Thursday, September 3, 2015

02.22 – திருமழபாடி - (மழபாடி வயிரத்தூண்)

02.22 – திருமழபாடி - (மழபாடி வயிரத்தூண்)



2011-07-11
திருமழபாடி
"மழபாடி வயிரத்தூண்"
----------------------------
(திருத்தாண்டக அமைப்பு - எண்சீர் விருத்தம். பொதுவாகக் 'காய் காய் மா தேமா' என்ற அரையடி வாய்பாடு.)
(திருநாவுக்கரசர் தேவாரம் - 6.80.1 - “பாரானைப் பாரினது பயனா னானைப்”)



1)
திண்பனைக்கை வேழத்தின் உரிவை யானைச்
.. செஞ்சடைமேல் வான்மதியைத் திகழ வைத்த
பண்பனைக்கண் மூன்றுடைய பரமன் தன்னைப்
.. பண்ணாரும் தமிழ்பாடு சுந்த ரர்க்கு
நண்பனைநால் வேதத்தின் பொருளா னானை
.. நற்றவனை ஞானத்தின் உருவி னானை
வண்பொழில்சூழ் மழபாடி வயிரத் தூணை
.. வாயார வாழ்த்தவினை மாயும் தானே.



திண் பனைக்கை வேழம் - வலிய பனைபோன்ற துதிக்கையை உடைய யானை;
(சம்பந்தர் தேவாரம் - 2.88.10 - "பனைமல்கு திண்கை மதமா வுரித்த பரமன்ன நம்பன்");
உரிவை - தோல்;
வான்மதி - வான் மதி / வால் மதி; (வால் - வெண்மை);
வண் பொழில் - வளப்பமான சோலை;
மழபாடி வயிரத்தூண் - திருமழபாடி இறைவன் திருப்பெயர் - வஜ்ரஸ்தம்பேசுவரர்;
(அப்பர் தேவாரம் - 6.40.1 - "அலையடுத்த பெருங்கடல் ... மலையடுத்த மழபாடி வயிரத் தூணே யென்றென்றே நானரற்றி நைகின் றேனே.")



2)
காம்பினைவெல் மென்தோளி பாகத் தானைக்
.. கணையெய்த காமனையோர் கண்வி ழித்துச்
சாம்பலெனச் செய்தவனைத் தாளில் வீழ்ந்த
.. சந்திரனைத் தலைமீது தாங்கு வானைப்
பூம்புகலூர்ப் புண்ணியனைக் குறைவொன் றில்லாப்
.. பூரணனைத் தீம்பண்ணை வண்டி சைக்கும்
மாம்பொழில்சூழ் மழபாடி வயிரத் தூணை
.. வாயார வாழ்த்தவினை மாயும் தானே.



காம்பு - மூங்கில் (Bamboo);
வெல்தல் - ஒத்தல் (To resemble);
தீம் பண் - இனிய இசை;
காம்பினை வெல் மென்தோளி பாகத்தான் - (சம்பந்தர் தேவாரம் - 3.102.1 - "காம்பினை வென்றமென் றோளி பாகங் கலந்தான்" - மூங்கிலைப் போன்ற தோளையுடைய உமாதேவியைத் தன் ஒரு பாகமாகக் கொண்டவன்);
பூம்புகலூர்ப் புண்ணியன் - (அப்பர் தேவாரம் - 6.99.1 - "எண்ணுகேன் என்சொல்லி ... புண்ணியா உன்னடிக்கே போது கின்றேன் பூம்புகலூர் மேவிய புண்ணி யனே");



3)
ஊர்விடைமேல் உலகெல்லாம் உழிதர் வானை
.. உதிக்கின்ற கதிர்போற்செம் மேனி யானைப்
பேர்பலவும் உடையானைப் பெம்மான் தன்னைப்
.. பேதையொரு பாகத்திற் பிரியா தானை
ஓர்நதியைச் செம்பொன்னேர் சடையி னுள்ளே
.. ஒளித்தானைச் சுரும்பினங்கள் பண்மி ழற்றும்
வார்பொழில்சூழ் மழபாடி வயிரத் தூணை
.. வாயார வாழ்த்தவினை மாயும் தானே.



ஊர் விடை - ஊர்கிற விடை - செல்லும் இடபம்;
உழிதருதல் - திரிதல்; அலைதல். (To wander about, move to and fro);
உழிதர்வான் - 'உழிதருவான்' என்பதில் இடைநின்ற உகரம் தொகுத்தலாயிற்று.
(அப்பர் தேவாரம் - 6.4.2 - "ஏறேறி யேழுலகும் உழிதர் வானே" - காளை மீது ஏறி ஏழுலகமும் சுற்றி வருபவன்);
கதிர் - சூரியன்;
உதிக்கின்ற கதிர்போற் செம்மேனியான் - உதிக்கின்ற சூரியனைப் போலச் சிவந்த திருமேனி உடையவன்;
செம்பொன்னேர் சடை - செம்பொன் நேர் சடை - செம்பொன் போன்ற சடை;
வார் பொழில் - நீண்ட சோலை;



4)
என்னுயிரைக் காவென்ற மார்க்கண் டேயர்
.. இனிதிருக்க எமனையுதைத் தருள்செய் தானைச்
சென்னிமிசை வெண்திங்கள் சூடி னானைச்
.. செந்தமிழை மிகவிரும்பும் தேவ தேவை
என்னவெனை மறந்தாயோ நாவ லூரா
.. என்றாலம் பொழிலிலவர் கனவிற் சொன்ன
மன்னவனை மழபாடி வயிரத் தூணை
.. வாயார வாழ்த்தவினை மாயும் தானே.



நாவலூரர் - சுந்தரர்;
மன்னவன் - மன்னன் - அரசன்; தலைவன்; எப்பொருட்கும் இறைவன் (The Universal Lord);
"என்ன? எனை மறந்தாயோ நாவலூரா?" என்று ஆலம்பொழிலில் அவர் கனவில் சொன்ன மன்னவனை - திருவாலம்பொழிலில் சுந்தரர் துயிலும்பொழுது அவர் கனவில் சிவபெருமான் சென்று, "திருமழபாடிக்கு வர நினைக்க மறந்தாயோ?" என்று உணர்த்தினார்.



5)
சிந்திப்பார் மனத்துள்ளே திகழ்பெம் மானைத்
.. திருப்பழனம் பூந்துருத்தி மேவி னானை
வந்திக்கும் வானவர்க்கா நஞ்சுண் டானை
.. வாளரவை அரைநாணாக் கட்டு வானை
அந்தத்தோ டாதியிலாய் உன்னை அல்லால்
.. ஆரைநினைக் கேனென்று நாவ லூர்க்கோன்
வந்தேத்தும் மழபாடி வயிரத் தூணை
.. வாயார வாழ்த்தவினை மாயும் தானே.



திருப்பழனம், திருப்பூந்துருத்தி - திருவையாற்றின் அருகுள்ள தலங்கள்;
வாள் அரவு - கொடிய பாம்பு;
அந்தத்தோடு ஆதி இலாய் - முடிவும் முதலும் இல்லாதவனே;
அல்லால் - அன்றி; தவிர; (Except, besides);
நாவலூர்க்கோன் - சுந்தரர்;


(சுந்தரர் தேவாரம் - 7.24.9 -
நெறியே நின்மலனே நெடு மாலயன் போற்றிசெய்யும்
குறியே நீர்மையனே கொடி யேரிடை யாள்தலைவா
மறிசேர் அங்கையனே மழ பாடியுள் மாணிக்கமே
அறிவே நின்னையல்லால் இனி யாரை நினைக்கேனே.);



6)
அழுகாழி மகனார்க்குத் திருமு லைப்பால்
.. அளித்தருள்செய் உமைநங்கை பங்கன் தன்னை
எழுஞாயி றொக்கும்செம் மேனி யானை
.. இளமதியம் சூடும்பொற் சடையி னானைத்
தொழுவான வர்க்கிரங்கிக் கடலின் நஞ்சைத்
.. துளங்காமல் எடுத்துண்ட கண்டன் தன்னை
மழுவானை மழபாடி வயிரத் தூணை
.. வாயார வாழ்த்தவினை மாயும் தானே.



அழு காழி மகனார் - சீகாழியில் அவதரித்த திருஞான சம்பந்தர்; அழுது திருமுலைப்பால் உண்பிக்கப்பெற்றவர்;
எழு ஞாயிறு - உதிக்கின்ற சூரியன்;
மதியம் - சந்திரன்;
துளங்காமல் - கலங்காமல்; (துளங்குதல் - அசைதல்; நடுங்குதல்; கலங்குதல்;)
கண்டன் - நீலகண்டன்;
மழுவான் - மழுவை ஏந்தியவன்;



7)
சிரமிணைத்த மாலையணி சென்னி யானைத்
.. தேவரெலாம் வந்திறைஞ்சத் தேரில் ஏறிப்
புரமெரிக்க மலைவில்லை ஏந்தி னானைப்
.. புனல்சடைமேற் பொறுத்தவனை அவியை அன்று
தரமறுத்த தக்கன்தன் வேள்வி தன்னைத்
.. தகர்த்தவனைத் தாள்பணியும் அன்பர் கட்கு
வரமருளும் மழபாடி வயிரத் தூணை
.. வாயார வாழ்த்தவினை மாயும் தானே.



சிரம் இணைத்த மாலை அணி சென்னியானை - தலைக்குத் தலைமாலை அணிபவனை;
புனல்சடைமேல் பொறுத்தவனை - கங்கையைச் சடையில் தாங்கியவனை;
(சுந்தரர் தேவாரம் - 7.4.1 - "தலைக்குத்தலை மாலை அணிந்ததென்னே
சடைமேற்கங்கை வெள்ளந் தரித்ததென்னே ...");



8)
பண்டொருநாள் கயிலாய மலையை ஆட்டும்
.. பத்துமுடி யானைவிரல் இட்ட டர்த்து
மிண்டொழித்துப் பின்னவன்செய் யாழி சைக்கு
.. மிகமகிழ்ந்து வாளொடுநாள் நல்கி னானைக்
கொண்டல்நிறம் கொண்டுதிகழ் கண்டத் தானைக்
.. குளிர்பொழிலில் விண்டமலர் கிண்டி உண்டு
வண்டுமுரல் மழபாடி வயிரத் தூணை
.. வாயார வாழ்த்தவினை மாயும் தானே.



பண்டு ஒரு நாள் - முன்பு ஒரு காலத்தில்;
பத்து முடியான் - பத்துத்தலைகளை உடைய இராவணன்;
அடர்த்து - நசுக்கி;
மிண்டு - செருக்கு;
(சம்பந்தர் தேவாரம் - 3.103.8 - ".... தலைபத் துடையானை .....ஒருகால் விரலூன்றி
மிண்டது தீர்த்தருள் செய்யவல்ல விகிர்தர்க் கிடம்போலும் ....");
கொண்டனிறம் - கொண்டல் நிறம் - மேகம் போன்ற நிறம்;
விண்ட மலர் - மலர்ந்த பூ;
கிண்டுதல் - கிளறுதல்; ஆராய்தல்;
முரலுதல் - ரீங்காரம் செய்தல்;



9)
புயல்வண்ணன் ஏனத்தின் உருவைக் கொண்டு
.. பொன்னடியைத் தேடிநிலம் அகழ்ந்து சோர
உயர்கின்ற அன்னத்தின் வடிவம் கொண்டே
.. உச்சியினைத் தேடியதா மரையான் தானும்
அயர்கின்ற வாறெழுந்த சோதி தன்னை
.. அன்பருளம் அகலாத ஆணிப் பொன்னை
வயல்சூழும் மழபாடி வயிரத் தூணை
.. வாயார வாழ்த்தவினை மாயும் தானே.



புயல் வண்ணன் - மேகம் போன்ற நிறம் உடைய திருமால்;
ஏனம் - பன்றி;
தாமரையான் - பிரமன்;
ஆணிப்பொன் - மிக உயர்ந்த பொன்;



10)
தீமதியால் நாளெல்லாம் சிறுமை செய்யும்
.. சிதடரைநீ றணியவஞ்சும் மூடர் தம்மை
நாமதியோம்; கல்லால மரத்தின் கீழே
.. நால்வர்க்கு நல்லறம்சொல் ஞானன் தன்னைத்
தூமதியை அரவோடு சூடி னானைச்
.. சுந்தரனைக் கொள்ளிடத்தின் பாங்கர் ஓங்கு
மாமதில்சூழ் மழபாடி வயிரத் தூணை
.. வாயார வாழ்த்தவினை மாயும் தானே.



தீ மதியால் - துர்ப்புத்தியால்;
சிதடர் - அறிவிலிகள்; குருடர்;
நீறு அணிய அஞ்சும் மூடர் - திருநீற்றை அணிய அஞ்சுகிற பேதைகள்;
நாமதியோம் - நாம் மதியோம் - நாம் மதிக்கமாட்டோம்;
ஞானன் - ஞான வடிவினன்;
சுந்தரன் - அழகன்;
பாங்கர் - பக்கம்; அருகு;



11)
கண்பொலியும் நெற்றியனைக் கடலின் நஞ்சைக்
.. கண்டத்தில் கரந்துவைத்த கருணை யானைத்
தண்புனலும் வெண்பிறையும் முடியின் மீது
.. தவழ்கின்ற சங்கரனைத் தனியா னானைப்
பண்பயிலும் மொழியாளோர் பங்கன் தன்னைப்
.. பாரிடங்கள் சூழநடம் ஆடு வானை
வண்பொழில்சூழ் மழபாடி வயிரத் தூணை
.. வாயார வாழ்த்தவினை மாயும் தானே.



கரந்துவைத்த - ஒளித்த; (கரத்தல் - மறைத்தல்; ஒளித்தல்);
தனி - ஒப்பின்மை; ஒற்றை;
பண் பயிலும் மொழியாள் ஓர் பங்கன் - இனிய மொழி பேசும் பார்வதியை ஓர் பங்கில் உடையவன்;
பாரிடம் - பூதம்;



அன்போடு,
வி. சுப்பிரமணியன்



பிற்குறிப்பு :
1) யாப்புக் குறிப்பு:
திருத்தாண்டக அமைப்பு -
  • எண்சீர் விருத்தம்.
  • பொதுவாகக் 'காய் காய் மா தேமா' என்ற அரையடி வாய்பாடு.
  • ஒரோவழி (சில சமயம்) காய்ச்சீர் வருமிடத்தில் விளம் / மா வரும்.
  • அப்படிக் காய்ச்சீர் வருமிடத்தில் மாச்சீர் வரின் அடுத்த சீர் நிரையசையில் தொடங்கும்)
2) திருமழபாடி - கோயில் தகவல்கள் - தினமலர் தளத்தில்: http://temple.dinamalar.com/New.php?id=438

-------------- --------------

No comments:

Post a Comment