Saturday, June 17, 2017

03.04.039 - சிவன் - கொல்லன் - சிலேடை

03.04 – சிவன் சிலேடைகள்

2006-04-22

3.4.39 - சிவன் - கொல்லன் - சிலேடை

-------------------------------------------------------------

காலமெலாம் கொட்டுவான் சுத்தியொடு நாம்கருது

கோலம் உருவாகும் கொல்கின்ற சூலமழுத்

தோன்றுமவன் கையில் துருத்தியும் சேரும்கண்

மூன்றுடையான் கொல்லன்சீர் முன்னு.


சொற்பொருள்:

கொட்டுதல் - 1. கம்மியர் சம்மட்டியால் அடித்தல் (To hammer); / 2. வாத்தியம் முழக்குதல்;

சுத்தி - 1. சுத்தியல் (hammer); / 2. a. தூய்மை; b. இப்பிவடிவாகத் தலையோட்டாலமைக்குந் திருநீற்றுக்கலம் (receptacle for sacred ashes);

கோலம் - 1. வடிவம்; / 2. அழகு;

உரு - வடிவு;

உருவாதல் - வடிவுறுதல்;

துருத்தி - 1. காற்றடிக்கும் துருத்தி; / 2. திருத்துருத்தி என்ற தலம் (இக்காலத்தில் "குத்தாலம்" என்று வழங்கப்பெறும் ஊர். கும்பகோணம் மயிலாடுதுறை இடையே உள்ளது);

கொல்லன் - கருமான் (Blacksmith);

சீர் - பெருமை; இயல்பு;

முன்னுதல் - கருதுதல்;


கொல்லன்:

காலம்-லாம் கொட்டுவான் சுத்தியொடு - பொழுதெல்லாம் சுத்தியலால் (இரும்பு முதலிய உலோகங்களை) அடித்துக்கொண்டு இருப்பான்.

நாம் கருது கோலம் உருவாகும் - (அந்த உலோகக் கட்டியிலிருந்து) நாம் விரும்பிய (பொருளின்) வடிவம் உருவாகும்;

கொல்கின்ற சூலம் மழுத் தோன்றும் அவன் கையில் - கொலைக்கருவிகளான சூலமும் மழுவும் அவன் செய்வான்.

(அவன் கையில்) துருத்தியும் சேரும் - காற்றடிக்கும் துருத்தியும் இருக்கும். ("அவன் கையில்" என்ற சொற்றொடரை இடைநிலைத்தீவகமாகக் கொண்டு இப்படி இருபக்கமும் இயைக்கலாம்);

கொல்லன் சீர் முன்னு - கொல்லன் (கருமான்) பெருமையை எண்ணு;


சிவன்:

காலம்-லாம் கொட்டுவான் - எக்காலமும் உடுக்கை அடிப்பவன்; (நடராஜப் பெருமான் கையில் உடுக்கை இருக்கும். அவன் எல்லையற்ற திருக்கூத்துச் செய்பவன்);

சுத்தியொடு நாம் கருது கோலம் உருவாகும் - தூய்மையோடு நாம் கருதுகின்ற வடிவம் அவனது உரு ஆகும்; அவன் தன் கையில் சுத்தி (திருநீற்றுக்கலம்) ஏந்தி, நாம் கருதுகின்ற வடிவம் தனது உரு என்று ஆனவன்; (3.57.8 - "கரு மானுரிதோல் சுற்றியான் சுத்திசூலம் சுடர்க் கண்ணுதல் மேல்விளங்கத்");

கொல்கின்ற சூலம் மழுத் தோன்றும் அவன் கையில் - கொல்லும் ஆயுதங்களான சூலமும் மழுவும் அவன் கையில் இருக்கும்;

துருத்தியும் சேரும் - திருத்துருத்தி என்ற தலத்திலும் எழுந்தருளியவன்.

கண் மூன்று உடையான் சீர் முன்னு - முக்கண்ணன் பெருமையை எண்ணு;


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------

No comments:

Post a Comment