04.03 - அவளிவணல்லூர் (அவளிவள் நல்லூர்) - இம்மை அம்மை இன்பம்
2013-08-04
அவளிவணல்லூர் (அவள்இவள் நல்லூர்)
----------------------------------
(அறுசீர் விருத்தம் - மா மா மா மா விளம் காய் - வாய்பாடு)
(சம்பந்தர் தேவாரம் - 1.63.1 - எரியார் மழுவொன் றேந்தி யங்கை யிடுதலை யேகலனா)
(கண்டராதித்தர் - திருவிசைப்பா - 9.20.7 - இலையார் கதிர்வேல் இலங்கை வேந்தன் இருபது தோளும்இற)
1)
இம்மை அம்மை இன்பம் எய்த எண்ணுதி யேல்மனமே
எம்மை ஆளும் ஈச னேயென்(று) இணையடி ஏத்தியடை
அம்மைக் கண்டன் அண்டர் அண்டன் ஆரழல் ஏந்திநடம்
அம்மை காண ஆடும் ஐயன் அவளிவள் நல்லூரே.
இம்மை அம்மை இன்பம் எய்த எண்ணுதியேல் மனமே - நெஞ்சே! நீ இகபர சௌபாக்கியம் அடைய எண்ணினால்; (இம்மை - இப்பிறப்பு); (அம்மை - இப்பிறவியின் பின் எய்தும் நிலை); (எண்ணுதியேல் - நீ எண்ணினால்); (திருநாவுக்கரசர் தேவாரம் - 5.14.4 - இம்மை வானவர் செல்வம் விளைத்திடும் அம்மையேல் பிறவித்துயர் நீத்திடும்);
"எம்மை ஆளும் ஈசனே" என்று இணையடி ஏத்தி அடை - "எம்மை ஆள் உடைய ஈசனே" என்று இருதிருவடிகளைப் போற்றி அடையாவாயாக;
அம்-மைக்-கண்டன் - அழகிய நீலகண்டத்தை உடையவனும்; (அம் - அழகிய); (மை - கருமை);
அண்டர் அண்டன் - தேவதேவனும்;
ஆரழல் ஏந்தி நடம் அம்மை காண ஆடும் ஐயன் - உமையம்மை காணத் தீயை ஏந்தித் திருநடம் செய்யும் தலைவனும் ஆன சிவபெருமான் உறையும் தலமான; (அம்மை - உமையம்மை); (திருவிசைப்பா - 9.24.2 - "மின்னின் இடையாள் உமையாள் காண விகிர்தன் ஆடுமே");
அவளிவள் நல்லூரே - அவளிவள்-நல்லூரை;
2)
மாட்சி இல்லா வலிய வினைகள் மாயவும் மண்ணுலகில்
மீட்சி இல்லா மேன்மை பெறவும் மென்கழல் ஏத்தியடை
காட்சிக்(கு) அரியன் கண்டம் கரியன் கண்ணுதல் மூவுலகும்
ஆட்சி உடைய சாட்சி நாதன் அவளிவள் நல்லூரே.
மாட்சி இல்லா வலிய வினைகள் மாயவும் - (மனமே) வலிய தீவினையெல்லாம் அழியவும்; (மாட்சி - உயர்வு; சிறப்பு);
மண்ணுலகில் மீட்சி இல்லா மேன்மை பெறவும் - பூமியில் மீண்டும் பிறவாத நற்கதி அடையவும்; (மீட்சி - மீளுதல்);
மென்கழல் ஏத்தி அடை - மென்மையான திருவடியைத் துதித்து அடைவாயாக;
காட்சிக்கு அரியன் - காண்பதற்கு அரியவன்;
கண்டம் கரியன் - நீலகண்டன்;
கண்ணுதல் - நெற்றிக்கண்ணன்;
மூவுலகும் ஆட்சி உடைய சாட்சி நாதன் - மூவுலகையும் ஆளும் தலைவன், சாட்சிநாதன் உறையும் தலமான; (* சாட்சிநாதன் - அவளிவணல்லூர் ஈசன் திருநாமங்களுள் ஒன்று);
அவளிவள் நல்லூரே - அவளிவள்-நல்லூரை;
3)
வெய்ய வினைகள் மேவா தொழிய வேண்டுதி யேல்மனமே
செய்ய என்றும் மெய்ய என்றும் சேவடி ஏத்தியடை
தையல் பங்கன் அன்பர் மகிழத் தன்திரு வாய்மொழியால்
ஐயம் நீக்கி அருளும் ஐயன் அவளிவள் நல்லூரே.
வெய்ய வினைகள் மேவாது ஒழிய வேண்டுதியேல் மனமே - கொடிய வினைகள் நம்மேல் பொருந்தாமல் நீங்கிவிட விரும்பினால், நெஞ்சே;
செய்ய என்றும் மெய்ய என்றும் சேவடி ஏத்தி அடை - செம்மேனியனே என்றும் மெய்ப்பொருளே என்றும் சிவந்த திருவடியைத் துதித்து அடைவாயாக; (செய் - சிவப்பு);
தையல் பங்கன் - உமைபங்கன்; (தையல் - பெண்);
அன்பர் மகிழத் தன் திருவாய்மொழியால் ஐயம் நீக்கி அருளும் ஐயன் - தன் பக்தை மகிழத் தனது திருவாயால் "அவளே இவள்" என்று சொல்லிச் சந்தேகத்தைத் தீர்த்தருளிய ஐயன் உறையும் தலமான; (* இதனை இத்தலவரலாற்றில் கண்க);
அவளிவள் நல்லூரே - அவளிவள்-நல்லூரை;
4)
தழலைப் போலத் தகிக்கும் வினைகள் சாய்ந்திட வேண்டுதியேல்
தொழலை மறவார் துணைவன் தாளைத் துதித்திடச் சேர்மனமே
கழலன்(று) அடைந்த மார்க்கண் டர்க்காக் காலனைக் காய்ந்தபிரான்
அழலை ஏந்தி ஆடும் ஐயன் அவளிவள் நல்லூரே.
தழலைப் போலத் தகிக்கும் வினைகள் சாய்ந்திட வேண்டுதியேல் - தீப் போல் சுடுகின்ற வினைகள் அழியவேண்டும் என்று நீ விரும்பினால்; (சாய்தல் - அழிதல்);
தொழலை மறவார் துணைவன் தாளைத் துதித்திடச் சேர் மனமே - தினந்தோறும் மறவாமல் வழிபடும் பக்தர்களுக்குத் துணைவனான சிவபெருமான் திருவடியைப் போற்றச் சென்று அடை மனமே; (தொழல் - தொழுதல்);
கழல் அன்று அடைந்த மார்க்கண்டர்க்காக் காலனைக் காய்ந்த பிரான் - அன்று தன் திருவடியைச் சரணடைந்த மார்க்கண்டேயருக்காக இயமனை உதைத்த பெருமான்;
அழலை ஏந்தி ஆடும் ஐயன் - தீயை ஏந்தித் திருநடம் செய்யும் தலைவன் உறையும் தலமான;
அவளிவள் நல்லூரே - அவளிவள்-நல்லூரை;
5)
துன்ப வினைகள் தொலைய வேண்டில் துதிசெயச் சேர்மனமே
என்பும் தோலும் ஏனத்(து) எயிறும் எழிலுறப் பூணுமரன்
முன்பின் நடுவாம் முக்கட் பரமன் முத்தமி ழாற்பணியும்
அன்பர்க்(கு) இன்பம் அருளும் ஐயன் அவளிவள் நல்லூரே.
துன்ப வினைகள் தொலைய வேண்டில் துதிசெயச் சேர் மனமே - துன்பத்தைத் தரும் வினை தீரவேண்டுமென்றால் துதிக்கச் சென்றடை மனமே;
என்பும் தோலும் ஏனத்(து) எயிறும் எழிலுறப் பூணும் அரன் - எலும்பையும், தோலையும், பன்றிக்கொம்பையும் அழகுற அணியும் ஹரன்; (என்பு - எலும்பு); (ஏனத்து எயிறு - பன்றிக்கொம்பு);
முன் பின் நடு ஆம் முக்கட்-பரமன் - அனைத்திற்கும் முன்னும், அனைத்தின் பின்னும், எப்போதும் உள்ளவன், மூன்று கண்களையுடைய பரமன்; (பெரியபுராணம் - ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம் - 12.29.125 -
"மூவாத முதலாகி நடுவாகி முடியாத சேவாருங் கொடியாரை");
முத்தமிழால் பணியும் அன்பர்க்(கு) இன்பம் அருளும் ஐயன் - முத்தமிழால் வழிபாடு செய்யும் பக்தர்களுக்கு இன்பம் அருளும் தலைவன் உறையும் தலமான;
அவளிவள் நல்லூரே - அவளிவள்-நல்லூரை;
6)
பிழைக்கும் வழியாய்ப் பிழையே செய்யும் பேதைமை தீர்ந்துநலம்
தழைக்கும் வழியைச் சார வேண்டில் தாளிணை ஏத்தியடை
உழைக்கும் போதும் உண்ணும் போதும் உறங்கிடும் போதிலும்பேர்
அழைக்கும் அன்பர்க் கருளும் ஐயன் அவளிவள் நல்லூரே.
பிழைக்கும் வழியாய்ப் பிழையே செய்யும் பேதைமை தீர்ந்து நலம் தழைக்கும் வழியைச் சார வேண்டில் தாளிணை ஏத்தி அடை - வாழ்க்கை நடத்துவதற்காகக் குற்றங்களே செய்யும் மடமை தீர்ந்து நன்மை பெருகும் வழியைச் சேர விரும்பினால் இரு-திருவடிகளைத் துதித்து அடைவாயாக; (பிழைக்கும் வழி - சீவனம் பண்ணுதல்); (பிழை - குற்றம்); (பேதைமை - மடமை); (சார்தல் - பொருந்தியிருத்தல்; சென்றடைதல்);
உழைக்கும் போதும் உண்ணும் போதும் உறங்கிடும் போதிலும் பேர் அழைக்கும் அன்பர்க்கு அருளும் ஐயன் - எல்லா நேரத்திலும் திருநாமத்தைச் சொல்லி வணங்கும் பக்தர்களுக்கு அருள்செய்யும் தலைவன் உறையும் தலமான; (சம்பந்தர் தேவாரம் - 1.50.5 - "துஞ்சும்போதும் துற்றும்போதும் சொல்லுவன் உன் திறமே"); (3.4.9 - "உண்ணினும் பசிப்பினும் உறங்கினும் நின்
ஒண்மலர் அடியலால் உரையாதென்நா");
அவளிவள் நல்லூரே - அவளிவள்-நல்லூரை;
7)
தொல்லை வினைகள் சூழா முன்னம் துதிசெயச் சேர்நெஞ்சே
வில்லை ஏந்தும் வேட னாகி விசயனை வென்றருள்வான்
அல்லும் பகலும் அரனைப் போற்றி அன்புசெய் வார்க்கிரங்கி
அல்லல் நீக்கி அருளும் ஐயன் அவளிவள் நல்லூரே.
தொல்லை வினைகள் சூழாமுன்னம் துதிசெயச் சேர் நெஞ்சே - மனமே, பழவினைகள் வந்து நம்மைச் சூழ்ந்துகொள்வதன்முன் நீ போற்றச் சென்று அடைவாயாக; (தொல்லை - பழைய);
வில்லை ஏந்தும் வேடன் ஆகி விசயனை வென்று அருள்வான் - ஒரு வேடன் உருவில் வில்லை ஏந்திச் சென்று அருச்சுனனோடு போர்செய்து வென்று அவனுக்குப் பாசுபதாஸ்திரம் அருள்செய்தவன்;
அல்லும் பகலும் அரனைப் போற்றி அன்புசெய்வார்க்கு இரங்கி அல்லல் நீக்கி அருளும் ஐயன் - இராப்பகலாக ஹரனைப் போற்றி வணங்கும் பக்தர்களுக்கு இரங்கித் துன்பத்தைத் தீர்த்தருளும் தலைவன் உறையும் தலமான;
அவளிவள் நல்லூரே - அவளிவள்-நல்லூரை;
8)
வரையில் வினைகள் மாய வேண்டில் வாழ்த்திடச் சேர்மனமே
வரையை இடந்த வல்ல ரக்கன் மணிமுடி பத்தடர்த்த
அரையன் இசைகேட் டருள்கள் செய்தான் அஞ்சடை மேற்பிறையன்
அரையில் அரவம் ஆர்த்த ஐயன் அவளிவள் நல்லூரே.
வரை இல் வினை மாய வேண்டில் வாழ்த்திடச் சேர் மனமே - நெஞ்சே, அளவில்லாத வினைகள் எல்லாம் அழிய வேண்டுமென்றால், துதிப்பதற்குச் சென்று அடைவாயாக; (வரை - அளவு; எல்லை);
வரையை இடந்த வல்லரக்கன் மணிமுடி பத்து அடர்த்த அரையன் - கயிலைமலையைப் பெயர்த்த கொடிய அரக்கனான இராவணனது பத்துத்-தலைகளையும் நசுக்கிய தலைவன்; (வரை - மலை); (இடத்தல் - பெயர்த்தல்); (அடர்த்தல் - நசுக்குதல்); (அரையன் - அரசன்);
இசைகேட்டு அருள்கள் செய்தான் - இராவணன் அழுது இசைபாடித் தொழக் கேட்டு இரங்கி அவனுக்கு அருள்கள் செய்தவன்; (நீண்ட ஆயுள், சந்திரஹாஸம் என்ற வாள், இராவணன் என்ற பெயர், முதலியன);
அம் சடைமேல் பிறையன் - அழகிய சடையின்மீது பிறைச்சந்திரனை அணிந்தவன்;
அரையில் அரவம் ஆர்த்த ஐயன் - தன் அரையில் பாம்பைக் கச்சாகக் கட்டிய தலைவன் உறையும் தலமான;
அவளிவள் நல்லூரே - அவளிவள்-நல்லூரை;
9)
தளைகள் நீங்கித் தணியா இன்பம் சார்ந்திட வேண்டுதியேல்
வளையும் அணியெம் மானே என்று வழுத்திடச் சேர்மனமே
கிளறு கேழல் முளரி மேலான் கீழொடு மேலடையா
அளவில் எரியாய் அன்றோங் கையன் அவளிவள் நல்லூரே.
தளைகள் நீங்கித் தணியா இன்பம் சார்ந்திட வேண்டுதியேல் - கட்டுகள் நீங்கி, என்றும் குறையாத இன்பம் சேரவேண்டும் என்றால்; (தளைகள் - பந்தங்கள்);
வளையும் அணி எம்மானே என்று வழுத்திடச் சேர் மனமே - வளையையும் அணியும் அர்த்தநாரீஸ்வரனே என்று போற்றச் சென்றடை மனமே;
கிளறு கேழல் முளரி மேலான் கீழொடு மேல் அடையா - பன்றி வடிவில் நிலத்தை அகழ்ந்த திருமால், தாமரைமேல் இருக்கும் பிரமன், என்ற இவர்களால் திருவடியையும் திருமுடியையும் அடைய ஒண்ணாத; (கேழல் - பன்றி); (முளரி - தாமரை); (சம்பந்தர் தேவாரம் - 3.111.9 - "துன்று பூமகன் பன்றி ஆனவன் ஒன்றும் ஓர்கிலா மிழலை யானடி");
அளவு இல் எரியாய் அன்று ஓங்கு ஐயன் அவளிவள் நல்லூரே - அளவில்லாத ஜோதியாகி அன்று உயர்ந்த தலைவன் உறையும் தலமான;
அவளிவள் நல்லூரே - அவளிவள்-நல்லூரை;
10)
வெஞ்சொல் பேசி வேத நெறியை விட்டு வரச்சொலுமவ்
வஞ்ச நெஞ்சர் வார்த்தை ஒழிமின் வாழ்வினில் இன்புறலாம்
அஞ்செ ழுத்தை அன்போ டியம்பி அனுதினம் தொண்டுசெயின்
அஞ்சல் அளிக்கும் ஐயன் உறைவ தவளிவள் நல்லூரே.
வெஞ்சொல் பேசி வேத-நெறியை விட்டு வரச்சொலும் அவ்-வஞ்ச நெஞ்சர் வார்த்தை ஒழிமின் - கடுஞ்சொற்களைக் கூறி வைதிகமார்க்கத்தை நீங்கி வாருங்கள் என்று சொல்லும் அந்த வஞ்சநெஞ்சர்கள் பேச்சை நீங்குங்கள்; (வேதநெறி - வைதிகமார்க்கம்); (ஒழிமின் - ஒழியுங்கள்; நீங்குங்கள்);
வாழ்வினில் இன்புறல் ஆம் - வாழ்வில் இன்பம் அடையலாம்;
அஞ்செழுத்தை அன்போடு இயம்பி அனுதினம் தொண்டுசெயின் - திருவைந்தெழுத்தை அன்போடு சொல்லித் தினமும் திருத்தொண்டு செய்தால்; (செயின் - செய்யின் - செய்தால்);
அஞ்சல் அளிக்கும் ஐயன் உறைவது - அபயம் அளிக்கும் தலைவன் உறையும் தலம் ஆவது;
அவளிவள் நல்லூரே - அவளிவள்-நல்லூர்;
11)
பணியும் பத்தர்க்(கு) அணியன் பாதம் பரவிடச் சேர்மனமே
பிணியும் நீக்கிப் பெரிதும் அருள்வான் பிறையொடு செஞ்சடைமேல்
பணியும் அணியாம் பரமன் மிடற்றில் பாற்கடல் நஞ்சதுவும்
அணியும் மணியாம் அருளார் ஐயன் அவளிவள் நல்லூரே.
பணியும் பத்தர்க்கு அணியன் - வணங்கும் பக்தர்களுக்கு அருகில் இருப்பவன்;
பாதம் பரவிடச் சேர் மனமே - அப்பெருமான் திருவடியைப் போற்றிடச் சென்றடை மனமே;
பிணியும் நீக்கிப் பெரிதும் அருள்வான் - அப்பெருமான் பிணிகளை எல்லாம் தீர்த்துப் பேரருள் செய்பவன்; (பிணியும் - எச்சவும்மை - துன்பத்தையும் நோய்களையும் இன்ன பிறவற்றையும் பிறவிப்பிணியையும் என்பதைச் சுட்டியது);
பிறையொடு செஞ்சடைமேல் பணியும் அணி ஆம் பரமன் - செஞ்சடைமேல் பிறைச்சந்திரனும் நாகப்பாம்பும் ஆபரணம் ஆகும் பரமன்;
மிடற்றில் பாற்கடல் நஞ்சு அதுவும் அணியும் மணி ஆம் அருள் ஆர் ஐயன் - பாற்கடலில் எழுந்த விஷமும் கண்டத்தில் அணிகின்ற நீலமணி ஆகும் அருளாளன் உறையும் தலமான;
அவளிவள் நல்லூரே - உறைகின்ற அவளிவணல்லூரை.
பிற்குறிப்பு: யாப்புக் குறிப்பு:
அறுசீர் விருத்தம் - மா மா மா மா விளம் காய் - என்ற வாய்பாடு.
அடி ஈற்றுச்சீர் பெரும்பாலும் கூவிளங்காய்.
5-6 சீர்களிடையே வெண்டளை பயிலும். 5-ஆம் சீர் மாச்சீராக வரின், 6-ஆம் சீர் தனா என்ற சந்தத்தில் தொடங்கும்.
(சம்பந்தர் தேவாரம் - 1.63.1 - "எரியார் மழுவொன் றேந்தி யங்கை யிடுதலை யேகலனா")
(கண்டராதித்தர் - திருவிசைப்பா - 9.20.5 - களிவான் உலகிற் கங்கை நங்கை காதல னேஅருளென்(று));
வி. சுப்பிரமணியன்
----------- --------------
No comments:
Post a Comment