Saturday, May 26, 2018

04.32 – செங்கோடு (திருச்செங்கோடு) ('கொடிமாடச் செங்குன்றூர்')


04.32செங்கோடு (திருச்செங்கோடு) (தேவாரத்தில் 'கொடிமாடச் செங்குன்றூர்')



2013-12-16
செங்கோடு (திருச்செங்கோடு) (தேவாரத்தில் 'கொடிமாடச் செங்குன்றூர்')
----------------------------------
(12 பாடல்கள்)
(நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா)
(சம்பந்தர் தேவாரம் - 2.48.1 - "கண்காட்டு நுதலானுங் கனல்காட்டுங் கையானும்")



1)
தேவியொரு பங்குடையாய் செங்கோட்டில் தங்கிறையே
நாவினிலுன் நாமத்தை நவில்வார்க்கு நல்லரணே
ஆவினிலைந் துகந்தாடும் ஐயாநின் அடிபணிந்தேன்
தீவினையும் நோவினையும் தீர்த்தென்னைக் காத்தருளே.



* திருச்செங்கோட்டில்: சுவாமி அர்த்தநாரீசுவரர்; அம்மை பாகம்பிரியாள்;
செங்கோட்டில் தங்கு இறையே - திருச்செங்கோட்டில் எழுந்தருளியிருக்கும் இறைவனே;
ஆவினில் ஐந்து உகந்து ஆடும் ஐயா - பசுவிடமிருந்து பெறப்படும் ஐந்து பொருள்களால் அபிஷேகம் விரும்பும் தலைவனே;
தீவினையும் நோவினையும் தீர்த்து - தீவினையையும் நோவையும் தீர்த்து; (நோ - வலி; துன்பம்);



2)
தெரிவையொரு பங்குடையாய் செங்கோட்டில் தங்கிறையே
பரிவினொடு நஞ்சுண்டு பாலித்த கண்டத்தாய்
புரிசடைமேல் புனலேற்றாய் பொன்னடியே போற்றிநின்றேன்
புரிவினைகள் துன்பங்கள் போக்கியினி தருளாயே.



தெரிவை - பெண்; புரிசடை - முறுக்கிய சடை; புரிவினை - புரிந்த வினைகள்;



3)
சேயிழையோர் பங்குடையாய் செங்கோட்டில் தங்கிறையே
வாயினிலுன் வாழ்த்தணிய வல்லவர்க்கு நல்லவனே
தீயினையோர் கண்தாங்கும் திருநுதலாய் அடிபணிந்தேன்
நோயினைவு தருவினையை நூறியெனைக் காத்தருளே.



சேயிழை - பெண்; நுதல் - நெற்றி;
நோய் இனைவு தருவினையை நூறி எனைக் காத்தருளே - நோயையும் வருத்தத்தையும் தருகின்ற வினைகளையெல்லாம் அழித்து என்னைக் காத்து அருள்வாயாக; (இனைவு - வருத்தம்); (நூறுதல் - அழித்தல்);



4)
சிற்றிடையாள் பங்குடையாய் செங்கோட்டில் தங்கிறையே
வெற்றிவிடைக் கொடியுடையாய் வெண்மழுவாட் படையுடையாய்
புற்றரவக் கச்சுடையாய் பொன்னடிகள் போற்றிநின்றேன்
பற்றவரும் பண்டைவினைப் பகைகடிந்து காத்தருளே.



5)
செல்வியொரு பங்குடையாய் செங்கோட்டில் தங்கிறையே
வில்விசயற் கருள்செய்ய வேட்டுவனாய்ச் சென்றவனே
கொல்விடமார் கண்டத்தாய் குரைகழலே பரவிநின்றேன்
தொல்வினையில் ஆழாமல் தூக்கியெனைக் காத்தருளே.



செல்வி - உமையம்மை; (அப்பர் தேவாரம் - 4.43.8 - 'செல்வியைப் பாகங் கொண்டார்');
வில் விசயற்கு - வில்வித்தையிற் சிறந்த அருச்சுனனுக்கு;
கொல் விடம் ஆர் கண்டத்தாய் - கொல்லும் நஞ்சை உண்ட கண்டத்தை உடையவனே;
தொல்வினையில் ஆழாமல் - பழவினைக் கடலில் நான் மூழ்காதபடி;



6)
செந்துவர்வாய் உமைபங்கா செங்கோட்டில் தங்கிறையே
வந்திறைஞ்சு வானவர்கள் மகிழமதில் மூன்றுமுடன்
வெந்துவிழக் கணைதொட்டாய் மென்மலர்த்தாள் போற்றிநின்றேன்
முந்தைவினைத் தொடரெல்லாம் முடியவருள் புரியாயே.



செம் துவர் வாய் - செம்பவளம் போல் வாயை உடைய; (சம்பந்தர் தேவாரம் - 2.66.1 - "மந்திர மாவது நீறு ... செந்துவர் வாயுமை பங்கன் திருவால வாயான் திருநீறே");
கணை தொட்டாய் - அம்பு எய்தவனே;
முடிதல் - அழிதல்;



7)
தேனார்பூங் குழலிபங்கா செங்கோட்டில் தங்கிறையே
ஊனாருந் தலையொன்றில் உண்பலிதேர்ந் துழல்வானே
மானாருங் கையானே மலரடியே போற்றிநின்றேன்
வானாரும் வழிகாட்டி வல்வினையைத் தீர்த்தருளே.



தேன் ஆர் பூங்குழலி - வண்டார்குழலி - வண்டு ஆர்க்கும் பூக்களை அணிந்த குழலை உடையவள் - பார்வதி;
ஊன் ஆரும் தலை - மாமிசம் பொருந்திய மண்டையோடு;
பலி - பிச்சை;
மான் ஆரும் கையான் - மன் கன்றைக் கையில் உடையவன்;
வான் ஆரும் வழி - வானுலகைப் பொருந்தும் நெறி; (ஆர்தல் - பொருந்துதல்; பெறுதல்);



8)
சிலைப்பாவை பங்குடையாய் செங்கோட்டில் தங்கிறையே
மலைக்கீழே வல்லரக்கன் வாடவிரல் வைத்தவனே
அலைத்தோடும் நதிச்சடையாய் அடியிணையே போற்றிநின்றேன்
கலக்கேசெய் கடுவினையைக் களைந்தென்னைக் காத்தருளே.



சிலைப்பாவை - மலைமகள்; (சிலை - மலை);
கலக்கு - கலக்கம் - துன்பம்; அச்சம்;
கடுவினை - கொடுமையான வினை;



9)
சிலம்பரையன் மகள்பங்கா செங்கோட்டில் தங்கிறையே
அலம்புநதிச் சடையுடையாய் அரிபிரமற் கரியவனே
நிலம்புனல்கால் நெருப்போடு நீள்விசும்பும் ஆயவனே
நலம்புரியும் சங்கரனே நாதாநின் கழல்போற்றி.



சிலம்பு அரையன் மகள் பங்கா - மலையரசன் மகளான உமையம்மையைப் பங்காகக் கொண்டவனே; (சிலம்பு - மலை); (அரையன் - அரசன்); (அப்பர் தேவாரம் - 6.98.8 - "ஈசனை.... சிலம்பரையன் பொற்பாவை நலஞ்செய் கின்ற நேசனை ....");
அலம்புதல் - ஒலித்தல்;
அரி பிரமற்கு அரியவனே - திருமாலுக்கும் பிரமனுக்கும் அரியவனே;
கால் - காற்று;
விசும்பு - ஆகாயம்;
நலம்புரியும் சங்கரனே - சங்கரன் என்ற நாமத்தின் பொருளை விரித்துச் சொன்னது; (சங்கரன் - சுகத்தைச் செய்பவன் - Dispenser of happiness);



10)
செவியினிலோர் தோடுடையாய் செங்கோட்டில் தங்கிறையே
கவியிருள்சேர் கன்னெஞ்சக் கயவருரை பொய்விட்டுக்
குவிகரமும் கசிமனமும் கொண்டுதொழும் அடியார்க்குப்
புவியினிவா ராநிலையைப் புரப்பாய்நின் கழல்போற்றி.



செவியினில் ஓர் தோடு உடையாய் - அர்த்தநாரீஸ்வரனே; (சம்பந்தர் தேவாரம் - 1.1.1 - 'தோடுடைய செவியன்');
கவி இருள்சேர் கல் நெஞ்சக் கயவர் உரை பொய் விட்டு - மூடும் இருள் சேர்ந்த, கல் போன்ற நெஞ்சத்தை உடைய கயவர்கள் சொல்லும் பொய்களை நீங்கி; (கவி இருள்சேர் நெஞ்சம், கல் நெஞ்சம்); (கவிதல் - மூடுதல்);
குவிகரம் - குவித்த கரம்;
கசிமனம் - கசியும் மனம்;
புவி இனி வாரா நிலையைப் புரப்பாய் - இனிப் பூமியில் பிறவாத நிலையை அருள்பவனே;



11)
சியாமளையோர் பங்குடையாய் செங்கோட்டில் தங்கிறையே
கயாசுரனை வதஞ்செய்த கணபதியைப் பெற்றவனே
தயாபரனே தாளிணையைச் சார்ந்தார்க்கு நன்மையன்றிச்
செயாதவனே சேவமரும் சேவகநின் கழல்போற்றி.



சியாமளை - SyAmalA - ( श्यामला ) - சாமளை - [சாமள நிறமுடையவள்] பார்வதி.


கயாசுரனை வதஞ்செய்த கணபதியைப் பெற்றவனே - விநாயகக் கடவுளைத் தோற்றுவித்துக் கயமுகாசுரனை அழிப்பித்த வரலாற்றைக் கந்தபுராணத்துட் காண்க.
(அப்பர் தேவாரம் - 6.53.4 -
"கைவேழ முகத்தவனைப் படைத்தார் போலுங்
.. கயாசுரனை யவனாற்கொல் வித்தார் போலும்")
தயாபரன் - [தயைமிக்கவன்] கடவுள்;
தாளிணையைச் சார்ந்தார்க்கு நன்மை அன்றிச் செயாதவனே - அடி அடைந்தவர்களுக்கு என்றும் நன்மையே செய்பவன்; (அப்பர் தேவாரம் - 4.11.6 - "சலமிலன் சங்கரன் சார்ந்த வர்க்கலால் நலமிலன்...");
சே - எருது;
சேவகன் - வீரன்;



12)
சிறுமருங்குல் உமைபங்கா செங்கோட்டில் தங்கிறையே
செறுநமனைச் செற்றவனே சேயவனைப் பெற்றவனே
நறுமலரான் சிரத்தினிலூண் நயந்தவனே அடியவர்க்கோர்
உறுதுணையே நீலகண்டம் உடையாய்நின் கழல்போற்றி.



மருங்குல் - இடை;
செறுதல் - கொல்லுதல்;
சேயவன் - முருகன்;
நறுமலரான் - தாமரைமேல் இருக்கும் பிரமன்;
ஊண் - உணவு; (அப்பர் தேவாரம் - 6.89.7 - "பல்லார் தலையோட்டில் ஊணார் போலும்");



அன்பொடு,
வி. சுப்பிரமணியன்



பிற்குறிப்புகள் :
1) கொடிமாடச் செங்குன்றூர் - திருச்செங்கோடு - அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில் - தினமலர் தளத்தில்: http://temple.dinamalar.com/New.php?id=531
----------- --------------

No comments:

Post a Comment