Saturday, May 26, 2018

04.31 - கோடிகா (திருக்கோடிக்காவல்) - அஞ்சல் நீ மடநெஞ்சமே

04.31 - கோடிகா (திருக்கோடிக்காவல்) - அஞ்சல் நீ மடநெஞ்சமே

2013-12-14

திருக்கோடிகா (திருக்கோடிக்காவல்)

–---------------------------------------------------------------

(எழுசீர்ச் சந்த விருத்தம் - தான தானன தான தானன தான தானன தானனா)

(சம்பந்தர் தேவாரம் - 3.39.1 - "மானினேர்விழி மாதராய்")

(சுந்தரர் தேவாரம் - 7.33.1 - "பாறு தாங்கிய காடரோ");

(சுந்தரர் தேவாரம் - 7.48.1 - "மற்றுப் பற்றெனக் கின்றி")


1)

அஞ்சல் நீமட நெஞ்ச மேஅடி போற்று வாய்அருள் நல்குவான்

மஞ்சு போல்திகழ் கண்ட ஓவெனும் மாணி ஆருயிர் காத்தவன்

அஞ்சொ லாளொரு பங்கி னான்மதன் ஆகம் அன்றெரி செய்தவன்

குஞ்சி மேல்பிறை சூடி னான்குளிர் கோடி காவுறை கூத்தனே.


"அஞ்சல் நீ, மட-நெஞ்சமே; அடி போற்றுவாய்; அருள் நல்குவான்" - பேதை-நெஞ்சே! நீ அஞ்ச வேண்டா; சிவபெருமான் திருவடியைப் போற்றுவாயாக; அப்பெருமான் அருள்புரிவான்; (அஞ்சல் - அஞ்சாதே);

"மஞ்சு போல் திகழ் கண்ட! !" எனும் மாணி ஆருயிர் காத்தவன் - "மேகம் போல் விளங்குகின்ற கரிய கண்டனே! ஓலம்!" என்று இறைஞ்சிய மார்க்கண்டேயர்தம் அரிய உயிரைக் காத்தவன் அவன்;

அம்-சொலாள் ஒரு பங்கினான் - இனிய மொழி பேசும் உமையை ஒரு பங்காகக் கொண்டவன்;

மதன் ஆகம் அன்று எரி செய்தவன் - மன்மதன் உடலை முன்பு எரித்தவன்;

குஞ்சிமேல் பிறை சூடினான் - தலைமேல் சந்திரனைச் சூடியவன்; (குஞ்சி - தலை);

குளிர்-கோடிகா உறை கூத்தனே - குளிர்ந்த திருக்கோடிகா என்ற தலத்தில் எழுந்தருளியிருக்கும் கூத்தன்.


2)

துன்றி வல்வினை சூழு முன்தொழு நெஞ்ச மேயருள் நல்குவான்

வென்றி வெள்விடை ஊர்தி யான்ஒரு வேட னாய்அடர் கானிடைப்

பன்றி மேல்சரம் எய்து பாண்டவன் வேண்டு மாபடை ஈந்தவன்

கொன்றை மாமதி சூடி னான்குளிர் கோடி காவுறை கூத்தனே.


துன்றுதல் - நெருங்குதல்; வென்றி - வெற்றி;

ஒரு வேடனாய் அடர்-கானிடைப் பன்றிமேல் சரம் எய்து - ஒரு வேடன் ஆகி, அடர்ந்த காட்டிடையே ஒரு பன்றிமேல் அம்பு தொடுத்து;

பாண்டவன் வேண்டு மா-படை ஈந்தவன் - அருச்சுனனுக்கு அவன் வேண்டிய பாசுபதாஸ்திரத்தை அருளியவன்;

கொன்றை மாமதி சூடினான் - கொன்றைமலரையும் அழகிய சந்திரனையும் சூடியவன்;


3)

மேலை வல்வினை வீட்டு வான்கழல் மேவி வாழ்மட நெஞ்சமே

வேலை நஞ்சினை நீல மாமணி ஆக்க வல்லமி டற்றினான்

கால னாருயிர் கக்க வேயுதை காலி னான்புரி நூலினான்

கோல மாமதி சூடி னான்குளிர் கோடி காவுறை கூத்தனே.


பதம் பிரித்து:

மேலை வல்வினை வீட்டுவான் கழல் மேவி வாழ் மட நெஞ்சமே;

வேலை நஞ்சினை நீல மா மணி ஆக்க வல்ல மிடற்றினான்;

காலனார் உயிர் கக்கவே உதை காலினான்; புரி நூலினான்;

கோலமா மதி சூடினான்; குளிர் கோடிகா உறை கூத்தனே.


மேலை வல்வினை வீட்டுவான் - பழைய வலிய வினைகளை அழிப்பான்; (வீட்டுதல் - அழித்தல்);

கழல் மேவி வாழ் மட நெஞ்சமே - என் பேதைமனமே, அப்பெருமானின் திருவடிகளை விரும்பி அடைந்து வாழ்வாயாக; (மேவுதல் - அடைதல்; விரும்புதல்; பொருந்துதல்);

வேலை - கடல்; மா - அழகு; புரி நூலினான் - முப்புரிநூல் அணிந்தவன்;

கோலமா மதி சூடினான் - 1. கோலமாக மதி சூடினான் - ஆபரணமாக (சூடாமணியாக) சந்திரனை அணிந்தவன்); 2. அழகிய சந்திரனை அணிந்தவன்; (கோலம் - அழகு; ஆபரணம்); (கோலமா - கோலமாக; கடைக்குறை விகாரம்); (கோல மா - ஒருபொருட்பன்மொழியாகவும் கொள்ளலாம்); (அப்பர் தேவாரம் - 4.2.1 - "சுடர்த்திங்கட் சூளாமணியும்");


4)

இனிம கிழ்ந்திட எண்ணி னாலடி ஏத்து வாய்மட நெஞ்சமே

இனியன் ஏறமர் ஏந்தல் ஒள்ளெரி ஏந்தி மாநடம் ஆடுவான்

தனியன் ஆயிழை பங்கி னான்தனைச் சார்ந்த வர்க்கருள் சங்கரன்

குனிநி லாவது சூடி னான்குளிர் கோடி காவுறை கூத்தனே.


பதம் பிரித்து:

இனி மகிழ்ந்திட எண்ணினால் அடி ஏத்துவாய் மட நெஞ்சமே;

இனியன்; ஏறு அமர் ஏந்தல்; ஒள்-எரி ஏந்தி மா-நடம் ஆடுவான்;

தனியன்; ஆயிழை பங்கினான்; தனைச் சார்ந்தவர்க்கு அருள் சங்கரன்;

குனி-நிலாவது சூடினான்; குளிர் கோடிகா உறை கூத்தனே.


அமர்தல் - விரும்புதல்; ஏந்தல் - பெருமையிற் சிறந்தோன்; ஒள் எரி - ஒளி பொருந்திய நெருப்பு;

தனியன் ஆயிழை பங்கினன் - ஒப்பற்றவன்; தனியாக இருப்பவன்; உமைபங்கன்; (அப்பர் தேவாரம் - 4.41.4 - "பெண்ணோர் பாகம் இறையராய் இனியராகித் தனியராய்");

குனி-நிலா - வளைந்த பிறை; வணங்கிய பிறைச்சந்திரன்; (குனிதல் - வளைதல்; வணங்குதல்); (நிலாவது - நிலா; அது - பகுதிப்பொருள்விகுதி);


5)

முறையி னாலடி போற்று வாரவர் முன்வி னைத்தொடர் மாய்ப்பவன்

இறைவ னேயருள் என்று வான்தொழ ஏவி னாலெயில் எய்தவன்

மறைகள் நாலுரை நாவி னான்மலை மங்கை பங்கும கிழ்ந்தவன்

குறைவி லாமதி சூடி னான்குளிர் கோடி காவுறை கூத்தனே.


முறையினால் - முறைப்படி; விதிப்படி; வான் - தேவர்கள்; - அம்பு; எயில் - கோட்டை; குறைவு இலா மதி - ஈசன் தன் தலையிற் சூடியதால் இனி எவ்விதக் குறையும் இல்லாத சந்திரன்; இனி என்றும் தேயாத சந்திரன்; (சம்பந்தர் தேவாரம் - 2.27.2 - "குறைவிலார்மதி சூடி");


6)

வாணி லா(ம்)நுத லாளை யோர்புறம் வைத்த வன்பெயர் நாவிலே

பூணி லார்வினை மாசெ லாம்பொடி செய்து பொன்னுல கீபவன்

பேண லார்புரம் எய்த வன்புனல் பெய்த செஞ்சடை மேலரா

கோண லார்மதி சூடி னான்குளிர் கோடி காவுறை கூத்தனே.


பதம் பிரித்து:

வாள் நிலாம் நுதலாளை ஓர் புறம் வைத்தவன் பெயர் நாவிலே

பூணில், ஆர்-வினைமாசு-எலாம் பொடி செய்து பொன்னுலகு ஈபவன்;

பேணலார் புரம் எய்தவன்; புனல் பெய்த செஞ்சடைமேல் அரா,

கோணல் ஆர் மதி சூடினான்; குளிர் கோடிகா உறை கூத்தனே.


வாணிலாம் நுதலாளை - வாள் நிலாம் நுதலாளை - ஒளி நிலவும் நெற்றி உடையவளை; (வாள் - ஒளி); பூணில் - பூண்டால்; அணிந்தால்; தரித்தால்; ஆர்-வினைமாசு-எலாம் பொடி செய்து - நம்மைப் பிணித்த வினைக்குற்றம் எல்லாவற்றையும் அழித்து; (ஆர்த்தல் - பிணித்தல்); (திருவாசகம் - திருவெம்பாவை - 8.7.12 - "ஆர்த்த பிறவித் துயர்கெட"); பேணலார் - பகைவர்; கோணல் ஆர் மதி - வளைந்த பிறைச்சந்திரன்; (கோணல் - வளைவு; கூன்);


7)

பரவி நாண்மலர் தூவு வார்வினை பற்ற றுத்தருள் நோக்குவான்

கரவி லான்மலர் வாளி யான்எழில் காய்ந்த கண்ணமர் நெற்றியான்

அரவ(ம்) நாணென ஆர்த்த வன்மத யானை ஈருரி போர்த்தவன்

குரவ(ம்) மாமதி சூடி னான்குளிர் கோடி காவுறை கூத்தனே.


பரவி நாண்மலர் தூவுவார் வினை பற்று-அறுத்து அருள்-நோக்குவான் - துதித்துப் புதுமலர்கள் தூவும் பக்தர்களது வினைகளை அறுத்து அருட்கண்ணால் நோக்குபவன்;

கரவிலான்; மலர் வாளியான் எழில் காய்ந்த கண் அமர் நெற்றியான் - வஞ்சமற்றவன்; மலர்க்கணை ஏவிய மன்மதனுடைய அழகிய உடலைச் சுட்டெரித்த கண் திகழும் நெற்றியை உடையவன்; (கரவு - வஞ்சனை; மறைத்தல்); (வாளி - அம்பு);

அரவம் நாண் என ஆர்த்தவன் - பாம்பை அரையில் நாணாகக் கட்டியவன்; ("முப்புரம் எரித்தபோது மேருவில்லில் பாம்பை நாணாகக் கட்டியவன்" என்றும் பொருள்கொள்ளலாம்); (ஆர்த்தல் - பிணித்தல்; கட்டுதல்);

மத யானை ஈருரி போர்த்தவன் - மதம் பொருந்திய ஆண்யானையின் உரித்த ஈரத்தோலைப் போர்த்தவன்; (ஈர்த்தல் - உரித்தல்); (ஈர் - 1. ஈரம்; 2. பசுமை); (உரி - தோல்); (ஈருரி - ஈர் உரி - 1. உரித்த தோல்; 2. ஈரம் பொருந்திய (உதிரப் பசுமை கெடாத ) தோல்);

குரவம் மாமதி சூடினான் - குராமலரையும் அழகிய பிறையையும் சூடியவன்;

குளிர்-கோடிகாறை கூத்தனே - குளிர்ந்த திருக்கோடிகா என்ற தலத்தில் எழுந்தருளியிருக்கும் கூத்தன்.


8)

வாள ரக்கன பத்து வாய்வசை நீங்கி வாழ்த்தம கிழ்ந்துநாள்

வாள ளித்தவன் மாசு ணத்தினை மாலை யாவணி மார்பினான்

காள நஞ்சினை உண்ட மாமணி கண்டன் நீரலை வேணிமேல்

கோள ராமதி சூடி னான்குளிர் கோடி காவுறை கூத்தனே.


வாள் அரக்கன பத்து வாய் - கொடிய அரக்கனுடைய பத்து வாய்களும்; (அரக்கன - அரக்கன்+- அரக்கனது; - ஆறாம் வேற்றுமை உருபு);

வசை நீங்கி வாழ்த்த மகிழ்ந்து நாள் வாள் அளித்தவன் - அவன் இகழ்ந்து பேசுவதை நீங்கித் துதிக்கக் கேட்டு மகிழ்ந்து, அவனுக்கு நீண்ட ஆயுளையும் சந்திரஹாஸம் என்ற வாளையும் கொடுத்தவன்;

மாசுணத்தினை மாலையா அணி மார்பினான் - பாம்பை மாலையாக அணிந்த மார்பினன்;

காள நஞ்சு - கரிய நஞ்சு; (காளம் - கருமை); (பெரியபுராணம் - "காளவிடம் உண்டிருண்ட கண்டர்");

நீர் அலை வேணிமேல் கோள் அரா மதி சூடினான் - கங்கை அலைக்கின்ற சடையின்மீது கொடிய பாம்பையும் பிறைச்சந்திரனையும் அணிந்தவன்; (அலைத்தல் - அலைமோதுதல்);


9)

வானில் ஏறய னோடு மாலிவர் வாழ்த்து மாறுயர் சோதியான்

தேனி லாவிய பூவி னால்கழ லேத்தி னால்வினை தீர்ப்பவன்

மானி லாவிய கையி னான்தலை மாலை தாங்கிய சென்னிமேல்

கூன லார்மதி சூடி னான்குளிர் கோடி காவுறை கூத்தனே.


பதம் பிரித்து:

வானில் ஏறு அயனோடு மால் இவர் வாழ்த்துமாறு உயர் சோதியான்;

தேன் நிலாவிய பூவினால் கழல் ஏத்தினால் வினை தீர்ப்பவன்;

மான் நிலாவிய கையினான்; தலைமாலை தாங்கிய சென்னிமேல்

கூனல் ஆர் மதி சூடினான்; குளிர் கோடிகா உறை கூத்தனே.


நிலாவுதல் - நிலவுதல் - நிலைத்திருத்தல்; தங்குதல்; விளங்குதல்; கூனல் - வளைவு; தலைமாலை தாங்கிய சென்னிமேல் - இறந்தவர்களுடைய தலைகளை மாலையாகக் கோத்து அணிந்த தலைமேல்; (சுந்தரர் தேவாரம் - 7.4.1 - "தலைக்குத் தலைமாலை அணிந்ததென்னே");


10)

தேவி னைத்தெளி யாம லேவிருள் சேர்ந்த நெஞ்சினர் நாடொறும்

நாவி னால்பழி கூறு வாரவை நம்பி டேல்நல(ம்) நல்குவான்

பூவி னாலடி போற்றி னால்பொடி பூசி பொற்சடை மேலரா

கூவி ளம்பிறை சூடி னான்குளிர் கோடி காவுறை கூத்தனே.


பதம் பிரித்து:

தேவினைத் தெளியாமலே, இருள் சேர்ந்த நெஞ்சினர் நாள்தொறும்

நாவினால் பழி கூறுவார்; அவை நம்பிடேல்; நலம் நல்குவான்,

பூவினால் அடி போற்றினால், பொடி பூசி; பொற்சடைமேல் அரா

கூவிளம் பிறை சூடினான்; குளிர் கோடிகா உறை கூத்தனே.


தே - தெய்வம்; தெளிதல் - தெளிவாக அறிதல்; இருள் - அறியாமை; வஞ்சம்; அவை நம்பிடேல் - அவற்றை நம்பாதே; (நம்புதல் - நம்பிக்கை வைத்தல்; விரும்புதல்); நலம் நல்குவான்,

பூவினால் அடி போற்றினால், பொடி பூசி - பூக்களால் திருவடியைப் போற்றினால் திருநீற்றைப் பூசியவனான சிவபெருமான் நலங்களை அருள்வான்; பொற்சடைமேல் அரா கூவிளம் பிறை சூடினான் - பொன் போன்ற சடையின்மேல் பாம்பையும் வில்வத்தையும் பிறையையும் சூடியவன்;


11)

பாங்கி னால்பணி வார்க்கெ லாம்பழ வல்வி னைத்தொடர் பற்றெலாம்

நீங்க ஆரருள் செய்ப ரம்பரன் நீரை நீள்சடை தன்னிலே

தாங்கி னான்பலி ஏற்ப வன்தமிழ் பாடு வார்பசி தீர்ப்பவன்

கோங்க(ம்) மாமதி சூடி னான்குளிர் கோடி காவுறை கூத்தனே.


பதம் பிரித்து:

பாங்கினால் பணிவார்க்கு-எலாம் பழ-வல்வினைத்தொடர் பற்று எலாம்

நீங்க ஆர்-அருள் செய் பரம்பரன்; நீரை நீள்-சடை தன்னிலே

தாங்கினான்; பலி ஏற்பவன்; தமிழ் பாடுவார் பசி தீர்ப்பவன்;

கோங்கம் மா-மதி சூடினான்; குளிர்-கோடிகா உறை கூத்தனே.


பாங்கு - குணம்; நற்குணம்; சிவாகம விதி; பழ-வல்வினைத்தொடர் பற்று எலாம் - பழைய வலிய வினைத்தொடரும் மற்ற பற்றுகளும்; ஆர்-அருள் - அரிய அருள்; பரம்பரன் - பரம்பொருள் - முழுமுதற்கடவுள்; நீரை நீள்-சடை தன்னிலே தாங்கினான் - கங்கையைத் தன் நீண்ட சடையில் தரித்தவன்; பலி - பிச்சை; தமிழ் பாடுவார் பசி தீர்ப்பவன் - சிவபெருமான் சம்பந்தர்க்கும் அப்பர்க்கும் பஞ்ச காலத்தில் திருவீழிமிழலையில் படிக்காசு நல்கியும், அப்பர்க்குத் திருப்பைஞ்ஞீலி செல்லும் வழியில் பொதிசோறு அளித்தும், சுந்தரர்க்குத் திருக்கச்சூரில் இரந்து கொணர்ந்த உணவை அளித்தும் பசி தீர்த்த வரலாறுகளைப் பெரிய புராணத்திற் காண்க; கோங்கம் - கோங்கமலர்; (சம்பந்தர் தேவாரம் - 2.34.2 - "கோடலொடு கோங்கவை குலாவு முடிதன்மேல்");


பிற்குறிப்பு :

யாப்புக் குறிப்பு :

எழுசீர்ச் சந்த விருத்தம் - தான தானன தான தானன தான தானன தானனா - என்ற சந்தம்.

"தான தானன தானனா - தன - தான தானன தானனா" என்றவாறும் நோக்கலாம்.

"தான" வரும் இடத்தில் "தனன" என்றும் அமையலாம்.

அடிகளின் ஈற்றுச் சீர் "தானனா" என்பது "தனதனா" என்றும் அமையலாம்.)

(சம்பந்தர் தேவாரம் - 3.39.1 - "மானி னேர்விழி மாத ராய்வழு திக்கு மாபெருந் தேவிகேள்");

(சுந்தரர் தேவாரம் - 7.33.1 - "பாறு தாங்கிய காட ரோபடு தலைய ரோமலைப் பாவையோர்");


வி. சுப்பிரமணியன்

-------------------  

No comments:

Post a Comment