02.29 – திருப்புன்கூர்
2011-09-17
திருப்புன்கூர்
----------------------------------
(நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா)
(சம்பந்தர் தேவாரம் - 2.47.1 - "மட்டிட்ட புன்னையங் கானல் மடமயிலைக்")
1)
புலையராய்ப் பிறந்தாலும் பொன்னடியை மறவாத
நிலையினார் தெருவினிலே நின்றபடி நேர்காண
விலகுவாய் சற்றென்று விடைக்குரைத்த கயிலாய
மலையினான் திருப்புன்கூர் வணங்கவினை மாயுமன்றே.
புலையராய்ப் பிறந்தாலும் பொன்னடியை மறவாத நிலையினார் - திருநாளைப் போவார் நாயனார் - நந்தனார்;
தெருவினிலே நின்றபடி நேர்காண - தெருவிலிருந்தே தரிசிக்க;
விலகுவாய் சற்று என்று விடைக்கு உரைத்த - இடபத்தை விலகச் சொன்ன;
கயிலாய மலையினான் திருப்புன்கூர் - கயிலாயன் சிவபெருமான் உறையும் திருப்புன்கூரை;
வணங்க வினை மாயும் அன்றே - வணங்கினால் வினைகள் அழியும்;
2)
திருநாளைப் போவார்தன் திருவுருவைத் தரிசிக்க
ஒருகாளை ஊர்தியைநீ ஒதுங்கென்ற அருளாளன்
வருவேளைப் பொடிசெய்தான் மலைமகளோர் பங்குடையான்
இருதாளைப் புன்கூரில் ஏத்தவினை மாயுமன்றே.
ஒரு - ஒப்பற்ற;
வரு வேளை - அணுகிய காமனை;
பொடி செய்தான் - சாம்பல் ஆக்கியவன்;
இரு தாளை - இரு திருவடிகளை;
ஏத்த - துதிக்க;
3)
காரடையும் கண்டத்தன் கணையொன்றால் புரமெய்தான்
சீரடியைத் திருத்தொண்டர் சேவிக்கச் சேவிலகும்
ஊரணியார் புன்கூரில் உறையீசன் கழல்பேணிற்
போரணியாய் வருவினையைப் புறங்காணல் எளிதாமே.
கார் அடையும் கண்டத்தன் - கருமை பொருந்திய மிடற்றை உடையவன் - நீலகண்டன்;
சே விலகும் ஊர் - இடபம் விலகிய ஊரான;
அணி ஆர் திருப்புன்கூரில் உறை ஈசன் - அழகிய திருப்புன்கூரில் எழுந்தருளியிருக்கும் கடவுள்;
கழல் பேணில் - திருவடியைப் போற்றினால்;
போர் அணி - போர் செய்யும் படை;
புறங்காணுதல் - முறியடித்தல்;
4)
எந்தையார் இணையடியை எப்போதும் நினைந்திருந்த
நந்தனார் மகிழ்ந்தேத்த நகர்விடையான் மிகவிரைந்து
வந்தவா றடைசடையான் திருப்புன்கூர் வந்திக்கும்
சிந்தையார் தீவினைகள் தீப்புக்க பஞ்சாமே.
எந்தையார் - எம் தந்தையார் - சிவபெருமான்;
இணையடி - இரு திருவடிகள்;
நகர்விடையான் - நகர்ந்த இடபத்தை ஊர்தியாக உடையவன்;
மிக விரைந்து வந்த ஆறு அடை சடையான் - வேகமாக வீழ்ந்த கங்கையை அடைத்த சடையை உடையவன்;
வந்திக்கும் சிந்தையார் தீவினைகள் - வணங்கும் மனம் உடைய பக்தர்களுடைய தீய வினைகள்;
தீப் புக்க பஞ்சு ஆம் - தீப் புகுந்த பஞ்சு போல் சாம்பல் ஆகிவிடும்;
(அப்பர் தேவாரம் - 4.11.3
விண்ணுற அடுக்கிய விறகின் வெவ்வழல்
உண்ணிய புகிலவை ஒன்றும் இல்லையாம்
பண்ணிய உலகினிற் பயின்ற பாவத்தை
நண்ணிநின் றறுப்பது நமச்சி வாயவே.)
5)
அரன்கோயில் இசைக்கருவிக் காகுமென அனுதினமும்
நரம்போடு தோலெல்லாம் நல்கிமகிழ் நற்றொண்டர்
கரஞ்சேர்த்துக் கழல்வாழ்த்திக் களிபுன்கூர் கண்டுதொழ
வரஞ்சேரும் முன்செய்த வல்வினைகள் மாயுமன்றே.
* இப்பாடல் நந்தனார் செய்த திருத்தொண்டுகளைச் சுட்டியது.
கழல் வாழ்த்திக் களி புன்கூர் கண்டு தொழ - நந்தனார் ஈசன் திருவடியை வாழ்த்தி மகிழ்ந்த திருப்புன்கூரைத் தரிசித்து வணங்கினால்;
6)
தையலொரு பங்குடைய தாழ்சடையன் தனைமறவா
மெய்யடியார் திருவாயில் வெளிநின்று மிகவிறைஞ்சப்
பையவிடை நகர்ந்தபதி பைம்பொழில்சூழ் புன்கூரில்
ஐயனடி தொழுவாரின் அருவினைகள் அழியுமன்றே.
தையல் - பெண்; பார்வதி;
தாழ்சடையன்தனை மறவா மெய்யடியார் - தாழும் சடையை உடைய சிவனை மறவாத உண்மைத்தொண்டர்;
திருவாயில் வெளிநின்று - கோயிலின் வாசலுக்கு வெளியே நின்று;
பைய - மெல்ல;
பதி - தலம்;
பைம்பொழில்சூழ் - பசிய சோலைகள் சூழ்ந்த;
7)
நாவினிக்க நாமத்தை நவின்றுமகிழ் நந்தனார்
ஓவெனத்தன் உருக்காண ஊர்தியைத்தான் ஒதுங்கென்றான்
சேவிலமர் சிவபெருமான் தேவியொரு கூறுடையான்
மேவியபுன் கூரடைய மேல்வினைகள் வீடுமன்றே.
ஓ - ஓலம்; அபயக் குறிப்பு;
தன் உருக் காண - தன்னுடைய திருமேனியை அவர் தரிசிக்கும்படி;
ஊர்தி - வாகனம்;
ஒதுங்கு என்றான் - ஒதுங்கு என்றவன்;
சே - எருது;
தேவி ஒரு கூறு உடையான் மேவிய புன்கூர் அடைய - உமையை ஒரு கூறாக உடைய சிவன் உறையும் திருப்புன்கூரை அடைந்தால்;
மேல்வினைகள் - ஆகாமியம் (Karma which is yet to come);
வீடும் - அழியும்; நீங்கும்;
8)
நஞ்சாரும் கண்டனுறை நன்மலையை எள்ளளவும்
அஞ்சாமற் போயசைத்த அரக்கனையன் றழவைத்தான்
மஞ்சாஆன் மறைத்ததெனும் மாபத்தர்க் கருள்செய்தான்
மஞ்சாரும் பொழிற்புன்கூர் வணங்கவினை மாயுமன்றே.
நஞ்சு ஆரும் கண்டன் - விஷம் பொருந்திய மிடற்றன் - நீலகண்டன்;
எள் அளவும் அஞ்சாமல் - கொஞ்சமும் பயம் இன்றி;
அழவைத்தான் - அழவைத்தவன்;
மஞ்சா - வீரனே; (மஞ்சன் - மைந்தன் என்பதன் போலி);
ஆன் - இடபம்;
மா பத்தர் - பெரும் பக்தர் - நந்தனார்;
அருள்செய்தான் - அருள்செய்தவன்;
மஞ்சு ஆரும் பொழில் புன்கூர் - மேகம் பொருந்தும் உயர்ந்த சோலைகள் சூழ்ந்த திருப்புன்கூரை;
9)
வாதிட்ட இருவரிடை வளரழலாய் வரும்பெருமான்
தீதற்ற அடியாரைத் தில்லையிலே சேர்த்தருள்வான்
வேதத்தின் பொருளால்கீழ் வீற்றிருந்து நால்வர்க்குப்
போதித்தான் புன்கூரைப் போற்றவினை போகுமன்றே.
வாதிட்ட இருவர் - திருமால் பிரமன்;
வளர் அழல் - உயரும் தீ;
தீதற்ற அடியார் - குற்றமற்ற பக்தர்;
வேதத்தின் பொருள் ஆல்கீழ் வீற்றிருந்து நால்வர்க்குப் போதித்தான் - வேதப்பொருளைக் கல்லால மரத்தின்கீழ் வீற்றிருந்து சனகாதியருக்குப் போதித்த தட்சிணாமூர்த்தி;
வினை போகும் - வினைகள் நீங்கும்;
10)
கல்லைத் தொழுகின்றீர் எனப்பிதற்றும் கல்லார்கள்
சொல்லிற் பொருளில்லை தூயமனத் தொண்டர்கட்கு
ஒல்லை அருள்புரியும் உமைபங்கன் அழியாத
செல்வன் திருப்புன்கூர் சேரவினை தீருமன்றே.
கல்லார்கள் - கல்வியற்றவர்கள்;
தொண்டர்கட் கொல்லை - தொண்டர்கட்கு ஒல்லை - தொண்டர்களுக்குச் சீக்கிரம்; (ஒல்லை - சீக்கிரம்);
11)
குளம்தொட்டுத் தொண்டாற்றிக் கும்பிடுநா ளைப்போவார்
உளம்பற்றி நின்றசிவன் ஓர்தூவெண் மதிசூடி
இளம்பெற்றம் ஏறுமரன் எழிற்புன்கூர் எய்துபவர்
வளம்பெற்று மகிழ்வுறுவர் வல்வினைகள் மாயுமன்றே.
* நந்தனார் திருப்புன்கூரில் திருக்குளத் திருப்பணி செய்ததைச் சுட்டியது.
குளம் தொடுதல் - குளம்வெட்டுதல்; (தொடுதல் - தோண்டுதல்);
பெற்றம் - இடபம்;
எழில் புன்கூர் - அழகிய திருப்புன்கூர்;
அன்போடு,
வி. சுப்பிரமணியன்
பிற்குறிப்பு :
1) யாப்புக் குறிப்பு:
நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா.
பெரும்பாலும் காய்ச்சீர்கள். விளச்சீர்கள் வரலாம். மாச்சீரும் வரலாம். அப்படி மாச்சீர் வரின் அடுத்த சீர் நிரையசையில் தொடங்கும்.
2) சம்பந்தர் தேவாரம் - 2.47.1
மட்டிட்ட புன்னையங் கானல் மடமயிலைக்
கட்டிட்டம் கொண்டான் கபாலீச் சரமமர்ந்தான்
ஒட்டிட்ட பண்பின் உருத்திர பல்கணத்தார்க்கு
அட்டிட்டல் காணாதே போதியோ பூம்பாவாய்.
3) திருப்புன்கூர் - கோயில் தகவல்கள் - தினமலர் தளத்தில்: http://temple.dinamalar.com/New.php?id=511
----------------- ----------------
No comments:
Post a Comment