Sunday, May 20, 2018

04.30 - கருக்குடி (மருதாநல்லூர்) - தனத்தினை நாடுங் - (வண்ணவிருத்தம்)

04.30 - கருக்குடி (மருதாநல்லூர்) - தனத்தினை நாடுங் - (வண்ணவிருத்தம்)

2013-12-06

கருக்குடி (மருதாநல்லூர்)

----------------------------------

(வண்ணவிருத்தம்.

தனத்தன தானந் தனத்தன தானந்

.. தனத்தன தானந் .. தனதான)

(பெருக்கவு பாயங் - திருப்புகழ் - திருத்தணிகை)


1)

தனத்தினை நாடுங் கருத்துடை யேனுந்

.. தமிழ்த்தொடை பாடும் .. படியீவாய்

பனைக்கர வேழம் படப்பொரு தாகம்

.. பகட்டுரி மூடுந் .. திறலோனே

உனைத்தொழு பாலன் களித்திடு மாறங்

.. குயிர்த்துணை யாகுங் .. கழலானே

கனைத்தெழும் ஆலங் கழுத்தணி ஆகுங்

.. கருக்குடி மேவும் .. பெருமானே.


தனத்தினை நாடும் கருத்து உடையேனும் தமிழ்த்தொடை பாடும்படி ஈவாய் - பொன்னாசை உடைய அடியேனும் தமிழ்ப்பாமாலைகள் பாடும்படி (பாடி உய்யும்படி) அருள்வாயாக; (பாடும்படி - 1. படுமாறு; 2. பாடும் படி - "படி = தினசரிச்செலவுக்காகக் கொடுக்கும் பொருள்");

பனைக்கர வேழம் படப் பொருது ஆகம் பகட்டு உரி மூடும் திறலோனே - பனை போன்ற துதிக்கை உடைய யானை இறக்குமாறு போர்செய்து, மார்பை அந்த ஆண்யானையின் தோலால் மூடுகின்ற வெற்றியை உடையவனே; (படுதல் - சாதல்; பொருதல் - போர்செய்தல்; ஆகம் - மார்பு; பகடு - ஆண் யானை; உரி - தோல்; திறல் - வலிமை; வெற்றி);

உனைத் தொழு பாலன் களித்திடுமாறு அங்கு உயிர்த்துணை ஆகும் கழலானே - உன்னை வணங்கிய மார்க்கண்டேயர் மகிழும்படி அங்கு அவர் உயிர்க்குத் துணை ஆன கழல் அணிந்த திருவடியை உடையவனே; (கழலான் - கழலை உடையவன்; நீங்காதவன்);

கனைத்து எழும் ஆலம் கழுத்து அணி ஆகும், கருக்குடி மேவும் பெருமானே - கடலில் ஆரவாரித்துத் தோன்றிய ஆலகால விடத்தைக் கண்டத்தில் சிறந்த மணியாக ஏற்றவனே; திருக்கருக்குடியில் எழுந்தருளிய சிவபெருமானே.


2)

சலித்துளம் வாடுந் தமித்தவ னேனென்

.. தவிப்பற வேநின் .. துணையீவாய்

சொலித்திடு சூலஞ் சுருக்கொடு காதுந்

.. தொழிற்சம னார்நெஞ் .. சுதைபாதா

ஒலித்தலை மோதும் புனற்சடை யாய்நஞ்

.. சொளித்தமு தீயுந் .. தயையானே

கலித்திடு மேகந் தொடப்பொழில் நீளுங்

.. கருக்குடி மேவும் .. பெருமானே.


பதம் பிரித்து:

சலித்து உளம் வாடும் தமித்தவனேன் என்

.. தவிப்பு அறவே நின் துணை ஈவாய்;

சொலித்திடு சூலம் சுருக்கொடு காதும்

.. தொழிற்-சமனார் நெஞ்சு உதை-பாதா;

ஒலித்து அலை மோதும் புனற்-சடையாய்; நஞ்சு

.. ஒளித்து அமுது ஈயும் தயையானே;

கலித்திடு மேகம் தொடப் பொழில் நீளும்

.. கருக்குடி மேவும் பெருமானே.


சலித்துளம் வாடும் தமித்தவனேன் என் தவிப்பு அறவே நின் துணைவாய் - கலங்கித் தளர்ந்து மனம் வாடும் தமியேன் என் தவிப்புத் தீரும்படி உன் துணையை அருள்க; (சலித்தல் - மனம் சஞ்சலப்படுதல்; சோர்தல்); (தமித்தல் - துணையின்றித் தனியாக இருத்தல்); (கடையவன் - கடையவனேன் என்று வருவது போலத், தமித்தவன் - தமித்தவனேன்); (திருவாசகம் - 8.6.1 - "கடையவனேனைக் கருணையினாற் கலந்தாண்டுகொண்ட");

சொலித்திடு சூலம் சுருக்கொடு காதும் தொழிற்-சமனார் நெஞ்சு உதை-பாதா - (தீயைக் கக்கி) ஒளிவீசும் திரிசூலம் பாசம் இவற்றால் கொல்லும் தொழிலை உடைய இயமனை மார்பில் உதைத்த திருப்பாதனே; (காதுதல் - கொல்தல்); (சமன் - இயமன்); (அப்பர் தேவாரம் - 4.107.5 - "தழற்பொதி மூவிலை வேலுடைக் காலனை");

ஒலித்து அலை மோதும் புனற்-சடையாய் - ஒலிசெய்து அலைமோதுகின்ற கங்கையை அணிந்த சடையினனே;

நஞ்சு ஒளித்து அமுது ஈயும் தயையானே - ஆலகாலத்தைக் கண்டத்தில் ஒளித்து, அமுதினைத் தந்த கருணை உடையவனே;

கலித்திடு மேகம் தொடப் பொழில் நீளும் கருக்குடி மேவும் பெருமானே - இடித்து முழங்கும் மேகத்தைத் தொடுமாறு சோலை உயர்கின்ற திருக்கருக்குடியில் எழுந்தருளிய சிவபெருமானே; (கலித்தல் - ஒலித்தல்);


3)

சடப்பொருள் போலுன் சிறப்பறி யேனுந்

.. தனிப்பெயர் ஓதுங் .. குணமீவாய்

சுடப்படு தேகங் கிடக்கிற கானஞ்

.. சுழற்றிய பாதம் .. படவாடீ

படைத்துல காளுந் திறத்தின னேநின்

.. பசிக்கென ஓர்வெண் .. தலையோடு

கடைப்பலி தேருங் கருத்துடை யாய்தண்

.. கருக்குடி மேவும் பெருமானே.






சடப்பொருள் போல் உன் சிறப்பு அறியேனும் தனிப்பெயர் ஓதும் குணம் ஈவாய் - உயிரற்ற ஜடப்பொருள் போல் உன் பெருமையை உணராத நானும் உன்னுடைய ஒப்பற்ற திருநாமத்தை ஓதும் நற்குணத்தை அருள்வாயாக;

சுடப்படு தேகம் கிடக்கிற கானம் சுழற்றிய பாதம் பட ஆடீ - பிணங்கள் கிடக்கின்ற சுடுகாட்டில் சுழன்று ஆடும் திருவடி படுமாறு ஆடுபவனே; (கானம் - சுடுகாடு); (ஆடீ - ஆடுபவனே);

படைத்து உலகு ஆளும் திறத்தினனே - எல்லா உலகங்களையும் படைத்து ஆளும் வல்லவனே;

நின் பசிக்கு என ஓர் வெண்-தலையோடு கடைப்பலி தேரும் கருத்து உடையாய் - உன் பசிக்கு என்று ஒரு வெண்ணிற மண்டையோட்டில் இல்லங்களின் வாயிலில் பிச்சை ஏற்கும் கருத்தை உடையவனே; (கடை - இல்லங்களின் வாயில்); (சம்பந்தர் தேவாரம்- 1.30.4 - "அயலார் கடையிற் பலிகொண்ட அழகன்");

தண் கருக்குடி மேவும் பெருமானே - குளிர்ச்சி பொருந்திய திருக்கருக்குடியில் எழுந்தருளிய சிவபெருமானே.


4)

பிழைத்துழல் வேனும் பிழைத்திட வேஎன்

.. பிணிப்புகள் ஏதங் .. களையாயே

தொழப்பல பூவுந் தொடுத்தழ காருந்

.. தொடைக்கிணை ஆகுந் .. தமிழோடு

தழற்கர னேஅங் கயற்கணி பாகந்

.. தரித்தவ னேஎன் .. றுனையோதிக்

கழற்புணை ஏறுந் தமர்க்குழு நாடுங்

.. கருக்குடி மேவும் .. பெருமானே.


பிழைத்து உழல்வேனும் பிழைத்திடவே என் பிணிப்புகள் ஏதம் களையாயே - குற்றங்களே செய்து உழல்கின்ற நானும் உய்ந்திடுமாறு என் பந்தங்களையும் குற்றங்களையும் களைந்தருள்வாயாக; (பிழைத்தல் - 1. குற்றம் செய்தல்; 2. உய்தல்); (பிணிப்பு - கட்டு; பற்று); (ஏதம் - குற்றம்; துன்பம்);

தொழப் பல பூவும் தொடுத்து அழகு ஆரும் தொடைக்கு இணை ஆகும் தமிழோடு - தொழுவதற்காகப் பல பூக்களையும் தொடுத்து அழகு மிக்க மாலை நிகர்த்த தமிழ்ப்பாமாலைகளோடு;

"தழற்-கரனே, அங்கயற்கணி பாகம் தரித்தவனே" என்று உனை ஓதிக் - "தீயை ஏந்திய கரத்தை உடையவனே; அழகிய கயல் போன்ற கண்ணை உடைய உமையை ஒரு பாகமாகத் தரித்தவனே" என்று உன்னைப் போற்றிப் பாடி; (அங்கயற்கணி - அங்கயற்கண்ணி - மீனாட்சி - அழகிய கயல்மீன் போன்ற கண்ணை உடைய உமை);

கழற்புணை ஏறும் தமர்க்குழு நாடும் கருக்குடி மேவும் பெருமானே - உன் திருவடியாகிய தெப்பத்தில் ஏறி உய்யும் அடியவர்கள் குழாம் சென்றடைகின்ற திருக்கருக்குடியில் எழுந்தருளிய சிவபெருமானே. (கழற்புணை - திருவடியாகிய தெப்பம்); (திருவாசகம் - அடைக்கலப்பத்து - 8.24.4 - "பொழிகின்ற துன்பப்புயல் வெள்ளத்தில் நின் கழற்புணைகொண்டு");


5)

சலத்தொடு பூவுந் தமிழ்த்தொடை யோடுந்

.. தனைத்தொழு வார்தந் .. துணையாகிக்

கலக்கற ஞானந் தனைத்தரு போதன்

.. கணப்படை சூழுங் .. கரிகாடன்

அலைத்திரை ஓதந் தனிற்பெரு கால்கண்

.. டரற்றிமை யோர்தம் .. புகலானான்

கலைக்கரன் வேதந் துதித்திடு நாதன்

.. கருக்குடி மேவும் .. பெருமானே.


பதம் பிரித்து:

சலத்தொடு பூவும் தமிழ்த்தொடையோடும்

.. தனைத் தொழுவார்தம் துணை ஆகிக்,

கலக்கு அற, ஞானம்தனைத் தரு போதன்;

.. கணப்படை சூழும் கரிகாடன்;

அலைத்து இரை ஓதம்தனில் பெருகு ஆல் கண்டு

.. அரற்று இமையோர்தம் புகல் ஆனான்;

கலைக் கரன்; வேதம் துதித்திடு நாதன்;

.. கருக்குடி மேவும் பெருமானே.


சலம் - ஜலம் - நீர்; தமிழ்த்தொடை - தமிழ்ப்பாமாலைகள்; (அப்பர் தேவாரம் - 4.1.6 - "சலம்பூவொடு தூபம் மறந்தறியேன் தமிழோடிசை பாடல் மறந்தறியேன்");

தொழுவார்தம் துணை ஆகிக் கலக்கு அற - வணங்கும் பக்தர்களின் கலக்கம் நீங்க அவர்களுக்குத் துணையாகி; (கலக்கு - கலக்கம்);

போதன் - ஞானவடிவினன்; கணப்படை - பூதகணப் படை;

கரிகாடன் - சுடுகாட்டில் ஆடுபவன்; (சம்பந்தர் தேவாரம் - 1.28.3 - "செய்ய சடையர் ... கரிகாடர்");

ஓதம் - கடல்; ஆல் - ஆலகாலவிஷம்; புகல் - அடைக்கலம்;

கலைக் கரன் - மானைக் கையில் ஏந்தியவன்;


6)

எதிர்த்தவர் ஊர்செந் தழற்பட ஓரம்

.. பெடுத்தருள் வீரன் .. சுரர்வாழக்

கொதித்தெழு மாநஞ் சினைப்பரி வோடுண்

.. குணத்தினன் நாளுந் .. தமிழ்பாடித்

துதிப்பவர் பாவந் துடைத்தருள் தேவன்

.. சுடர்ச்சடை மேல்வெண் .. பிறைசூடி

கதிர்ப்பொறி நாகந் தனைப்புனை மார்பன்

.. கருக்குடி மேவும் பெருமானே.


எதிர்த்தவர் ஊர் செந்தழற்பட ஓர் அம்பு எடுத்தருள் வீரன் - பகைத்தவர்கள் முப்புரங்களும் தீப்பட்டு அழியும்படி ஓர் அம்பைக் கையில் எடுத்த வீரன்;

சுரர் வாழக் - தேவர்கள் வாழ்வதற்காக;

கொதித்து எழு மா நஞ்சினைப் பரிவோடு உண் குணத்தினன் - கொதித்து எழுந்த விடத்தைத் தேவர்களுக்கு இரங்கி உண்ட குணம் உடையவன்;

நாளும் தமிழ் பாடித் துதிப்பவர் பாவம் துடைத்தருள் தேவன் - தினமும் தேவாரம் திருவாசகம் பாடித் துதிக்கும் பக்தர்களுடைய பாவங்களைத் தீர்த்து அருள்புரியும் தேவன்;

சுடர்ச்சடைமேல் வெண்பிறை சூடி - ஒளி பொருந்திய சடைமேல் வெண்திங்களைச் சூடியவன்; (சம்பந்தர் தேவாரம் - 1.44.1 - "துணிவளர்திங்கள் துளங்கிவிளங்கச் சுடர்ச்சடை சுற்றிமுடித்துப்");

கதிர்ப்-பொறி நாகம்தனைப் புனை மார்பன் - ஒளிவீசும் புள்ளிகளையுடைய பாம்பை மாலையாக மார்பில் அணிந்தவன்; (அப்பர் தேவாரம் - 4.38.1 - "கதிர்ப்பொறி அரவும் வைத்தார்");

கருக்குடி மேவும் பெருமானே - திருக்கருக்குடியில் எழுந்தருளிய சிவபெருமான்.


7)

தளைத்துயர் தீரென் றடித்தல(ம்) நாடுந்

.. தமர்க்கெழில் வானந் .. தருமீசன்

இளைப்பிலி ஊணும் பலப்பல ஊர்சென்

.. றிரக்கிற சீரன் .. திருவாளன்

துளக்கிலி பூதங் களுக்கிறை ஆடுந்

.. துணைக்கழல் ஓதுஞ் .. சுரர்வாழக்

களத்தினில் நீலன் பனிப்பிறை சூடுங்

.. கருக்குடி மேவும் .. பெருமானே.


"தளைத்-துயர் தீர்" என்று அடித்தலம் நாடும் தமர்க்கு எழில் வானம் தரும் ஈசன் - "எம் பந்தவினைத் துன்பத்தைத் தீராய்" என்று திருவடியை நாடும் பக்தர்களுக்குச் சிவலோகம் தரும் தலைவன்; (தளை - பந்தம்); (தமர் - தொண்டர்); (எழில் வானம் - அழகிய வானுலகம்; சிவலோகம்);

இளைப்பிலி - சோர்வு இல்லாதவன்; (இளைப்பு - சோர்வு; கிலேசம்);

ஊணும் பலப்பல ஊர் சென்று இரக்கிற சீரன், திருவாளன் - உணவையும் பற்பல ஊர்கள்போய் யாசிக்கின்ற புகழுடையவன்; திருவுடையவன்; (ஊண் - உணவு); (சீரன் - புகழுடையவன்); (இலக்கணக் குறிப்பு: பல+பல - பலபல என்றும், பலப்பல என்றும், பற்பல என்றும் வரும்);

துளக்கிலி - அசைவு இல்லாதவன்; (துளக்கு - அசைவு; வருத்தம்);

பூதங்களுக்கு இறை - பூதகணங்களுக்குத் தலைவன்;

ஆடும் துணைக்கழல் ஓதும் சுரர் வாழக் களத்தினில் நீலன் - நடம் செய்யும் இரு-திருவடிகளைப் போற்றிய தேவர்கள் உய்வதற்காகக் கண்டத்தில் கருமையை உடையவன்; (துணை - உதவி; காப்பு; இரண்டு); (களம் - கண்டம்; கழுத்து);

பனிப்-பிறை சூடும் கருக்குடி மேவும் பெருமானே - குளிர்ச்சி பொருந்திய பிறையைச் சூடியவன்; திருக்கருக்குடியில் எழுந்தருளிய சிவபெருமான்.


8)

துரத்திடு பாவங் கெடக்கழல் நாளும்

.. துதித்திடு வார்தந் .. துணையானான்

அரக்கனை ஓலங் கமித்தரு ளாயென்

.. றரற்றிடு மாறன் .. றடரீசன்

கரத்தொரு சூலந் தரித்தவன் நீலங்

.. கழுத்தினில் ஏறும் .. புகழாளன்

கரப்பிலன் நாறுஞ் சடைப்பிறை சூடுங்

.. கருக்குடி மேவும் .. பெருமானே.


பதம் பிரித்து:

துரத்திடு பாவம் கெடக், கழல் நாளும்

.. துதித்திடுவார்தம் துணை ஆனான்;

அரக்கனை "ஓலம்; கமித்து அருளாய்" என்று

.. அரற்றிடுமாறு அன்று அடர் ஈசன்;

கரத்து ஒரு சூலம் தரித்தவன்; நீலம்

.. கழுத்தினில் ஏறும் புகழாளன்;

கரப்பு இலன்; நாறும் சடைப் பிறை சூடும்,

.. கருக்குடி மேவும் .. பெருமானே.


துரத்துதல் - பிடிக்கப் பின்தொடர்தல்; கெடுதல் - அழிதல்; அரக்கன் - கயிலையை அசைத்த இராவணன்; கமித்தல் - பொறுத்தல்; மன்னித்தல்; (க்ஷமை); அடர்த்தல் - நசுக்குதல்; கரப்பு - ஒளித்தல்; மறைத்தல்; வஞ்சகம்; நாறும் சடைப் பிறை சூடும் - மணம் கமழும் சடையில் சந்திரனை அணியும்;


9)

அளிப்பவ னேசங் கரிப்பவ னேயென்

.. றருத்தியி னாலுன் .. புகழோதில்

ஒளித்தலி லாய்பங் கயத்தயன் மாலங்

.. குனைத்தொழ நீளுஞ் .. சுடரானாய்

தெளித்திடு நீரஞ் சடைத்தலை ஓடுஞ்

.. சிறப்புடை யாய்வம் .. பவிழ்பூவில்

களித்தளி பாடுஞ் சுரத்தொலி ஆருங்

.. கருக்குடி மேவும் .. பெருமானே.


"அளிப்பவனே, சங்கரிப்பவனே" என்று அருத்தியினால் உன் புகழ் ஓதில் ஒளித்தல் இலாய், - "எல்லாம் அளிப்பவனே; ஒடுக்குபவனே" என்று அன்பினால் உன் புகழைப் பாடினால் மறைத்தல் இல்லாதவனே; (அப்படிப் போற்றும் அடியவர்களுக்கு வஞ்சமின்றி வாரி வழங்குபவனே); (திருநாவுக்கரசர் தேவாரம் - 4.11.6 - "சலம் இலன், சங்கரன், சார்ந்தவர்க்கு அலால் நலம் இலன், நாள்தொறும் நல்குவான் நலன்");

பங்கயத்து அயன் மால் அங்கு உனைத் தொழ நீளும் சுடர் ஆனாய் - தாமரைமேல் இருக்கும் பிரமனும் திருமாலும் உன்னைப் போற்றுமாறு முடிவின்றி நீள்கின்ற சோதி ஆனவனே;

தெளித்திடு நீர் அம் சடைத்தலை ஓடும் சிறப்பு உடையாய் - தெளிக்கின்ற கங்கைநீர் அழகிய சடையில் ஓடுகின்ற பெருமை உடையவனே; (தலை - ஏழாம் வேற்றுமை உருபு); (சம்பந்தர் தேவாரம் - 3.79.5 - "வன்னி முடியின் சடைத்தலை மிலைச்சிய தபோதனன்");

வம்பு அவிழ் பூவில் களித்து அளி பாடும் சுரத்து ஒலி ஆரும் கருக்குடி மேவும் பெருமானே - மணம் கமழும் பூவில் இன்புற்று வண்டுகள் பாடுகின்ற சுரங்களின் ஒலி பொருந்திய திருக்கருக்குடியில் எழுந்தருளிய சிவபெருமானே.

(போற்றி என்பது குறிப்பு);


10)

தெருக்களின் ஓரம் பழிப்புரை கூவுஞ்

.. செருக்கரின் வாதங் .. கருதேன்மின்

திருப்புகழ் பாடுங் குணத்தடி யார்தஞ்

.. செடித்தொகை தீர்செந் .. தழல்போல்வான்

பொருப்பொடு நாகம் பிணைத்தெரி ஏவும்

.. பொருத்தியு றார்தம் .. புர(ம்)நூறு

கருத்தன ராவுந் தலைக்கணி யாகுங்

.. கருக்குடி மேவும் .. பெருமானே.


பதம் பிரித்து:

தெருக்களின் ஓரம் பழிப்பு உரை கூவும்

.. செருக்கரின் வாதம் கருதேன்மின்;

திருப்புகழ் பாடும் குணத்து அடியார்தம்

.. செடித்தொகை தீர் செந்தழல் போல்வான்;

பொருப்பொடு நாகம் பிணைத்து, எரி-ஏவும்

.. பொருத்தி, உறார்தம் புர(ம்) நூறு

கருத்தன்; அராவும் தலைக்கு அணி ஆகும்

.. கருக்குடி மேவும் .. பெருமானே.


பழிப்பு - நிந்தனை; செருக்கர் - செருக்கு உடையவர்கள்; வாதம் - சொல்; கருதேன்மின் - (கருதேல்+மின்) - கருதாதீர்கள்; மதியாதீர்கள்; (கருதுதல் - மதித்தல்); (ஏல் - எதிர்மறை ஏவல் ஒருமை விகுதி); (மின் - முன்னிலை ஏவற் பன்மை விகுதி);

செடித்தொகை தீர் செந்தழல் போல்வான் - பாவத்தொகுதியைச் சுட்டெரித்துத் தீர்க்கும் செம்மையான தீயைப் போன்றவன்; (செடி - பாவம்);

பொருப்பொடு நாகம் பிணைத்து, எரி ஏவும் பொருத்தி, உறார்தம் புரம் நூறு கருத்தன் - மேருமலையோடு வாசுகி என்ற பாம்பைக் கட்டி, எரிக்கின்ற கணையையும் சேர்த்துப், பகைவர்களுடைய முப்புரங்களை அழித்த கர்த்தன்; (பொருப்பு - மலை); ( - அம்பு); (உறார் - பகைவர்); (நூறுதல் - அழித்தல்; பொடியாக்குதல்); (கருத்தன் - கர்த்தன் - கடவுள்);

அராவும் தலைக்கு அணி ஆகும் - பாம்பும் தலைக்கு அலங்காரம் ஆகின்ற; (அராவும் - எச்சவும்மை - பிறை, கங்கை, முதலிய பிறவும் சூடியுள்ளதை உணர்த்தியது);


11)

தனித்திரு நாமந் தனைத்தினம் ஓதுந்

.. தமர்க்குயர் வானந் .. தருமீசன்

குனித்திடு பாதன் பசுக்களின் நாதன்

.. குறிப்பொடி ராமன் .. பணிதேவன்

பனிச்சடை மேலம் புலிக்கிடம் ஈயும்

.. பவித்திரன் நூலும் .. புனைமார்பன்

கனித்தரு ஆரும் பொழிற்கிளி ஆலுங்

.. கருக்குடி மேவும் .. பெருமானே.


தனித் திருநாமம் தனைத் தினம் ஓதும் தமர்க்கு உயர் வானம் தரும் ஈசன் - ஒப்பற்ற திருநாமத்தைத் தினந்தோறும் ஓதுகின்ற அடியவர்களுக்கு உயர்ந்த சிவலோகத்தை அருள்கின்ற ஈசன்; (தனி - ஒப்பின்மை);

குனித்திடு பாதன் - ஆடுகின்ற திருப்பாதத்தினன்; (குனித்தல் - வளைத்தல்; ஆடுதல்);

பசுக்களின் நாதன் - பசுபதி;

குறிப்பொடு இராமன் பணி தேவன் - இராமன் மனம் ஒன்றிப் பணிந்து போற்றிய தேவன்; (குறிப்பு - மனவொருமை); (* இராமன் பூசித்ததைத் திருக்கருக்குடித் தலவரலாற்றிற் காண்க);

பனிச்சடைமேல் அம்புலிக்கு இடம் ஈயும் பவித்திரன் - கங்கை உலவும் சடைமேல் சந்திரனுக்கும் இடம் தந்த தூயவன்; (பனி - நீர்); (அம்புலி - சந்திரன்);

நூலும் புனை மார்பன் - முப்புரி நூலும் திகழும் மார்பை உடையவன்; (நூலும் - எச்சவும்மை. பாம்பு, கொன்றைமாலை, ஆமைஓடு, பன்றிக்கொம்பு, இவையும் திகழும் மார்பு என்பது குறிப்பால் உணர்த்தப்பட்டது);

கனித்-தரு ஆரும் பொழிற் கிளி ஆலும் கருக்குடி மேவும் பெருமானே - பழங்கள் உள்ள மரங்கள் நிறைந்த சோலையில் கிளிகள் மகிழ்ந்து ஒலிக்கும் திருக்கருக்குடியில் எழுந்தருளிய சிவபெருமான். (கனித்தரு - கனிகள் மலிந்த மரங்கள்); (ஆலுதல் - ஒலித்தல்; களித்தல்);


வி. சுப்பிரமணியன்

----------- --------------

No comments:

Post a Comment