Sunday, October 11, 2015

02.28 – திருச்சோற்றுத்துறை

02.28 – திருச்சோற்றுத்துறை



2011-09-10
திருச்சோற்றுத்துறை
----------------------------------
(சந்தக் கலிவிருத்தம் - "தனனா தனனா தனனா தனனா"; 
ஒரோவழி தனனா என்பது தானா என்று வரும்.)
(சம்பந்தர் தேவாரம் - 2.18.1 - சடையாய் எனுமால் சரண்நீ யெனுமால்)



1)
கல்லால் தொழுசாக் கியருக் கருளும்
நல்லான் நகர்மூன் றெரிசெய் நகையான்
கல்லால் அடியில் கனிவோ டறங்கள்
சொல்வான் பிரியான் சோற்றுத் துறையே.



கல்லால் - 1) கல்லைக்கொண்டு; 2) கல்லால மரம்;
பிரியான் சோற்றுத்துறை - திருச்சோற்றுத்துறையை நீங்காதவன்;


கல்லெறிந்து வழிபட்ட சாக்கியநாயனாருக்கு அருள்புரிந்த நல்லவன்; முப்புரங்களையும் சிரித்து எரித்தவன்; கல்லால மரத்தடியில் சனகாதி முனிவர்களுக்கு உபதேசித்தவன்; அந்தச் சிவபெருமான் திருச்சோற்றுத்துறையுள் நீங்காது எழுந்தருளியிருக்கிறான்.



2)
தொடுமா மலரால் தொழுவார் வினைகள்
விடுமா றருளும் விமலன் விடையன்
அடுகா மனுடல் அழிய விழியால்
சுடுவான் பிரியான் சோற்றுத் துறையே.



தொடு மா மலரால் - தொடுத்த சிறந்த பூக்களால்;
அடு காமன் - அணுகிய மன்மதன்; (அடுத்தல் - நெருங்குதல்;)
காமனுடல்லழிய - லகர ஒற்று விரித்தல் விகாரம்;


சிறந்த பூக்களைத் தொடுத்து ஈசனுக்கு அணிவித்து வணங்கும் பக்தர்களது வினைகள் நீங்குமாறு அருள்புரியும் விமலன்; இடப வாகனன்; நெருங்கிய மன்மதன் உடல் சாம்பலாகும்படி நெற்றிக்கண்ணால் சுட்டெரித்தவன்; அச்சிவபெருமான் திருச்சோற்றுத்துறையுள் நீங்காது எழுந்தருளியிருக்கிறான்.



3)
பிணைமா மலரால் பெருமான் மலர்த்தாள்
இணையே தொழுவார்க் கெமனார் தமர்கள்
அணையா நிலையை அருள்வான் உமையாள்
துணைவன் பிரியான் சோற்றுத் துறையே.



பிணைமா மலரால் - தொடுத்த சிறந்த பூக்களால்;


சிறந்த பூக்களைத் தொடுத்து ஈசன் திருவடிகளில் சாத்தி வணங்கும் பக்தர்களுக்கு எமதூதர்கள் அணுகாத நிலையை அருள்பவன்; உமாதேவியார் கணவன்; அச்சிவபெருமான் திருச்சோற்றுத்துறையுள் நீங்காது எழுந்தருளியிருக்கிறான்.



4)
நீல மிடறன் தனைநீ ளநினை
பால னிடம்வந் தடையும் பரிவில்
காலன் தனையோர் கழலால் உதைசெய்
சூலன் பிரியான் சோற்றுத் துறையே.



நீல மிடறன் - நீலகண்டன்;
பரிவு இல் காலன் - இரக்கம் இல்லாத எமன்;


நீலகண்டனை இடைவிடாது தியானித்து வழிபட்ட மார்க்கண்டேயரிடம் வந்தடைந்த இரக்கமற்ற எமனை ஒரு காலால் உதைத்து அருள்செய்த சூலபாணி; அச்சிவபெருமான் திருச்சோற்றுத்துறையுள் நீங்காது எழுந்தருளியிருக்கிறான்.



5)
பாடிப் பரவிப் பணியும் அடியார்
வாடித் தவியா வணம்வாழ் வருள்வான்
கோடி பெயரான் குளிர்வெண் மதியம்
சூடி பிரியான் சோற்றுத் துறையே.



மதியம் சூடி - பிறைச்சந்திரனைச் சூடுபவன்;


பாடிப் போற்றி வணங்கும் பக்தர்கள் வாடித் தவிக்கும் நிலையின்றி இன்புற வாழ அருள்பவன்; கணக்கற்ற பெயர்கள் உடையவன்; குளிர்ந்த வெண்பிறையைச் சூடுபவன்; அச்சிவபெருமான் திருச்சோற்றுத்துறையுள் நீங்காது எழுந்தருளியிருக்கிறான்.



6)
வேழத் துரிபோர் விகிர்தன் ஒருபால்
ஏழைக் கெனநல் கிறைவன் இனியன்
தாழஞ் சடையன் தனிநா வலர்கோன்
தோழன் பிரியான் சோற்றுத் துறையே.



பதம் பிரித்து:
வேழத்து உரி போர் விகிர்தன்; ஒரு பால்
ஏழைக்கு என நல்கு இறைவன்; இனியன்;
தாழ் அம் சடையன்; தனி நாவலர்கோன்
தோழன்; பிரியான் சோற்றுத்துறையே.


வேழத்து உரி போர் விகிர்தன் - யானைத்தோலைப் போர்க்கும் இறைவன்; (விகிர்தன் - மாறுபட்ட செயலினன்;)
ஏழை - பெண்;
தாழ்தல் - 1) நீண்டுதொங்குதல்; 2) மேலிருந்து விழுதல் (To flow down, descend;)
அம் - 1) அழகு; 2) நீர்;
தாழ் அம் சடையன் - தாழும் அழகிய சடையை உடையவன்; கங்கைச்சடையன்;
தனி - ஒப்பற்ற;
நாவலர்கோன் - சுந்தரர்;


யானைத்தோலைப் போர்க்கும் கடவுள்; உமையம்மைக்கு இடப்பக்கத்தை அளித்த இறைவன்; பக்தர்களுக்கு இனியவன்; தாழும் அழகிய சடையை உடையவன்; கங்கைச்சடையன்; ஒப்பற்ற சுந்தரர்க்குத் தோழன்; அச்சிவபெருமான் திருச்சோற்றுத்துறையுள் நீங்காது எழுந்தருளியிருக்கிறான்.



7)
நாதன் நரைவெள் விடையன் குழையோர்
காதன் கறைசேர் மிடறன் கழலார்
பாதன் இரவிற் பரவை மனைசெல்
தூதன் பிரியான் சோற்றுத் துறையே.



* திருவாரூரில் சுந்தரருக்காகப் பரவை மனைக்குத் தூது சென்றதைச் சுட்டியது.
குழை ஓர் காதன் - ஒரு காதில் குழையை அணிந்தவன் - அர்த்தநாரீஸ்வரன்;
கறை சேர் மிடறன் - நீலகண்டன்;
கழல் ஆர் பாதன் - கழலை அணிந்த திருவடியினன்;


தலைவன்; வெள்ளை எருதை வாகனமாக உடையவன்; ஒரு காதில் குழை அணிபவன் (அர்தநாரீஸ்வரன்); நீலகண்டன்; வீரக்கழலை அணிந்த திருவடியினன்; சுந்தரர்க்காக இரவுநேரத்தில் பரவையார் இல்லத்திற்குத் தூது சென்றவன்; அச்சிவபெருமான் திருச்சோற்றுத்துறையுள் நீங்காது எழுந்தருளியிருக்கிறான்.



8)
மடத்தால் மலையாட் டுமிரா வணனை
இடப்பால் உமைசேர் இறைவன் விரலால்
அடர்த்தான் அடையும் அடியார் துயரைத்
துடைப்பான் பிரியான் சோற்றுத் துறையே.



மடத்தால் - அறியாமையால்;
இடப்பால் - இடப்பக்கம்;
அடர்த்தல் - நசுக்குதல்;
துடைத்தல் - நீக்குதல்;


இராவணன் தன் அறியாமையால் கயிலைமலையைப் பெயர்க்க முயன்றபோது, அவனை ஒரு விரலை அம்மலைமேல் இட்டு நசுக்கியவன்; இடப்பக்கம் உமையம்மை இணைகிற இறைவன்; சரண்புகுந்த அடிவர்கள் துயரைப் போக்குபவன்; அச்சிவபெருமான் திருச்சோற்றுத்துறையுள் நீங்காது எழுந்தருளியிருக்கிறான்.



9)
அரிநான் முகனார் அறியா வணமோர்
எரியாய் எழுவான் இலையால் தொழினும்
பரிவான் பழவல் வினைதீர்த் தருளைச்
சொரிவான் பிரியான் சோற்றுத் துறையே.



இலையால் தொழினும் - இலைகளைத் தூவித் தொழுதாலும்;


திருமாலும் பிரமனும் அறிய இயலாதபடி ஒரு எல்லையற்ற சோதியாக உயர்ந்தவன்; இலைகளைத் தூவி வணங்கினாலும் அவ்வடியவர்களுக்கு இரங்குபவன்; அவர்களது பழைய வலிய வினைகளைத் தீர்த்து அருளைப் பொழிபவன்; அச்சிவபெருமான் திருச்சோற்றுத்துறையுள் நீங்காது எழுந்தருளியிருக்கிறான்.


(சுந்தரர் தேவாரம் - 7.94.9
இலையால் அன்பால் ஏத்தும் அவர்க்கு
நிலையா வாழ்வை நீத்தார் இடமாம்
தலையால் தாழுந் தவத்தோர்க் கென்றும்
தொலையாச் செல்வச் சோற்றுத் துறையே.)



10)
மிண்டர் அறியார்; விழியற் றவரால்;
கண்டு வழியைக் கழறற் கொணுமோ?
தொண்டர் துயர்தீர் துணைவன் மதியத்
துண்டன் பிரியான் சோற்றுத் துறையே.



மிண்டர் - கல்நெஞ்சர்கள்;
ஆல் - 1) மூன்றாம் வேற்றுமை உருபு; 2) அதிசயம் இரக்கம் தேற்றம் இவற்றைக் குறிப்பிக்கும் இடைச்சொல் (Particle expressive of surprise or pity or certainty); 3) ஓர் அசைநிலை (Poetic expletive affixed to nouns and finite verbs);
விழியற்றவரால் - 1) விழி அற்றவரால் - கண்ணில்லாதவர்களால்; 2) குருடர்;
கழறுதல் - சொல்லுதல் (To say, declare, tell);
ஒண்ணுதல் - இயலுதல்;
மதியத் துண்டன் - நிலாத் துண்டத்தை அணியும் சிவபெருமான்;


சிவனுக்கு அன்பில்லாத கல்நெஞ்சர்கள் அறியமாட்டார். அவர்கள் குருடர்களே! குருடர்களால் இன்னொருவருக்கு வழியைக் காட்ட இயலுமோ? அடியவர்கள் துயரைத் தீர்க்கும் துணைவன், நிலாத்துண்டத்தைச் சூடும் சிவபெருமான் திருச்சோற்றுத்துறையுள் நீங்காது எழுந்தருளியிருக்கிறான்.


இலக்கணக் குறிப்பு: "மிண்டர் அறியார்; விழியற் றவரால்;" என்றும் "விழியற் றவரால் கண்டு வழியைக் கழறற் கொணுமோ" என்றும் இரு பக்கமும் இயைத்துப் பொருள்கொள்க. இது இடைநிலைத்தீவக அணி - இடைநிலைவிளக்கு என்று சொல்லப்பெறும்;



11)
மடமா தொருபால் மகிழும் தலைவன்
சுடர்போல் உருவன் படர்செஞ் சடையன்
அடலே றுடையான் அடியார் நிழல்போல்
தொடர்வான் பிரியான் சோற்றுத் துறையே.



பதம் பிரித்து:
மடமாது ஒருபால் மகிழும் தலைவன்;
சுடர்போல் உருவன்; படர் செஞ்சடையன்;
அடல் ஏறு உடையான்; அடியார் நிழல்போல்
தொடர்வான்; பிரியான் சோற்றுத் துறையே.


மடம் - அழகு;
சுடர் - நெருப்பு;
அடல் ஏறு உடையான் - வலிய எருதை ஊர்தியாக உடையவன்;


அழகிய உமையம்மையை ஒரு கூறாகக் கொண்ட தலைவன்; தீப்போன்ற செம்மேனியன்; படர்ந்த செஞ்சடை உடையவன்; வலிய எருதை ஊர்தியாக உடையவன்; நிழல்போல அடியவர்களை என்றும் நீங்காமல் தொடர்பவன்; அச்சிவபெருமான் திருச்சோற்றுத்துறையுள் நீங்காது எழுந்தருளியிருக்கிறான்.



அன்போடு,
வி. சுப்பிரமணியன்



பிற்குறிப்பு :
1) யாப்புக் குறிப்பு :
கலிவிருத்தம். "தனனா தனனா தனனா தனனா" என்ற சந்தம்.
பாடல்களில் முதற்சீர் 'தானா' என்றும் வரலாம்.
மற்ற சீர்களில், ஒரோவழி தனனா என்பது தானா என்று வரும்.



2) சம்பந்தர் தேவாரம் - 2.17.1 -
நிலவும் புனலும் நிறைவா ளரவும்
இலகுஞ் சடையார்க் கிடமா மெழிலார்
உலவும் வயலுக் கொளியார் முத்தம்
விலகுங் கடலார் வேணு புரமே.



3) திருச்சோற்றுத்துறை - கோயில் தகவல்கள் - தினமலர் தளத்தில்: http://temple.dinamalar.com/New.php?id=371

-------------- --------------

No comments:

Post a Comment