Saturday, June 17, 2017

03.04.037 - சிவன் - பத்து (10) - சிலேடை

03.04 – சிவன் சிலேடைகள்

2006-04-20

3.4.37 - சிவன் - பத்து (10) - சிலேடை

-------------------------------------------------------------

அஞ்சுமஞ்சும் தானடக்கும் அவ்வொன் றிலையெனில்

எஞ்சுமொரு சூனியம் எப்போதும் நெஞ்சில்

இருத்திப் பெருக்கலாம் எட்டோ டிரண்டாம்

பருப்பத வில்லேந்தி பத்து.


சொற்பொருள்:

அஞ்சும் அஞ்சும் - 1. பத்து (5 + 5); / 2. அஞ்சுகின்ற ஐம்புலன்கள்;

தான் - அது; / அவன்; தேற்றச்சொல்;

அடக்குதல் - 1. உள்ளடக்குதல்; / 2. அடங்கச்செய்தல்;

இலை - இல்லை;

எனில் - என்னில் - என்றால்;

சூனியம் - 1. பூச்சியம் (0); / 2. இன்மை (nothingness);

பெருக்குதல் - 1. ஓர் எண்ணை மற்றோர் எண்ணாற் சுட்டிய மடங்கு அதிகப்படுத்துதல் (multiply); / 2. அதிகமாகும்படி செய்தல்;

பருப்பதம் - மலை;


பத்து - 10:

அஞ்சும் அஞ்சும் தான் அடக்கும் - அஃது இரண்டு ஐந்துகளை உள்ளடக்கியது.

அவ்வொன்று இலை னில் எஞ்சும் ஒரு சூனியம் - தசம எண் முறையில் (decimal system) 10 என்று எழுதும்பொழுது, அந்த 1 என்ற இலக்கம் இல்லை என்றால், பூச்சியமே (0) மிஞ்சும்.

எப்போதும் நெஞ்சில் இருத்திப் பெருக்கலாம் - (பத்தால் பெருக்கும்பொழுது) எப்பொழுதும் மனக்கணக்காகப் பெருக்கலாம்.

எட்டோடு இரண்டு ஆம் - எட்டும் இரண்டும் சேர்ந்தால் கிடைக்கும் எண்.

பத்து - பத்து என்ற எண்.


சிவன்:

அஞ்சும் அஞ்சும் தான் அடக்கும் - (பெரியோர்கள்) அஞ்சுகின்ற ஐம்புலன்களையும் அவன் அடக்குவான். (அவன் ஐம்புலன்களை வென்றவன்; நாம் அஞ்சுகின்ற ஐம்புலன்களை அவன் அருள் அடக்கும்); (அப்பர் தேவாரம் - 5.98.7 – "வென்றானைப் புலன் ஐந்தும்"); (5.47.7 - "மூக்கு வாய்செவி கண்ணுடல் ஆகிவந்து ஆக்கும் ஐவர்தம் ஆப்பை அவிழ்த்தருள் நோக்குவான்");

அவ்வொன்று இலை னில் எஞ்சும் ஒரு சூனியம் - அந்த ஒரு பொருள் (மெய்ப்பொருள்) இல்லாவிடில் (இப்பிரபஞ்சத்தில்) எதுவுமே எஞ்சி இராது. (அதாவது, எல்லாமே அவன்).

எப்போதும் நெஞ்சில் இருத்திப் பெருக்கலாம் - அவனைச் சதா காலமும் நெஞ்சில் வைத்துப் போற்றினால் நன்மையைத் / திருவைப் பெருக்கலாம்.

எட்டோடு இரண்டு ஆம் - எட்டு என்றும் (அட்டமூர்த்தி), இரண்டு என்றும் (சிவம் சக்தி), ஆவான்.

பருப்பத-வில் ஏந்தி - மேருமலையை வில்லாக ஏந்திய சிவபெருமான். (அப்பர் தேவாரம் - திருமுறை 5.42.7 - "எட்டும் ஒன்றும் இரண்டும் மூன்று ஆயினார்");

வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------

No comments:

Post a Comment