Saturday, October 28, 2017

03.04.046 - சிவன் - 'பை' (pi - π) - சிலேடை

03.04 – சிவன் சிலேடைகள்

2006-04-25

3.4.46 - சிவன் - 'பை' (pi - π) - சிலேடை

-------------------------------------------------------------

மூன்றாகிப் புள்ளியாய் ஒன்றாகி நான்கொன்றாய்த்

தோன்றுமஞ் சாகி நவமாய் இரண்டாறாய்

ஆன்றோரும் முற்றும் அறியாத தன்மையால்

தான்றோன்றிச் சங்கரன்பை தான்.


சொற்பொருள்:

புள்ளி - பொட்டுக்குறி (Mark, dot, speck, point, jot);

நவம் - 1. ஒன்பது; / 2. புதியது;

ஆறு - 1. 6 என்ற எண்; / 2. வழி; நெறி;

தான்றோன்றி - தான்தோன்றி - 1. தானே உருவானது; / 2. கடவுள்.


பை (pi - π):

3.1415926 என்று ஆரம்பித்து முடிவின்றித் தொடரும் எண். அறிஞர்களும் அதனை முழுக்க அறியமாட்டார்கள். மனிதர்களால் செய்யப்படாது தானே இருப்பது.


சிவன்:

மும்மூர்த்திகள் ஆகி, புள்ளி ஆகி (மிகவும் சிறிய வஸ்து - a point has no length or width), ஏகன் ஆகி நான்கும் ஒன்றும் ஆகத் தோன்றும் ஐம்பூதங்கள் ஆகி, என்றும் புதியதாய் (-அல்லது- நவபேதமூர்த்தம் ஆகி), சிவன் பார்வதி என்று இரண்டு ஆகி, (நல்ல) நெறி ஆனவன். ஞானிகளாலும் முற்றும் அறிய முடியாத தன்மை உடையவன். கடவுள். நன்மை செய்யும் சங்கரன்;


பிற்குறிப்பு:

1) சந்தவசந்தத்தில் பாலு என்ற அன்பர் எழுதியது:

நம் சிவ-சிவ-நாயனாரின் கணிதத்திறமைக்குக் காணிக்கையாக அவருக்கு இன்னும் இரண்டு அட்வான்ஸ்டு கணிதப் பிராப்ளங்கள்:-


நிரூபிக்க :-

1. சிவன் = 1729

2. சிவன் = 'பை' [வட்டத்தின் சுற்றளவுக்கும் விட்டத்துக்கும் உள்ள விகிதம்]


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------

No comments:

Post a Comment