த தோலது போர்வை ஆகிய
.. உம்பர் நாயக பக்கெனச்
சிரித்து மூவரண் எரித்த சேவக
.. சேறைச் செந்நெறி யப்பனே.
அரித்தலே புரி பண்டை வல்வினை அற்றிடப் பரிவு எய்திடாய் - என்னை இமிசிக்கும் பழைய வலிய வினைகள் தீருமாறு இரங்கி அருள்வாயாக; (அரித்தல் - இமிசித்தல்); (பரிவு - இரக்கம்; அன்பு);
(அப்பர் தேவாரம் - 5.1.3 - "அரிச்சுற்ற வினையால் அடர்ப்புண்டு நீர்");
தரித்த கங்கையின் நீர் நனைத்திடு சங்கரா - முடிமேல் தங்கிய கங்கைப் புனல் நனைக்கின்ற சங்கரனே; (சம்பந்தர் தேவாரம் - 1.84.1 - "புனல்பாய நனையும் சடைமேல்");
மத மாகரி உரித்த தோலது போர்வை ஆகிய உம்பர் நாயக - மதம் உடைய பெரிய ஆண்யானையின் உரித்த தோலைப் போர்வையாகப் போர்த்த தேவர்தலைவனே;
பக்கெனச் சிரித்து மூ அரண் எரித்த சேவக - வாய்விட்டுச் சிரித்து முப்புரங்களையும் எரித்த வீரனே; (பக்கெனல் - சிரிப்பின் ஒலிக்குறிப்பு); (மூ அரண் - மூன்று கோட்டைகள்); (சேவகன் - வீரன்);
சேறைச் செந்நெறி அப்பனே - திருச்சேறையில் செந்நெறியப்பன் என்ற திருநாமத்தோடு விளங்கும் சிவபெருமானே;
8)
அலையெ னத்தொடர் தீவி னைத்துயர்
.. அற்று நான்மகிழ் வெய்தவே
கலையை ஏந்திய கையி னாய்மிகு
.. காத லோடுனை ஏத்தினேன்
மலையை வீசிய வல்ல ரக்கனின்
.. வாய்கள் பத்தழ ஓர்விரல்
சிலையின் மேலிடு தலைவ னேஅணி
.. சேறைச் செந்நெறி யப்பனே.
அலை எனத் தொடர் தீவினைத் துயர் அற்று நான் மகிழ்வு எய்தவே - கடலலை போல ஒழிவின்றித் தொடர்கின்ற தீவினைத்துன்பம் தீர்ந்து நான் இன்புறும்பொருட்டு;
கலையை ஏந்திய கையினாய், மிகு காதலோடு உனை ஏத்தினேன் - மானைக் கையில் ஏந்திய பெருமானே, மிகுந்த அன்போடு உன்னை வணங்கினேன்; (கலை - மான்);
மலையை வீசிய வல்-அரக்கனின் வாய்கள் பத்து அழ ஓர் விரல் சிலையின்மேல் இடு தலைவனே - கயிலைமலையைப் பெயர்த்து வீச முயன்ற வலிய இராவணனின் பத்துவாய்களும் அழும்படி மலைமேல் ஒரு விரலை வைத்து நசுக்கிய தலைவனே; (சிலை - மலை);
அணி சேறைச் செந்நெறி அப்பனே - அழகிய திருச்சேறையில் செந்நெறியப்பன் என்ற திருநாமத்தோடு விளங்கும் சிவபெருமானே;
9)
கரிய மாலொடு போதின் மேலவன்
.. காண்கி லாவணம் ஓங்கிய
எரியன் வெள்விடை ஏறி வெண்டலை
.. ஏந்தி உண்பலி ஏற்பவன்
பெரியன் வெண்பிறை சூடு பிஞ்ஞகன்
.. பெண்ணொர் பங்கினன் எங்கணும்
திரியும் முப்புரம் எரிய எய்தவன்
.. சேறைச் செந்நெறி யப்பனே.
கரிய மாலொடு போதின் மேலவன் காண்கிலாவணம் ஓங்கிய எரியன் - திருமால் பிரமன் இவர்களால் காண இயலாதவாறு ஓங்கிய ஜோதிவடிவினன்; (போது - பூ); (எரி - நெருப்பு);
வெள்விடை ஏறி - வெள்ளை எருதை வாகனமாக உடையவன்;
வெண்தலை ஏந்தி உண்பலி ஏற்பவன் - வெள்ளை மண்டையோட்டை ஏந்திப் பிச்சைக்கு உழல்பவன்; (பலி - பிச்சை);
பெரியன் - மகாதேவன்; (அப்பர் தேவாரம் - 5.12.8 - "பெரியனார்");
வெண்பிறை சூடு பிஞ்ஞகன் - வெண்திங்களைச் சூடிய பிஞ்ஞகன்; (பிஞ்ஞகன் - தலைக்கோலம் அணிந்தவன்);
பெண் ஒர் பங்கினன் - உமையொருபங்கன்; (ஒர் - ஓர்; குறுக்கல் விகாரம்);
எங்கணும் திரியும் முப்புரம் எரிய எய்தவன் - எங்கும் திரிந்த முப்புரங்கள் எரிந்து அழிய (ஒரு கணை) எய்தவன்;
சேறைச் செந்நெறி அப்பனே - திருச்சேறையில் செந்நெறியப்பன் என்ற திருநாமத்தோடு விளங்கும் சிவபெருமான்;
10)
பொக்க மேமலி நெஞ்சர் நீற்றினைப்
.. பூசி டார்உரை பொய்வழி
துக்க மேதரும் என்ப தால்அவர்
.. சொல்லை விட்டொழி மின்களே
நக்க னேஉமை நாத னேஅருள்
.. நல்கி டாய்எனில் காப்பனே
செக்கர் வானினை ஒக்கும் மேனியெம்
.. சேறைச் செந்நெறி யப்பனே.
பொக்கமே மலி நெஞ்சர், நீற்றினைப் பூசிடார் உரை பொய்வழி துக்கமே தரும் என்பதால் அவர் சொல்லை விட்டு-ஒழிமின்களே - நெஞ்சில் வஞ்சகம் மிக்கவர்களும் திருநீற்றைப் பூசாதவர்களும் சொல்லும் பொய்ம்மார்க்கங்கள் துக்கத்தையே தரும் என்பதால் அவர்கள் பேச்சை மதியாது நீங்குங்கள்; (பொக்கம் - பொய்; வஞ்சகம்); (விடுதல் - நீங்குதல்; ஒழிதல் - நீங்குதல்);
"நக்கனே, உமை நாதனே, அருள் நல்கிடாய்" எனில் காப்பனே - "திகம்பரனே, உமாபதியே, அருள்க" என்று இறைஞ்சினால் காப்பான்; (நக்கன் - ஆடையற்றவன்); (அப்பர் தேவாரம் - 5.42.3 - "காப்பர் நம்மைக் கறைமிடற் றண்ணலே");
செக்கர் வானினை ஒக்கும் மேனி எம் சேறைச் செந்நெறி அப்பனே - செவ்வானம் போல் செம்மேனியனான எங்கள், திருச்சேறையில் செந்நெறியப்பன் என்ற திருநாமத்தோடு விளங்கும், சிவபெருமான்; (செக்கர் - சிவப்பு);
11)
வென்றி வெள்விடை ஊர்தி யான்மத
.. வேளை நீறெழ நோக்கினான்
என்றும் உள்ளவன் ஈர வேணியன்
.. ஏழை பங்கினன் ஆடக
மன்றில் ஆடலன் துன்று வல்வினை
.. மாய வண்டமிழ் வாயராய்ச்
சென்று போற்றிட நன்ற ளிப்பவன்
.. சேறைச் செந்நெறி யப்பனே.
வென்றி வெள்விடை ஊர்தியான் - வெற்றி பொருந்திய இடபத்தை வாகனமாக உடையவன்;
மதவேளை நீறு எழ நோக்கினான் - மன்மதனைச் சாம்பலாகும்படி நெற்றிக்கண்ணால் பார்த்தவன்; (மதவேள் - மன்மதன்; காமன்);
என்றும் உள்ளவன் - அழிவற்றவன்;
ஈர வேணியன் - சடையில் கங்கையை உடையவன்; (ஈரம் - நீர்ப்பற்று; தயை); (வேணி - சடை); (சம்பந்தர் தேவாரம் - 1.84.1 - "புனல்பாய நனையும் சடைமேல்");
ஏழை பங்கினன் - உமைபங்கன்;
ஆடக மன்றில் ஆடலன் - பொன்னம்பலத்தில் ஆடுகின்றவன்; (ஆடகம் - பொன்); (ஆடலன் - ஆடுதலைச் செய்பவன்); (அப்பர் தேவாரம் - 5.19.8 - "அங்கை ஆரழல் ஏந்திநின்று ஆடலன்");
துன்று வல்வினை மாய வண்-தமிழ் வாயராய்ச் சென்று போற்றிட நன்று அளிப்பவன் சேறைச் செந்நெறி அப்பனே - நம்மைச் சூழும் வலிய வினைகளெல்லாம் அழியத் தேவாரம் திருவாசகம் பாடி வழிபட்டால் நன்மை செய்பவன், திருச்சேறையில் உறைகின்ற செந்நெறியப்பனான சிவபெருமான்; (துன்றுதல் - பொருந்துதல்; நெருங்குதல்); (வண்டமிழ் - வண் தமிழ் - வளம் மிக்க தமிழ் - தேவாரம், திருவாசகம், முதலியன);
பிற்குறிப்பு : யாப்புக் குறிப்பு :
எழுசீர்ச் சந்த விருத்தம் - தான தானன தான தானன தான தானன தானனா.
ஒரோவழி தான என்ற இடத்தில் தனன என்று வரலாம்.
முதற்சீரில் தான என்பது தனன என்றும் சில பாடல்களில் வரும்.
இப்பாடல்களில், ஈற்றடிதோறும் 3-ஆம் சீரிலும் எதுகை அமைந்துள்ளது
வி. சுப்பிரமணியன்
----------- --------------
No comments:
Post a Comment