03.05.002 – பொது - இடைவஞ்சி நுடங்கு மடந்தையர் - (வண்ணம்)
2006-08-16
3.5.2 – இடைவஞ்சி நுடங்கு மடந்தையர் - (பொது)
------------------------
(வண்ணவிருத்தம்;
தனதந்தன தந்தன தந்தன
தனதந்தன தந்தன தந்தன
தனதந்தன தந்தன தந்தன .. தனதான )
(கனகந்திரள் கின்றபெ ருங்கிரி - திருப்புகழ் - திருப்பரங்குன்றம்)
இடைவஞ்சிநு டங்கும டந்தையர்
... இடுமுண்பலி கொண்டுந டஞ்செயும்
... இடமென்றுடல் வெந்திடும் அம்பலம் .. மகிழ்வோனை,
மடமங்கையொர் பங்கென ஒன்றிட,
... வருகங்கையி ருஞ்சடை நின்றிட,
... மறியுந்துடி யுந்தழ லுந்தரி .. பெருமானை,
அடையண்டர்கள் அஞ்சிய நஞ்சினை
… அமுதென்றுவி ரும்பிய கண்டனை,
… அளிகொண்டிசை வண்டமிழ் சண்பையர் .. பதிபாடக்
குடமொன்றிலி ருந்தவெ லும்பணி
… குழலின்குரல் ஒண்டொடி என்றுயிர்
… கொளவன்றருள் இன்பனை எந்தையை .. மறவேனே.
பதம் பிரித்து:
இடை-வஞ்சி நுடங்கு மடந்தையர்
... இடும் உண்பலி கொண்டு, நடஞ்செயும்
... இடம் என்று உடல் வெந்திடும் அம்பலம் மகிழ்வோனை,
மடமங்கை ஒர் பங்கு என ஒன்றிட,
... வரு-கங்கை இருஞ்சடை நின்றிட,
... மறியுந் துடியுந் தழலுந் தரி பெருமானை,
அடை-அண்டர்கள் அஞ்சிய நஞ்சினை
… அமுது என்று விரும்பிய கண்டனை,
… அளிகொண்டு இசை-வண்-தமிழ் சண்பையர் பதி பாடக்,
குடம் ஒன்றில் இருந்த எலும்பு அணி-
… குழல் இன்-குரல் ஒண்-தொடி என்று உயிர்
… கொள அன்று அருள் இன்பனை, எந்தையை மறவேனே.
இடைவஞ்சி நுடங்கு மடந்தையர் இடும் உண்பலி கொண்டு, நடம் செயும் இடம் என்று உடல் வெந்திடும் அம்பலம் மகிழ்வோனை - துவளுகின்ற வஞ்சிக்கொடி போன்ற இடையை உடைய பெண்கள் இடும் பிச்சையை ஏற்றுக், கூத்தாடும் இடம் என்று உடல்கள் வெந்து சாம்பலாகும் சுடுகாட்டை விரும்பியவனை; (வஞ்சி - வஞ்சிக்கொடி); (நுடங்குதல் - துவளுதல்); (இடைவஞ்சி நுடங்கு = "நுடங்கு வஞ்சி இடை" என்று இயைத்துப் பொருள்கொள்க);
மடமங்கை ஒர் பங்கு என ஒன்றிட, வரு கங்கை இரும் சடை நின்றிட, மறியும் துடியும் தழலும் தரி பெருமானை - இளமங்கையான உமை ஒரு பாகமாகத் திருமேனியில் பொருந்தவும், வந்த கங்கை பெரிய சடையில் நிலையாகத் தங்கிடவும், மான் கன்றையும் உடுக்கையையும் தீயையும் கையில் ஏந்திய பெருமானை;
அடை அண்டர்கள் அஞ்சிய நஞ்சினை அமுது என்று விரும்பிய கண்டனை - சரணடைந்த தேவர்கள் அஞ்சிய ஆலகாலத்தை அமுதம்போல் விரும்பி உண்ட நீலகண்டனை;
அளிகொண்டு இசை வண் தமிழ் சண்பையர் பதி பாடக், குடம் ஒன்றில் இருந்த எலும்பு அணி-குழல் இன்-குரல் ஒண்-தொடி என்று உயிர்கொள அன்று அருள் இன்பனை, எந்தையை மறவேனே - அன்போடு இசைத்தமிழும் வண்மை மிக்க தமிழுமான தேவாரத்தைச் சண்பை என்ற பெயரும் உடைய சீகாழியின் தலைவரான திருஞானசம்பந்தர் பாடவும், (மயிலாப்பூரில்) ஒரு குடத்தில் இருந்த எலும்பு அழகிய கூந்தலும் இனிய குரலும் உடைய இளம்பெண்ணாக உயிரோடு எழுந்திருக்குமாறு முன்பு அருள்செய்த இன்பவடிவினனை, எம் தந்தையான சிவபெருமானை நான் மறக்கமாட்டேன்; (அளி - அன்பு); (பதி - தலைவன்); (சண்பையர் பதி - காழியர்கோன் - திருஞானசம்பந்தர்); (தொடி - கைவளை; ஒண்டொடி - ஒண் தொடி - ஒளி திகழும் வளையல் அணிந்த பெண்);
வி. சுப்பிரமணியன்
-------------------------------- -------------------------------
No comments:
Post a Comment