03.04 – சிவன் சிலேடைகள்
2006-04-22
3.4.40 - சிவன் - எட்டு (8) - சிலேடை
-------------------------------------------------------------
விளங்குலகு கூறுமிரண் டாறங்கம் என்றே
உளநிலைமாற் றிக்காணில் உம்பர் அளவற்ற
ஒன்றினைக் காட்டும் உருஅஞ்சும் மூன்றுமாம்
என்றுமழி வில்சிவன் எட்டு.
சொற்பொருள்:
விளங்குதல் - திகழ்தல்;
உலகு - 1. உலகம் (உலகத்தினர்) / 2. பூமி;
கூறு - பாகம்;
கூறுதல் - சொல்லுதல்;
அங்கம் - 1. உறுப்பு; / 2. வேதாங்கம் (சிக்ஷை, வியாகரணம், சந்தஸ், நிருக்தம், ஜ்யோதிஷம், கல்பம் என்ற ஆறு அங்கங்கள்);
என்றே - 1. என்று + ஏ (அசை); / 2. என் + தே (தெய்வம்);
உள – உள்ள – 1. இருக்கின்ற; / 2. உள்ளத்தின்;
உளநிலை - 1. இருக்கும் நிலை; / 2. உள்ளத்தின் நிலை;
காண்தல் - 1. பார்த்தல்; / 2. ஆராய்தல்; வணங்குதல்;
உம்பர் - 1. மேலிடம்; / 2. வானுலகம் (சிவலோகம்);
காட்டுதல் - 1. காண்பித்தல்; அறிவித்தல்; / 2. உண்டாக்குதல்;
அளவற்ற ஒன்று - அனந்தம்; எல்லையற்றது; (infinity);
உரு - வடிவம்;
அழிவில் - அழிவு இல் - அழிவில்லாத;
எட்டு - எட்டு என்ற எண்;
எட்டு (8):
விளங்கு உலகு கூறும் இரண்டு ஆறு அங்கம் என்றே - உலகம், இரண்டும் ஆறும் (எட்டின்) உறுப்பு என்று சொல்லும்; (2+6=8).
உள நிலை மாற்றிக் காணில் உம்பர் அளவு அற்ற ஒன்றினைக் காட்டும் உரு - அது இருக்கும் நிலையை மாற்றிப் பார்த்தால் (8 என்ற குறியைப் பக்கவாட்டில் வைத்து நோக்கினால் = ∞ ) அது (கணிதத்தில் infinity என்ற) மேல்-எல்லை இல்லாத பேரெண்ணைக் குறிக்கும் வடிவம் ஆகும்.
அஞ்சும் மூன்றும் ஆம் - ஐந்தையும் மூன்றையும் கூட்டினால் கிட்டும் எண்; (5 + 3 = 8).
எட்டு - எட்டு என்ற எண்;
சிவன்:
விளங்கு உலகு - இந்தப் பூமி (ஆவான்).
கூறும் இரண்டு - (திருமேனியில்) இரண்டு கூறு;
ஆறு அங்கம் - ஆறங்கம் (ஆவான்). (திருநாவுக்கரசர் தேவாரம் - 6.55.1 - "ஆறங்கம் நால்வேதம் ஆனாய் போற்றி");
என் தே - என் தெய்வம்.
உள நிலை மாற்றிக் காணில் உம்பர் அளவு அற்ற ஒன்றினைக் காட்டும் - உள்ளத்தின் நிலையை மாற்றி (எப்பொழுதும் அலைகின்ற மனத்தை ஒருமைப்படுத்தி) அவனைத் தியானித்து வணங்கினால், சிவலோகத்தையும் அளவற்ற ஒன்றான பேரின்பத்தையும் அருள்வான்;
உரு அஞ்சும் மூன்றும் ஆம் - அட்டமூர்த்தம் உடையவன்; ("பஞ்சபூதங்களும் மும்மூர்த்திகளும் அவனது வடிவம் ஆகும்" - என்றும் பொருள்கொள்ளக்கூடும்). (அட்டமூர்த்தம் - ஐம்பூதங்கள், சூரியன், சந்திரன், ஆன்மா);
என்றும் அழிவு-இல் சிவன் - என்றும் அழிவில்லாத சிவன்;
வி. சுப்பிரமணியன்
-------------------------------- -------------------------------
No comments:
Post a Comment