Saturday, October 3, 2015

02.25 – பொது - (என்பணி அரன்துதி)

02.25 – பொது - (என்பணி அரன்துதி)



2011-07-31 - 2011-08-02
பொது
என்பணி அரன்துதி
---------------------------
(என்பணி அரன்துதி - என்பு அணி அரன் துதி / என் பணி அரன் துதி;
அரன் துதி - அரனின் துதி / அரனைத் துதி;)



(அறுசீர் விருத்தம்; - 'மா கூவிளம் விளம் விளம் விளம் மாங்காய்' என்ற வாய்பாடு;
மாச்சீர் குறில் / குறில்+ஒற்று என்று முடியும்; 1-3-5 சீர்களில் மோனை);
(சம்பந்தர் தேவாரம் - 2.106.1 - "என்ன புண்ணியஞ் செய்தனை நெஞ்சமே யிருங்கடல் வையத்து");



1)
கைத வத்தினைக் கைவிடா துரைத்ததில் களிக்கிற என்னாவே
செய்த வல்வினை தீரவொன் றுரைத்திலை செப்புநான் என்னாவேன்
உய்தி பெற்றிட உண்டொரு நல்வழி உலவிய புரமூன்றை
எய்த வில்லினன் என்பணி அரன்துதி இனியிலை இன்னாவே.



பதம் பிரித்து:
கைதவத்தினைக் கைவிடாது உரைத்து அதில் களிக்கிற என் நாவே;
செய்த வல்வினை தீர ஒன்று உரைத்திலை; செப்பு, நான் என் ஆவேன்;
உய்தி பெற்றிட உண்டு ஒரு நல்வழி; உலவிய புரம் மூன்றை
எய்த வில்லினன், என்பு அணி அரன் துதி; இனி இலை இன்னாவே.


கைதவம் - கபடம்; பொய்;
என் நாவே - என்னுடைய நாக்கே;
உரைத்திலை- உரைக்கமாட்டாய்;
செப்பு, நான் என் ஆவேன் - சொல்லு, நான் என்ன ஆவேன்;
உய்தி - உய்வு - ஈடேற்றம்;
என்பு அணி அரன் துதி - எலும்பை அணியும் சிவபெருமானைப் போற்றுவாயாக;
இலை இன்னா - துன்பம் இல்லை;



2)
இரவு செய்ம்மொழி இடைவிடா தனுதினம் இயம்பிடும் என்னாவே
விரவு தீவினை விலகவொன் றுரைத்திலை விளம்புநான் என்னாவேன்
அரவு கூன்மதி அழகுற முடிமிசை அணிபவன் இடுகானில்
இரவில் ஆடுவான் என்பணி அரன்துதி இனியிலை இன்னாவே.



இரவு செய்ம்மொழி - யாசகம் செய்கிற சொற்கள்; (இரவு - யாசிக்கை; இரத்தல்);
விரவுதல் - அடைதல்; பொருந்துதல்;
அரவு கூன் மதி - பாம்பையும், வளைந்த பிறைச்சந்திரனையும்;
இடுகானில் இரவில் ஆடுவான் - சுடுகாட்டில் நள்ளிரவில் ஆடுபவன்;



3)
மடமை சேர்மொழி மறப்பிலா தனுதினம் வழங்கிடும் என்னாவே
அடரும் தீவினை அழியவொன் றுரைத்திலை அறைதிநான் என்னாவேன்
சுடலை நீறணி சுந்தரன் தோற்றமில் தொன்மையன் தூவெள்ளை
இடபம் ஏறிறை என்பணி அரன்துதி இனியிலை இன்னாவே.



மடமை சேர்மொழி - அறியாமை மிக்க சொற்களை;
மறப்பு இலாது - மறவாமல்;
அடர்தல் - நெருக்குதல்; செறிதல்;
அறைதி - நீ சொல்லுவாய்; (தி - முன்னிலை ஒருமை விகுதி);
சுடலை நீறு அணி சுந்தரன் - சுடுகாட்டுச் சாம்பலைப் பூசும் அழகன்;
தோற்றம் இல் தொன்மையன் - பிறப்பு இல்லாத பழையவன்;
இடபம் ஏறு இறை - இடபவாகனம் உடைய கடவுள்;


(சம்பந்தர் தேவாரம் - 2.42.9
"நன்மையா னாரணனும் நான்முகனுங் காண்பரிய
தொன்மையான் தோற்றங்கே டில்லாதான் தொல்கோயில்......"
- நன்மைகள் செய்பவனாகிய திருமாலும் நான்முகனும் காணுதற்கு அரிய பழமையோனும், பிறப்பிறப்பு இல்லாதவனும் ஆகிய சிவபிரானது பழமையான கோயில்....)



4)
வெடுவெ டுப்பொடு வெஞ்சினம் விரவுசொல் விளம்பிடும் என்னாவே
படுவி னைத்தொடர் பறையவொன் றுரைத்திலை பறைதிநான் என்னாவேன்
அடுவி டக்கறை அணிசெய்ம்மி டற்றினன் அயன்சிரம் கையேந்தி
இடுப லிக்குழல் என்பணி அரன்துதி இனியிலை இன்னாவே.



வெடுவெடுப்பு - கடுகடுப்பு;
படுவினை - கொடிய வினை;
பறைதல் - 1) அழிதல்; 2) சொல்லுதல்;
பறைதி - நீ சொல்லுவாய்; (தி - முன்னிலை ஒருமை விகுதி);
அடுவிடம் - கொல்லும் விஷம்;
மிடறு - கண்டம்; கழுத்து;
அணிசெய்ம்மிடற்றினன் - அழகு செய்யும் நீலகண்டன்;
இடுபலி - இடும் பிச்சை;



5)
உண்ணல் என்பதே உன்குறிக் கோளென உள்ளனை என்னாவே
நண்ணு தீவினை நசியவொன் றுரைத்திலை நவிலுநான் என்னாவேன்
கண்ணில் தீயினைக் காட்டியன் றலர்க்கணைக் காமனைக் காய்அண்ணல்
எண்ணில் பேரினன் என்பணி அரன்துதி இனியிலை இன்னாவே.



உள்ளனை - உள்ளாய்;
நண்ணுதல் - நெருங்குதல்; அடைதல்;
நசிதல் - அழிதல்;
நவிலு - சொல்லு;
அன்று அலர்க்கணைக் காமனைக் காய் அண்ணல் - முன்னொருநாள் மலர் அம்புகளை ஏவும் மன்மதனை எரித்த கடவுள்;
எண்ல் பேரினன் - எண்ணற்ற நாமங்களை உடையவன்;



6)
நன்று சொல்கிலை நல்லன வற்றையும் நயக்கிலை என்னாவே
குன்று போல்வினை குன்றவொன் றுரைத்திலை கூறுநான் என்னாவேன்
மன்றுள் ஆடுவான் மதிபுனை வேதியன் மலைமகள் ஓர்கூறான்
என்றும் உள்ளவன் என்பணி அரன்துதி இனியிலை இன்னாவே.



நயத்தல் - விரும்புதல்;
நன்று சொல்கிலை நல்லனவற்றையும் நயக்கிலை - நல்ல விஷயங்களைப் பேசமாட்டாய்; நன்மைதரும் உணவையும் விரும்பமாட்டாய்;
குன்று - மலை;
குன்றுதல் - அழிதல்;
மன்றுள் ஆடுவான் - சிற்றம்பலத்தில் ஆடுபவன்;
மதிபுனை வேதியன் - சந்திரனை அணிந்தவன்; வேதப் பொருளானவன்;
மலைமகள் ஓர் கூறான் - உமையொருபாகன்;



7)
உறைப்பி னார்மொழி உற்றவர் உவர்த்திட உரைக்கிற என்னாவே
சிறப்பில் தீவினை தீரவொன் றுரைத்திலை செப்புநான் என்னாவேன்
மறப்பில் லாதடி வாழ்த்தடி யாருயிர் வாழந மனைக்காய்ந்தான்
இறப்பில் லாதவன் என்பணி அரன்துதி இனியிலை இன்னாவே.



உறைப்பு - காரம்; கொடுமை;
உறைப்பின் ஆர் மொழி - உறைப்பினால் நிரம்பிய;
உற்றவர் - உறவினர்; நண்பர்கள்;
உவர்த்தல் - அருவருத்தல் (To dislike, abhor, feel aversion to, loathe);
சிறப்பு இல் தீவினை - சிறப்பு இல்லாத தீவினைகள்;
மறப்பு - மறத்தல்;
மறப்பு இல்லாது அடி வாழ்த்து அடியார் உயிர் வாழ - மறவாமல் எப்போதும் திருவடியை வாழ்த்திய மார்க்கண்டேயர் சாவாமல் உயிர் வாழும்படி;
நமனைக் காய்ந்தான் - எமனைச் சினந்து அழித்தவன்;



8)
இசைவில் லாதசொல் எப்பொழு தும்பகர் இயல்புடை என்னாவே
அசைவைச் செய்வினை அகலவொன் றுரைத்திலை அறைதிநான் என்னாவேன்
நசையில் லாதவைந் நான்குதோள் இலங்கையன் நனியழ விரலூன்றி
இசையைக் கேட்டவன் என்பணி அரன்துதி இனியிலை இன்னாவே.



இசைவு - பொருத்தம்; தகுதி; இணக்கம்;
பகர் இயல்பு உடை - சொல்லும் குணம் உடைய;
அசைவு - சலனம்; தளர்வு; வருத்தம்,
அகல - நீங்க;
அறைதி - சொல்வாயாக;
நசை - அன்பு; விருப்பம்;
ஐந்நான்குதோள் இலங்கையன் - இருபது புஜங்களை உடைய இராவணன்;
நனிழ விரல் ஊன்றி - மிகவும் அழும்படி ஒரு விரலை ஊன்றி;



9)
உழுந்து சேர்வடை உண்டிகள் உண்ணலே உன்தொழில் என்னாவே
அழுந்து தீவினை அழியவொன் றுரைத்திலை அறைதிநான் என்னாவேன்
இழிந்த ஏனமும் இறகுடை அன்னமும் எய்திட ஒண்ணாமல்
எழுந்த சோதியன் என்பணி அரன்துதி இனியிலை இன்னாவே.



உழுந்து - உளுந்து;
அழுந்துதல் - அமிழ்தல் (To sink, drown);
இழிதல் - இறங்குதல்;
ஏனம் - பன்றி;
இறகுடை அன்னம் - சிறகை உடைய அன்னப்பறவை;
எய்திட ஒண்ணாமல் - அடைய இயலாதபடி;



10)
வாழை போற்கனி வார்த்தைகள் பேசிட மறந்தனை என்னாவே
ஊழை ஒழித்திட ஒன்றையும் செய்திலை உரைதிநான் என்னாவேன்
மோழைத் தத்துவம் மொழிகிற தொழிலுடை மூடருக் கெட்டாத
ஏழை பங்கினன் என்பணி அரன்துதி இனியிலை இன்னாவே.



கனி வார்த்தைகள் - கனிந்த சொற்கள்; இனிக்கும் மொழி; (கனிதல் - இனித்தல் - To be mellifluous, to be full of sweetness);
வாழை போல் னி வார்த்தைகள் - வாழைப்பழத்தைப்போல் இனிக்கும் சொற்கள்;
(திருப்புகழ் - சுவாமிமலை - "பாதி மதிநதி .... பாகு கனிமொழி மாது குறமகள் ....");
மறந்தனை - மறந்தாய்;
ஊழ் - பழவினை;
ஒழித்தல் - அழித்தல்; நீக்குதல்;
உரைதி - சொல்லு;
மோழை - மடமை (Stupidity); மொட்டை (Anything defective);



11)
அன்பி லாமொழி அறமென அனுதினம் அலப்பிடும் என்னாவே
துன்ப மார்வினை தொலைத்திட எண்ணிலை சொல்லுநான் என்னாவேன்
உம்ப ரார்தொழும் உத்தமன் அடியவர் உள்கிட ஈடில்லா
இன்பம் ஈபவன் என்பணி அரன்துதி இனியிலை இன்னாவே.



அலப்புதல் - வீண்பேச்சுப்பேசுதல்; பிதற்றுதல்;
துன்பம் ஆர் வினை - துன்பம் மிகுந்த தீவினை;
எண்ணிலை - எண்ணமாட்டாய்;
உம்பரார் - தேவர்கள்;
உள்குதல் - தியானித்தல்; எண்ணுதல்;
ஈடில்லா இன்பம் - ஒப்பு இல்லாத இன்பம் - பேரின்பம்;



அன்போடு,
வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------

No comments:

Post a Comment