03.04 – சிவன் சிலேடைகள்
2006-04-22
3.4.41 - சிவன் - கைக்கடிகாரம் (wristwatch) - சிலேடை
-------------------------------------------------------------
மணிகாட்டு முள்ளிருக்கும் மாந்தர்கரம் சேரும்
அணிவார் குழலாரும் அங்குப் பணிசெய்வார்
பார்க்கவிழை கோலம் பலவிருக்கும் சங்கரன்கை
ஆர்க்கும் கடிகாரம் ஆம்.
சொற்பொருள்:
மணிகாட்டு முள்ளிருக்கும் - 1. மணி காட்டு முள் இருக்கும்; / 2. மணி காட்டும் உள் இருக்கும்;
உள் - உள்ளம்; மனம்;
சேர்தல் - 1. பொருந்துதல்; / 2. ஒன்றுகூடுதல்;
அணிதல் - தரித்தல்;
அணி - அழகு;
வார் - நீண்ட;
குழல் - 1. பெண்ணின் கூந்தல் / 2. ஆகுபெயராய் வந்து பெண்ணைக் குறித்தது;
ஆர்தல் - பொருந்துதல்;
அங்கு - அசைச்சொல்;
பணிசெய்தல் - 1. வேலை செய்தல்; / 2. தொண்டு செய்தல்;
பார்த்தல் - 1. கண்ணால் நோக்குதல்; / 2. தரிசித்தல்; ஆராய்தல்; வணங்குதல்;
விழைதல் - விரும்புதல்;
கோலம் - வடிவம்;
ஆர்த்தல் - கட்டுதல்;
கடிகாரம்:
மணி காட்டு முள் இருக்கும் - நேரத்தைக் காட்டுகின்ற முள் இருக்கும்.
மாந்தர்-கரம் சேரும் - மக்களது கையில் பொருந்தும்; (கையில் அணிவர்).
அணிவார் குழலாரும் அங்குப் - பெண்களும் அதனை அணிவார்கள்;
பணிசெய்வார் பார்க்க விழை கோலம் பல இருக்கும் - வேலைசெய்கின்றவர்கள் பார்க்க விரும்பும், பல வடிவம் இருக்கும்;
கை ஆர்க்கும் கடிகாரம் ஆம் - கையில் கட்டும் கடிகாரம் ஆகும்;
சிவன்:
மணி காட்டும் - (கண்டத்தில் ஆலகாலத்தால் ஆன) மணியைக் காட்டுவான்.
உள் இருக்கும் மாந்தர் கரம் சேரும் - (அவன் தங்கள்) மனத்தில் இருக்கும் மக்களது கை கூப்பும் (கைகூப்பி வணங்குவர்);
அணி வார்-குழல் ஆரும் அங்குப் - அழகிய நீண்ட கூந்தலை உடைய உமையும் அங்கே (திருமேனியில்) பொருந்துவாள்; (உமையொரு பங்கன்);
அணி வார்-குழலாரும் அங்குப் பணிசெய்வார் - அழகிய நீண்ட கூந்தலை உடைய பெண்களும் தொண்டுசெய்வார்கள்; ("அணிவார் குழலாரும் அங்குப் பணிசெய்வார்" - என்ற சொற்றொடர் இப்படி இருமுறை இயைத்துப் பொருள்கொள்ளுமாறு நின்றது);
பணிசெய்வார் பார்க்க விழை கோலம் பல இருக்கும் - தொண்டுசெய்பவர்கள் தரிசிக்க விரும்பும் வடிவங்கள் பல இருக்கும்;
சங்கரன் ஆம் - சங்கரன் (நன்மையைச் செய்பவன்) என்ற திருநாமம் உடைய சிவபெருமான்;
யாப்புக் குறிப்பு :
மாந்தர்கரம் - ரகர ஒற்றை நீக்கி அலகிட்டுக் கூவிளங்காய் என்று கொள்க.
உதாரணமாக:
நம்பியாண்டார் நம்பி - திருநாரையூர் விநாயகர் இரட்டை மணிமாலை - 11.31.9 -
வனஞ்சாய வல்வினைநோய் நீக்கி வனசத்
தனஞ்சாய லைத்தருவா னன்றோ - இனஞ்சாயத்
தேரையூர் நம்பர்மகன் திண்தோள் நெரித்தருளும்
நாரையூர் நம்பர்மக னாம்.
"நம்பர்மகன்" இரண்டிலும் ரகர ஒற்று அலகு பெறாது நின்றது.
வி. சுப்பிரமணியன்
-------------------------------- -------------------------------
No comments:
Post a Comment