சிவன் பாமாலை - பதிகம், திருப்புகழ், சிலேடை - by - வி. சுப்பிரமணியன்
Devotional Tamil Poetry on Siva - Padhigams by V. Subramanian
"சிவசிவ என்றிடத் தீவினை மாளும்"
Friday, September 27, 2019
04.73 - பிரமபுரம் (சீர்காழி)
04.72 - கடம்பந்துறை (கடம்பர்கோயில் - குளித்தலை)
04.72 - கடம்பந்துறை (கடம்பர்கோயில் - குளித்தலை)
2014-08-06
கடம்பந்துறை (இக்காலத்தில் - கடம்பர்கோயில் - குளித்தலை)
–---------------------------------------------------------------
(கலிவிருத்தம் - மாங்கனி மாங்கனி மாங்கனி மா - வாய்பாடு)
(சம்பந்தர் தேவாரம் - 1.10.1 - "உண்ணாமுலை உமையாளொடும்");
(சுந்தரர் தேவாரம் - 7.1.1 - "பித்தாபிறை சூடீ");
1)
மயலுற்றிரு நிலமேல்மிக வாடும்மட நெஞ்சே
புயலொத்திருள் கண்டத்தினன் பொடிபூசிய மார்பன்
கயிலைக்கிறை உறையும்பதி கடம்பந்துறை கருதாய்
வெயிலொத்தெரி வினையாயின விடுமேசுக(ம்) மிகுமே.
மயலுற்று இருநில(ம்)மேல் மிக வாடும் மடநெஞ்சே - மயங்கிப் பூமியில் மிகவும் வருந்தும் பேதைமனமே; (மயல் - மயக்கம்; அறியாமை); (இருநிலம் - பெரிய பூமி);
புயல் ஒத்து இருள்-கண்டத்தினன் - மேகம் போல் இருண்ட கண்டம் உடையவனும்; (புயல் - மேகம்);
பொடி பூசிய மார்பன் - திருநீற்றை மார்ப்ில் பூசியவனும்; (பொடி - திருநீறு);
கயிலைக்கு இறை உறையும் பதி கடம்பந்துறை கருதாய் - கயிலைநாதனுமான ஈசன் உறையும் தலமாக கடம்பந்துறையை நினைவாயாக; (அப்பர் தேவாரம் - 5.66.1 - "பொற்கயிலைக்கிறை"); (கருதுதல் - எண்ணுதல்; மதித்தல்; விரும்புதல்);
வெயில் ஒத்து எரி- வினை-ஆயின விடுமே - வெயில் போலச் சுட்டெரிக்கும் தீவினைகள் நீங்கும்;
சுக(ம்) மிகுமே - இன்பம் மிகும்;
2)
எண்மீறிய நசையால்தினம் இடருற்றிடும் நெஞ்சே
தண்மாநதி வெண்மாமதி சடைமேலணி தலைவன்
கண்மூன்றினன் உறையும்பதி கடம்பந்துறை கருதாய்
மண்மீதினி வாராநிலை வந்தெய்திடும் திடனே.
எண் மீறிய நசையால் தினம் இடர் உற்றிடும் நெஞ்சே - எண்ணற்ற, அளவு கடந்த ஆசைகளால் என்றும் துன்பம் அடையும் நெஞ்சமே; (எண் - வரையறை); (மீறுதல் - மேற்போதல்); (நசை - ஆசை);
தண்-மா-நதி, வெண்-மா-மதி சடைமேல் அணி தலைவன் - குளிர்ந்த பெரிய ஆறான கங்கையையும், வெண்மையான அழகிய சந்திரனையும் சடைமேல் அணிந்த தலைவனும்;
கண்-மூன்றினன் உறையும் பதி கடம்பந்துறை கருதாய் - முக்கண்ணனுமான ஈசன் உறையும் தலமாக கடம்பந்துறையை நினைவாயாக;
மண்மீது இனி வாரா-நிலை வந்து-எய்திடும் திடனே - பூமியில் மீண்டும் பிறத்தல் இல்லாத நற்கதி வந்தடையும்; இது நிச்சயமே; (திடன் - திடம் - உறுதி; நிச்சயம்); (சம்பந்தர் தேவாரம் - 1.125.2 - "சிவபுரம் அடையநம் இடர்கெடும் உயர்கதி பெறுவது திடனே");
3)
துணையற்றிடர்த் தொடரால்மிகத் துவளும்மட நெஞ்சே
இணையற்றவன் எங்குந்திரி எயில்மூன்றவை எரியக்
கணைதொட்டவன் உறையும்பதி கடம்பந்துறை கருதாய்
விணையெட்டிய மலைபோல்வினை விடுமேசுகம் மிகுமே.
இடர்த்தொடர் - துன்பத்தொடர்;
துவளுதல் - வாடுதல்; வருந்துதல்;
இணையற்றவன் - ஒப்பில்லாதவன்;
எயில் மூன்று - முப்புரங்கள்;
விணை எட்டிய - விண்ணை எட்டிய - வானளாவிய; (விணை - விண்ணை என்பதன் இடைக்குறை விகாரம்);
4)
இறையேனுமென் உரைகேள்மட நெஞ்சேஎதிர் இல்லான்
நறையார்மலர்க் கொன்றைச்சடை நம்பன்கடல் நஞ்சுண்
கறையார்மிட றுடையான்பதி கடம்பந்துறை கருதாய்
பறையாவினை பகலோன்வரப் பனிபோல்விடும் திடனே.
இறையேனும் - சற்றேனும்;
எதிர் இல்லான் - ஒப்பற்றவன்; (எதிர் - ஒப்பு );
நறை ஆர் மலர்க்கொன்றை - தேன் பொருந்திய கொன்றைமலர்;
நம்பன் - சிவன் திருநாமங்களுள் ஒன்று - விரும்பத்தக்கவன்;
கடல் நஞ்சு உண் கறை ஆர் மிடறு உடையான் - கடல்விடத்தை உண்ட கறை பொருந்திய கண்டத்தை உடையவன்; (சம்பந்தர் தேவாரம் - 3.49.10 - "நஞ்சுண் கண்டன் நமச்சிவாயவே");
பறையா வினை பகலோன் வரப் பனிபோல் விடும் - அழியா வினைகள் எல்லாம் சூரியனைக் கண்ட பனிபோல் ஒழியும். (பறைதல் - அழிதல்);
5)
நிலையாததை நேசித்திடும் நெஞ்சேநிழல் மழுவன்
மலையான்மகள் ஒருபங்கினன் மணிமார்பினில் நூலன்
கலைமான்கரன் உறையும்பதி கடம்பந்துறை கருதாய்
மலைபோலுள பழவல்வினை மாயும்திரு வருமே.
நிலையாததை நேசித்திடும் நெஞ்சே - நிலையற்றதையே மிகவும் ஓம்புகின்ற மனமே; (நிலையற்றது = உடல், பொருள், உலகவாழ்வு இத்யாதி);
நிழல் மழுவன் - ஒளி திகழும் மழுவை ஏந்தியவன்;
மணி மார்பினில் நூலன் - அழகிய மார்பில் முப்புரிநூல் அணிந்தவன்;
கலைமான் கரன் - கலைமானைக் கையில் ஏந்தியவன்;
திரு - செல்வம்; நன்மை;
6)
சுற்றத்தினர் காவும்படி துஞ்சாமுனம் நெஞ்சே
ஒற்றைச்சின விடையூர்தியன் உமைகோன்நதி உலவும்
கற்றைச்சடை உடையான்பதி கடம்பந்துறை கருதாய்
பற்றித்தொடர் பழவல்வினை பறையும்திரு வருமே.
சுற்றத்தினர் காவும்படி துஞ்சாமுனம் - உறவினர்கள் தோளிற் சுமந்துசெல்லும்படி உயிர்போவதன் முன்னமே; (காவுதல் - தோளிற் சுமத்தல்); (துஞ்சுதல் - இறத்தல்);
ஒற்றைச் சின விடை ஊர்தியன் - ஒப்பற்ற, சினக்கின்ற இடபத்தை வாகனமாக உடையவன்;
பறையும் - அழியும்;
7)
உண்டிங்குய ஒருநல்வழி உணரென்மட நெஞ்சே
பெண்டங்கிய பாகத்தினன் பிறைசூடிய பெருமான்
கண்டங்கிய நுதலான்பதி கடம்பந்துறை கருதாய்
மண்டங்கிட வைக்கும்வினை மாயும்திரு வருமே.
பதம் பிரித்து:
உண்டு இங்கு உ[ய்]ய ஒரு நல்வழி; உணர் என் மட நெஞ்சே;
பெண் தங்கிய பாகத்தினன், பிறை சூடிய பெருமான்,
கண் தங்கிய நுதலான் பதி கடம்பந்துறை கருதாய்;
மண் தங்கிட வைக்கும் வினை மாயும்; திரு வருமே.
மண் தங்கிட வைக்கும் வினை மாயும் - இப்பூமியில் ஓயாமல் பிறவிகளைத் தரும் வினை அழியும்;
8)
நனிநாள்பல நினைவால்மிக நலியும்மட நெஞ்சே
முனிநால்வருக் கறம்சொன்னவன் முடிபத்தினன் பாடக்
கனிவோடருள் செய்தான்பதி கடம்பந்துறை கருதாய்
இனிவாடுதல் செய்யும்வினை இல்லாநிலை தானே.
நனி நாள் - பல நாள்கள்;
முனி நால்வருக்கு அறம் சொன்னவன் - சனகாதியருக்கு மறைப்பொருளை உபதேசித்த தட்சிணாமூர்த்தி;
முடி பத்தினன் - பத்துத்தலைகள் உடைய இராவணன்;
9)
சும்மாநிதம் துரிசேநினை தொழில்மேவிய நெஞ்சே
அம்மாலயன் அறியாவணம் அழலாகிய ஐயன்
கைம்மாவுரி போர்த்தான்பதி கடம்பந்துறை கருதாய்
வெம்மாவினைப் பகையாயின விடுமேதிரு வருமே.
சும்மா - பயனின்றி; அடிக்கடி;
துரிசு - குற்றம்;
மேவிய - விரும்பிய;
அம் மால் அயன் - அந்தத் திருமாலும் பிரமனும்;
கைம்மா உரி - யானைத்தோல்;
வெம் மா வினைப்பகை ஆயின விடுமே - கொடிய பெரிய வினைப்பகை எல்லாம் நீங்கும்;
10)
நட்டப்பெரு மானைத்தொழ நண்ணாதவர் சொல்லும்
வெட்டிச்சொலை விட்டுத்தினம் மிகவேத்திடு வார்க்குக்
கட்டிக்கரும் பொத்தான்பதி கடம்பந்துறை கருதாய்
ஒட்டித்தொடர் உறுதீவினை ஓயும்திரு உறுமே.
நட்டப் பெருமான் - நடராஜன்; (நட்டம் - கூத்து);
நண்ணுதல் - அடைதல்;
வெட்டிச்சொலை - வெட்டிச்சொல்லை; (வெட்டிச்சொல் - வெட்டிப்பேச்சு - வீண் வார்த்தை); (சொலை - சொல்லை - இடைக்குறை விகாரம்);
கட்டிக்கரும்பு - கருப்பங்கட்டி / கருப்புக்கட்டி - வெல்லம்;
தினம் மிக ஏத்திடுவார்க்குக் கட்டிக்கரும்பு ஒத்தான் - தினமும் மிகவும் துதிக்கும் அன்பர்களுக்கு வெல்லம் போல் இனிமை பயப்பவன்;
உறு தீவினை - மிகுந்த பாவங்கள்;
திரு உறும் - செல்வம்/நன்மை வந்தடையும்;
(அப்பர் தேவாரம் - 4.31.4 - "விளக்குத் தூபம் விதியினால் இடவல்லார்க்குக் கரும்பினிற் கட்டி போல்வார் கடவூர் வீரட்டனாரே");
11)
அருமாமணி மார்க்கண்டரை அடைகூற்றினைச் செற்ற
பெருமானணி யாகப்பணி பிறைசூடிய இறைவன்
கருமாமணி கண்டன்பதி கடம்பந்துறை கருதாய்
மருவாமுனை வினையாயின மறையாப்புகழ் வருமே.
அரு மா மணி மார்க்கண்டரை அடை கூற்றினைச் செற்ற பெருமான் - அரிய சிறந்த மணி போன்ற மார்க்கண்டேயரை நெருங்கிய காலனை அழித்த பெருமான்; (செறுதல் - அழித்தல்);
அணியாகப் பணி பிறை சூடிய இறைவன் - ஆபரணமாகப் பாம்பையும் பிறைச்சந்திரனையும் அணிந்த கடவுள்;
கரு மா மணி கண்டன் பதி கடம்பந்துறை கருதாய் - கரிய அழகிய மணியைக் கண்டத்தில் உடைய சிவன் உறையும் தலமான திருக்கடம்பந்துறையைக் கருதுவாயாக;
மருவா முனை வினை ஆயின - முன்னை வினைகள் எல்லாம் நெருங்கமாட்டா; (மருவுதல் - நெருங்குதல்);
மறையாப் புகழ் வருமே - அழியாத புகழ் வரும்;
வி. சுப்பிரமணியன்
-------------------
Friday, September 6, 2019
03.05.053 – பொது - அளிப்பார் அளிப்பார் எனப்போய் - (வண்ணம்)
03.05.053 – பொது - அளிப்பார் அளிப்பார் எனப்போய் - (வண்ணம்)
2007-08-29
3.5.53) அளிப்பார் அளிப்பார் எனப்போய் - (பொது)
----------------------------------------------------
(வண்ணவிருத்தம்;
தனத்தா தனத்தா தனத்தா தனத்தா
தனத்தா தனத்தா .. தனதான )
(சரத்தே உதித்தாய் - திருப்புகழ் - கதிர்காமம்)
அளிப்பார் அளிப்பார் எனப்போய் அடுத்தார்
.. .. அவர்க்கே ஒளிப்பார் .. அவர்வாயில்
.. அதற்கே நடப்பாய் மனத்தே மிகத்தான்
.. .. அலைப்பாய் மரித்தே .. கழியாமல்
களிப்போ டிசைப்பா வினைத்தா ளிணைக்கே
.. .. கருத்தால் அமைத்தே .. பணிவேனே
.. கழிப்பா லையிற்கா ழியிற்பூ வணத்தே
.. .. கழற்றாள் நிலத்தோர் .. தொழமேயாய்
குளிப்பார் வினைக்கே டகற்றா றடைத்தோர்
.. .. குலப்பா வையைக்கூ .. றுடையானே!
.. குறப்பா வையைத்தோள் அணைத்தான் முனர்ச்சூர்
.. .. கொலற்கோர் நுனைக்கூர் .. அயிலீவாய்
விளித்தோ லமிட்டார் இடர்ப்பா டறத்தான்
.. .. மிடற்றே கறுத்தாய் .. மலர்தூவி
.. விருப்பால் அழைப்பார் அகத்தே இருப்பாய்
.. .. விருத்தா நமற்காய் .. பெருமானே.
பதம் பிரித்து:
அளிப்பார் அளிப்பார் எனப்போய் அடுத்தார்
.. .. அவர்க்கே ஒளிப்பார் .. அவர் வாயில்
.. அதற்கே நடப்பாய் மனத்தே மிகத்தான்
.. .. அலைப்பாய் மரித்தே .. கழியாமல்,
களிப்போடு இசைப்பாவினைத் தாளிணைக்கே
.. .. கருத்தால் அமைத்தே .. பணிவேனே;
.. கழிப்பாலையிற் காழியிற் பூவணத்தே
.. .. கழற்றாள் நிலத்தோர் .. தொழ மேயாய்;
குளிப்பார் வினைக்கேடு அகற்று ஆறு அடைத்து, ஓர்
.. .. குலப்பாவையைக் கூறு உடையானே;
.. குறப்பாவையைத் தோள் அணைத்தான் முனர்ச் சூர்
.. .. கொலற்கு ஓர் நுனைக்கூர் .. அயில் ஈவாய்;
விளித்து ஓலமிட்டார் இடர்ப்பாடு அறத்தான்
.. .. மிடற்றே கறுத்தாய்; .. மலர் தூவி
.. விருப்பால் அழைப்பார் அகத்தே இருப்பாய்;
.. .. விருத்தா; நமற் காய் .. பெருமானே.
அளிப்பார் அளிப்பார் எனப்போய் அடுத்தார் அவர்க்கே ஒளிப்பார் - கொடுப்பார் கொடுப்பார் என்று எண்ணித் தம்மை அடைந்தவர்களுக்கே ஒன்று கொடாமல் ஒளிக்கின்றவர்கள்; (அடுத்தல் - நெருங்குதல்; சார்தல்);
அவர் வாயில் அதற்கே நடப்பாய் மனத்தே மிகத்தான் அலைப்பாய் மரித்தே கழியாமல் - அத்தகையவர்களது வீட்டுவாயிலுக்கே பலமுறை நடப்பதாகி மனத்தில் மிகவும் வருத்தமடைந்து இறந்து ஒழியாமல்; (நடப்பு - போக்கு வரவு); (அலைப்பு - வருத்தம்); (மரித்தல் - சாதல்);
களிப்போடு இசைப்பாவினைத் தாளிணைக்கே கருத்தால் அமைத்தே பணிவேனே - மகிழ்ந்து இசைப்பாடல்களைத் திருவடிக்கே விரும்பி அமைத்து வணங்குவேன்; (சுந்தரர் தேவாரம் - 7.34.1 - "தம்மையே புகழ்ந்திச்சை பேசினும் சார்கினுந் தொண்டர் தருகிலாப் பொய்ம்மையாளரைப் பாடாதே யெந்தை புகலூர் பாடுமின் புலவீர்காள்");
கழிப்பாலையில் காழியில் பூவணத்தே கழற்றாள் நிலத்தோர் தொழ மேயாய் - திருக்கழிப்பாலை, சீகாழி, திருப்பூவணம் முதலிய பல தலங்களில் கழல் அணிந்த திருவடியை மண்ணோர் தொழ எழுந்தருளியவனே; (கழற்றாள் - கழல் + தாள் - கழலை அணிந்த திருவடி);
குளிப்பார் வினைக்கேடு அகற்று ஆறு அடைத்து, ஓர் குலப்பாவையைக் கூறு உடையானே - குளித்தவர்களுடைய பாவங்களைப் போக்கும் தீர்த்தமான கங்கையைச் சடையில் அடைத்து, உமையை ஒரு கூறாக உடையவனே; (காரைக்கால் அம்மையார் - அற்புதத் திருவந்தாதி - 11.4.50 - "முடிமேல் வலப்பால்அக் கோலமதி வைத்தான் தன்பங்கின் குலப்பாவை நீலக் குழல்");
குறப்பாவையைத் தோள் அணைத்தான் முனர்ச் சூர் கொலற்கு ஓர் நுனைக்கூர் அயில் ஈவாய் - வள்ளிக்குறத்திக்கு நாயகனான முருகனுக்குச் சூரனைக் கொல்வதற்காக முன்பு ஒப்பற்ற கூரிய நுனியையுடைய வேலைத் தந்தவனே; (சூர் - சூரபதுமன்); (நுனை - முனை); (அயில் - வேல்)
விளித்து ஓலமிட்டார் இடர்ப்பாடு அறத்தான் மிடற்றே கறுத்தாய் - உன் திருப்பெயரை அழைத்து ஓலமிட்ட தேவர்களுடைய துன்பம் தீரும்படி கண்டத்தில் கருமையை ஏற்றவனே; (விளித்தல் - கூப்பிடுதல்); (இடர்ப்பாடு - துன்புறுதல்); (மிடறு - கண்டம்); (கறுத்தல் - கருமையாதல்);
மலர் தூவி விருப்பால் அழைப்பார் அகத்தே இருப்பாய் - பூக்களைத் தூவி அன்போடு அழைக்கும் பக்தர்களது நெஞ்சில் குடிகொள்பவனே; (அகம் - மனம்);
விருத்தா - பழையவனே; முதியவனே;
நமற் காய் பெருமானே - காலனைச் சினந்து உதைத்த பெருமானே; (காய்தல் - கோபித்தல்; அழித்தல்); (நமற்காய் - நமன் + காய்; இரண்டாம் வேற்றுமைத்தொகையில் உயர்திணையில் பொருள்தெளிவு கருதி முதற்சொல்லின் ஈற்றிலுள்ள னகர ஒற்று றகர ஒற்றாகத் திரியும்);
வி. சுப்பிரமணியன்
-------------------------------- -------------------------------
Sunday, September 1, 2019
03.05.052 – பொது - மனனிடை அவாவு(ம்) மிக்கு - (வண்ணம்)
03.05.052 – பொது - மனனிடை அவாவு(ம்) மிக்கு - (வண்ணம்)
2007-08-28
3.5.52) மனனிடை அவாவு(ம்) மிக்கு - (பொது)
----------------------------------------------------
(வண்ணவிருத்தம்;
தனதனன தான தத்த
தனதனன தான தத்த
தனதனன தான தத்த .. தனதான )
(சரணகம லால யத்தை - திருப்புகழ் - திருவேரகம் - சுவாமிமலை)
மனனிடைய வாவு(ம்) மிக்கு .... மதியையழி மோகம் உற்று
.... மலவிருளு(ம்) மூட அற்ப .... ருடனாடி
.. மனிதனெனு(ம்) மேனி பெற்றும் .... வனமிருக மேநி கர்த்து
.... வலியவினை யேபெ ருக்கி .... உழலாமல்
உனதுதிரு நாம(ம்) நித்தல் .... உரைசெயநன் மாலை கட்டி
.... உபயகழ லேது திக்க .... அடியார்கள்
.. உறவுதனை யேந யக்க .... உறுபிறவி தோறு(ம்) முக்க
.... ணுடையவுனை யேநி னைக்க .... வரமீயாய்
முனமரிய தேரின் அச்சு .... முரியவொரு பாதம் இட்டு
.... முறுவலத னால ரக்கர் .... புர(ம்)நீறாய்
.. முடிய,அவண் மூவர் பத்தி .... முறுகியவர் வாழ வைத்த
.... முதல்வமணி யாவி டத்தை .... அணிவோனே
நினதடியை மாணி பற்ற .... நெடியதொரு வாழ்வ ளித்து
.... நிலமியமன் வீழ அற்றை .… உதைபாதா
.. நிமல;அயன் மாலி வர்க்கு .... நிழல்மலியு(ம்) மாநெ ருப்பு
.... நிலையினுரு வாய்ம றைத்த .... பெருமானே.
பதம் பிரித்து:
மனனிடை அவாவு(ம்) மிக்கு, .... மதியை அழி மோகம் உற்று,
.... மலவிருளு(ம்) மூட, அற்பருடன் ஆடி,
.. மனிதன் எனு(ம்) மேனி பெற்றும் .... வன-மிருகமே நிகர்த்து,
.... வலிய வினையே பெருக்கி .... உழலாமல்
உனது திருநாம(ம்) நித்தல் .... உரைசெய, நன்-மாலை கட்டி
.... உபய-கழலே துதிக்க, .... அடியார்கள்
.. உறவுதனையே நயக்க, .... உறு-பிறவி தோறு(ம்) முக்கண்
.... உடைய உனையே நினைக்க .... வரம் ஈயாய்;
முனம் அரிய தேரின் அச்சு .... முரிய ஒரு பாதம் இட்டு,
.... முறுவல்-அதனால் அரக்கர் .... புர(ம்) நீறாய்
.. முடிய, அவண் மூவர் பத்தி .... முறுகியவர் வாழ வைத்த
.... முதல்வ; மணியா விடத்தை .... அணிவோனே;
நினது அடியை மாணி பற்ற, .... நெடியதொரு வாழ்வு அளித்து,
.... நிலம் இயமன் வீழ அற்றை .… உதை-பாதா;
.. நிமல!அயன் மாலி வர்க்கு .... நிழல்மலியு மாநெ ருப்பு
.... நிலையினுரு வாய்ம றைத்த .... பெருமானே.
மனனிடை அவாவும் மிக்கு, மதியை அழி மோகம் உற்று, மல இருளும் மூட அற்பருடன் ஆடி - மனத்தில் ஆசைகள் மிகுந்து, மதிய அழிக்கும் மோகம் அடைந்து, மும்மல இருளும் மூட, இவற்றின் காரணமாகக் கீழோர்களுடன் கூடித் திரிந்து; (மனன் - மனம்; ம் வரும் இடத்தில் ன் போலியெழுத்து); (கருவூர்த் தேவர் - திருவிசைப்பா - 9.17.3 - "மனனிடை அணுகி நுணுகியுள் கலந்தோன்"); (அவா - ஆசை); (மலவிருள் - மும்மலம் என்ற இருள்);
மனிதன் எனும் மேனி பெற்றும் வனமிருகமே நிகர்த்து வலிய வினையே பெருக்கி உழலாமல் - மனிதப்பிறவியின் பயனை உணராமல் காட்டுவிலங்குபோல் வாழ்ந்து, வலிய வினைகளையே பெருக்கி உழலாமல்;
உனது திருநாமம் நித்தல் உரைசெய, - உன் திருப்பெயரைத் தினமும் ஓதவும்; (நித்தல் - நித்தலும் - தினமும்; எந்நாளும்);
நன் மாலை கட்டி உபயகழலே துதிக்க, - நல்ல மாலைகள் தொடுத்து இருதிருவடிகளைத் துதிக்கவும்; (உபயம் - இரண்டு);
அடியார்கள் உறவுதனையே நயக்க – அடியார்கள் நட்பையே விரும்பவும்;
உறு பிறவிதோறும் முக்கண் உடைய உனையே நினைக்க வரம் ஈயாய் - வரும் பிறவிதோறும் முக்கண்ணனான உன்னையே நினைக்கவும் வரம் அருள்வாயாக; (உறுதல் - சம்பவித்தல்; நிகழ்தல்); (முக்கணுடைய – முக்கண்ணுடைய என்பது ஓசை கருதி ண் தொக்கு வந்தது);
முனம் அரிய தேரின் அச்சு முரிய ஒரு பாதம் இட்டு, முறுவல் அதனால் அரக்கர் புரம் நீறாய் முடிய - முன்பு தேவர்கள் செய்த அரிய தேரின் அச்சு முரியும்படி ஒரு தாளை வைத்து ஏறிச், சிரிப்பினால் அசுரர்களது முப்புரங்களும் சாம்பலாகி அழிய; (முனம் - முன்னம் - முன்பு); (முரிதல் - ஒடிதல்); (முடிதல் - அழிதல்); (சம்பந்தர் தேவாரம் - 1.24.6 - "செங்க ணரக்கர் புரத்தை எரித்தாரே");
அவண் மூவர் பத்தி முறுகியவர் வாழ வைத்த முதல்வ - அச்சமயம் அங்கிருந்த சிவபக்தர்கள் மூவரது ஆழ்ந்த பக்தியை மெச்சி அவர்களைக் காத்து வரமளித்த முதல்வனே; (அவண் - அவ்விடம்); (முறுகுதல் - முதிர்தல்; மிகுதல்); (சம்பந்தர் தேவாரம் - 1.69.1 - "மூவார் புரங்கள் எரித்த அன்று மூவர்க் கருள்செய்தார்");
மணியா விடத்தை அணிவோனே - நீலமணியாக ஆலகால நஞ்சை அணிபவனே; (மணியா - மணியாக – கடைக்குறை விகாரம்);
நினது அடியை மாணி பற்ற நெடியதொரு வாழ்வு அளித்து, நிலம் இயமன் வீழ அற்றை உதை-பாதா - உன் திருவடியைப் பற்றிக்கொண்ட மார்க்கண்டேயருக்குச் சாவாத பெருவாழ்வை அளித்து, இயமன் நிலத்தில் வீழுமாறு அன்று கூற்றுவனைத் திருவடியால் உதைத்தவனே; (மாணி - பிரமசாரி); (வீழ்தல் - விழுதல்); (அற்றை - அன்று; அந்நாளில்);
நிமல - தூயவனே;
அயன் மால் இவர்க்கு நிழல் மலியும் மா நெருப்பு நிலையின் உருவாய் மறைத்த பெருமானே -பிரமன் திருமால் இவர்களுக்கு ஒளி மிகுந்த பெரிய நெருப்புத்தூணின் உருக்கொண்டு நின்று அவர்களுக்கு உன்னை மறைத்துக்கொண்ட பெருமானே; (நிழல் - ஒளி); (நிலை - தூண்);
வி. சுப்பிரமணியன்
-------------------------------- -------------------------------