Monday, May 28, 2018

04.35 - அன்பில் ஆலந்துறை - வம்பவிழ் மலரினால்

04.35 - அன்பில் ஆலந்துறை - வம்பவிழ் மலரினால்

2013-12-24

அன்பில் ஆலந்துறை

(லால்குடி அருகே உள்ள தலம்)

----------------------------------

(அறுசீர் விருத்தம் - விளம் விளம் விளம் விளம் மா தேமா - வாய்பாடு)

(சம்பந்தர் தேவாரம் - 2.79.1 - "பவனமாய்ச் சோடையாய்")

(சம்பந்தர் தேவாரம் - 3.91.1 - "கோங்கமே குரவமே")


1)

வம்பவிழ் மலரினால் வழிபடு வார்வினை மாய்த்த ருள்வார்

கொம்பனை யாளையோர் கூறும கிழ்ந்தவர் கொங்கு மிக்க

அம்பினை ஏவினான் அனங்கனா கும்படி அழல்வி ழித்தார்

அம்பொழில் சூழ்கவின் அன்பிலா லந்துறை அண்ண லாரே.


வம்பு அவிழ் மலரினால் வழிபடுவார் வினை மாய்த்து அருள்வார் - மணம் கமழும் பூக்களால் வழிபடும் பக்தர்களது வினைகளை அழித்து அருள்பவர்; (வம்பு - வாசனை);

கொம்பு அனையாளைர் கூறு மகிழ்ந்தவர் - பூங்கொம்பு போன்ற உமையை ஒரு பாகமாக விரும்பியவர்;

கொங்கு மிக்க அம்பினை ஏவினான் அனங்கன் ஆகும்படி அழல் விழித்தார் - வாசம் மிகுந்த மலர்க்கணையை ஏவிய மன்மதனை உடல் அற்றவன் ஆகும்படி நெற்றிக்கண்ணால் நோக்கி எரித்தவர்; (கொங்கு - வாசனை); (அனங்கன் - உடல் அற்றவன் - மன்மதன்); (அப்பர் தேவாரம் - 4.80.8 - "செற்றங் கநங்கனைத் தீவிழித்தான்");

அம் பொழில் சூழ் கவின் அன்பில் ஆலந்துறை அண்ணலாரே - அழகிய சோலை சூழ்ந்த அழகிய அன்பில் தலத்தில் உள்ள ஆலந்துறை என்ற கோயிலில் உறைகின்ற தலைவனார்;


2)

தஞ்சமென் றடியிணை சார்ந்தவர்க் கின்பமே தந்த ருள்வார்

பஞ்சமம் காமரம் என்றுபண் பாடிடும் பத்தர் கட்குப்

பஞ்சகா லத்தினில் மிழலையில் நாள்தொறும் படிய ளித்தார்

அஞ்சுரும் பார்பொழில் அன்பிலா லந்துறை அண்ண லாரே.


பஞ்சமம் காமரம் - பஞ்சமம் சீகாமரம் என்ற பண்கள் - இவை தேவாரப் பண்களில் சில.

பண் பாடிடும் பத்தர்கட்குப் பஞ்சகாலத்தினில் மிழலையில் நாள்தொறும் படி அளித்தார் - (படி - தினசரிச்செலவுக்காகக் கொடுக்கும் பொருள்); தமிழ்ப்பாமாலைகள் பாடிய சம்பந்தர்க்கும் அப்பர்க்கும் திருவீழிமிழலையில் ஈசன் படிக்காசு அளித்த வரலாற்றைப் பெரியபுராணத்தில் காண்க.

அம் சுரும்பு ஆர் பொழில் - அழகிய வண்டுகள் ஒலிக்கும் சோலை;


3)

நறுமலர் கொண்டடி போற்றிடும் அன்பர்கள் நலியா வண்ணம்

வறுமையும் பிணிகளும் மாற்றிந லங்களே மல்க ஈவார்

முறுவலால் முப்புரம் சுட்டமுக் கண்ணினார் முடியில் ஆற்றர்

அறுபதம் ஆர்பொழில் அன்பிலா லந்துறை அண்ண லாரே.


அறுபதம் ஆர் பொழில் - வண்டுகள் ஒலிக்கின்ற சோலை சூழ்ந்த; (ஆர்த்தல் - ஒலித்தல்);


4)

நறைமலி நற்றமிழ் நாவின ராய்அடி நச்சு வார்தம்

குறைகளைத் தீர்ப்பவர் ஏனவெண் கொம்பணி கோல மார்பர்

கறையணி கண்டனார் கரியுரி போர்த்தவர் காம கோபர்

அறைசுரும் பார்பொழில் அன்பிலா லந்துறை அண்ண லாரே.


நறை மலி நற்றமிழ் நாவினராய் அடி நச்சுவார்தம் குறைகளைத் தீர்ப்பவர் - வாசனை கமழும் நல்ல தமிழாகிய தேவாரம், திருவாசகம் இவற்றைப் பாடி விரும்பி வணங்கும் அன்பர்களது குறைகளைத் தீர்ப்பவர்; (நச்சுதல் - விரும்புதல்);

ஏன வெண்-கொம்பு அணி கோல மார்பர் - பன்றியின் வெள்ளைக்கொம்பை அணிந்த அழகிய மார்பினை உடையவர்;

கறை அணி கண்டனார் - நீலகண்டர்;

கரி-உரி போர்த்தவர் - யானைத்தோலைப் போர்த்தவர்;

காம-கோபர் - மன்மதனைச் சினந்தவர்;

அறை சுரும்பு ஆர் பொழில் - ஒலிக்கும் வண்டுகள் பொருந்தும் சோலை சூழ்ந்த;


5)

குழைமனத் தடியவர் கோரிய வரமெலாம் கொடுத்த ருள்வார்

குழையொரு காதினர் கொல்புலித் தோலினர் கொடியில் ஏற்றர்

மழவிடை ஊர்தியர் மார்பினில் நூலினர் மலர்ம லிந்த

அழகிய பொழிலணி அன்பிலா லந்துறை அண்ண லாரே.


குழை-மனத்து அடியவர் கோரிய வரமெலாம் கொடுத்து அருள்வார் - மனம் உருகி வழிபடும் அன்பர்கள் விரும்பிய வரங்களைக் கொடுப்பவர்; (குழைதல் - இளகுதல்); (கோருதல் - வேண்டுதல்);

குழை ஒரு காதினர் - அர்த்தநாரீஸ்வரர்;

கொல்-புலித் தோலினர் - கொடிய புலியின் தோலை அணிந்தவர்;

கொடியில் ஏற்றர் - இடபச்சின்னம் பொறித்த கொடியை உடையவர்;

மழ-விடை ஊர்தியர் - இளமையான இடபத்தை வாகனமாக உடையவர்;

மார்பினில் நூலினர் - முப்புரி நூல் அணிந்தவர்;

மலர் மலிந்த அழகிய பொழில் அணி - பூக்கள் நிறைந்த அழகிய சோலைகள் சூழ்ந்த;


6)

செம்மலர்த் தொடைகொடு சேவடி போற்றிடில் செய்த பாவம்

இம்மியும் எஞ்சுதல் இன்றிய றுத்தவர்க் கின்பம் ஈவார்

மும்மலம் அற்றவர் முதலிலார் முடிவிலார் மூப்பும் இல்லார்

அம்மலர்ப் பொழிலணி அன்பிலா லந்துறை அண்ண லாரே.


செம்மலர்த்தொடைகொடு சேவடி போற்றிடில் - சிறந்த பூக்களால் தொடுக்கப்பெற்ற மாலைகளால் சிவந்த திருவடியை வழிபட்டால்; (செம்மை - சிறப்பு; சிவப்பு; தூய்மை);

செய்த பாவம் இம்மியும் எஞ்சுதல் இன்றி அறுத்து அவர்க்கு இன்பம் ஈவார் - பழவினை கொஞ்சமும் மிச்சம் இல்லாதபடி தீர்த்து அவ்வடியார்களுக்கு இன்பம் கொடுப்பார்; (இம்மி - மிகச் சிறிய அளவு);

முதல் இலார் முடிவு இலார் மூப்பும் இல்லார் - பிறப்பு, இறப்பு, முதுமை இவை இல்லாதவர்;

அம் மலர்ப்பொழில் அணி - அழகிய மலர்ச்சோலை சூழ்ந்த;


7)

துளியுலாம் கண்ணராய்த் தொழுபவர் தொல்வினை துடைத்த ருள்வார்

அளியிலாத் தக்கனின் வேள்வியை அழித்தவர் அனல்மண் நீர்கால்

வெளியெலாம் ஆயவர் விரவலார் முப்புரம் வேவ நக்கார்

அளியுலாம் பொழிலணி அன்பிலா லந்துறை அண்ண லாரே.


துளிலாம் கண்ணராய்த் தொழுபவர் தொல்வினை துடைத்து அருள்வார் - கண்ணீர்த்துளி கசிய வழிபடும் பக்தர்களது பழவினையை அழித்து அருள்பவர்; (துடைத்தல் - நீக்குதல்); (திருவாசகம் - அச்சப்பத்து - 8.35.4 - "துளியுலாம் கண்ணராகித் தொழுதழு துள்ளம் நெக்கு");

அளி இலாத் தக்கனின் வேள்வியை அழித்தவர் - அன்பு இல்லாத தக்கன் செய்த யாகத்தை அழித்தவர்;

அனல் மண் நீர் கால் வெளி எலாம் ஆயவர் - தீ, நிலம், நீர், காற்று, ஆகாயம் என்ற ஐம்பூதங்கள் ஆனவர்;

விரவலார் முப்புரம் வேவ நக்கார் - பகைவர்கலது முப்புரங்களும் எரியும்படி சிரித்தவர்; (விரவலார் - பகைவர்; (நக்கார் - நக்கவர் - சிரித்தவர்); (சம்பந்தர் தேவாரம் - 2.120.7 - "விரவலார்தம் மதில்மூன் றுடன்வெவ்வழ லாக்கினான்");

அளி உலாம் பொழில் அணி - வண்டுகள் உலாவும் சோலை சூழ்ந்த;


8)

காத்தருள் என்றுளம் கரைபவர்க் கன்பினார் கயிலை வெற்பைப்

பேர்த்தவன் அலறிடப் பெருவிரல் ஊன்றினார் பிறைய ராவைச்

சேர்த்தவர் திரிபுரம் செந்தழல் வாய்ப்படச் சிலைவ ளைத்தார்

ஆர்த்தளி மகிழ்பொழில் அன்பிலா லந்துறை அண்ண லாரே.


கயிலை வெற்பைப் பேர்த்தவன் அலறிடப் பெருவிரல் ஊன்றினார் - கயிலைமலையைப் பெயர்த்த இராவணன் அலறி அழும்படி திருப்பாத விரலை ஊன்றி நசுக்கியவர்;

பிறை அராவைச் சேர்த்தவர் - திங்களையும் பாம்பையும் முடிமேல் ஒன்றாகச் சேர்த்தவர்;

திரிபுரம் செந்தழல்வாய்ப்படச் சிலை வளைத்தார் - திரிந்த முப்புரங்கள் தீயுள் புகுமாறு வில்லை வளைத்தவர்; (சிலை - வில்);

ஆர்த்து அளி மகிழ் பொழில் - ரீங்காரம் செய்து வண்டுகள் இன்புறும் சோலை சூழ்ந்த; (ஆர்த்தல் - ஒலித்தல்);


9)

இலையொடு பூக்களும் இட்டடி ஏத்துவார்க் கின்பம் ஈவார்

அலைமிசைத் துயிலரி அயனிவர் அறிவொணா அழல தானார்

அலைமிசைத் துயிலு(ம்)மால் அயனிடை அளவிலா அழல தானார்

கலையொரு கையினார் கனல்மழு வாளினார் கால காலர்

அலர்மலி பொழிலணி அன்பிலா லந்துறை அண்ண லாரே.


இலை - வில்வம், வன்னி முதலியன;

அலைமிசைத் துயில்-அரி அயன்-இவர் அறிவொணா அழலது ஆனார் - கடல்மேல் பள்ளிகொள்ளும் திருமால் பிரமன் இவர்களால் அறிய ஒண்ணாத ஜோதிப்பிழம்பாக ஓங்கியவர்;

கலை ஒரு கையினர் - மானை ஒரு கையில் ஏந்தியவர்;

கனல்மழு வாளினார் - ஒளிவீசும் மழுவை ஏந்தியவர்;

காலகாலர் - காலனுக்குக் காலன் ஆனவர்;

அலர் மலி பொழில் அணி - பூக்கள் நிறைந்த சோலை சூழ்ந்த;


10)

கள்ளமார் நெஞ்சினர் கத்திடும் பொய்ம்மொழி கருத வேண்டா

வெள்ளமார் சடையரே விகிர்தரே என்பவர் வினைகள் தீர்ப்பார்

துள்ளுமா னோடொரு சூலமும் தாங்குவார் தூய நீற்றர்

அள்ளலார் செய்யணி அன்பிலா லந்துறை அண்ண லாரே.


கள்ளம் ஆர் நெஞ்சினர் கத்திடும் பொய்ம்மொழி கருத வேண்டா - கள்ளம் பொருந்திய நெஞ்சத்தினர்கள் கத்துகின்ற பொய்களில் மயங்க வேண்டா; (கருதுதல் - மதித்தல்; விரும்புதல்);

வெள்ளம் ஆர் சடையரே - சடையில் கங்கையை உடையவரே;

விகிர்தர் - சிவபெருமான் திருநாமங்களுள் ஒன்று;

அள்ளல் ஆர் செய் அணி - சேறு பொருந்திய வயல் சூழ்ந்த; (அப்பர் தேவாரம் - 5.80.6 - "அள்ளல் ஆர்வயல் அன்பிலா லந்துறை");


11)

கணிலிழி நீரொடு கைதொழு வார்களைக் காத்த ருள்வார்

பணியினைப் பூண்டவர் பாற்கடல் பாம்புமிழ் படுவி டத்தை

மணியென மிடற்றினில் வைத்தவர் உத்தமர் மலர்ம லிந்த

அணிபொழில் தழுவிய அன்பிலா லந்துறை அண்ண லாரே.


கணில் இழி - கண்ணில் கசிகின்ற; (கணில் - கண்ணில்; இடைக்குறை விகாரம்);

பணி - நாகப்பாம்பு;

பாற்கடல் பாம்புமிழ் படு விடத்தை - பாற்கடலும் பாம்பும் உமிழ்ந்த கொல்லும் நஞ்சை; (படுத்தல் - கொல்லுதல்; அழித்தல்); (அப்பர் தேவாரம் - 4.89.1 - "காரடைந்த கடல் வாயுமிழ் நஞ்சமுதாக உண்டான்");


வி. சுப்பிரமணியன்

----------- --------------

No comments:

Post a Comment