04.33 - பந்தணைநல்லூர் (பந்தநல்லூர்) - ஓடும் நதியும்
2013-12-21
பந்தணைநல்லூர் (பந்தநல்லூர்)
----------------------------------
(அறுசீர் விருத்தம் - மா மா மா மா விளம் காய் - வாய்பாடு)
(சம்பந்தர் தேவாரம் - 1.63.1 - "எரியார் மழுவொன் றேந்தி")
1)
ஓடும் நதியும் ஊரும் அரவும் ஒண்மதித் துண்டுமொன்றாக்
கூடும் முடியன் கோலச் சடையன் கூளிகள் சூழ்ந்திசைக்க
ஆடும் ஒருவன் அங்கை அழலன் ஆதிரை யானிடமாம்
பாடும் குயில்கள் பயிலும் பொழில்சூழ் பந்தணை நல்லூரே.
ஓடும் நதியும் - ஓடுகின்ற கங்கையும்; (மண்டையோடும் கங்கையும் - என்றும் பொருள்கொள்ளல் ஆம்);
ஒண்மதித் துண்டு - ஒளி பொருந்திய பிறை;
ஒன்றாக் கூடும் - ஒன்றாகக் கூடும்;
கூளி - பூதம்;
இசைத்தல் - வாத்தியம் வாசித்தல்; பாடுதல்; (சம்பந்தர் தேவாரம் - 1.57.1 - "பூதம் பாடப் புறங்காட் டிடையாடி"); (அப்பர் தேவாரம் - 4.66.5 - "பாரிடம் பலவுங் கூடிக் குடமுடை முழவம் ஆர்ப்பக் கூளிகள் பாட நாளும் நடநவில் அடிகள் போலும்");
அங்கை அழலன் - கையில் தீயை ஏந்தியவன்;
ஆதிரையான் - திருவாதிரை நட்சத்திரத்தைத் தனக்கு உரியதாகக் கொண்டவன்;
பயில்தல் - தங்குதல்; ஒலித்தல்;
2)
அண்ணா அருளென் றமரர் எல்லாம் அடியிணை போற்றிடவும்
உண்ணா நஞ்சை உண்ட கண்டன் உண்பலி தேர்ந்துழல்வான்
பெண்ணாண் ஆய பெம்மான் எம்மான் பிறைமதி சூடியிடம்
பண்ணார் வண்டு பயிலும் பொழில்சூழ் பந்தணை நல்லூரே.
உண்ணா நஞ்சை - யாவராலும் உண்ணத்தகாத விடத்தை;
பலி - பிச்சை;
பண் ஆர் வண்டு - பண் இசைக்கும் வண்டு;
3)
கசியும் மனமும் கண்ணும் கொண்டு கழல்தொழு வார்துணைவன்
நிசியில் ஆடி நீறு பூசி நீரலை செஞ்சடைமேல்
சசியும் சூடி சாம வேதி தங்கிடம் ஆவதுதான்
பசியைத் தீர்க்கும் பசிய வயல்சூழ் பந்தணை நல்லூரே.
கசியும் மனமும் கண்ணும் கொண்டு கழல் தொழுவார் துணைவன் - மனமும் கண்ணும் கசியத் திருவடியைத் தொழும் பக்தர்களுக்குத் துணைவன்;
நிசியில் ஆடி நீறு பூசி - இருளில் ஆடுபவன்; திருநீற்றைப் பூசியவன்;
நீர் அலை செஞ்சடைமேல் சசியும் சூடி - கங்கை அலைமோதித் திரியும் செஞ்சடைமேல் சந்திரனையும் சூடியவன்; (அலைதல் - திரிதல்; அலைத்தல் - அலைமோதுதல்);
சாமவேதி தங்கு-இடம் ஆவதுதான் - சாமவேதனான சிவபெருமான் உறையும் இடம் ஆவது;
பசியைத் தீர்க்கும் பசிய வயல்சூழ் பந்தணைநல்லூரே - உலகின் பசியைப் போக்குகின்ற பசுமையான வயல்கள் சூழ்ந்த பந்தணைநல்லூர்.
4)
"அழலின் வண்ண; நெற்றிக் கண்ண; ஆயிழை கூறுடையாய்;
மழையின் வண்ணக் கண்ட" என்று வாழ்த்திடு வார்வினைகள்
கழல அருளும் கருணை யாளன் கருதிடம் ஆவதுதான்
பழமுண் கிளிகள் பயிலும் பொழில்சூழ் பந்தணை நல்லூரே.
"தீவண்ணனே! நெற்றிக்கண்ணனே! உமைபங்கனே! நீலகண்டனே!" என்று வாழ்த்தும் அன்பர்கள்தம் வினைகள் எல்லாம் நீங்க அருளும் கருணாமூர்த்தி விரும்பும் இடம் ஆவது, பழம் உண்ணும் கிளிகள் தங்கும் சோலைகள் சூழ்ந்த பந்தணைநல்லூர்.
5)
நச்சி நாளும் போற்றி செய்த நற்றவ மாணியவர்
அச்சம் தீர்த்துக் கூற்று தன்னை ஆர்கழ லால்உதைத்தான்
கச்ச தாக நச்ச ராவைக் கட்டிய வன்கருதூர்
பச்சைக் கிளிகள் பயிலும் பொழில்சூழ் பந்தணை நல்லூரே.
நச்சி நாளும் போற்றி செய்த நற்றவ மாணியவர் அச்சம் தீர்த்துக் - விரும்பித் தினமும் வழிபாடு செய்த நல்ல தவம் உடைய மார்க்கண்டேயரது அச்சத்தைத் தீர்த்து; (நச்சுதல் - விரும்புதல்);
கூற்று தன்னை ஆர்-கழலால் உதைத்தான் - ஒலிக்கின்ற கழலை அணிந்த திருவடியல் காலனை உதைத்தவன்;
கச்சு - அரைக்கச்சு; நச்சரா - நச்சுஅரா - நஞ்சு பொருந்திய பாம்பு; கருதுதல் - விரும்புதல்; பச்சைக்கிளி - பைங்கிளி;
6)
ஆக்கல் காத்தல் அழித்தல் மறைத்தல் அருளலென் றைந்தொழிலான்
பூக்கள் ஏவிப் போர்செய் வேளைப் பொடிபட நோக்கியருள்
தீக்கண் நுதலில் திகழும் எந்தை சிவபெரு மானிடமாம்
பாக்கள் பாடிப் பத்தர் பணியும் பந்தணை நல்லூரே.
என்றைந்தொழிலான் - என்ற ஐந்தொழிலான்; (என்ற என்பதில் ஈற்று அகரம் தொகுத்தல் விகாரம்);
ஐந்தொழிலான் - பஞ்சகிருத்தியம் செய்பவன்; (பஞ்சகிருத்தியம் - சிருஷ்டி, ஸ்திதி, ஸம்ஹாரம், திரோபவம், அனுக்கிரஹம் என்ற கடவுளின் ஐந்தொழில்);
பூக்கள் ஏவிப் போர்செய் வேளைப் பொடிபட நோக்கியருள் தீக்கண் நுதலில் திகழும் எந்தை - மலர்க்கணை ஏவும் மன்மதனைச் சாம்பலாக்கிய தீ உமிழும் நெற்றிக்கண்ணுடைய எம் தந்தை;
பா - பாடல்;
7)
வேத நாவன் வெண்ணூல் மார்பன் வேயன தோளிபங்கன்
ஓத நஞ்சை உண்ட கண்டன் ஒண்மழு மான்கரத்தன்
பூதஞ் சூழப் புறங்கா டாடும் பொற்சடை யானிடமாம்
பாதம் போற்று பத்தர் நாடும் பந்தணை நல்லூரே.
வேய் அன தோளி பங்கன் - மூங்கில் போன்ற புஜத்தை உடைய உமையை ஒரு பங்காக உடையவன்; (வேய் - மூங்கில்); (* இத்தல அம்பிகை திருநாமம் - வேணுபுஜாம்பிகை, காம்பனதோளியம்மை); (வேணு - காம்பு - மூங்கில்);
ஓத-நஞ்சு - கடல்விடம்;
ஒண்-மழு மான் கரத்தன் - ஒளி திகழும் மழுவையும் மானையும் கையில் ஏந்தியவன்;
புறங்காடு - சுடுகாடு;
8)
புத்தி இன்றிக் கத்தி ஓடிப் பொன்மலை பேர்த்தவன்றன்
பத்து வாய்கள் கீதம் பாடிப் பரவிட ஊன்றியவர்
நித்தர் நீற்றர் நரைவெள் ளேற்றர் நீள்சடை ஆற்றரிடம்
பத்தர் வந்து பாதம் ஏத்தும் பந்தணை நல்லூரே.
பொன்மலை - அழகிய கயிலைமலை; (பொன் - அழகு); (அப்பர் தேவாரம் - 6.82.10 - "இராவணன் பொன்மலையைக் கையால் ஊக்கஞ்செய் தெடுத்தலுமே");
நித்தர், நீற்றர், நரைவெள் ஏற்றர், நீள்சடை ஆற்றர் - அழிவற்றவர், திருநீறு பூசியவர், மிக வெள்ளை இடபத்தை ஊர்தியாக உடையவர், நீள்சடைமேல் கங்கையைத் தரித்தவர்;
9)
வம்பு மலரான் மண்ணி டந்த மாலிவர் காண்பரியான்
கம்பக் களிறு கதற உரித்தான் காம்பன தோளிபங்கன்
அம்ப லத்தன் அன்பர் உள்ளன் ஆலமர் செல்வனிடம்
பைம்பொ ழில்சூழ்ந் தணிசெய் கின்ற பந்தணை நல்லூரே.
வம்பு மலரான் - தாமரைமேல் இருக்கும் பிரமன்; (வம்பு - வாசனை);
மண் இடந்த மால் - பன்றி உருவில் நிலத்தை அகழ்ந்து தேடிய திருமால்;
இவர் காண்பு அரியான் - இவர்களால் காண்பதற்கு அரியவன்;
கம்பக்-களிறு - அசைதலை உடைய ஆண்யானை; (கம்பம் - அசைவு);
காம்பு அன தோளி பங்கன் - மூங்கில் போன்ற புஜத்தை உடைய உமையை ஒரு பங்காக உடையவன்; (காம்பு - மூங்கில்) (* இத்தல அம்பிகை திருநாமம் - வேணுபுஜாம்பிகை, காம்பனதோளியம்மை);
பைம்பொழில் சூழ்ந்து அணிசெய்கின்ற - அழகிய பசிய சோலைகள் சூழ்ந்து அழகுசெய்யும்;
10)
அரவம் சூடும் அரனைப் பணியார் அவவழி யேஉழல்வார்
இரையும் எண்ணில் பொய்கள் விடுமின் இன்புறச் சென்றடைமின்
விரைகொள் சரத்து வேளின் ஆகம் வேவ விழித்தவனைப்
பரவும் அன்பர் விரவு கின்ற பந்தணை நல்லூரே.
அவ-வழியே உழல்வார் - புன்மைநெறிகளில் உழல்பவர்கள்; (அவம் - பயனின்மை; கேடு);
இரையும் எண் இல் பொய்கள் விடுமின் - அவர்கள் கூச்சலிடும் கணக்கற்ற பொய்களை ஒதுக்குங்கள் (மதியாது நீங்குங்கள்);
விரைகொள் சரத்து வேளின் ஆகம் வேவ விழித்தவனை - மணம் கமழும் அம்புகளை உடைய மன்மதனுடைய உடலைச் சாம்பலாக்கியவனை; (விரை - வாசனை; சரம் - அம்பு; ஆகம் - உடல்);
பரவுதல் - துதித்தல்; புகழ்தல்;
விரவுதல் - அடைதல்; பொருந்துதல்;
11)
மணிய தாக மாமி டற்றில் வாரி விடந்திகழ
அணியும் அண்ணல் ஆனஞ் சாடி அஞ்சடை மேல்புனலும்
பணியும் மதியும் பயிலும் பரமன் பசுபதி தங்குமிடம்
பணியும் அன்பர் பிணிகள் தீர்க்கும் பந்தணை நல்லூரே.
மணியதாக மா-மிடற்றில் வாரி-விடம் திகழ அணியும் அண்ணல் - கடல்-விடத்தை அழகிய கண்டத்தில் மணியாக அணியும் அண்ணல்;
ஆன்-அஞ்சு ஆடி - பசுவிடமிருந்து பெறப்படும் ஐந்து பொருள்களில் அபிஷேகம் மகிழ்பவன்;
அம் சடைமேல் புனலும் பணியும் மதியும் பயிலும் பரமன் - அழகிய சடையின்மேல் கங்கையும் நாகப்பாம்பும் திங்களும் தங்குகின்ற பரமன்;
பசுபதி தங்கும் இடம், பணியும் அன்பர் பிணிகள் தீர்க்கும் பந்தணை நல்லூரே - அப்பெருமான், பசுபதி, உறையும் இடம், வணங்கும் பக்தர்களது பிணிகளைத் தீர்க்கும் பந்தணை நல்லூர். (* இத்தலத்து ஈசன் திருநாமம் - பசுபதீஸ்வரர்);
பிற்குறிப்பு : யாப்புக் குறிப்பு :
அறுசீர் விருத்தம் - மா மா மா மா விளம் காய் - வாய்பாடு.
அடிகள்தோறும் ஈற்றுச்சீர் பெரும்பாலும் கூவிளங்காய்.
5-ஆம் 6-ஆம் சீர்களிடையே வெண்டளை பயிலும். 5-ஆம் சீர் மாச்சீராக வரின், 6-ஆம் சீர் தனா என்ற சந்தத்தில் தொடங்கும்.
(சம்பந்தர் தேவாரம் - 1.63.1 - "எரியார் மழுவொன் றேந்தி யங்கை யிடுதலை யேகலனா")
(கண்டராதித்தர் அருளிச்செய்த திருவிசைப்பா - 9.20.5 - "களிவான் உலகிற் கங்கை நங்கை காதல னேஅருளென்(று)")
வி. சுப்பிரமணியன்
----------- --------------
No comments:
Post a Comment