Friday, October 27, 2017

04.02 – இன்னம்பர் - ('இன்னம்பூர்')

04.02இன்னம்பர் - ('இன்னம்பூர்')


2013-07-27
இன்னம்பர் - (இக்காலத்தில் 'இன்னம்பூர்')
----------------------------------
(நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா)
(சம்பந்தர் தேவாரம் - 2.43.1 - "கள்ளார்ந்த பூங்கொன்றை மதமத்தம் கதிர்மதியம்")


1)
அசையாத பத்தியினை அகத்திருத்தித் துதிப்போர்க்கு
விசையோடு வருவினையை விலக்கியினி தருள்புரிவான்
நசையோடு நறைமலரை நாடிவந்து வண்டினங்கள்
இசைபாடும் இன்னம்பர் எழுத்தறியும் பெருமானே.


அசையாத பத்தியினை அகத்து இருத்தித் துதிப்போர்க்கு - மாறாத பக்தியை மனத்தில் வைத்து வழிபடும் பக்தர்களுக்கு;
விசையோடு வரு வினையை விலக்கி இனிது அருள்புரிவான் - அவர்களைத் தாக்க விரைந்துவரும் வினையை நீக்கி இன்னருள் புரிகின்றவன்; (விசை - வேகம் (speed); பலம் (Force));
நசையோடு நறைமலரை நாடிவந்து வண்டினங்கள் இசைபாடும் இன்னம்பர் எழுத்தறியும் பெருமானே - தேன்மலர்களை விரும்பி அடைந்து வண்டுகள் இன்னிசை செய்யும் திருஇன்னம்பரில் உறைகின்ற எழுத்தறியும் பெருமான்; (நசை - விருப்பம்); (நறை - தேன்; வாசனை); (நாடுதல் - தேடுதல்);


* இன்னம்பர்த் தலத்து ஈசன் திருநாமம் - எழுத்தறிநாதர்.
தலவரலாற்றுக் குறிப்பு : சோழமன்னனின் கணக்கரான சுதன்மன் ஒருமுறை காட்டிய கணக்கில் சந்தேகம் ஏற்பட்டது. உரிய கணக்கை சரியாகக் காட்டும்படி கடுமையான உத்தரவிட்டான். சரியான கணக்கு காட்டியும், தன் மீது பழி வந்துவிட்டதே என எண்ணிய அவர், சிவனை வேண்டினார். உடனே சிவன் சுதன்மனின் வடிவத்தில் மன்னனிடம் சென்று ஐயத்தைப் போக்கினார். சுதன்மன் சற்றுநேரம் கழித்து கணக்குடன் செல்லவே, ""ஏற்கெனவே காட்டிய கணக்கை மீண்டும் ஏன் காட்ட வருகிறீர்?'' என மன்னன் சொல்ல, தனக்குப் பதிலாக இறைவனே வந்து கணக்கு காட்டிய விபரத்தை மன்னனிடம் எடுத்துரைத்தார். வருத்தப்பட்ட மன்னன், சுதன்மனிடம் மன்னிப்பு கேட்டதுடன், ஈசனுக்கு கோயிலும் எழுப்பினான். சுவாமிக்கு "எழுத்தறிநாதர், அட்சரபுரீஸ்வரர்' என்ற திருநாமம் ஏற்பட்டது.


(அப்பர் தேவாரம் - 5.21.8 -
தொழுது தூமலர் தூவித் துதித்துநின்று
அழுது காமுற்று அரற்றுகின் றாரையும்
பொழுது போக்கிப் புறக்கணிப் பாரையும்
எழுதும் கீழ்க்கணக்கு இன்னம்பர் ஈசனே.)



2)
உருள்கின்ற காலத்தால் உடல்ஆவி அழியாமுன்
பொருள்கண்டு போற்றிடுவாய் மடநெஞ்சே புகலாவான்
வெருள்கொண்ட விண்ணவர்கள் வேண்டஅவர்க் கருள்புரிந்த
இருள்கண்டன் இன்னம்பர் எழுத்தறியும் பெருமானே.



உருள்கின்ற காலம் - பருவங்கள் மாறி மாறி வந்து ஆண்டுகள் கழிவதைச் சுட்டியது;
பொருள்கண்டு - மெய்ப்பொருளை அறிந்து; (திருவாசகம் - நீத்தல் விண்ணப்பம் - 8.6.17 - "பொருளே தமியேன் புகலிட மே..." - பொருள் - 'பொருள்' என்று சிறப்பித்துச் சொல்லுதற்கு உரிய பொருள்; மெய்ப்பொருள்.);
மடநெஞ்சே புகல் ஆவான் - பேதைமனமே, நமக்குப் புகலிடம் ஆனவன்;
வெருள்கொண்ட விண்ணவர்கள் வேண்ட – அஞ்சிய தேவர்கள் இறைஞ்சவும்; (வெருள் - அச்சம்);
இருள்கண்டன் - கரியகண்டன்; நீலகண்டன்; (இருள்தல் - கறுப்பாதல்);


3)
ஆர்வமலி மனத்தினராய் அனுதினமும் அடிபோற்றிப்
பேர்புகலும் நாவினர்க்குப் பேரின்பம் அருளுமரன்
வார்திகழும் வனமுலையாள் ஓர்பங்கு மகிழீசன்
ஏர்திகழும் இன்னம்பர் எழுத்தறியும் பெருமானே.


ஆர்வம் மலி மனத்தினராய் அனுதினமும் அடிபோற்றிப் பேர் புகலும் நாவினர்க்குப் பேரின்பம் அருளும் அரன் - மனத்தில் மிகுந்த அன்போடு நாள்தோறும் திருவடியை வழிபட்டுத் திருநாமத்தைச் சொல்லும் பக்தர்களுக்குப் பேரின்பத்தை வழங்கும் ஹரன்; (ஆர்வம் - அன்பு; பக்தி);
வார் திகழும் வனமுலையாள் ஓர் பங்கு மகிழ் ஈசன் - கச்சணிந்த அழகிய தனங்களையுடைய உமையை ஒரு பங்காக உடைய ஈசன்; (வார் - கச்சு); (வன முலை - அழகிய முலை);
ஏர் திகழும் இன்னம்பர் எழுத்தறியும் பெருமானே - அழகிய திருஇன்னம்பரில் எழுந்தருளியிருக்கும் எழுத்தறியும் பெருமான்; (ஏர் - அழகு);


4)
சுரங்கொண்டு தமிழ்பாடித் தொழுவார்தம் துயர்தீர்ப்பான்
சரங்கொண்ட கரக்காமன் தனைக்காய்ந்த கண்ணுதலான்
கரந்தன்னிற் கமலத்தான் சிரங்கொண்டூர் இடுபலியை
இரந்துண்பான் இன்னம்பர் எழுத்தறியும் பெருமானே.


சுரம் - ஏழு ஸ்வரம் - இசை;
கொண்டு - மூன்றாம் வேற்றுமைச் சொல்லுருபு;
தமிழ் - தேவாரம், திருவாசகம், முதலியன;
(அப்பர் தேவாரம் - 4.1.6 - "தமிழோடு இசைபாடல் மறந்தறியேன்");
சரம் கொண்ட கரக் காமன் - அம்பை எடுத்த கையையுடைய மன்மதன்; (கொள்ளுதல் - To seize, grasp; கையால் எடுத்துக் கொள்ளுதல்);
காய்தல் - கோபித்தல்;
கண்ணுதலான் - நெற்றிக்கண்ணன்;
கமலத்தான் - பிரமன்;
ஊர் இடுபலியை இரந்து உண்பான் - ஊரார் இடும் பிச்சையை ஏற்று உண்பவன்;


5)
ஆழமிகு வினைக்கடலில் ஆழாமல் இன்புற்று
வாழநினை மடநெஞ்சே வஞ்சமிலாச் செஞ்சடையான்
வேழவுரிப் போர்வையினான் வெங்கதிரோற் கருள்புரிந்த
ஏழைபங்கன் இன்னம்பர் எழுத்தறியும் பெருமானே.


ஆழ மிகு வினைக்கடலில் ஆழாமல் இன்புற்று வாழ நினை மடநெஞ்சே - பேதைமனமே, ஆழம் மிக்க வினைக்கடலில் மூழ்கி அழியாமல் இன்பமாக வாழ னீ நினைவாயாக;
வஞ்சம் இலாச் செஞ்சடையான் - ஒளித்தல் இன்றி வழங்குபவன், செஞ்சடையை உடையவன்;
வேழ உரிப் போர்வையினான் - யானைத்தோலைப் போர்வையாகப் போர்த்தியவன்;
வெங்கதிரோற்கு அருள்புரிந்த ஏழைபங்கன் - சூரியனுக்கு அருள்செய்தவன், உமைபங்கன்;
இன்னம்பர் எழுத்தறியும் பெருமானே - திருஇன்னம்பரில் எழுந்தருளியிருக்கும் எழுத்தறியும் பெருமான்;
* சூரியன் இத்தலத்தில் ஈசனை வழிபட்டதைத் தலபுராணத்திற் காண்க;
(அப்பர் தேவாரம் - 5.21.5 - "இன்னம் இன்புற்ற இன்னம்பர் ஈசனே" -
இன்னம் இன்புற்ற - ( இனன் - சூரியன் ) சூரியன் வழிபட்டு இன்புற்ற. சூரியன் வழிபட்டதால் இனன் நம்பூர் என்ற பெயர் எய்தி மருவி இன்னம்பர் ஆயிற்று என்பர்.)


6)
சுட்டபொடி பூசியடி தொழுவார்க்குத் துணையாவான்
மட்டலர்கள் ஆயிரத்தால் வழிபட்ட மாலுக்குத்
துட்டரைக்கொல் ஆழிதந்தான் தோற்றமந்தம் ஒன்றில்லான்
எட்டுருவன் இன்னம்பர் எழுத்தறியும் பெருமானே.


சுட்ட பொடி பூசி அடி தொழுவார்க்குத் துணை ஆவான் - திருநீற்றைப் பூசியவன்; திருநீற்றைப் பூசித் திருவடியை வணங்கும் அன்பர்களுக்குத் துணை ஆவான்; (பொடி - சாம்பல்);
மட்டு அலர்கள் ஆயிரத்தால் வழிபட்ட மாலுக்குத் துட்டரைக் கொல் ஆழி தந்தான் - ஆயிரம் தாமரைப்பூக்களால் வழிபட்ட திருமாலுக்குத் துஷ்டர்களை அழிக்கும் சக்கராயுதத்தைத் தந்தவன்; (மட்டு அலர்கள் - வாசமலர்கள் / தேன்மலர்கள் - தாமரை); (துட்டர் - துஷ்டர் - தீயோர்); (ஆழி - சக்கரம்);
தோற்றம் அந்தம் ஒன்று இல்லான் - பிறப்பும் இறப்பும் இல்லாதவன்; முதலும் முடிவும் இல்லாதவன்;
எட்டு உருவன் - அட்டமூர்த்தி; (அப்பர் தேவாரம் - 6.15.9 - "விட்டுருவங் கிளர்கின்ற சோதி யானாம் ... எட்டுருவ மூர்த்தியாம் ..." - எட்டு உருவம் - அட்ட மூர்த்தம் ; அவை ஐம்பூதங்கள், சூரியசந்திரர், ஆன்மா என்பன.);
இன்னம்பர் எழுத்தறியும் பெருமானே - திருஇன்னம்பரில் எழுந்தருளியிருக்கும் எழுத்தறியும் பெருமான்;


* திருவீழிமிழலையில் திருமாலுக்குச் சக்கரம் அருளியதை இப்பாடல் சுட்டியது.


7)
மூத்தவனே முக்கண்ணா அருளென்று முறையிட்டுத்
தோத்திரஞ்செய் அடியார்தம் தொல்வினையைத் துடைத்தருள்வான்
பூத்திரளை ஏந்திவந்து புரந்தரன்தன் ஆனைதொழு
தேத்தவருள் இன்னம்பர் எழுத்தறியும் பெருமானே.


துடைத்தல் - அழித்தல்;
புரந்தரன் தன் ஆனை தொழுது ஏத்த அருள் - இந்திரனுடைய யானையான ஐராவதம் தொழவும் அதற்கு அருளிய;


* ஐராவதம் இத்தலத்தில் ஈசனைப் பூசை செய்ததைத் தலபுராணத்திற் காண்க;


8)
குன்றசைத்த இராவணனைக் கூக்குரலிட் டழுமாறே
அன்றுவிரல் ஒன்றினையவ் வருவரைமேல் இட்டடர்த்தான்
வென்றிவிடைக் கொடியுடையான் விரும்படியார் கட்கிங்கே
என்றருள்வான் இன்னம்பர் எழுத்தறியும் பெருமானே.


அவ்வருவரைமேல் - +அரு வரைமேல் - அந்தக் கயிலைமலையின்மீது;
வென்றி விடைக்கொடி உடையான் - வெற்றியுடைய இடபக்கொடியை உடையவன்; (வென்றி - வெற்றி);
விரும்பு அடியார்கட்கு "இங்கே" என்று அருள்வான் - பக்தர்களைத் தேடிவந்து அவர்களுக்கு அருள்புரிவான்;
(சம்பந்தர் தேவாரம் - 2.40.6 -
"எங்கேனும் யாதாகிப் பிறந்திடினும் தன்னடியார்க்கு
இங்கேயென் றருள்புரியும் எம்பெருமான் எருதேறி...")


9)
காராரும் கண்டத்தாய் கடல்வண்ணன் அயன்காணாச்
சீராரும் அடிமுடியாய் சிவனேயென் றுளமுருகி
நீராரும் கண்ணர்க்கு நீள்வானம் அருள்புரிவான்
ஏராரும் இன்னம்பர் எழுத்தறியும் பெருமானே.


கார் ஆரும் கண்டத்தாய் - நீலகண்டனே; (கார் ஆரும் - கருமை பொருந்திய);
கடல்வண்ணன் அயன் காணாச் சீர் ஆரும் அடிமுடியாய் - திருமாலாலும் பிரமனாலும் காண ஒண்ணாத பெருமைமிக்க திருவடியும் திருமுடியும் உடையவனே; (கடல்வண்ணன் - திருமால்);
சிவனே என்று உளமுருகி நீர் ஆரும் கண்ணர்க்கு நீள் வானம் அருள்புரிவான் - சிவனே என்று மனம் உருகிக் கண்ணீர் கசிந்து தொழும் பக்தர்களுக்குச் சிவலோகத்தை அருள்செய்பவன்;
ஏர் ஆரும் இன்னம்பர் எழுத்தறியும் பெருமானே - அழகிய திருஇன்னம்பரில் எழுந்தருளியிருக்கும் எழுத்தறியும் பெருமான்; (ஏர் ஆரும் - அழகிய);


10)
தொழிலாகத் தூற்றுவதே செய்கின்ற துரிசுடையார்
வழியாகச் சொல்வதைநீ மதியாதே நன்னெஞ்சே
அழியாத இன்பத்தை அடியார்கட் கருள்புரிவான்
எழிலாரும் இன்னம்பர் எழுத்தறியும் பெருமானே.


துரிசு - குற்றம்;


11)
நீறுடைய நெற்றியராய் நினைவார்தம் வினைதீர்ப்பான்
ஆறுடைய அஞ்சடையான் ஆகத்தில் அணிமாதோர்
கூறுடையான் கூற்றுதைத்த குரைகழலான் கொடியதன்மேல்
ஏறுடையான் இன்னம்பர் எழுத்தறியும் பெருமானே.


அம் சடை - அழகிய சடை;
ஆகம் - மேனி;
அணி மாது - அழகிய உமையம்மை;
கூற்று உதைத்த குரை கழலான் - ஒலிக்கின்ற கழல் அணிந்த திருவடியால் இயமனை உதைத்தவன்;
கொடி அதன்மேல் ஏறு உடையான் - இடபச்சின்னம் பொறித்த கொடியை உடையவன்;


அன்புடன்,
வி. சுப்பிரமணியன்



பிற்குறிப்பு :
1) இன்னம்பர் - இன்னம்பூர் - எழுத்தறிநாதர் கோயில் - தினமலர் தளத்தில்: http://temple.dinamalar.com/New.php?id=674
இன்னம்பர் - தேவாரம் தளத்தில்: http://www.thevaaram.org/thirumurai_1/koil_view.php?koil_idField=41

----------- --------------

No comments:

Post a Comment