04.37 - பொது - பல்லாண்டு
2013-12-26
பொது - பல்லாண்டு
----------------------------
(கொச்சக ஒருபோகு. - a.k.a கலித்தாழிசை.
முதல் மூன்று அடிகள் - அறுசீர். நாலாம் அடி எழுசீர்)
(சேந்தனார் - திருப்பல்லாண்டு - 9.29.1 - "மன்னுக தில்லை")
1)
செம்மலர்ப் பாதம் தொழுதெழு சிந்தையர் என்றும் சிறந்திருக்க
மும்மலம் அற்றவன் மூவரின் முன்னவன் மூப்பும் முடிவுமிலான்
இம்மையும் அம்மையும் நற்றுணை என்று விளங்கிடும் எம்பெருமான்
அம்மையைப் பங்கினில் வைத்து மகிழ்ந்த அரனுக்கே பல்லாண்டு கூறுதுமே.
செம்மலர்ப் பாதம் தொழுதெழு சிந்தையர் என்றும் சிறந்து இருக்க - தாமரை போன்ற திருவடிகளைத் தொழுதுஎழும் சிந்தை உடைய அடியவர்கள் என்றும் சிறந்து வாழ்க! (சம்பந்தர் தேவாரம் - 2.18.7 - "வழுவாள் பெருமான் கழல் வாழ்க எனா எழுவாள்");
இம்மையும் அம்மையும் நற்றுணை என்று விளங்கிடும் எம்பெருமான் - இப்பிறப்பிலும் இதன் பின்னும் நமக்கு நல்ல துணையாக உள்ள எம்பெருமான்;
அம்மையைப் பங்கினில் வைத்து மகிழ்ந்த அரனுக்கே பல்லாண்டு கூறுதுமே - அகிலங்களை ஈன்ற அம்மையான உமாதேவியைத் திருமேனியில் ஒரு பங்கில் விரும்பி வைத்த ஹரனுக்குப் பல்லாண்டு கூறுவோம்;
2)
சீர்மலி பாதம் தொழுதெழு சிந்தையர் என்றும் சிறந்திருக்க
நீர்மலி செஞ்சடை மீது நிரைமலர்க் கொன்றையும் சூடியவன்
ஊர்விடை ஒன்றை உகந்தவன் ஒண்ணுதல் மாதினைப் பங்கமர்ந்தான்
ஓர்மணி போல மிடற்றினில் நஞ்சை ஒளித்தாற்குப் பல்லாண்டு கூறுதுமே.
சீர் - நன்மை; புகழ்;
மலிதல் - மிகுதல்;
ஊர் விடை - ஏறிச்செல்லும் இடபம்;
ஒண்ணுதல் மாது - ஒள் நுதல் மாது - ஒளி பொருந்திய நெற்றியை உடைய உமாதேவி;
பங்கு அமர்ந்தான் - ஒரு பாகமாக விரும்பியவன்;
ஒளித்தாற்கு - ஒளித்தான்+கு - ஒளித்தவனுக்கு;
3)
சிவன்கழல் வாழ்த்தி எழுந்திடும் சிந்தையர் என்றும் சிறந்திருக்க
தவன்முனி நால்வருக் காலின்கீழ்ச் சங்கைகள் தீர்த்தருள் சற்குரவன்
பவன்பல பேர்கள் உடையவன் பார்வதி பங்கன் படர்சடையான்
நவன்மிக மூத்தவன் என்று திகழும்நம் நம்பற்குப் பல்லாண்டு கூறுதுமே.
சிவன்கழல் வாழ்த்தி எழுந்திடும் சிந்தையர் - சிவபெருமான் திருவடியை வாழ்த்திக்கொண்டே துயிலெழும் மனம் உடைய பக்தர்கள்; சிவபெருமான் திருவடியை வாழ்த்தி உயர்கின்ற மனத்தை உடையவர்கள் என்றும் பொருள்கொள்ளலாம்.
தவன் - தவ-வடிவினன்;
முனி நால்வருக்கு ஆலின்கீழ்ச் சங்கைகள் தீர்த்தருள் சற்குரவன் - சனகாதியர் நால்வருக்குக் கல்லால மரத்தின்கீழ் வேதப்பொருளை ஐயமறக் கற்பித்த சற்குரு; (சங்கை - சந்தேகம்);
பவன் - என்றும் இருப்பவன்; - சிவன் திருநாமங்களுள் ஒன்று;
நவன் - புதியவன்; (நவம் - புதுமை); (திருவாசகம் - திருவெம்பாவை - 8.7.9 - "முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப் பழம்பொருளே பின்னைப் புதுமைக்கும் பேர்த்துமப் பெற்றியனே");
நம்பற்கு - நம்பனுக்கு; (நம்பன் - சிவன் திருநாமங்களுள் ஒன்று; விரும்பத்தக்கவன்);
4)
சேவமர்ந் தான்கழல் வாழ்த்திடும் சிந்தையர் என்றும் சிறந்திருக்க
மூவரும் தேவரும் போற்றிசெய் முக்கணன் ஆறங்கம் நான்மறைசொல்
நாவலன் நாரியைப் பாகம் நயந்தவன் மாணிதன் ஆருயிர்க்குக்
காவலன் பாற்கடல் நஞ்சைக் கரந்தருள் கண்டற்குப் பல்லாண்டு கூறுதுமே.
சே அமர்ந்தான் - இடபத்தை ஊர்தியாக விரும்பும் சிவபெருமான்;
ஆறங்கம் நான்மறைசொல் நாவலன் - நால்வேதங்களையும் ஆறங்கங்களையும் ஓதியவன், வேதப்பொருளை உபதேசித்தவன்; (சுந்தரர் தேவாரம் - 7.48.34 - "பாண்டிக் கொடுமுடி நாவலா");
நயத்தல் - விரும்புதல்; மகிழ்தல்;
மாணி - இங்கே, மார்க்கண்டேயர்;
கண்டற்கு - கண்டனுக்கு;
5)
செஞ்சடை யான்கழல் வாழ்த்திடும் சிந்தையர் என்றும் சிறந்திருக்க
மஞ்சடை யுங்கயி லாய மலையினன் தாளடை வான்மதிசேர்
குஞ்சியன் சம்பந்தர் நற்றமிழ் கூறப்பொற் கிண்ணத்தில் பாலளித்த
வஞ்சியைப் பங்கினில் வைத்து மகிழ்ந்தவெம் மானுக்குப் பல்லாண்டு கூறுதுமே.
மஞ்சு அடையும் கயிலாய மலையினன் - மேகம் பொருந்தும் கயிலைமலைமேல் இருப்பவன்;
தாள் அடை வான்மதி சேர் குஞ்சியன் - பாதத்தில் சரண்புகுந்த வெண்மதியைத் தலைமேல் அணிந்தவன்; (குஞ்சி - தலை);
சம்பந்தர் நற்றமிழ் கூறப் பொற்கிண்ணத்தில் பால் அளித்த வஞ்சியைப் பங்கினில் வைத்து மகிழ்ந்த - திருஞான சம்பந்தர் நற்றமிழ் பாடித் துதிக்கும்படி அவருக்குப் பொற்கிண்ணத்தில் ஞானப்பாலைக் கொடுத்த உமையை ஒரு பங்காக விரும்பிய; (வஞ்சி - வஞ்சிக்கொடி போன்ற உமை - உவம ஆகுபெயர்);
எம் மான் - எம் தலைவன்; (மான் - பெரியோன்);
6)
தினமரன் தாளிணை போற்றிடும் சிந்தையர் என்றும் சிறந்திருக்க
வனமுறை வேடனின் வாய்க்கல சப்புனல் மஞ்சனம் ஏற்றுகந்தான்
மனமுரு கிப்பணி காரைக்கால் மாதினை அம்மையே என்றழைத்தான்
வனமுலை மங்கையைப் பங்கினில் வைத்து மகிழ்ந்தாற்குப் பல்லாண்டு கூறுதுமே.
வனம் உறை வேடனின் வாய்க்கலசப் புனல் மஞ்சனம் ஏற்று உகந்தான் - காட்டில் வாழ்ந்த கண்ணப்பர் தம் வாயில் கொணர்ந்த நீரால் அபிஷேகம் செய்ய அதனை ஏற்று மகிழ்ந்தவன்; (மஞ்சனம் - அபிஷேகம்); (சம்பந்தர் தேவாரம் - 3.69.4 - "வாய்கலசமாக வழிபாடு செய்யும் வேடன்");
வன-முலை - அழகிய முலை; (வனம் - அழகு);
மகிழ்ந்தாற்கு - மகிழ்ந்தவனுக்கு;
7)
தேனெனத் தித்திக்கும் சேவடிச் சிந்தையர் என்றும் சிறந்திருக்க
ஆனினுக் காக அருஞ்செயல் ஆற்று மனுவுக் கருள்புரிந்து
வானினைத் தந்தவன் ஓட்டை மறைத்துண்மைத் தொண்டர்க் கிளமைதந்தான்
மானன நோக்கி மடந்தையைப் பாகம் மகிழ்ந்தாற்குப் பல்லாண்டு கூறுதுமே.
தேன் எனத் தித்திக்கும் சேவடிச் சிந்தையர் - தேன் போல் இனிக்கும் சிவந்த திருவடியை மனத்தில் வைத்த அடியவர்கள்;
ஆனினுக்காக அரும் செயல் ஆற்று மனுவுக்கு அருள்புரிந்து வானினைத் தந்தவன் - பசுவின் துன்பத்தைக் கண்டு தன் மகனையே தேர்க்காலில் ஊர்ந்த மனுநீதிச் சோழனுக்குப் பேரருள் புரிந்தவன்; (பெரிய புராணத்தில் இவ்வரலாற்றைக் காண்க);
ஓட்டை மறைத்து உண்மைத் தொண்டர்க்கு இளமை தந்தான் - மெய்த்தொண்டில் சிறந்திருந்த திருநீலகண்டரிடம் கொடுத்துவைத்திருந்த திருவோட்டை மறைத்துப் பின் அவர்க்கு இளமையைத் தந்தவன்; (பெரிய புராணத்தில் திருநீலகண்ட நாயனார் வரலாற்றைக் காண்க);
மான் அன நோக்கி மடந்தையைப் பாகம் மகிழ்ந்தாற்கு - மான் போன்ற நோக்கினை உடைய உமாதேவியை ஒரு பாகமாக விரும்பியவனுக்கு;
8)
சேமம் தரும்கழ லேநினை சிந்தையர் என்றும் சிறந்திருக்க
சாமம் இசைத்துப் பணிந்த தசமுக னுக்குத் தயைபுரிந்தான்
காமன் மனைவிக் கிரங்கிய கண்ணுதல் வாள்நெடுங் கண்ணுமையை
வாமம் மகிழ்ந்தவன் வஞ்சமில் லாதருள் வள்ளற்குப் பல்லாண்டு கூறுதுமே.
சேமம் - க்ஷேமம் - நல்வாழ்வு; காவல்;
சாமம் இசைத்துப் பணிந்த தசமுக னுக்குத் தயைபுரிந்தான் - சாமகானம் பாடி இறைஞ்சிய பத்துத்தலைகளை உடைய இராவணனுக்கு அருளியவன்;
காமன் மனைவிக்கு இரங்கிய கண்ணுதல் - இரதி வேண்ட, அவளுக்கு இரங்கி (மன்மதனுக்கு மீண்டும் உயிர்கொடுத்து) அருள்புரிந்த நெற்றிக்கண்ணன்;
வாள் நெடும் கண் உமையை வாமம் மகிழ்ந்தவன் - ஒளி பொருந்திய, நீண்ட கண்களை உடைய உமாதேவியை இடப்பக்கம் பாகமாக விரும்பியவன்;
வஞ்சம் இல்லாது அருள் வள்ளற்கு - வஞ்சமின்றி வழங்கும் வள்ளலுக்கு;
9)
செய்ய திருவடி யேநினை சிந்தையர் என்றும் சிறந்திருக்க
வையம் அளந்தானும் வாச மலரானும் வாழ்த்தும் அழலுருவன்
மெய்யில் ஒளிர்திரு நீற்றினன் வேதம் மொழிந்தவன் வெற்பரையன்
தையல் ஒருபங்கன் தன்னொப்பில் லாத தலைவற்குப் பல்லாண்டு கூறுதுமே.
செய்ய - சிவந்த;
வையம் அளந்தான் - திருமால்;
வாச மலரான் - தாமரைமேல் இருக்கும் பிரமன்;
அழல் உருவன் - ஜோதி வடிவினன்;
மெய்யில் ஒளிர்-திருநீற்றினன் - திருமேனியில் ஒளிரும் திருநீற்றினைப் பூசியவன்; ("உண்மையில் ஒளிர்கின்றவன்; திருநீறு பூசியவன்" என்றும் பொருள்கொள்ளலாம். உபநிடத வாக்கியம் - முண்டகோபநிஷத் - 2-2-10 - "தமேவ பாந்தம் அநுபாதி சர்வம்" - When he shines, everything shines after him);
தையல் - பெண்;
தன் ஒப்பு இல்லாத தலைவற்கு - தனக்கு எவ்வித ஒப்பும் இல்லாத தலைவனுக்கு;
10)
திருநாமம் செப்ப மறவாத சிந்தையர் என்றும் சிறந்திருக்க
பெருமானின் பேர்சொல்ல அஞ்சிடும் பிட்டரும் துட்டரும் போயகல
ஒருமானும் சூலமும் கையில் உடையவன் நால்வருக் காலதன்கீழ்க்
குருவான மூர்த்தி குழையொரு காதணி கோமாற்குப் பல்லாண்டு கூறுதுமே.
பிட்டர் - பிரஷ்டர் - மதத்துக்குப் புறம்பானவர்கள்;
துட்டர் - துஷ்டர் - தீயவர்கள்;
குழை ஒரு காது அணி கோமாற்கு - ஒரு காதில் குழையை அணியும் அர்த்தநாரீஸ்வரனாகிய கோமானுக்கு; (அப்பர் தேவாரம் - 6.98.1 - "நற்சங்க வெண்குழை ஓர் காதிற் கோமாற்கே நாமென்றும் மீளா ஆளாய்");
11)
தென்மணி வாசகம் செப்புநற் சிந்தையர் என்றும் சிறந்திருக்க
பொன்மணி முத்தென்று போற்றிப் புலவர் புனைமாலை ஏற்றருள்வான்
பன்மணி ஆர்முடி வானவர் பைம்மலர் கொண்டு பரவுகின்ற
நன்மணி கண்டன் எரிபுரை செம்மேனி நாதற்குப் பல்லாண்டு கூறுதுமே.
தென் மணிவாசகம் செப்பு நல் சிந்தையர் என்றும் சிறந்து இருக்க - இனிய திருவாசகத்தைச் சொல்கின்ற நல்ல சிந்தை உடைய அன்பர்கள் என்றும் சிறந்து வாழ்க! (தென் - இனிய; அழகிய); (மணிவாசகம் - சிறந்த வாசகம் - திருவாசகம்);
பொன் மணி முத்து என்று போற்றிப் புலவர் புனைமாலை ஏற்றருள்வான் - பொன்னே, மணியே, முத்தே என்றெல்லாம் போற்றிப் புலவர்கள் புனைகின்ற தமிழ்மாலையை ஏற்று அருள்பவன்;
பல்-மணி ஆர் முடி வானவர் பைம்மலர் கொண்டு பரவுகின்ற நல்-மணிகண்டன் - பல இரத்தினங்கள் பொருந்திய கிரீடங்களை அணிந்த தேவர்கள் பசிய பூக்களால் போற்றுகின்ற நல்ல மணிகண்டன்; (பை - பசுமை; அழகு); (திருவாசகம் - திருவெம்பாவை - 8.7.13 - "பைங்குவளைக் கார்மலரால் செங்கமலப் பைம்போதால்");
எரிபுரை செம்மேனி நாதற்குப் பல்லாண்டு கூறுதுமே - தீப்போல் செம்மேனி உடைய நாதனுக்குப் பல்லாண்டு கூறுவோம். (புரைதல் - ஒத்தல்); (அப்பர் தேவாரம் - 4.4.3 - "எரிபுரை மேனியினானும்");
பிற்குறிப்பு :
1) இப்பதிகத்தின் யாப்புக் குறிப்பு:
வெண்டளை தழுவி, முதல் மூன்று அடிகள் அறுசீராகவும், ஈற்றடி எழுசீராகவும் நடக்கும் கொச்சக ஒருபோகு. - a.k.a கலித்தாழிசை.
முதல் மூன்று அடிகள் - அறுசீர். நாலாம் அடி எழுசீர்.
ஒவ்வோர் அடியினுள்ளும் வெண்டளை பயிலும். (அடிகளிடையே வெண்டளை அவசியம் இல்லை).
அடிகளின் ஈற்றுச்சீர் விளங்காய்ச் சீர். அடியினுள் வேறெங்கும் விளங்காய்ச்சீர்கள் வாரா. (கட்டளைக் கலித்துறை போன்றே).
2) உதாரணம்: சேந்தனார் - திருப்பல்லாண்டு - 9.29.1 -
மன்னுக தில்லை வளர்கநம் பத்தர்கள் வஞ்சகர் போயகலப்
பொன்னின்செய் மண்டபத் துள்ளே புகுந்து புவனியெல் லாம்விளங்க
அன்ன நடைமட வாள்உமை கோன்அடி யோமுக் கருள்புரிந்து
பின்னைப் பிறவி யறுக்க நெறிதந்த பித்தற்குப் பல்லாண்டு கூறுதுமே.
வி. சுப்பிரமணியன்
----------------- ----------------