Saturday, May 26, 2018

04.34 - கடவூர் மயானம் - நிலைபெற்றிட நீ

04.34 - கடவூர் மயானம் - நிலைபெற்றிட நீ

2013-12-23

கடவூர் மயானம்

----------------------------------

(நேரிசை வெண்பா)

(எல்லாப் பாடல்களும் ஒரே ஈற்றடி)


1)

நிலைபெற் றிடநீ நினைதியேல் நெஞ்சே

தலைமேற் பிறையன் சடையன் மலைபோற்

கருமான் உரியன் கடவூர் மயானப்

பெருமான் அடிகளைப் பேணு.


நிலைபெறுதல் - நற்கதி அடைதல்;

நீ நினைதியேல் - நீ நினைந்தால்;

கருமான் - யானை; (அப்பர் தேவாரம் - 6.1.3 - "கருமானின் உரியதளே உடையா வீக்கிக்");

பேணுதல் - போற்றுதல்; வழிபடுதல்; விரும்புதல்;

கடவூர் மயானப் பெருமான் அடிகளை - திருக்கடவூர் மயானத்தில் உறையும் கடவுளை; ("கடவூர் மயானத்தில் உறையும் பெருமானது திருவடிகளை" என்றும் பொருள்கொள்ளல் ஆம்); (* பெருமான் அடிகள் - இத்தலத்து இறைவன் திருநாமம்);


2)

இன்னற் கடலில் இளையா வழிதனை

உன்னு மனமே உயர்கயிலை மன்னன்

கருவார் வினைதீர் கடவூர் மயானப்

பெருமான் அடிகளைப் பேணு.


இளையா வழி - வருந்தாத வழி; (இளைத்தல் - மெலிதல்; சோர்தல்);

உன்னு - நினை;

கரு ஆர் வினை தீர் - கருவில் பிணிக்கும் வினையைத் தீர்க்கும்; (கரு - பிறப்பு; உடம்பு); (ஆர்த்தல் - பிணித்தல்);


3)

நெஞ்சேநீர் பூவால் நிதமேத்து மாணிக்குத்

துஞ்சா நிலைதந்தான் சுட்டெரித்த நஞ்சார்

கருமா மிடற்றன் கடவூர் மயானப்

பெருமான் அடிகளைப் பேணு.


நெஞ்சே - மனமே;

நீர் பூவால் நிதம் ஏத்து மாணிக்குத் துஞ்சா நிலைதந்தான் - நீரும் பூவும் கொண்டு தினமும் வழிபாடு செய்த மார்க்கண்டேயருக்குச் சிரஞ்சீவித்தன்மையை அளித்தவன்; (மாணி - மார்க்கண்டேயர்); (துஞ்சுதல் - இறத்தல்);

சுட்டெரித்த நஞ்சு ஆர் கருமா மிடற்றன் - சுட்டெரித்த ஆலகாலத்தை உண்டு அணிந்த நீலகண்டன்; (ஆர்தல் - உண்ணுதல்; அணிதல்);

கடவூர் மயானப் பெருமான் அடிகளைப் பேணு - திருக்கடவூர் மயானத்தில் உறைகின்ற பெருமான் அடிகளான அவனைப் போற்றி வணங்கு;


4)

அணையாச் சுடரனையான் ஆரார் புரங்கள்

கணையால் எரித்தான் கடலில் புணையாய்

வருவான் கடவூர் மயானம் மகிழும்

பெருமான் அடிகளைப் பேணு.


அணையாச் சுடர் அனையான் - அணையாத விளக்கு ஒத்தவன்; (சுந்தரர் தேவாரம் - 7.21.1 - "நொந்தா ஒண்சுடரே");

ஆரார் - பகைவர்;

எரித்தான் - எரித்தவன்;

கடல் - வினைக்கடல், பிறவிக்கடல், துன்பக்கடல்;

புணை - தெப்பம்;

குறிப்பு: மனமே என்ற விளி தொக்கு நின்றது;


5)

வினைகள் விலகிட வேண்டுதியேல் நெஞ்சே

நினைவெள்ளம் பாய்சடை நித்தன் சினவெள்

எருதேறும் ஈசன் கடவூர் மயானப்

பெருமான் அடிகளைப் பேணு.


வினைகள் விலகிட வேண்டுதியேல் நெஞ்சே நினை - வினைகள் தீர வேண்டுமென்றால் மனமே நீ நினை; (வேண்டுதியேல் - நீ விரும்பினால்);

வெள்ளம் பாய்சடை நித்தன் - கங்கை பாயும் சடையை உடைய நித்தியன்;

சினவெள்ருதேறும் ஈசன் - கோபம் மிக்க வெள்ளை எருதை வாகனமாக உடைய ஈசன்;

கடவூர் மயானப் பெருமான் அடிகளைப் பேணு - திருக்கடவூர் மயானத்தில் உறையும் பெருமான் அடிகளைப் போற்று;


6)

மேதினியில் இன்புற வேண்டுதியேல் நன்னெஞ்சே

காதினில் தோடணியும் காரிகை பாதி

உருவான் கடவூர் மயானத் துறையும்

பெருமான் அடிகளைப் பேணு.


மேதினி - உலகம்;

காதினில் தோடு அணியும் காரிகை பாதி உருவான் - காதில் தோட்டை அணியும் உமையை உருவில் பாதியாக உடையவன்; ("... காரிகை பாதி உருவான் கடவூர் ..." - இதனை "... காரிகை பாதி உரு, வான் கடவூர் ..." என்று கொண்டும் பொருள்கொள்ளலாம். வான் - அழகிய);


7)

தெளியாய் மனமே திருமலிய வேண்டில்

எளியான் இரப்பவர்க் கென்றும் ஒளியான்

கருதார்க் களியான் கடவூர் மயானப்

பெருமான் அடிகளைப் பேணு.


தெளியாய் - தெளிவாயாக; திரு - செல்வம்; நன்மை; மலிதல் - மிகுதல்; எளியன் - எளியவன் - எளிதில் பெறப்படுபவன்; இரத்தல் - யாசித்தல்; வேண்டுதல்; ஒளியான் - ஒளித்தல் இல்லாதவன்; (ஒளித்தல் - மறைத்தல்); எளியான் இரப்பவர்க் கென்றும் ஒளியான் - வேண்டிப் பணியும் அன்பர்களுக்கு என்றும் எளியவன்; வேண்டிப் பணியும் அன்பர்களுக்கு என்றும் ஒளித்தல் இன்றி வாரி வழங்குபவன்; கருதார்க்கு அளியான் - கருதாதவர்களுக்கு கொடாதவன்; (அப்பர் தேவாரம் - 4.11.6 - "சலமிலன் சங்கரன் சார்ந்தவர்க்கலால் நலமிலன் நாடொறும் நல்குவானலன்");


8)

இருவரை பேர்த்த இலங்கையர்கோன் வாடத்

திருவிரல் ஒன்றைச் சிறிதிட் டொருவாள்

தருவான் கடவூர் மயானத்தில் தங்கும்

பெருமான் அடிகளைப் பேணு.


இரு-வரை - பெரிய மலை - கயிலைமலை; இலங்கையர்-கோன் - இராவணன்; ஒரு வாள் - சந்திரஹாஸம் என்ற வாள்;

குறிப்பு: மனமே என்ற விளி தொக்கு நின்றது;


9)

புரமூன் றெரியப் பொருப்புவில் ஏந்து

பரமன் மலர்மேல் பயிலும் பிரமன்

கருமாற் கரியான் கடவூர் மயானப்

பெருமான் அடிகளைப் பேணு.


பொருப்பு-வில் - மேருமலை என்ற வில்; பயில்தல் - தங்குதல்; பிரமன் கரு-மாற்கு அரியான் - பிரமனுக்கும் கரிய திருமாலுக்கும் அரியவன்; (திருவாசகம் - புணர்ச்சிப் பத்து - 8.27.1 - "கருமால் பிரமன் தடைபட் டின்னுஞ் சார மாட்டா");

குறிப்பு: மனமே என்ற விளி தொக்கு நின்றது;


10)

வெய்யவினை விட்டின்பம் மேவ மடநெஞ்சே

பொய்யினையே நற்றவமாப் பூண்டொழுகும் கையர்க்

கருளான் கடவூர் மயானம் அமரும்

பெருமான் அடிகளைப் பேணு.


வெய்ய வினை விட்டு - கொடிய வினைகள் நீங்கி; மேவுதல் - அடைதல்; பொருந்துதல்; நற்றவமா - நல்ல தவமாக; கையர்க்கு அருளான் - வஞ்சகர்களுக்கு அருள் இல்லாதவன்; அமரும் - விரும்பும்; விரும்பி உறையும்;


11)

பிணிவினைதீர்ந் தின்பம் பெருக மனமே

துணிமதி பொற்சடைச் சூடி மணிபோல்

கருளார் மிடற்றன் கடவூர் மயானப்

பெருமான் அடிகளைப் பேணு.


பிணி வினை தீர்ந்து இன்பம் பெருக மனமே - நெஞ்சே, பிணிகளும் வினைகளும் தீர்ந்து இன்பம் பெருக வேண்டும் எனில்; (பிணிவினை - 1. பிணிக்கின்ற வினை; 2. பிணிகளும் வினைகளும் என்ற உம்மைத்தொகை);

துணிமதி பொற்சடைச் சூடி - பிறைச்சந்திரனைப் பொன் போன்ற சடையின்மேல் சூடியவன்; (துணி - துண்டம்); (துணிமதி - நிலாத்துண்டம் - பிறை);

மணிபோல் கருள் ஆர் மிடற்றன் - நீலமணி போலக் கரிய நிறம் திகழும் கண்டம் உடையவன்; (கருள் - கறுப்பு; இருள்);

கடவூர் மயானப் பெருமான் அடிகளைப் பேணு - திருக்கடவூர் மயானத்தில் எழுந்தருளியுள்ள பெருமான் அடிகளைப் போற்றுவாயாக.


வி. சுப்பிரமணியன்

----------- --------------

No comments:

Post a Comment