03.05.001 – பொது - ஓதம் அதுபுடை சூழும் உலகினில் - (வண்ணம்)
2006-08-14
3.5.1 - ஓதம் அதுபுடை சூழும் - (பொது)
-------------------
(வண்ணவிருத்தம்;
தான தனதன தான தனதன
தான தனதன .. தனதான )
(பாதி மதிநதி - திருப்புகழ் - சுவாமிமலை)
ஓதம் அதுபுடை சூழும் உலகினில்
.. .. ஊசல் எனமனம் .. அசையாமல்
.. ஊனம் அறுதிரு நாமம் அனுதினம்
.. .. ஓதி அடியிணை .. தொழுவேனே;
தீதை இழையமண் மாய வருமொரு
.. .. தீரர் நதியினில் .. இடுமேடு
.. சேடு திகழ்திசை ஏகி வெலவருள்
.. .. தேவ; ஒளிகிளர் .. புரிநூலா;
வேத(ம்) மொழிதிரு நாவ; எயிலெரி
.. .. வீர; உமையவள் .. ஒருகூறா;
.. வேலை விடமொரு நீல மணியென
.. .. மேவி அணிமிட .. றுடையானே;
பாத மலர்தனை நால்வர் அருளிய
.. .. பாடல் அவைகொடு .. தொழுவார்கள்
.. பாரை இனியடை யாத படிவினை
.. .. பாற இனிதருள் .. பெருமானே.
பதம் பிரித்து:
ஓதம்அது புடை சூழும் உலகினில்
.. .. ஊசல் என மனம் .. அசையாமல்,
.. ஊனம் அறு திருநாமம் அனுதினம்
.. .. ஓதி அடியிணை .. தொழுவேனே;
தீதை இழை-அமண் மாய வரும் ஒரு
.. .. தீரர் நதியினில் .. இடும் ஏடு
.. சேடு திகழ் திசை ஏகி வெல அருள்
.. .. தேவ; ஒளி கிளர் .. புரிநூலா;
வேத(ம்) மொழி திருநாவ; எயில் எரி
.. .. வீர; உமையவள் .. ஒரு கூறா;
.. வேலை-விடம் ஒரு நீலமணி என
.. .. மேவி அணி மிடறு உடையானே;
பாதமலர்தனை நால்வர் அருளிய
.. .. பாடல் அவை-கொடு .. தொழுவார்கள்
.. பாரை இனி அடையாதபடி வினை
.. .. பாற இனிது-அருள் .. பெருமானே.
ஓதம்அது புடை சூழும் உலகினில் ஊசல் என மனம் அசையாமல் - கடல் நாற்புறமும் சூழும் உலகில் ஒரு ஊஞ்சல் போல் என் மனம் இங்கும் அங்கும் அசைந்து கலங்காமல்; (ஓதம் - கடல்); (அசைதல் - இயங்குதல்; கலங்குதல்);
ஊனம் அறு திரு நாமம் அனுதினம் ஓதி அடியிணை தொழுவேனே - குற்றத்தையெல்லாம் தீர்க்கின்ற திருநாமத்தைத் தினமும் ஓதி உன் இரு திருவடிகளை வணங்குவேன்; (ஊனம் - குற்றம்); (அறுத்தல் - நீக்குதல்; இல்லாமற் செய்தல்);
தீதை இழை-அமண் மாய வரும் ஒரு தீரர் நதியினில் இடும் ஏடு சேடு திகழ் திசை ஏகி வெல அருள் தேவ - தீங்கையே செய்த சமணர்கள் அழியுமாறு வந்த ( / அவதரித்த) ஒப்பற்ற திட்பம் உடையவரான திருஞான சம்பந்தர் வைகையில் இட்ட ஏடு உயரம் திகழும் திசையில் (ஆற்றை எதிர்த்து மேல் நோக்கிச்) சென்று வெல்ல அருளிய தேவனே; (அமண் - சமணமதம்; சமணர்); (மாய்தல் - அழிதல்); (தீரர் - தீரம் உடையவர் - இங்கே சம்பந்தர்; தீரம் - தைரியம்; வலிமை; அறிவு); (சேடு - உயரம்); (ஏகுதல் - போதல்); (வெல - வெல்ல - இடைக்குறையாக வந்தது);
ஒளி கிளர் புரிநூலா - ஒளி வீசும் முப்புரிநூல் அணிந்தவனே;
வேதம் மொழி திரு நாவ - வேதங்களைப் பாடியருளியவனே;
எயில் எரி வீர - முப்புரங்களை எரித்த வீரனே; (எயில் - கோட்டை);
உமையவள் ஒரு கூறா - உமை ஒரு கூறு ஆனவனே; (உமையவள் - உமை; அவள் - பகுதிப்பொருள்விகுதி);
வேலை-விடம் ஒரு நீலமணி என மேவி அணி மிடறு உடையானே - கடல்விடத்தை விரும்பி உண்டு ஒரு கரிய மணி போல அணிந்த கண்டத்தை உடையவனே; (வேலை - கடல்); (மேவுதல் - உண்ணுதல்; விரும்புதல்);
பாதமலர்தனை நால்வர் அருளிய பாடல் அவைகொடு தொழுவார்கள் பாரை இனி அடையாதபடி வினை பாற இனிது அருள் பெருமானே - உன் திருவடித்தாமரையைச் சமயக் குரவர் நால்வர் பாடல்களால் வழிபடும் பக்தர்கள் இனிப் பூமியில் பிறவாதபடி அவர்களது வினைகள் அழிய அருளும் பெருமானே; (பார் - பூமி); (பாறுதல் - அழிதல்);
வி. சுப்பிரமணியன்
-------------------------------- -------------------------------
No comments:
Post a Comment