04.36 - பூவனூர் - நாவார் தமிழ்பாடி
2013-12-25
பூவனூர்
---------------------------------
(அறுசீர் விருத்தம் - மா காய் மா காய் மா தேமா - வாய்பாடு)
(சம்பந்தர் தேவாரம் - 2.72.1 - "பந்தார் விரன்மடவாள்")
1)
நாவார் தமிழ்பாடி நம்பா அருளென்று நாடு வார்க்கு
நாவாய் எனவாகி நன்றே புரியீசன் நாரி பங்கன்
சாவாப் பெருமையினான் தண்ணார் மதிசூடி தங்கும் ஊராம்
பூவார் மதுவுண்டு வண்டார் பொழில்சூழ்ந்த பூவ னூரே.
நா ஆர் தமிழ் பாடி நம்பா அருள் என்று நாடுவார்க்கு - நாவில் பொருந்திய தேவாரம் திருவாசகம் பாடி, "நம்பனே, அருளாய்" என்று வணங்கும் அன்பர்களுக்கு;
நாவாய் என ஆகி நன்றே புரி ஈசன் - இப்பிறவிக்கடலைக் கடப்பிக்கும் படகாகி நன்மைசெய்யும் ஈசன்; (நாவாய் - மரக்கலம்);
நாரி பங்கன், சாவாப் பெருமையினான், தண் ஆர் மதி சூடி தங்கும் ஊர் ஆம் - உமைபங்கனும், இறப்பு இல்லாதவனும், குளிர்ந்த சந்திரனைச் சூடியவனுமான சிவபெருமான் உறைகின்ற தலம் ஆவது;
பூ வார் மது உண்டு வண்டு ஆர் பொழில் சூழ்ந்த பூவனூரே - பூக்கள் சொரியும் தேனை உண்டு வண்டுகள் ஒலிக்கும் சோலை சூழ்ந்த பூவனூர்; (பூவார்மது - 1. பூ வார் மது; 2. பூ ஆர் மது); (ஆர்தல் - நிறைதல்); (ஆர்த்தல் - ஒலித்தல்); (சம்பந்தர் தேவாரம் - 3.49.2 - "வம்பு நாண்மலர் வார்மது வொப்பது");
2)
காதார் குழையானே கையில் மழுவானே கரிய கண்டா
ஓதா தருமறைகள் எல்லாம் உணர்வோனே உம்பர் போற்றும்
பாதா எனவேத்திப் பணிவார் வினைதீர்க்கும் பரமன் ஊராம்
போதார் மதுவுண்டு வண்டார் பொழில்சூழ்ந்த பூவ னூரே.
காது ஆர் குழையானே கையில் மழுவானே கரிய கண்டா - காதில் குழையை அணிந்தவனே, கையில் மழுவை ஏந்தியவனே, நீலகண்டனே;
ஓதாது அருமறைகள் எல்லாம் உணர்வோனே - (அப்பர் தேவாரம் - 6.55.11 - "ஓதாதே வேதம் உணர்ந்தாய் போற்றி");
உம்பர் போற்றும் பாதா என ஏத்திப் பணிவார் வினை தீர்க்கும் பரமன் ஊர் ஆம் - "தேவர்கள் போற்றும் திருப்பாதனே" என்று துதித்து வழிபடும் அன்பர்களது வினையைத் தீர்க்கும் பரமன் உறையும் தலம் ஆவது;
போது ஆர் மது உண்டு வண்டு ஆர் பொழில் சூழ்ந்த பூவனூரே- பூவில் பொருந்திய தேனை உண்டு வண்டுகள் ஒலிக்கின்ற சோலை சூழ்ந்த பூவனூர்;
3)
காக்கும் கழல்பாடிக் கையால் மலர்தூவிக் கருது வார்க்குத்
தாக்கும் வினைதீர்க்கும் தாதை அழலாரும் சடையில் நீரைத்
தேக்கும் பெருமான்உண் பலியோர் சிரமேற்கும் செல்வன் ஊராம்
பூக்கள் கமழ்சோலை புடைசூழ்ந் தழகாரும் பூவ னூரே.
தாதை - தந்தை;
அழல் ஆரும் சடை - தீப் போன்ற சடை; (ஆர்தல் - ஒத்தல்); (அப்பர் தேவாரம் - 4.57.6 - "நீரழற் சடையுளானே" - அழற் சடை - உவமத்தொகை. அழல்போலும் ஒளிர் செஞ்சடை);
உண்பலி ஓர் சிரம் ஏற்கும் செல்வன் - பிச்சையைப் பிரமன் தலையோட்டில் ஏற்கின்ற செல்வன்;
4)
தனையே நினைவார்க்குத் தஞ்சம் அளித்தருளும் சாம வேதன்
அனலோர் கரமேந்தி அல்லில் நடமாடும் ஐயன் ஓர்பால்
மினலேர் இடைமாதைப் பங்கா விரும்பியவன் மேவும் ஊராம்
புனலார் முகில்வந்து புகுவான் பொழில்சூழ்ந்த பூவ னூரே.
தனையே நினைவார்க்குத் தஞ்சம் அளித்தருளும் - தன்னையே எண்ணி வழிபடும் அடியார்க்கு அபயம் அருளும்;
சாமவேதன் - சிவன் திருநாமங்களுள் ஒன்று; (சம்பந்தர் தேவாரம் - 3.56.2 - "சடையினன் சாமவேதன்");
அனல் ஓர் கரம் ஏந்தி அல்லில் நடம் ஆடும் ஐயன் - ஒரு கையில் தீயை ஏந்தி இரவில் கூத்தாடும் தலைவன்;
ஓர்பால் மினல் ஏர் இடை மாதைப் பங்கா விரும்பியவன் - மின்னல் போன்ற இடையை உடைய உமையை ஒரு பக்கம் பங்காக விரும்பி ஏற்றவன்; (மினல் - மின்னல் - இடைக்குறை விகாரம்); (ஏர்தல் - ஒத்தல்); (சம்பந்தர் தேவாரம் - 3.7.9 - "மின்னிடை மாதொடும் வீற்றிருந்த");
புனல் ஆர் முகில் வந்து புகு வான் பொழில் - நீர் நிறைந்த மேகம் வந்து நுழையும் அழகிய சோலை;
5)
ஓதக் கடல்நஞ்சம் உண்டான் புகழ்பாடி ஓம்பு வார்க்கு
வாதைத் தொடரறுப்பான் மலையான் மகளோர்பால் வைத்து கந்தான்
சீதப் புனலோடு திங்கள் சடையேறும் சீரன் ஊராம்
போதைப் புகழ்வண்டார் பொழில்கள் புடைசூழ்ந்த பூவ னூரே.
ஓதக் கடல் - மிக்க நீரையுடைய கடல்; (ஓதம் - நீர்; அலை);
வாதைத்-தொடர் அறுப்பான் - துன்பத்தொடரைத் தீர்ப்பவன்; (வாதை - துன்பம்; வேதனை); (அறுத்தல் - நீக்குதல்; தீர்த்தல்);
சீதப் புனல் - குளிர்ந்த நீர் - கங்கை;
சீரன் - புகழ் உடையவன்;
போதைப் புகழ் வண்டு ஆர் பொழில்கள் - பூக்களைப் புகழ்கின்ற வண்டுகள் ஒலிக்கும் சோலைகள்; (போது - பூ); (ஆர்த்தல் - ஒலித்தல்); (வண்டுகள் முரல்வதை அவை பூக்களைப் புகழ்ந்து பாடுவதாகச் சொன்னது - தற்குறிப்பேற்றம்);
6)
கடியார் மலர்தூவிக் கமழும் தமிழ்பாடும் காத லார்க்கு
மடியா வினைதீர்த்து வானம் தருகின்ற வள்ளல் எம்மான்
துடியார் கரத்தீசன் தூமா மதிசூடி சூலன் ஊராம்
பொடியார் உடலோடு பூவைப் புகழ்வண்டார் பூவ னூரே.
கடி ஆர் மலர் - வாசனை பொருந்திய பூ; (கடி - வாசனை);
காதலார் - அன்பு உடையவர்கள் - அடியவர்கள்; (சம்பந்தர் தேவாரம் - 3.26.5 - "கானப்பேர் ஊர்தொழுங் காதலார் தீதிலர்");
மடியா - அழியாத;
துடி ஆர் கரத்து ஈசன் - கையில் உடுக்கையை ஏந்திய ஈசன்;
பொடி ஆர் உடலோடு பூவைப் புகழ் வண்டு ஆர் பூவனூரே - மகரந்தப்பொடி பொருந்திய உடலோடு பூவைப் புகழும் வண்டுகள் பாடுகின்ற பூவனூர்; (பெரிய புராணத்தில் - திருமலைச் சருக்கம் 5. தடுத்தாட்கொண்ட புராணம் - பாடல் 242 - "கமல வண்டலர் கைதைத் துன்று நீறுபுனை மேனிய வாகித் தூய நீறுபுனை தொண்டர்க ளென்னச் சென்று சென்று முரல்கின்றன" என்ற பாடலையும் காண்க);
7)
நாகா பரணத்தான் நஞ்சார் மணிகண்டன் நயக்கும் ஊராம்
பாகார் மொழிமாதைப் பாகம் உடையானே பாய்வெள் ளேற்றுப்
பாகா படர்சடைமேல் பனிவெண் பிறையானே பரம என்று
போகா வினைதீரப் போற்றித் தொழுவார்சேர் பூவ னூரே.
நஞ்சு ஆர் மணிகண்டன் - விடத்தை உண்ட நீலகண்டன்;
பாகு ஆர் மொழி மாது - பாகு போன்ற இன்மொழி பேசும் உமாதேவி; (சம்பந்தர் தேவாரம் - 3.2.10 - "கரும்பன்ன மென்மொழியாள்");
பாய் வெள்-ஏற்றுப் பாகா - பாய்ந்து செல்லும் வெள்ளை இடபத்தைச் செலுத்துபவனே; (திருவாசகம் - சிவபுராணம் - அடி-34: "மெய்யா விமலா விடைப்பாகா");
போகா வினை தீர - நீங்காத வினைகளெல்லாம் தீரும்படி;
8)
செல்லா திழிதேரால் சினமே மிகவோடிச் சிலையி டந்த
அல்லார் நிறத்தரக்கன் அழவோர் விரலூன்றி அடர்த்த அண்ணல்
வில்லால் வியனரணம் மூன்றும் விழவெய்தான் மேவும் ஊராம்
பொல்லா வினைதீரப் போற்றித் தொழுவார்சேர் பூவ னூரே.
செல்லாது இழி தேரால் சினமே மிக, ஓடிச் சிலை இடந்த - வானில் செல்லும் தேர் கயிலைமலைமேல் செல்லாமல் தரையில் இறங்கியதால் மிகுந்த கோபம் கொண்டு ஓடிப்போய் மலையைப் பேர்த்த; (சிலை - மலை);
அல் ஆர் நிறத்து அரக்கன் அழ, ஓர் விரல் ஊன்றி அடர்த்த அண்ணல் - கரிய மேனி உடைய அரக்கனான இராவணன் அழும்படி, ஓர் விரலை ஊன்றி அவனை நசுக்கிய அண்ணல்; (அல் - இரவு; இருள்); (ஆர்தல் - ஒத்தல்);
வில்லால் வியன் அரணம் மூன்றும் விழ எய்தான் மேவும் ஊர் ஆம் - பெரிய முப்புரங்களும் அழியும்படி வில்லினால் எய்தவன் விரும்பி உறையும் ஊர் ஆகும்; (அப்பர் தேவாரம் - 6.5.1 - "வில்லால் வியனரணம் எய்தாய் போற்றி");
பொல்லா வினை தீரப் போற்றித் தொழுவார் சேர் பூவனூரே - பாவங்கள் தீர வேண்டிப் பணியும் அடியவர்கள் சென்றடையும் திருப்பூவனூர்.
9)
எழிலார் மலரோன்மால் எங்கும் மிகநேடி எய்த மாட்டா
அழலாய் உயரீசன் அடியார் அகவாசன் ஆதி மூர்த்தி
நிழலார் மழுவாளன் நீறார் மணிமார்பன் நின்ற ஊராம்
பொழிலார் மலரில்தேன் மகிழ்வண் டறையோவாப் பூவ னூரே.
எழில் ஆர் மலரோன் மால் - அழகிய தாமரைமேல் உறையும் பிரமனும் திருமாலும்;
எங்கும் மிக நேடி எய்த மாட்டா அழலாய் உயர் ஈசன் - வானிலும் மண்ணிலும் மிகத் தேடியும் அடைய ஒண்ணாத ஜோதியாகி உயர்ந்த ஈசன்;
அடியார் அக-வாசன் - அன்பர் உள்ளத்தில் தங்கியிருப்பவன்; (அகம் - உள்ளம்; வாசன் - வசிப்பவன்);
நிழல் ஆர் மழுவாளன் - ஒளி திகழும் மழுவாள் உடையவன்;
நீறு ஆர் மணி மார்பன் - திருநீற்றைப் பூசிய அழகிய மார்பை உடையவன்;
பொழில் ஆர் மலரில் தேன் மகிழ் வண்டு அறை ஓவாப் பூவனூரே - சோலையில் பூக்களில் மதுவை உண்டு மகிழ்கின்ற வண்டுகளின் ரீங்காரம் ஓயாத திருப்பூவனூர்;
10)
காணாக் குருடர்களாய்க் கள்ளம் பலபேசும் கையர் சொல்லைப்
பேணா தொழிவீரே பேரா வினைதீர்க்கும் பெரிய தேவன்
நாணா அரையினிலோர் நாகம் தனைவீக்கும் நம்பன் ஊராம்
பூணாப் பொடியணிந்த வண்டார் பொழில்சூழ்ந்த பூவ னூரே.
கையர் - கீழோர்;
பேணாது ஒழிவீர் - மதியாமல் நீங்குங்கள்;
பேரா வினை தீர்க்கும் பெரிய தேவன் - நீங்காத பாவத்தையெல்லாம் நீக்கும் மகாதேவன்;
நாணா அரையினில் ஓர் நாகம்தனை வீக்கும் நம்பன் - அரைநாணாக ஒரு நாகப்பாம்பைக் கட்டியிருக்கும் சிவபெருமான்; (வீக்குதல் - கட்டுதல்); (நம்பன் - சிவன் திருநாமங்களுள் ஒன்று);
பூணாப் பொடி அணிந்த வண்டு ஆர் பொழில் - மேனிமேல் அலங்காரமாக மகரந்தத் தாதுக்களை அணிந்த வண்டுகள் ரீங்காரம் செய்யும் சோலை; (பூண் - அணி);
(யாப்புக் குறிப்பு: "குருடர்களாய்" - ஒற்று நீக்கி அலகிடுக - கருவிளங்காய்ச் சீர்);
11)
கவியால் கழல்போற்றிக் காதல் மிகவூறிக் கசிப வர்க்குத்
தவியா நிலையீவான் தலைமேற் பிறைதன்னைத் தாங்கும் ஈசன்
செவியோர் குழைகாட்டும் மெய்யன் பவளம்போற் செய்யன் ஊராம்
புவியோர் பசிதீர்க்கும் பொன்னார் வயல்சூழந்த பூவ னூரே.
கவி - பாடல்;
காதல் - அன்பு;
தவியா நிலை ஈவான் - வருத்தம் இல்லாத இன்பநிலையை அளிப்பவன்;
செவி ஓர் குழை காட்டும் மெய்யன் - ஒரு காதில் குழையை அணிந்த திருமேனியன் (உமையொருபங்கன்); மெய்ப்பொருள் ஆனவன்; (மெய் - திருமேனி; மெய்ப்பொருள்);
செய்யன் - சிவந்த நிறம் உடையவன்;
புவியோர் பசி தீர்க்கும் பொன் ஆர் வயல் சூழந்த பூவனூரே - மக்களின் பசியைத் தீர்க்கும் பொன் போன்ற நெல்மணிகள் நிறைந்த வயல்கள் சூழ்ந்த பூவனூர்; (சம்பந்தர் தேவாரம் - 1.30.2 - "பொன்னார் வயற்பூம் புகலிந் நகர்தானே");
பிற்குறிப்புகள் :
1) யாப்புக் குறிப்பு : அறுசீர் விருத்தம் - மா காய் மா காய் மா தேமா - என்ற வாய்பாடு.
இப்பதிகத்தில் அடிகள்தோறும் 2-ஆம், 4-ஆம் சீர்கள் புளிமாங்காய் / கருவிளங்காய்.
இது "காய் காய் காய் காய் மா தேமா" என்ற அறுசீர் அமைப்பை ஒட்டியது. ஆனால், அதனில் காய்ச்சீர் வரும் இடங்களுள், 1-ஆம், 3-ஆம் சீர்களில் பெரும்பாலும் மாச்சீர்கள் அமைய வருவது. அவ்வாய்பாட்டில் காய்ச்சீர் வரும் இடத்தில் மாச்சீர் வரின் அடுத்த சீர் நிரையசையில் தொடங்கும். அப்படி அமைந்தது இப்பதிகம்.
2) உதாரணம்-1: சம்பந்தர் தேவாரம் - 2.72.1 -
பந்தார் விரல்மடவாள் பாகமா நாகம்பூண் டேறதேறி
அந்தார் அரவணிந்த அம்மான் இடம்போலும் அந்தண் சாரல்
வந்தார் மடமந்தி கூத்தாட வார்பொழிலில் வண்டுபாடச்
செந்தேன் தெளியொளிரத் தேமாங் கனியுதிர்க்கும் திருநணாவே.
3) உதாரணம்-2: திருஞான சம்பந்தர் தேவாரம் - 1.130.1 - "புலனைந்தும் பொறிகலங்கி நெறிமயங்கி அறிவழிந்திட் டைம்மே லுந்தி".
வி. சுப்பிரமணியன்
-------------- --------------
No comments:
Post a Comment