02.23
– கானூர்
(திருக்கானூர்)
2011-07-16
திருக்கானூர்
----------------------------
(அறுசீர் விருத்தம் - 'மா மா காய்' - அரையடி வாய்பாடு)
(சுந்தரர் தேவாரம் - 7.52.1 - "முத்தா முத்தி தரவல்ல")
(திருநாவுக்கரசர் தேவாரம் - 4.15.1 - “பற்றற் றார்சேர் பழம்பதியைப்”)
1)
வெளுத்த மயிரும் தோற்றிரையும்
.. விரவி மூத்து வாவென்று
விளித்துக் காலன் வருமுன்னே
.. விரைந்து சேர்வாய் மடநெஞ்சே
தெளிக்கும் அலையார் நதிச்சடையான்
.. திரிமுப் புரங்கள் தமைநகையால்
கொளுத்தும் ஈசன் உறைகோயில்
.. கொள்ளி டஞ்சூழ் கானூரே.
2)
பறைகள் ஒலிக்கப் பாடையின்மேல்
.. பயணம் செய்யும் நாள்வருமுன்
கறைகொள் கண்டன் கழல்பேணக்
.. கடுகி அடைவாய் மடநெஞ்சே
மறைகள் ஏத்தும் முக்கண்ணன்
.. மலர்த்தாள் வாழ்த்தும் அடியாரின்
குறைகள் தீர்ப்பான் உறைகோயில்
.. கொள்ளி டஞ்சூழ் கானூரே.
3)
பஞ்சின் நிறத்தை மயிரெய்திப்
.. பலரும் இகழப் பரிதவித்துத்
துஞ்சும் காலம் வருமுன்னே
.. துரித மாக அடைநெஞ்சே
செஞ்சொல் மாலை மகிழ்ஈசன்
.. திகழும் மதியை அரவோடு
குஞ்சி வைத்தான் உறைகோயில்
.. கொள்ளி டஞ்சூழ் கானூரே.
4)
ஏறு நடைபோய் ஒருகைக்கோல்
.. ஏந்தல் கண்டுற் றாரெல்லாம்
மாறு மனத்தால் இகழாமுன்
.. வழிபட் டுய்வாய் மடநெஞ்சே
நாறு கொன்றை மலர்சூடி
.. நரைவெள் ளேற்றன் நால்வேதம்
கூறும் ஒருவன் உறைகோயில்
.. கொள்ளி டஞ்சூழ் கானூரே.
5)
ஆரார் வந்தார் என்பதையும்
.. அறியா நிலையுற் றெமதூதர்
வாராய் என்று வளைக்குமுனம்
.. வழிபட் டுய்வாய் மடநெஞ்சே
நீரார் சடையன் நெருப்புமிழும்
.. நெற்றிக் கண்ணன் கையிலொரு
கூரார் மழுவன் உறைகோயில்
.. கொள்ளி டஞ்சூழ் கானூரே.
6)
விள்ளும் சொற்கள் மிகக்குழறி
.. வீட்டில் உள்ள எல்லாரும்
எள்ளும் நிலையை எய்தாமுன்
.. ஏத்தி உய்வாய் மடநெஞ்சே
உள்ளும் அடியார்க் குறுதுணைவன்
.. ஓடும் நதியைத் தன்னுள்ளே
கொள்ளும் சடையன் உறைகோயில்
.. கொள்ளி டஞ்சூழ் கானூரே.
7)
நீலக் குயில்போல் இருந்தமயிர்
.. நிறத்தில் கொக்கை நிகர்த்தொருகைக்
கோலைக் கொள்ளும் நாள்வருமுன்
.. குறுகு வாயென் மடநெஞ்சே
சூலப் படையன் சுடுநீற்றன்
.. சுடலை தன்னில் நடம்செய்வான்
கோலப் பிறையன் உறைகோயில்
.. கொள்ளி டஞ்சூழ் கானூரே.
8)
மிடுக்கு மிக்க கோலம்போய்
.. மெலிந்து நால்வர் சுமந்துசெல்லப்
படுக்கும் காலம் வருமுன்னே
.. பரவிப் பணிவாய் மடநெஞ்சே
அடுக்கல் எடுக்கும் தசமுகனை
.. அடர்த்துக் கீதம் கேட்டுவரம்
கொடுக்கும் பெருமான் உறைகோயில்
.. கொள்ளி டஞ்சூழ் கானூரே.
9)
துன்றித் தூதர் சூழ்வதன்முன்
.. துரித மாக அடைநெஞ்சே
பன்றி யாகி அகழ்மாலும்
.. பறவை யாகி உயர்அயனும்
அன்று காணா அழலுருவன்
.. அன்பர் தம்மை அகலாதான்
கொன்றை சூடி உறைகோயில்
.. கொள்ளி டஞ்சூழ் கானூரே.
10)
பூண மாட்டார் திருநீற்றைப்
.. புவியில் இறந்து பிறந்தெய்ப்பார்
பேண வேண்டா அவர்பேச்சைப்
.. பேறு வேண்டிற் பெறச்சேர்வாய்
ஊணைப் பிரமன் சிரந்தன்னில்
.. உகக்கும் பித்தன் உமைபங்கன்
கோணற் பிறையன் உறைகோயில்
.. கொள்ளி டஞ்சூழ் கானூரே.
11)
வல்லேன் என்று வாழ்ந்ததெலாம்
.. மறைந்த கனவாய் இன்றெதுவும்
ஒல்லேன் என்ற நிலைவருமுன்
.. ஒல்லை அடைவாய் மடநெஞ்சே
வில்லேர் புருவத் துமையாளை
.. விரும்பிப் பாகம் கொள்ளுமரன்
கொல்லே றுடையான் உறைகோயில்
.. கொள்ளி டஞ்சூழ் கானூரே.
அன்போடு,
வி. சுப்பிரமணியன்
பிற்குறிப்பு :
1) கானூர் - இத்தலம் மேலைத்திருக்காட்டுப்பள்ளியிலிருந்து சில கிலோமீட்டர் தொலைவில், கொள்ளிட நதிக்கரையில் அமைந்துள்ளது.
2) திருக்கானூர் - கோயில் தகவல்கள் - தினமலர் தளத்தில்: http://temple.dinamalar.com/New.php?id=387
-------------- --------------
2011-07-16
திருக்கானூர்
----------------------------
(அறுசீர் விருத்தம் - 'மா மா காய்' - அரையடி வாய்பாடு)
(சுந்தரர் தேவாரம் - 7.52.1 - "முத்தா முத்தி தரவல்ல")
(திருநாவுக்கரசர் தேவாரம் - 4.15.1 - “பற்றற் றார்சேர் பழம்பதியைப்”)
1)
வெளுத்த மயிரும் தோற்றிரையும்
.. விரவி மூத்து வாவென்று
விளித்துக் காலன் வருமுன்னே
.. விரைந்து சேர்வாய் மடநெஞ்சே
தெளிக்கும் அலையார் நதிச்சடையான்
.. திரிமுப் புரங்கள் தமைநகையால்
கொளுத்தும் ஈசன் உறைகோயில்
.. கொள்ளி டஞ்சூழ் கானூரே.
தோற்றிரையும்
-
தோல்திரையும்
-
தோற்சுருக்கமும்;
(திரை
-
சுருக்கம்);
விரவுதல்
-
அடைதல்;
கலத்தல்;
அலை
ஆர் நதி -
அலைகள்
பொருந்திய கங்கை;
திரி
முப்புரங்கள்தமை
-
எங்கும்
திரிந்த மூன்று கோட்டைகளை;
நகை
-
சிரிப்பு;
2)
பறைகள் ஒலிக்கப் பாடையின்மேல்
.. பயணம் செய்யும் நாள்வருமுன்
கறைகொள் கண்டன் கழல்பேணக்
.. கடுகி அடைவாய் மடநெஞ்சே
மறைகள் ஏத்தும் முக்கண்ணன்
.. மலர்த்தாள் வாழ்த்தும் அடியாரின்
குறைகள் தீர்ப்பான் உறைகோயில்
.. கொள்ளி டஞ்சூழ் கானூரே.
கறைகொள்
கண்டன்
-
நீலகண்டன்;
கழல்
பேண -
திருவடியை
வணங்க;
கடுகுதல்
-
விரைதல்;
3)
பஞ்சின் நிறத்தை மயிரெய்திப்
.. பலரும் இகழப் பரிதவித்துத்
துஞ்சும் காலம் வருமுன்னே
.. துரித மாக அடைநெஞ்சே
செஞ்சொல் மாலை மகிழ்ஈசன்
.. திகழும் மதியை அரவோடு
குஞ்சி வைத்தான் உறைகோயில்
.. கொள்ளி டஞ்சூழ் கானூரே.
பஞ்சின்
நிறத்தை மயிர் எய்தி
-
தலைமயிர்
பஞ்சுபோல் வெளுத்து நரைத்து;
பரிதவித்தல்
-
துக்கித்தல்;
வருந்துதல்;
துஞ்சுதல்
-
இறத்தல்;
செஞ்சொல்
மாலை -
தேவாரம்,
திருவாசகம்,
முதலியன;
குஞ்சி
-
ஆடவரின்
உச்சிமயிர்;
ஆகுபெயராய்த்
தலையைக் குறித்தது;
(அப்பர்
தேவாரம் -
5.23.9 -
அஞ்சி
யாகிலு மன்புபட் டாகிலும்
நெஞ்சம்
வாழி நினைநின்றி யூரைநீ
இஞ்சி
மாமதி லெய்திமை யோர்தொழக்
குஞ்சி
வான்பிறை சூடிய கூத்தனே.)
4)
ஏறு நடைபோய் ஒருகைக்கோல்
.. ஏந்தல் கண்டுற் றாரெல்லாம்
மாறு மனத்தால் இகழாமுன்
.. வழிபட் டுய்வாய் மடநெஞ்சே
நாறு கொன்றை மலர்சூடி
.. நரைவெள் ளேற்றன் நால்வேதம்
கூறும் ஒருவன் உறைகோயில்
.. கொள்ளி டஞ்சூழ் கானூரே.
ஏறு
நடை -
ஏறுபோல்
பீடுநடை -
ஆண்
சிங்கம் போல் இறுமாந்து
நடக்கும் பெருமித நடை;
ஏந்தல்
-
ஏந்துதல்
-
தாங்குதல்;
(ஒரு
கைக்கோல் ஏந்தல் =
கைத்தடி
உடைய 'பெருமையிற்
சிறந்தோன்'
என்று
வஞ்சப்புகழ்ச்சியாகவும்
பொருள்கொள்ளலாம்).
மாறு
மனம் -
வேறுபட்ட
மனம்;
நாறு
கொன்றை மலர்சூடி -
மணம்
கமழும் கொன்றைப்பூவைச்
சூடுபவன்;
நரைவெள்ளேற்றன்
-
வெள்ளை
இடபத்தின்மேல் வரும் சிவபெருமான்;
(ஐயடிகள்
காடவர்கோன் அருளிய சேத்திர
வெண்பா -
11.5.1 -
ஒடுகின்ற
நீர்மை ஒழிதலுமே உற்றாரும்
கோடுகின்றார்
மூப்புங் குறுகிற்று நாடுகின்ற
நல்லச்சிற்
றம்பலமே நண்ணாமுன் நன்னெஞ்சே
தில்லைச்சிற்
றம்பலமே சேர்.)
5)
ஆரார் வந்தார் என்பதையும்
.. அறியா நிலையுற் றெமதூதர்
வாராய் என்று வளைக்குமுனம்
.. வழிபட் டுய்வாய் மடநெஞ்சே
நீரார் சடையன் நெருப்புமிழும்
.. நெற்றிக் கண்ணன் கையிலொரு
கூரார் மழுவன் உறைகோயில்
.. கொள்ளி டஞ்சூழ் கானூரே.
ஆரார்
-
ஆர்
ஆர் -
யார்
யார்;
எமதூதர்
"வாராய்"
என்று
வளைக்கு முனம் -
எமதூதர்கள்
உன்னை வா என்று சொல்லிச்
சூழ்ந்து பற்றுவதற்கு முன்பே;
( வளைத்தல்
-
சூழ்தல்
(To
surround); பற்றுதல்
(To
grasp, seize));
நீர்
ஆர் சடையன் -
கங்காதரன்;
கூர்
ஆர் மழுவன் -
கூரிய
மழுப்படையை ஏந்துபவன்;
6)
விள்ளும் சொற்கள் மிகக்குழறி
.. வீட்டில் உள்ள எல்லாரும்
எள்ளும் நிலையை எய்தாமுன்
.. ஏத்தி உய்வாய் மடநெஞ்சே
உள்ளும் அடியார்க் குறுதுணைவன்
.. ஓடும் நதியைத் தன்னுள்ளே
கொள்ளும் சடையன் உறைகோயில்
.. கொள்ளி டஞ்சூழ் கானூரே.
விள்ளுதல்
-
சொல்லுதல்;
எள்ளுதல்
-
இகழ்தல்;
பரிகசித்தல்;
(To ridicule, treat with
contempt);
உள்ளுதல்
-
நினைத்தல்;
தியானித்தல்;
7)
நீலக் குயில்போல் இருந்தமயிர்
.. நிறத்தில் கொக்கை நிகர்த்தொருகைக்
கோலைக் கொள்ளும் நாள்வருமுன்
.. குறுகு வாயென் மடநெஞ்சே
சூலப் படையன் சுடுநீற்றன்
.. சுடலை தன்னில் நடம்செய்வான்
கோலப் பிறையன் உறைகோயில்
.. கொள்ளி டஞ்சூழ் கானூரே.
நீலக்குயில்
-
கரிய
குயில்;
(நீலம்
-
கறுப்பு);
நிறத்தில்
கொக்கை நிகர்த்து
-
வண்ணத்தில்
கொக்குப் போல் ஆகி -
நரைத்து;
ஒரு
கைக் கோலைக் கொள்ளும் நாள்
வருமுன் -
ஒரு
கையில் தடியைப் பற்றும் காலம்
அடைவதன் முன்னமே;
குறுகுதல்
-
அணுகுதல்;
சேர்தல்;
சுடலை
-
சுடுகாடு;
கோலப்
பிறை -
அழகிய
பிறைச்சந்திரன்;
(ஐயடிகள்
காடவர்கோன் -
சேத்திர
வெண்பா -
11.5.12
குயிலொத்
திருள்குஞ்சி கொக்கொத் திருமல்
பயிலப்
புகாமுன்னம் நெஞ்சே -
மயிலைத்
திருப்புன்னை
யங்கானல் சிந்தியா யாகில்
இருப்பின்னை
யங்காந் திளைத்து.)
8)
மிடுக்கு மிக்க கோலம்போய்
.. மெலிந்து நால்வர் சுமந்துசெல்லப்
படுக்கும் காலம் வருமுன்னே
.. பரவிப் பணிவாய் மடநெஞ்சே
அடுக்கல் எடுக்கும் தசமுகனை
.. அடர்த்துக் கீதம் கேட்டுவரம்
கொடுக்கும் பெருமான் உறைகோயில்
.. கொள்ளி டஞ்சூழ் கானூரே.
மிடுக்கு
-
வலிமை;
செருக்கு;
மெலிதல்
-
வருந்துதல்;
இளைத்தல்;
நால்வர்
சுமந்துசெல்லப்
படுக்கும் காலம்
-
பாடையில்
கிடக்கும் காலம்;
(படுத்தல்
-
கிடத்தல்);
பரவுதல்
-
துதித்தல்;
புகழ்தல்;
அடுக்கல்
-
மலை;
இங்கே
கயிலை மலை;
தசமுகன்
-
இராவணன்;
அடர்த்து
-
நசுக்கி;
9)
துன்றித் தூதர் சூழ்வதன்முன்
.. துரித மாக அடைநெஞ்சே
பன்றி யாகி அகழ்மாலும்
.. பறவை யாகி உயர்அயனும்
அன்று காணா அழலுருவன்
.. அன்பர் தம்மை அகலாதான்
கொன்றை சூடி உறைகோயில்
.. கொள்ளி டஞ்சூழ் கானூரே.
துன்றுதல்
-
நெருங்குதல்;
தூதர்
-
எமதூதர்;
அகழ்
மாலும்
-
நிலத்தை
அகழ்ந்த திருமாலும்;
அழல்
உருவன் -
சோதி
வடிவினன்;
10)
பூண மாட்டார் திருநீற்றைப்
.. புவியில் இறந்து பிறந்தெய்ப்பார்
பேண வேண்டா அவர்பேச்சைப்
.. பேறு வேண்டிற் பெறச்சேர்வாய்
ஊணைப் பிரமன் சிரந்தன்னில்
.. உகக்கும் பித்தன் உமைபங்கன்
கோணற் பிறையன் உறைகோயில்
.. கொள்ளி டஞ்சூழ் கானூரே.
பூண
மாட்டார் -
அணியாதவர்கள்;
இறந்து
பிறந்து எய்ப்பார்
-
மீண்டும்
மீண்டும் பிறந்து இறந்து
வருந்துவார்கள்;
ஊண்
-
உணவு;
உகத்தல்
-
விரும்புதல்;
கோணல்
பிறை -
வளைந்த
பிறைச்சந்திரன்;
(திருநாவுக்கரசர்
தேவாரம் -
6.95.6 -
திருநாமம்
அஞ்செழுத்தும் செப்பா ராகில்
..
தீவண்ணர்
திறமொருகால் பேசா ராகில்
ஒருகாலுந்
திருக்கோயில் சூழா ராகில்
..
உண்பதன்முன்
மலர்பறித்திட் டுண்ணா ராகில்
அருநோய்கள்
கெடவெண்ணீ றணியா ராகில்
..
அளியற்றார்
பிறந்தவா றேதோ வென்னில்
பெருநோய்கள்
மிகநலியப் பெயர்த்துஞ்
செத்தும்
..
பிறப்பதற்கே
தொழிலாகி இறக்கின் றாரே.)
11)
வல்லேன் என்று வாழ்ந்ததெலாம்
.. மறைந்த கனவாய் இன்றெதுவும்
ஒல்லேன் என்ற நிலைவருமுன்
.. ஒல்லை அடைவாய் மடநெஞ்சே
வில்லேர் புருவத் துமையாளை
.. விரும்பிப் பாகம் கொள்ளுமரன்
கொல்லே றுடையான் உறைகோயில்
.. கொள்ளி டஞ்சூழ் கானூரே.
வல்லேன்
-
வலிமை
உடைய நான்;
ஒல்லேன்
-
செய்ய
இயலாத நான்;
(ஒல்லுதல்
-
இயலுதல்
-
To be able, possible, practicable);
ஒல்லை
-
சீக்கிரமாக;
வில்
ஏர் புருவத்து உமையாள் -
வில்
போன்ற புருவத்தை உடைய பார்வதி;
கொல்லேறு
-
கொல்
ஏறு -
கொம்பினால்
கொல்லத்தக்கதாகிய சினவிடை;
அன்போடு,
வி. சுப்பிரமணியன்
பிற்குறிப்பு :
1) கானூர் - இத்தலம் மேலைத்திருக்காட்டுப்பள்ளியிலிருந்து சில கிலோமீட்டர் தொலைவில், கொள்ளிட நதிக்கரையில் அமைந்துள்ளது.
2) திருக்கானூர் - கோயில் தகவல்கள் - தினமலர் தளத்தில்: http://temple.dinamalar.com/New.php?id=387
-------------- --------------
No comments:
Post a Comment