Saturday, October 3, 2015

02.24 – திருவிற்கோலம் - (கூவம்)

02.24 – திருவிற்கோலம் - (கூவம்)


2011-07-23
திருவிற்கோலம் (இக்காலத்துப் பெயர் - 'கூவம்')
--------------------------------
(கலிவிருத்தம் - 'விளம் விளம் மா கூவிளம்' என்ற வாய்பாடு).
(சம்பந்தர் தேவாரம் - 3.23.1 - "உருவினார் உமையொடும் ஒன்றி நின்றதோர்...")
(திருநாவுக்கரசர் தேவாரம் - 4.11.1 - "சொற்றுணை வேதியன் சோதி வானவன்")


1)
கம்பலை தீர்ந்திடும் கலங்கல் நெஞ்சமே
நம்பிவி ரைந்தடை நலிந்த வானவர்
தம்பயம் தீர்த்தெயில் சாம்பல் ஆக்கிய
செம்பெரு மானுறை திருவிற் கோலமே.



கம்பலை - நடுக்கம்; அச்சம்; துன்பம்;
கலங்கல் - கலங்க வேண்டா; அஞ்சற்க;
நம்பி விரைந்தடை - விரும்பிச் சீக்கிரம் சென்று சேர்;
நலிதல் - வருந்துதல்;வானவர் தம் பயம் தீர்த்து - தேவர்களுடைய அச்சத்தைப் போக்கி;
எயில் - கோட்டை - முப்புரங்களை;
செம்பெருமான் - சிவந்த நிறத்தையுடைய பெருமான்.



2)
பார்புகழ் நிலைவரப் பரவு நெஞ்சமே
போர்புரி நாளினிற் புன்சி ரிப்பினால்
ஏர்மலி எயில்களை எரித்த ஈசனீர்
சேர்சடை யானுறை திருவிற் கோலமே.



பார் புகழ் நிலை - உலகமே புகழும் உயர்ந்த நிலை;
பரவுதல் - துதித்தல்; பாடுதல்;
ஏர் மலி எயில்கள் - அழகிய முப்புரங்கள்;
ஈசன் நீர் சேர் சடையான் - ஈசன்; கங்கை பொருந்திய சடையை உடையவன்;
******** Some Q & A **********
(அன்பர் ஒருவர் எழுப்பிய வினா: 'திரிபுரம் எரித்தபோது அரனார் செய்தது 'அட்டஹாஸம்' அன்றோ? '


என் விளக்கம்:
ஹாஸம் = சிரிப்பு.
அட்டஹாஸம் ('அட்டகாசம்')= பெருநகை (Loud laughter);
தமிழில்: அடுதல் = அழித்தல்; கொல்லுதல்;
எனவே, 'அட்ட ஹாசம்' = 'அழித்த சிரிப்பு' என்றும் கொள்ளலாம்போல்!


தேடியதில் கண்ட ஒரு சம்பந்தர் தேவாரத்தில் அவர் சிவபெருமான் ஒரு 'சிறுமுறுவல்' செய்து புரம் எரித்தான் என்று பாடுகிறார்.
சம்பந்தர் தேவாரம் - 1.124.6 -
அன்றினர் அரியென வருபவர் அரிதினில்
ஒன்றிய திரிபுரம் ஒருநொடி யினிலெரி
சென்றுகொள் வகைசிறு முறுவல்கொ டொளிபெற
நின்றவன் மிழலையை நினையவ லவரே.
----- சிறுமுறுவல் - புன்னகை.)
******



3)
வாதியா பழவினை வணங்கு நெஞ்சமே
பாதியோர் மாதினன் பறக்கும் முப்புரம்
மீதிலோர் வெங்கணை விட்டெ ரித்தவன்
தீதிலா தானுறை திருவிற் கோலமே.



வாதியா பழவினை - பழைய வினைகள் வருத்தமாட்டா;
வெம் கணை - சுடும் அம்பு; கொடிய கணை;
தீது இலாதான் - குற்றமற்றவன்;



4)
அவவினை யால்வரும் அளவில் வாதைகள்
அவைகெட அருத்தியோ டடையென் நெஞ்சமே
இவர்விடை யான்எயில் எய்த வில்லினன்
சிவபெரு மானுறை திருவிற் கோலமே.



அவ வினை - தீவினை;
அளவு இல் வாதைகள் - அளவற்ற துன்பங்கள்;
கெடுதல் - அழிதல்;
அருத்தி - விருப்பம்;
இவர்தல் - ஏறுதல் (to mount, as on horseback);
இவர் விடையான் - எருதின் மேல் ஏறுபவன்;
எயில் எய்த வில்லினன் - முப்புரங்களை எய்த வில்லேந்தியவன்;



5)
அரிக்கிற வல்வினை அறவெண் ணீற்றினைத்
தரிப்பவர் தம்மொடு சாரென் நெஞ்சமே
முரித்தவன் அச்சினை முப்பு ரங்கெடச்
சிரித்தவன் தானுறை திருவிற் கோலமே.



அரித்தல் - துருமுதலியன தின்னுதல் (To corrode, consume, as acids);
வெண்ணீற்றினை - விபூதியை;
சார்தல் - சென்றடைதல் (To reach, approach); அடுத்தல் (To be near to);
முரித்தல் - ஒடித்தல்;
கெடுதல் - அழிதல்;
தான் - அவன்;



6)
இகழ்வற இன்புற எய்து நெஞ்சமே
பகழியோர் கையினில் பற்றிப் பண்டைநாள்
இகலியார் எயிலெரி ஈசன் வெண்மதி
திகழ்முடி யானுறை திருவிற் கோலமே.



இகழ்வு அற, இன்பு உற, எய்து - பழிகள் நீங்கி இன்பம் பெறச் சென்றடைவாய்;
பகழி - அம்பு;
பண்டைநாள் - முன்னொரு காலத்தில்;
இகலியார் - பகைவர்;
எயில் எரி ஈசன் - முப்புரங்களை எரித்த தலைவன்;



7)
உஞ்சிடச் சென்றடை ஒல்லை நெஞ்சமே
அஞ்சல ளிப்பவன் அரணம் மூன்றெரி
வெஞ்சரம் எய்தவன் வெள்ளை ஏற்றினன்
செஞ்சடை யானுறை திருவிற் கோலமே.



உஞ்சிட - 'உய்ந்திட' என்பது 'உஞ்சிட' என மருவிற்று;
ஒல்லை - சீக்கிரம்;
அஞ்சல் அளிப்பவன் - அபயம் அளிப்பவன்;
அரணம் மூன்று எரி - முப்புரங்களை எரித்த;
வெம் சரம் - சுடும் அம்பு; கொடிய கணை;



8)
சேர்த்தவல் வினைகெடச் சேரென் நெஞ்சமே
மூத்தவன் முரணரண் மூன்றை அட்டவன்
ஆர்த்தவல் அரக்கனை அடர்த்துத் தோள்வலி
தீர்த்தவன் தானுறை திருவிற் கோலமே.



சேர்த்த வல்வினை - பல பிறவிகளில் ஈட்டிய கொடிய வினைகள்;
மூத்தவன் - அனைத்திற்கும் முற்பட்டவன்;
முரண் அரண் - எதிர்த்த முப்புரங்கள்;
அட்டவன் - அழித்தவன்; (அடுதல் - அழித்தல்);
ஆர்த்த வல் அரக்கன் - ஆரவாரத்தோடு வந்து கயிலையை அசைத்த கொடிய இராவணன்; (ஆர்த்தல் - கத்துதல்);
அடர்த்தல் - நசுக்குதல்;
தோள்வலி தீர்த்தவன் - இராவணனின் புஜபலத்தை அழித்தவன்;



9)
காவலை வேண்டிடில் கருது நெஞ்சமே
மேவலர் முப்புரம் வேவ எய்தவன்
பூவமர் அயனரி போட்டி யிட்டநாள்
தீவடி வானவன் திருவிற் கோலமே.



மேவலர் - பகைவர்;
பூ அமர் அயன் அரி - தாமரைப்பூவில் இருக்கும் பிரமனும் திருமாலும்;
தீ வடிவானவன் - தீ வடிவு ஆனவன் - சோதியாகி உயர்ந்தவன்;



10)
பொய்வழி சென்றுழல் புல்லர் போக்கிலார்
உய்வழி சென்றடை ஒல்லை நெஞ்சமே
எய்யிமை யோர்தொழ எயிலெ ரித்தருள்
செய்பெரு மானுறை திருவிற் கோலமே.



புல்லர் - அறிவீனர்; இழிந்தவர்;
போக்கு இலார் - புகல் இல்லாதவர்கள்; (போக்கு - புகல் (Refuge));
எய் இமையோர் - எய்த்த தேவர்கள்; (எய்த்தல் - வருந்துதல்; இளைத்தல்);
எயில் எரித்து அருள்செய் பெருமான் - முப்புரங்களை எரித்து அருள்புரிந்த கடவுள்;



11)
பேறணி யாய்ப்பெறப் பேணு நெஞ்சமே
ஏறணி கொடியினர் எயில்கள் சுட்டவர்
ஆறணி சடையுடை அண்ண லாருறை
சேறணி வளவயல் திருவிற் கோலமே.



பதம் பிரித்து:
பேறு அணியாய்ப் பெறப், பேணு நெஞ்சமே;
ஏறு அணி கொடியினர்; எயில்கள் சுட்டவர்;
ஆறு அணி சடையுடை அண்ணலார் உறை,
சேறு அணி வளவயல் திருவிற்கோலமே.


நெஞ்சே! இடபச் சின்னம் பொறித்த கொடியை உடையவரும், முப்புரங்களை எரித்தவரும், கங்கையைச் சடையுள் வைத்தவரும் ஆன சிவபெருமான் உறைகின், சேறு திகழும் வளமையான வயல் சூழ்ந்த திருவிற்கோலத்தைப் போற்றுவாயாக! வரிசையாக, அழகுற எல்லாப் பேறுகளையும் பெறலாம்.



அன்போடு,
வி. சுப்பிரமணியன்



பிற்குறிப்பு :
1) யாப்புக் குறிப்பு:
  • கலிவிருத்தம் - 'விளம் விளம் மா கூவிளம்' என்ற வாய்பாடு;.
  • மாச் சீரின் இறுதியில் குறிலோ, குறில்+ஒற்றோ தான் வரும். நெடில், நெடில்+ஒற்று வாரா;
  • (சம்பந்தர் தேவாரம் - 3.23.1 - "உருவினார் உமையொடும் ஒன்றி நின்றதோர்...")
  • (திருநாவுக்கரசர் தேவாரம் - 4.11.1 -
சொற்றுணை வேதியன் சோதி வானவன்
பொற்றுணைத் திருந்தடி பொருந்தக் கைதொழக்
கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும்
நற்றுணை யாவது நமச்சி வாயவே.)

2) திருவிற்கோலம் - (கூவம்) - கோயில் தகவல்கள் - தினமலர் தளத்தில்: http://temple.dinamalar.com/New.php?id=124
-------------- --------------

No comments:

Post a Comment