Sunday, October 4, 2015

02.27 – திருப்பழனம் - (பழனத்தரன் பாதம் பணி)

02.27 – திருப்பழனம் - (பழனத்தரன் பாதம் பணி)


2011-09-04
திருப்பழனம்
"பழனத்தரன் பாதம் பணி"
----------------------------------
(கலிவிருத்தம் - 'மாங்கனி மாங்கனி மாங்கனி மா' - என்ற வாய்பாடு)
(சம்பந்தர் தேவாரம் - 1.10.1 - 'உண்ணாமுலை உமையாளொடும் உடனாகிய ஒருவன்')


1)
குயிலின்மொழி மடவாரொடு குடும்பம்பொருள் இவையே
துயிலும்வரை நினைகின்றனை துயர்தீர்வழி கேளாய்
வயலின்புடை மாவின்கனி மாந்திக்களி கிளிகள்
பயிலும்திருப் பழனத்தரன் பாதம்பணி மனமே.


பதம் பிரித்து:
குயில் இன்மொழி மடவாரொடு குடும்பம் பொருள் இவையே
துயிலும்வரை நினைகின்றனை; துயர் தீர்வழி கேளாய்;
வயலின் புடை மாவின் கனி மாந்திக் களி கிளிகள்
பயிலும் திருப்பழனத்து அரன் பாதம் பணி மனமே.


துயில்தல் - உறங்குதல்; இறத்தல்;
புடை - பக்கம்;


மனமே! குயில் போன்ற இனிய மொழி பேசும் பெண்டிர், குடும்பம், பொருள் என்று இவற்றையே உறங்கும்வரை (=எப்பொழுதும்) நீ எண்ணுகிறாய். (அதனால் துயர் உறுகிறாய்). துயரம் தீரும் வழியைக் கேட்பாயாக; வயலின் அருகே (சோலைகளில்) மாங்கனி உண்டு மகிழும் கிளிகள் ஒலிக்கும் திருப்பழனத்தில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமான் பாதத்தை வணங்கு.


2)
தேடும்பொருள் வீடுந்தினம் சேர்ந்தேவருந் தானோ
மாடும்பெரும் பீடும்பெறும் மறுவில்வழி கேளாய்
ஓடும்புனல் அயலேமலர் உகுதேனளி உண்டு
பாடும்பொழிற் பழனத்தரன் பாதம்பணி மனமே.


வீடும் தினம் - இறக்கும் நாள்;
மாடு - செல்வம்;
பீடு - பெருமை;
மறு இல் வழி - குற்றமற்ற நெறி;
மலர் உகு தேன் அளி உண்டு - பூக்கள் சொரியும் தேனை வண்டுகள் அருந்தி;


மனமே! தேடிய பொருள் எல்லாம் சாகும் நாளில் கூட வருமோ? செல்வமும் பெருமையும் அடையக் குற்றமற்ற வழியைக் கேட்பாயாக! ஓடும் நீரின் பக்கத்தில் மலர்கள் சொரியும் தேனை உண்டு வண்டுகள் பாடும் சோலைகள் இருக்கும் திருப்பழனத்தில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமான் திருவடியைப் பணிவாயாக!


3)
அத்தத்தினை இச்சித்திடர் நித்தம்பெறு கின்றாய்
மொத்தத்துயர் தீரும்வழி மொழிவேனது கேளாய்
பித்தன்மத மத்தம்புனை அத்தன்கழல் பேணும்
பத்தர்க்கரண் பழனத்தரன் பாதம்பணி மனமே.


பதம் பிரித்து:
அத்தத்தினை இச்சித்து இடர் நித்தம் பெறுகின்றாய்;
மொத்தத் துயர் தீரும் வழி மொழிவேன்; அது கேளாய்;
பித்தன், மத மத்தம் புனை அத்தன், கழல் பேணும்
பத்தர்க்கு அரண் பழனத்து அரன் பாதம் பணி மனமே.

அத்தம் - அர்த்தம் - பொருள்/செல்வம்;
இச்சித்தல் - விரும்புதல்;
நித்தம் - அனவரதமும்; எப்பொழுதும்;
மத மத்தம் - ஊமத்த மலர்;
அரண் - காவல்;

மனமே! பொருளை விரும்பி அதனால் எப்பொழுதும் இடர்ப்படுகிறாய். எல்லாத் துயரங்களும் தீர்கிற வழியைச் சொல்கிறேன். தனைக் கேட்பாயாக! பித்தன், ஊமத்த மலரைச் சூடுபவன், தன் திருவடியைப் போற்றும் பக்தர்களுக்குப் பாதுகாவலாக உள்ளவன், திருப்பழனத்தில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமான் பாதத்தைப் பணிவாயாக!


4)
காலிற்றொரு கோல்பற்றிடும் காலம்வரு முன்நீ
சேலுக்கிணை விழியாளிடம் சேரும்சிவன் அன்பால்
ஆலித்தடி மலரேபுகழ் அடியார்களை என்றும்
பாலித்தருள் பழனத்தரன் பாதம்பணி மனமே.


பதம் பிரித்து:
கால் இற்று ஒரு கோல் பற்றிடும் காலம் வருமுன் நீ,
சேலுக்கு இணை விழியாள் இடம் சேரும் சிவன், அன்பால்
ஆலித்து அடிமலரே புகழ் அடியார்களை என்றும்
பாலித்து அருள் பழனத்து அரன் பாதம் பணி மனமே.

இறுதல் - தளர்தல்;
ஆலித்தல் - ஒலித்தல்;
அன்பால் ஆலித்து அடிமலரே புகழ் - பக்தியோடு திருமுறைகளைப் பாடித் திருவடித்தாமரையைப் புகழும்;

மனமே! கால் தளர்ந்து கைத்தடியை ஊன்றி நடக்கும் முதுமையை அடைவதன் முன்னமே, சேல்மீன் போன்ற விழிகளை உடைய உமையம்மையை இடப்பக்கத்தில் கொண்ட சிவபெருமான், பக்தியோடு துதிகளைப் பாடித் திருவடித்தாமரையைப் புகழும் அடியவர்களை என்றும் காத்து அருளும் திருப்பழனத்தில் எழுந்தருளியிருக்கும் ஹரன் பாதத்தைப் பணிவாயாக!


5)
அலைவந்தெறி கடல்போல்வினை அடையாவழி அறிவாய்
நிலவுந்திரை நீரும்புனை நிமலன்சுடு நீற்றன்
புலருங்கதிர் நிறத்தன்செறி பொழிலிற்கனி மரங்கள்
பலவுந்திகழ் பழனத்தரன் பாதம்பணி மனமே.


பதம் பிரித்து:
அலை வந்து எறி கடல்போல் வினை அடையா வழி அறிவாய்;
நிலவும் திரை நீரும் புனை நிமலன், சுடு நீற்றன்,
புலரும் கதிர் நிறத்தன், செறி பொழிலில் கனி மரங்கள்
பலவும் திகழ் பழனத்து அரன் பாதம் பணி மனமே.

திரை நீர் - திரைகிற நதி / அலையை உடைய நதி - கங்கை;
புலரும் கதிர் நிறத்தன் - உதிக்கின்ற ஞாயிறு போன்ற செம்மேனி உடையவன்;
செறி பொழில் - அடர்ந்த சோலை;

மனமே! அலை வந்து மோதுகிற கடலைப் போன்ற வினைகள் நம்மை அடையா வழியை அறிவாயாக! பிறைச்சந்திரனையும் அலைவீசும் கங்கையையும் அணிகிற நிர்மலன், திருநீற்றைப் பூசியவன், உதிக்கின்ற சூரியனைப் போல் செந்நிறம் உடையவன், அடர்ந்த சோலைகளில் பழங்கள் நிறைந்த மரங்கள் பலவும் திகழ்கிற திருப்பழனத்தில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமான் பாதத்தைப் பணிவாயாக!


6)
வலிநின்றிடக் கலிசென்றிட வழியொன்றுள தறிவாய்
எலியன்றொரு திரிதூண்டவும் எழில்வானையும் ஈவான்
நலிவொன்றிலன் நதிவேணியன் நகுவெண்தலை ஒன்றிற்
பலிகொள்பவன் பழனத்தரன் பாதம்பணி மனமே.


பதம் பிரித்து:
வலி நின்றிடக், கலி சென்றிட, வழி ஒன்று உளது அறிவாய்;
எலி அன்று ஒரு திரி தூண்டவும், எழில் வானையும் ஈவான்;
நலிவு ஒன்று இலன்; நதி வேணியன்; நகு வெண் தலை ஒன்றில்
பலி கொள்பவன்; பழனத்து அரன் பாதம் பணி மனமே.

வலி - நோவு;
நிற்றல் - ஒழிதல் (To cease; to be discontinued, stopped or suspended);
கலி - துன்பம்;
செல்லுதல் - போதல் (to go away); கழிதல் (To pass away, lapse, expire, as time);
நலிவு - அழிவு;
வேணி - சடை;
பலி - பிச்சை;

மனமே! வேதனைகள், துன்பங்கள் எல்லாம் தீர ஒரு வழி உள்ளது என்று அறிவாயாக!திருமறைக்காட்டில் சன்னிதியில் இருந்த விளக்கில் இருந்த நெய்யை உண்ண வந்த ஓர் எலி, அச்செயலின் விளைவாக விளக்கின் திரியைத் தூண்டி நன்கு எரியச் செய்தது. அந்த அபுத்திபூருவ புண்ணியத்தின் பயனாக அதற்கு அடுத்த பிறப்பில் மிக உயர்ந்த நிலையை அளித்தவன், அழிவற்றவன், கங்கைச்சடையன், சிரிப்பதுபோல் காணும் மண்டையோட்டில் பிச்சை ஏற்பவன், திருப்பழனத்தில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமான் பாதத்தைப் பணிவாயாக!

(* திருமறைக்காட்டில் எரியும் விளக்கில் இருந்த நெய்யை உண்ணுதற்கு வந்த எலி, அணையும் நிலையில் இருந்த திரியைத் தூண்டி, அதன் விளைவாய் மறுபிறப்பில் சக்கிரவர்த்தியாகப் பிறந்ததைச் சுட்டியது.

அப்பர் தேவாரம் - 4.49.8
"நிறைமறைக் காடு தன்னில் நீண்டெரி தீபந் தன்னைக்
கறைநிறத்து எலிதன் மூக்குச் சுட்டிடக் கனன்று தூண்ட
நிறைகடல் மண்ணும் விண்ணும் நீண்டவா னுலகம் எல்லாங்
குறைவறக் கொடுப்பர் போலும் குறுக்கை வீரட்டனாரே"
)


7)
கடைமாந்தரின் கடைபோய்இரு கரமேந்திட வேண்டா;
திடமாந்திரு; திரையார்புனல் திகழ்செஞ்சடை உடையான்
விடமாந்திய மிடறன்மதி மிளிர்சென்னியன் மழுவாட்
படையேந்திய பழனத்தரன் பாதம்பணி மனமே.


பதம் பிரித்து:
கடைமாந்தரின் கடைபோய் இரு கரம் ஏந்திட வேண்டா;
திடம் ஆம் திரு; திரை ஆர் புனல் திகழ் செஞ்சடை உடையான்,
விடம் மாந்திய மிடறன், மதி மிளிர் சென்னியன், மழுவாள்
படை ஏந்திய பழனத்து அரன் பாதம் பணி மனமே.

கடை மாந்தர் - இழிந்தவர்கள்;
கடை போய் - வாயிலில் போய்;
திடமாம் திரு - செல்வம் நிச்சயமே;
விடம் மாந்திய மிடறன் - விடத்தை உண்ட திருநீலகண்டன்;

மனமே! கீழ்மக்களின் வாயிலில் நின்று கையேந்தாதே. நான் சொல்வதைக் கேள். திரு அடைவது நிச்சயமே. அலைவீசும் கங்கை திகழும் செஞ்சடையை உடையவன், விடத்தை உண்ட நீலகண்டன், சந்திரன் ஒளிவீசும் தலையினன், மழுவாள் ஆயுதத்தை ஏந்தியவன், திருப்பழனத்தில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமான் பாதத்தைப் பணிவாயாக!


8)
பேர்த்தும்புவி வாராநிலை பெறநீநினை வாயேல்
ஆர்த்தவ்வரை அசைத்தான்தனை அடர்த்தான்விரல் நுனியால்
பூத்துப்பொலி கானிற்படை வேண்டித்தவம் புரியும்
பார்த்தற்கருள் பழனத்தரன் பாதம்பணி மனமே.


பதம் பிரித்து:
பேர்த்தும் புவி வாரா நிலை பெற நீ நினைவாயேல்,
ஆர்த்து அவ் வரை அசைத்தான்தனை அடர்த்தான் விரல் நுனியால்,
பூத்துப் பொலி கானில் படை வேண்டித் தவம் புரியும்
பார்த்தற்கு அருள் பழனத்து அரன் பாதம் பணி மனமே.

பேர்த்தும் - பெயர்த்தும்; மீண்டும்;
பார்த்தற்கு - பார்த்தனுக்கு;

பேர்த்தும் புவி வாரா நிலை பெற நீ நினைவாயேல் - மனமே! மீண்டும் உலகில் பிறவா நிலையைப் பெற நீ எண்ணினால்;
ஆர்த்து அவ்வரை அசைத்தான்தனை அடர்த்தான் விரல் நுனியால் - ஆரவாரம் செய்துகொண்டு வந்து கயிலைமலையைப் பேர்க்க முயன்ற இராவணனை ஒரு விரலின் நுனியை ஊன்றி நசுக்கியவன்;
பூத்துப் பொலி கானில் படை வேண்டித் தவம் புரியும் பார்த்தற்கு அருள் - பூக்கள் நிறைந்த காட்டில் பாசுபதம் வேண்டித் தவம் செய்த அருச்சுனனுக்கு அருள்செய்த;
பழனத்து அரன் பாதம் பணி மனமே - திருப்பழனத்துச் சிவபெருமான் திருவடியை வணங்கு.


9)
நண்ணாதறும் நலிதீவினை நலமார்வழி கேளாய்
கண்ணார்நுதல் காட்டும்பரன் கடல்வண்ணனும் அயனும்
அண்ணாவருள் என்றேத்திட அழலாயுயர் ஐயன்
பண்ணார்பொழிற் பழனத்தரன் பாதம்பணி மனமே.


பதம் பிரித்து:
நண்ணாது அறும் நலி தீவினை; நலம் ஆர் வழி கேளாய்;
கண் ஆர் நுதல் காட்டும் பரன்; கடல்வண்ணனும் அயனும்
"அண்ணா! அருள்" என்று ஏத்திட அழலாய் உயர் ஐயன்;
பண் ஆர் பொழில் பழனத்து அரன் பாதம் பணி மனமே.

அறுதல் - தீர்தல்;
நலி தீவினை - நலிக்கும் பாவங்கள்;
ஆர்தல் - பொருந்துதல்;
நுதல் - நெற்றி;
கடல்வண்ணன் - திருமால்;
அயன் - பிரமன்;
அண்ணா - தந்தையே, திசைச்சொல். 'அண்ணல்' என்பதன் விளியான 'அண்ணால்' என்பது "அண்ணா" என மருவிற்று என்றும் கொள்ளலாம்.

மனமே! வருத்தும் பாவங்கள் எல்லாம் நெருங்காமல் அழியும். நன்மை பெருகும் வழியைக் கேட்பாயாக! நெற்றிக்கண்ணன்; விஷ்ணுவும் பிரமனும் "தந்தையே! அருள்வாய்!" என்று துதிக்கும்படி அவர்களிடையே சோதியாக ஓங்கிய தலைவன்; வண்டுகள் இசை பாடும் சோலைகள் சூழ்ந்த திருப்பழனத்தில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமான் பாதத்தைப் பணிவாயாக!
(சோலையில் இசையொலி கேட்பதால் அங்கு வண்டுகள் ரீங்காரம் செய்வது குறிப்பால் உணர்த்தப்பெற்றது)


10)
பாங்கில்மொழி பகர்மூடர்கள் பரமன்திறம் அறியார்
தீங்கைப்புரி பழவல்வினை தீரும்வழி தெளிவாய்
ஓங்கித்திரை தெற்றுஞ்சடை உடையான்உயர் பொன்னிப்
பாங்கர்த்திகழ் பழனத்தரன் பாதம்பணி மனமே.


பதம் பிரித்து:
பாங்கு இல் மொழி பகர் மூடர்கள் பரமன் திறம் அறியார்;
தீங்கைப் புரி பழ வல்வினை தீரும் வழி தெளிவாய்;
ஓங்கித் திரை தெற்றும் சடை உடையான், உயர் பொன்னிப்
பாங்கர்த் திகழ் பழனத்து அரன் பாதம் பணி மனமே.

பாங்கு இல் மொழி - நன்மை அற்ற சொற்கள்; தகாத சொற்கள்;
திரை தெற்றுதல் - அலை மோதுதல்;
பாங்கர் - பக்கம்; அருகு;

மனமே! நன்மை அற்ற சொற்களைப் பேசும் அறிவிலிகள், கடவுளின் தன்மையை அறியாதவர்கள். கெடுதலைச் செய்யும் பழைய வலிய வினைகள் எல்லாம் தீரும் வழியை அறிவாயாக! ஓங்கி அலைமோதும் கங்கையைச் சடையில் உடையவன், சிறந்த காவிரியின் அருகு உள்ள திருப்பழனத்தில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமான் பாதத்தைப் பணிவாயாக!


11)
எஞ்சாவினை அடையாதுயர் என்றுஞ்சிறப் பாமே
மஞ்சார்மலை மங்கைக்கிறை மழவெள்விடை ஏறி
நஞ்சார்மணி கண்டன்முனம் நகையாற்புரம் எரித்த
பஞ்சாக்கரன் பழனத்தரன் பாதம்பணி மனமே.


பதம் பிரித்து:
எஞ்சா வினை; அடையா துயர்; என்றும் சிறப்பு ஆமே;
மஞ்சு ஆர் மலை மங்கைக்கு இறை, மழ வெள் விடை ஏறி,
நஞ்சு ஆர் மணிகண்டன், முனம் நகையால் புரம் எரித்த
பஞ்சாக்கரன், பழனத்து அரன் பாதம் பணி மனமே.

எஞ்சுதல் - மிஞ்சுதல் (To remain, to be left behind);
அடையா - அடையமாட்டா;
மஞ்சு ஆர் மலை மங்கைக்கு இறை - மேகம் பொருந்தும் இமயமலைக்கு மகளாகிய பார்வதி தலைவன்; (அப்பர் தேவாரம் - 4.9.6 -
"நெஞ்சே நீநினையாய் - நிமிர் புன்சடை நின்மலனை
மஞ்சா டும்மலை மங்கை மணாளனை
நெஞ்சே நீநினையாய்.")
மழ வெள் விடை ஏறி - இளமையான வெள்ளை ஏற்றின்மேல் ஏறிவருபவன்;
ஆர்தல் - பொருந்துதல்; உண்ணுதல்; தங்குதல்;
நஞ்சு ஆர் மணி கண்டன் - நஞ்சை உண்ட நீலகண்டன்;
பஞ்சாக்கரன் - பஞ்சாக்ஷரன் - திருவைந்தெழுத்தின் வடிவானவன்;

மனமே! வினைகள் அடியோடு தீரும். துயரங்கள் வந்து அடையமாட்டா; என்றும் சிறப்பே சேரும். மேகம் வந்து பொருந்தும் இமயமலை அரசன் மகளான பார்வதிக்குத் தலைவன், இளைய வெள்ளை எருதை வாகனமாக உடையவன், விஷம் மணி போல் திகழும் நீலகண்டன், முன்பு சிரிப்பால் முப்புரங்களையும் எரித்தவன், பஞ்சாக்ஷரன், திருப்பழனத்தில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமான் பாதத்தைப் பணிவாயாக!


அன்போடு,
வி. சுப்பிரமணியன்


பிற்குறிப்பு :
1) திருப்பழனம் - கோயில் தகவல்கள் - தினமலர் தளத்தில்: http://temple.dinamalar.com/New.php?id=959

-------------- --------------

No comments:

Post a Comment