Thursday, September 3, 2015

02.20 – பொது - (வானம் கூப்பிடு தூரமே)

02.20 – பொது - (வானம் கூப்பிடு தூரமே)



2011-05-23
பொது
"வானம் கூப்பிடு தூரமே"
-----------------------------------------
(எழுசீர் விருத்தம் - "மா விளம் மா விளம் மா விளம் விளம்" என்ற வாய்பாடு)
(சுந்தரர் தேவாரம் - 7.33.1 - "பாறு தாங்கிய காட ரோபடு தலைய ரோமலைப் பாவையோர்")



1)
கலியி னாலுல கத்தி னாடொறும்
.. கவலைப் படுகிற நெஞ்சமே
மெலிய வேண்டுவ தில்லை நாவினால்
.. வெள்ளை ஏற்றினன் ஊரிடு
பலியை ஏற்கிற பரமன் பெயரினைப்
.. பாடிப் பரவியுய் யலாமதே
வலிய வினைதடுத் தெமைக்காக் குங்குடை
.. வானம் கூப்பிடு தூரமே.



பதம் பிரித்து:
கலியினால் உலகத்தில் நாள்தொறும்
.. கவலைப்படுகிற நெஞ்சமே;
மெலிய வேண்டுவது இல்லை; நாவினால்,
.. வெள்ளை ஏற்றினன், ஊர் இடு
பலியை ஏற்கிற பரமன் பெயரினைப்
.. பாடிப் பரவி உய்யலாம்; அதே
வலிய வினை தடுத்து எமைக் காக்கும் குடை;
.. வானம் கூப்பிடு தூரமே.


கலி - துன்பம்; வறுமை;
மெலிதல் - வருந்துதல்;
பலி - பிச்சை; (ஊர் இடு பலி - ஊர் மக்கள் இடும் பிச்சை);
பரவுதல் - துதித்தல்;
தடுத்தல் - விலக்குதல்;
எமை - எம்மை - நம்மை;
குடை - கவிகை (Umbrella); அரசாட்சி (Government);
வானம் - சிவலோகம்;
கூப்பிடு தூரம் - ஒருவன் கூப்பிட்டாற் பிறன் கேட்குந்தூரம் - Literally, the distance at which a shout can be heard;


* வெயிலின் சூட்டைக் குடை தடுப்பதுபோல் வினைச்சூட்டைச் சிவன் நாமம் என்ற குடை தடுக்கும். வாயாரச் சிவனை அழைக்கும் அடியார்க்குச் சிவலோகம் கூப்பிடுதூரமே.



2)
ஆட்டுங் கோள்களுக் கஞ்சி நாடொறும்
.. அல்லல் உறுகிற நெஞ்சமே
மாட்டின் மிசைவரும் மன்னன் வானவர்
.. வணங்க நஞ்சையுண் மிடற்றினன்
காட்டில் நடிப்பவன் பேரை நாவினால்
.. கழறிக் களிப்புற லாமதே
வாட்டும் வினைதடுத் தெமைக்காக் குங்குடை
.. வானம் கூப்பிடு தூரமே.



ஆட்டும் கோள்கள் - நம்மை வருத்தும் கிரகங்கள்; (ஆட்டுதல் - அலைத்தல் - To harass, afflict, vex);
நாடொறும் - நாள்தொறும் - தினமும்;
மாட்டின் மிசை - இடபத்தின்மேல்; (மாடு - எருது);
நஞ்சை உண் மிடற்றினன் - விஷத்தை உண்ட நீலகண்டன்;
காட்டில் நடிப்பவன் - சுடுகாட்டில் நடம் செய்பவன்;
கழறுதல் - சொல்லுதல்;



3)
நாணி லாதிழி வழியில் நாடொறும்
.. நடந்து துயருறு நெஞ்சமே
மாணி காவென நமனைக் காலினால்
.. மாள உதைத்தருள் புரிந்தவன்
தோணி புரத்தினன் புகழை நாவினாற்
.. சொல்லிச் சுகம்பெற லாமதே
மாணில் வினைதடுத் தெமைக்காக் குங்குடை
.. வானம் கூப்பிடு தூரமே.



நாண் இலாது - நாணம் இன்றி;
மாணி - அந்தணச் சிறுவன்;
தோணிபுரத்தினன் - தோணிபுரம் (சீகாழி) என்ற பதியில் உறைபவன்;
மாண் இல் வினை - மாட்சிமை இல்லாத வினை - தீவினை;



4)
நெருப்பில் வீழ்கிற விட்டில் போலவே
.. நித்தம் விரைகிற நெஞ்சமே
விருப்பு வெறுப்பிலான் வெந்த வெண்பொடி
.. மிளிரும் மேனியான் கூறெனப்
பொருப்பன் மகளினைக் கொண்டு மகிழ்பவன்
.. புனித அஞ்செழுத் துரையதே
வருத்தும் வினைதடுத் தெமைக்காக் குங்குடை
.. வானம் கூப்பிடு தூரமே.



நித்தம் - அனவரதமும்; நாள்தொறும்;
வெந்த வெண்பொடி - சுட்ட நீறு - திருநீறு;
பொருப்பன் மகள் - இமவான் மகள் - பார்வதி; (பொருப்பு - மலை);



5)
வஞ்சி நுண்ணிடை யார்தம் வலையினில்
.. மயங்கி விழுகிற நெஞ்சமே
கொஞ்சம் நான்மொழி வதுகேள் மிடற்றினில்
.. கொண்டல் நிறந்திகழ் முக்கணன்
மஞ்சன் திருப்பெயர் தன்னை நாவினால்
.. வழுத்தி மகிழ்வுற லாமதே
வஞ்ச வினைதடுத் தெமைக்காக் குங்குடை
.. வானம் கூப்பிடு தூரமே.



வஞ்சி நுண் இடையார் - வஞ்சிக் கொடிபோலும் நுண்ணிய இடையினை உடைய பெண்கள்;
கொண்டல் - மேகம்;
மஞ்சன் - மைந்தன் என்பதன் மரூஉ. போலி எனலும் ஆம் - வலிமையுடையவன்; வீரன்;
வழுத்துதல் - துதித்தல்;
வஞ்ச வினை - கொடுவினை;



6)
நாணா தனுதினம் நலமில் செயல்களை
.. நாடி நலிவுறு நெஞ்சமே
ஆணாய்ப் பெண்ணலி ஆகும் அற்புதன்
.. அன்பர் விரும்புருக் கொள்பவன்
நாணா நச்சர வம்பூண் நம்பனின்
.. நாம அஞ்செழுத் துரையதே
மாணா வினைதடுத் தெமைக்காக் குங்குடை
.. வானம் கூப்பிடு தூரமே.



நாணாது அனுதினம் நலம் இல் செயல்களை நாடி - நாணமின்றித் தினந்தோறும் நலமற்ற செயல்களையே விரும்பிச் செய்து;
அன்பர் விரும்பு உருக் கொள்பவன் - (அப்பர் தேவாரம் - 5.28.7 - "விரும்பும் வண்ணமும் வேதத்தின் வண்ணமும் .... ஆவர் ஐயாறரே.") - மெய்யன்பர் விரும்பும் வடிவங்கள்;
நாணா நச்சரவம் பூண் நம்பன் - அரைநாணாக நாகத்தை அணியும் சிவபெருமான்;
நாம அஞ்செழுத்து உரை - திருநாமம் ஆகிய திருவைந்தெழுத்தைச் சொல்வாயாக;
மாணா - மாட்சிமையில்லாத;



7)
அலைபோல் அடைகிற அல்லற் றொடரினால்
.. அலமந் துழல்கிற நெஞ்சமே
சிலையான் முப்புரஞ் செற்ற திறத்தினன்
.. தேவர் வேண்டநஞ் சுண்டவன்
தலைமேற் றிங்களைத் தாங்குஞ் சங்கரன்
.. தன்னொப் பிலான்றிருப் பெயரதே
மலைநேர் வினைதடுத் தெமைக்காக் குங்குடை
.. வானங் கூப்பிடு தூரமே.



பதம் பிரித்து:
அலைபோல் அடைகிற அல்லல் தொடரினால்
.. அலமந்து உழல்கிற நெஞ்சமே;
சிலையால் முப்புரம் செற்ற திறத்தினன்,
.. தேவர் வேண்ட நஞ்சு உண்டவன்,
தலைமேல் திங்களைத் தாங்கும் சங்கரன்,
.. தன் ஒப்பு இலான் திருப்பெயர் அதே
மலை நேர் வினை தடுத்து எமைக் காக்கும் குடை;
.. வானம் கூப்பிடு தூரமே.


அலமருதல் - அஞ்சுதல்; வருந்துதல்;
உழல்தல் - நிலைகெடுதல்;
சிலை - வில்;
செற்ற – அழித்த; (செறுதல் - அழித்தல்);
திறம் - வலிமை;
மலை நேர் - மலை போன்ற; (நேர் - உவம உருபு);



8)
கட்டக் கடலினில் கலங்கும் நெஞ்சமே
.. கயிலை மலையசை தசமுகத்
துட்டன் தனைவிரல் இட்ட டர்த்தவன்
.. சுடுநீ றணிகிற சுந்தரன்
சிட்டன் திருப்பெயர் தன்னை நாவினால்
.. செப்பி இன்புற லாமதே
மட்டில் வினைதடுத் தெமைக்காக் குங்குடை
.. வானம் கூப்பிடு தூரமே.



கட்டக் கடல் - துன்பக்கடல்; (கட்டம் - கஷ்டம்);
தசமுகத் துட்டன் - பத்துதலைகள் உடைய துஷ்டன் - துஷ்டனான இராவணன்; (தசமுகன் - இராவணன்);
விரல் இட்டு - விரலை ஊன்றி;
அடர்த்தல் - நசுக்குதல்;
சிட்டன் - சிஷ்டன் - உயர்ந்தவன்; (சிஷ்டம் - பெருமை);
மட்டு இல் வினை - அளவு இல்லாத வினை; (மட்டு - அளவு; எல்லை);



9)
மற்றார் துணையென மயங்கும் நெஞ்சமே
.. மலையான் மகளொரு பங்கினன்
நற்றா மரையுறை அயனும் கரியனும்
.. நண்ணற் கரியவன் முடிமிசை
முற்றா மதியினன் பெயரை நாவினால்
.. மொழிந்து மகிழ்வுற லாமதே
வற்றா வினைதடுத் தெமைக்காக் குங்குடை
.. வானம் கூப்பிடு தூரமே.



மற்று ஆர் - யார்; (மற்று - அசைச்சொல்);
நற்றாமரை - நல் தாமரை;
கரியன் - மாயன் - திருமால்;
நண்ணற்கு அரியவன் - அடைவதற்கு அரியவன்;
முடிமிசை முற்றா மதியினன் - திருமுடிமேல் இளம்பிறைச்சந்திரனை அணிந்தவன்;
வற்றா வினை - வற்றாத கடல்போன்ற வினை;



10)
மிண்டர் பேச்சினை மெய்யென் றெண்ணிட
.. வேண்டா விழித்தெழு நெஞ்சமே
அண்டர் நாயகன் தொண்டர் துணையவன்
.. அஞ்சொல் மாதொரு பங்கினன்
இண்டை போல்மதி சூடும் அரன்பெயர்
.. இயம்பி இன்புற லாமதே
மண்டு வினைதடுத் தெமைக்காக் குங்குடை
.. வானம் கூப்பிடு தூரமே.



மிண்டர் - கல் நெஞ்சர்; வம்பர்;
அண்டர் - தேவர்கள்;
அம் சொல் மாது - அழகிய இனிய சொல்லை உடைய உமையம்மை;
இண்டை - தலையில் சூடும் மலர்மாலை; (அப்பர் தேவாரம் - 4.85.8 - “வார்சடைமேல் இண்டை மதியமன் றோவெம் பிரானுக் கழகியதே” - பெருமானுடைய முடிமாலை போல விளங்கும் பிறைச்சந்திரன் அல்லவோ அவருக்கு அழகிதாகும்);
மண்டுதல் - திரள்தல்; நெருக்கித் தாக்குதல்;



11)
தரையிற் பிறவிகள் என்ற சங்கிலி
.. தளைக்கத் தவிப்புறு நெஞ்சமே
அரையில் நாணென அரவம் அசைப்பவன்
.. ஆகத் துமைக்கிடம் அளித்தவன்
புரையில் புகழினன் பெயரை நாவினால்
.. புகன்று பொலிவுற லாமதே
வரையில் வினைதடுத் தெமைக்காக் குங்குடை
.. வானம் கூப்பிடு தூரமே.



சங்கிலி தளைக்க – சங்கிலி நம்மைப் பிணிக்க; (தளைத்தல் - கட்டுதல் To tie, bind, fasten; entangle);
தவிப்பு - வருத்தம்;
அரை - இடுப்பு;
அசைத்தல் - கட்டுதல் (To tie, bind, fasten);
ஆகத்து உமைக்கு இடம் அளித்தவன் - திருமேனியில் பார்வதிக்கு இடப்பாகத்தைக் கொடுத்தவன்;
புரை - ஒப்பு; குற்றம்;
புரை இல் புகழினன் - குற்றமற்ற புகழை உடையவன்; ஒப்பற்ற புகழ் உடையவன்;
பொலிவு - அழகு; செழிப்பு;
வரை இல் வினை - அளவற்ற வினை;



அன்போடு,
வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------

1 comment: