Saturday, June 24, 2017

03.04.049 - சிவன் - கதவு - சிலேடை - 2

 03.04 – சிவன் சிலேடைகள்


2006-05-08

3.4.49 - சிவன் - கதவு - சிலேடை - 2

-------------------------------------------------------------

ஒருநிலையில் உள்ளபொருள் உள்ளும் புறமும்

இருக்கும் இசைபாடும் சாதனமும் காட்டும்

வருவதும் போவதும் கண்டுநிற்கும் மஞ்சார்

கருமிடற் றண்ணல் கதவு.


சொற்பொருள்:

நிலை - 1. கதவின் நிலை (Door frame); / 2. மாறாத தன்மை;

சாதனம் - 1. கருவி; / 2. உருத்திராக்ஷம்;

மஞ்சு - மேகம்;

ஆர்தல் - ஒத்தல்;

மிடறு - கண்டம் (throat);


கதவு:

ஒரு நிலையில் உள்ள பொருள் - நிலையில் பொருத்தப்பெற்று இருக்கும்;

உள்ளும் புறமும் இருக்கும் - வீட்டின் உள்ளேயும் வெளியேயும் இருக்கும்;

இசை பாடும் சாதனமும் காட்டும் - (வந்தவர்களது வருகையை அறிவிக்க) விதவிதமான ஒலிகளை இசையோடு எழுப்பும் கருவியும் அதில் இருக்கும் (Doorbell / chime);

வருவதும் போவதும் கண்டு நிற்கும் - (பலர்) வருவதையும் போவதையும் கண்டு நிற்கும்;

கதவு.


சிவன்:

ஒருநிலையில் உள்ள பொருள் - என்றும் மாறாமல், விருப்பு வெறுப்பு இன்றி இருக்கும் மெய்ப்பொருள்.

உள்ளும் புறமும் இருக்கும் - பிரபஞ்சத்தின் உள்ளும் இருப்பவன், அதனைக் கடந்தும் இருப்பவன்; (அப்பர் தேவாரம் - 6.68.5 - "மேலுலகுக்கு அப்பாலாய் இப்பாலானை");

இசை பாடும் - இசை பாடுவான்;

சாதனமும் காட்டும் - உருத்திராக்ஷம் அணிபவன்; (அப்பர் தேவாரம் - திருமுறை 6.61.3 - எவரேனும் தாமாக இலாடத்து இட்ட திருநீறும் சாதனமும் கண்டால் உள்கி");

வருவதும் போவதும் கண்டுநிற்கும் - எல்லா உலகங்களும் உயிர்களும் தோன்றி மறைவதைக் கண்டு நிற்பவன்; (அதாவது ஊழிக்காலத்திலும் அழியாது இருப்பவன்);

மஞ்சு ஆர் கருமிடற்று அண்ணல் - மேகம் போன்ற கரிய கண்டத்தை உடைய தலைவன்;


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------

03.04.048 - சிவன் - கதவு - சிலேடை - 1

03.04 – சிவன் சிலேடைகள்



2006-05-06
48) சிவன் - கதவு - சிலேடை - 1
-------------------------------------------------------------
செல்லும் வழிகாட்டும் செல்வர் சமயத்தில் (**1)
நல்லஇரு கூறாய் நமைக்காக்கும் சொல்லும்
ஒருசொல் தளைநீக்கும் மேலே ஒருகண்
இருக்கும் கதவெம் மிறை.



செல்வர் - 1) போவார்கள்; 2) திரு உடையவர்;
சமயம் - 1) காலம்; தருணம்; 2) மதம்; (சைவசமயம்);
ஒரு - 1) ஒன்று; 2) ஒப்பற்ற;
தளை - 1) தாழ்; 2) பந்தம்;
மேலே - 1) உயரத்தில்; மீது; 2) அதிகப்படி (extra);
கண் - 1) துவாரம்; 2) விழி;
இறை - கடவுள்; இறைவன்;



கதவு:
நம் செல்வதற்கு வழியைக் காட்டும், அதன் வழியே மக்கள் செல்வார்கள்; ஓரொருகால் இரண்டாகப் பிரிந்து அமையும், (Double door); நம்மைக் காக்கும், வெளியில் நிற்போர் தாம் இன்னார் என்று சொன்னவுடன் தாழ்ப்பாளை நீக்கும் (திறக்கும்); அதன்மீது சாவித்துளை / பார்க்கும் துளை (peephole) உண்டு.



சிவன்:
நாம் செல்வதற்கு நல்வழியைக் காட்டுகின்ற செல்வர் (வீடுபேறாகிய செல்வத்திற்குரிய பெருமான்); சைவசமயத்தில் (-அல்லது- காட்சிகொடுக்கும்போது சில நேரங்களில்) இரண்டு உருவங்களாகி அர்த்தநாரியாய்த் தோன்றுவார்; ஒப்பற்ற சொல்லான அவன் திருநாமத்தைச் சொன்னால் நம் பந்தங்களை நீக்குவான், கூடுதலாக ஒரு கண் உடையவன் - நெற்றிக்கண் உடையவன். எம் இறைவன்;



(**1 - சம்பந்தர் தேவாரம் - 1.80.5 -
செல்வ நெடுமாடம் சென்று சேணோங்கிச்
செல்வ மதிதோயச் செல்வம் உயர்கின்ற
செல்வர் வாழ்தில்லைச் சிற்றம் பலமேய
செல்வன் கழலேத்தும் செல்வம் செல்வமே.
);



அன்போடு,

வி. சுப்பிரமணியன்

03.04.047 - சிவன் - தொலைக்காட்சி - சிலேடை

03.04 – சிவன் சிலேடைகள்

2006-04-27

3.4.47 - சிவன் - தொலைக்காட்சி (Television) - சிலேடை

-------------------------------------------------------------

வீட்டில் இருக்கும் விரும்பிப் பலர்காண்பர்

பாட்டிசைக்கப் பல்வகைக் கூத்துகளும் காட்டுமந்தம்

இன்றித் தொடரும் வரும்துணையாம் கையில்மான்

கன்றன் தொலைக்காட்சி காண்.


சொற்பொருள்:

வீடு - 1. இல்லம்; / 2. முக்தி; மோட்சம்; சம்ஹாரம்;

காணுதல் - 1. பார்த்தல்; / 2. ஆராய்தல்; வணங்குதல்;

கூத்து - நாடகம்; நடனம்;

அந்தம் - முடிவு; அழகு;

காண் - முன்னிலை அசை;


தொலைக்காட்சி (Television):

வீட்டில் இருக்கும் - இல்லத்தில் இருக்கும்;

விரும்பிப் பலர் காண்பர் - அதனைப் பலரும் விரும்பிப் பார்ப்பார்கள்;

பாட்டு இசைக்கப் பல்வகைக் கூத்துகளும் காட்டும் - பாட்டோடு இணைந்து பலவகை நடனங்கள் அது காட்டும்;

அந்தம் இன்றித் தொடரும் வரும் - (அதனில்) முடிவே இல்லாமல் தொடர்களும் ("mega-serial") வரும்.

துணை ஆம் - (பலருக்கு அது பொழுது போக்கத்) துணை ஆகும்;

தொலைக்காட்சி - Television;


சிவன்:

வீட்டில் இருக்கும் - முக்தி நிலையில் இருப்பான்; (-அல்லது- (பிரபஞ்சம் அழியும்) சங்காரத்திலும் இருப்பான்);

விரும்பிப் பலர் காண்பர் - பலரும் விரும்பி ஆராய்வார்கள் (-அல்லது- வணங்குவார்கள்); (திருநாவுக்கரசர் தேவாரம் - 4.81.8 - "பல்லக விளக்கது பலரும் காண்பது");

பாட்டு இசைக்கப் பல்வகைக் கூத்துகளும் காட்டும் - பல பூதகணங்கள் வாத்தியங்களை இசைத்துப் பாடப் பலவகைக் கூத்துகள் ஆடுவான்;

அந்தம் இன்றித் தொடரும் - முடிவே இன்றி எப்பொழுதும் தொடர்ந்து இருப்பான். (அழிவற்றவன் - அனந்தன்);

வரும் துணை ஆம் - (அன்பர்களுக்குக் கூடவே) வரும் துணை ஆவான்;

கையில் மான்கன்றன் - கையில் மான்கன்றை ஏந்திய சிவபெருமான்;


இலக்கணக் குறிப்பு:

"செய்யும்" என்னும் வாய்பாட்டு வினைமுற்றில் உள்ள "உம்" விகுதி நிகழ்காலமும், எதிர்காலமும் உணர்த்தும். படர்க்கை ஆண்பால், பெண்பால், ஒன்றன்பால், பலவின்பால் ஆகியவற்றில் மட்டுமே இது இடம்பெறும்.


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------

03.04.045 - சிவன் - 1729 - சிலேடை

03.04 – சிவன் சிலேடைகள்

2006-04-25

3.4.45 - சிவன் - 1729 - சிலேடை

-------------------------------------------------------------

எண்ணிலோர் ஆயிரத் தெட்டோ டெழுநூற்றெட்

டுண்ணிற்கும் எட்டுமஞ்சு முன்னிடில் மண்ணினில்

கற்றவர்சீர் பேசிக் களிக்கின்ற சங்கைவெண்

பெற்றம தேறும் பிரான்.


பதம் பிரித்து:

எண்ணிலோர் ஆயிரத்தெட்டோடு எழுநூற்றெட்டு

உள்-நிற்கும் எட்டும் அஞ்சும் உன்னிடில் மண்ணினில்

கற்றவர் சீர் பேசிக் களிக்கின்ற சங்கை வெண்

பெற்றமது ஏறும் பிரான்.


சொற்பொருள்:

எண்ணிலோர் - 1. எண்களில் ஓர்; / 2. எண்ணற்றவர்கள்;

எழுநூற்றெட்டு - 1. எழுநூற்றெட்டு (708); / எழு + நூற்றெட்டு (108);

எழுதல் - உயர்தல்; வளர்தல்;

உள் - 1. உள்ளே; / 2. மனம்;

எட்டும் - 1. எட்டு என்ற எண்ணும்; / 2. கிட்டும்; அகப்படும்;

அஞ்சுமுன்னிடில் - 1. அஞ்சும் உன்னிடில்; / 2. அஞ்சு முன்னிடில்;

உன்னுதல் - நினைத்தல்;

முன்னுதல் - கருதுதல்; நினைத்தல்;

வண்ணம் - தன்மை; குணம்;

கற்றவர் - 1. இங்கே, கணிதசாஸ்திரம் கற்றவர்கள்; / 2. ஞானநூல்களைக் கற்றவர்கள்;

சீர் - புகழ்;

சங்கை - எண் (number);

பெற்றம் - எருது;


1729:

எண்ணில் ஓர் ஆயிரத்தெட்டோடு எழுநூற்றெட்டு உள் நிற்கும் எட்டும் அஞ்சும் உன்னிடில் - (உன்னிடில் எண்ணில் ஓர் ஆயிரத்தெட்டோடு எழுநூற்றெட்டு எட்டும் அஞ்சும் உள் நிற்கும்) - சிந்தித்தால், இந்த எண்ணில் 1008, 708, 8, 5 இவை உள்ளே அடங்கும்; (1008 + 708 + 8 + 5 = 1729);

மண்ணினில் கற்றவர் சீர் பேசிக் களிக்கின்ற சங்கை - மண்ணுலகில் எண்களை நினைக்கின்ற கணிதசாஸ்திரம் கற்றவர்கள் புகழைப் பேசி மகிழ்கின்ற எண் ஆகும்; (** 1)


சிவன்:

எண்ணிலோர் ஆயிரத்தெட்டோடு எழு-நூற்றெட்டு உள் நிற்கும் - (ஆயிரத்தெட்டோடு எழு-நூற்றெட்டு எண்ணிலோர் உள் நிற்கும்) - 1008, உயர்ந்த 108 நாமங்கள் எண்ணற்றவர்கள் மனத்தில் தங்கும்;

எட்டும் அஞ்சு முன்னிடில் - திருவைந்தெழுத்தைத் தியானித்தால் அவனை அடையலாம்;

மண்ணினில் கற்றவர் சீர் பேசிக் களிக்கின்ற - மண்ணுலகில் ஞானநூல்களைக் கற்றவர்கள் புகழைப் போற்றி இன்புறுகின்ற;

வெண் பெற்றமது ஏறும் பிரான் - வெள்ளை எருதை வாகனமாக உடைய பெருமான்;


பிற்குறிப்பு:

**1) Special property of 1729:

1729 is known as the Hardy–Ramanujan number.

It is the smallest number expressible as the sum of two cubes in two different ways.

1729 = 1 cube + 12 cube = 9 cube + 10 cube.


2) சந்தவசந்தத்தில் பாலு என்ற அன்பர் எழுதியது:

நம் சிவ-சிவ-நாயனாரின் கணிதத்திறமைக்குக் காணிக்கையாக அவருக்கு இன்னும் இரண்டு அட்வான்ஸ்டு கணிதப் பிராப்ளங்கள்:-


நிரூபிக்க :-

1. சிவன் = 1729

2. சிவன் = 'பை' [வட்டத்தின் சுற்றளவுக்கும் விட்டத்துக்கும் உள்ள விகிதம்]


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------

Saturday, June 17, 2017

03.04.044 - சிவன் - சிவன் அல்லன் - சிலேடை

03.04 – சிவன் சிலேடைகள்

2006-04-24

3.4.44 - சிவன் - சிவன் அல்லன் - சிலேடை

-------------------------------------------------------------

தந்தை உடையவன் ஓர்விழியி லாதவன்

சிந்திப்பார்க் கெட்டா னவன்வீடு தேடிவந்து

வந்திப்பார் ஏவல்செய் தேய்மதியன் பாரிக்கு

மைந்தன் இவன்சி வனே.


சொற்பொருள்:

உடையவன் - உரிமை உள்ளவன்; செல்வம் உள்ளவன்;

ஆதவன் - ஆதபன் - சூரியன். (வெம்மையைச் சுட்டி வந்தது).

எட்டானவன் - 1. எட்டான் அவன்; எள் தான் அவன்; / 2. எட்டு ஆனவன்;

எள் - எள் என்ற சிறிய தானியம்; நிந்தை;

வீடு - 1. இல்லம்; மனை; / 2. முக்தி; வினைநீக்கம்;

ஏவல் செய்தல் - 1. பணி செய்தல்; / 2. தொண்டு செய்தல்;

மதி - 1. அறிவு; / 2. சந்திரன்; (** திருவாசகம் - நீத்தல் விண்ணப்பம் - 8.06.46)

பாரி - ஒரு மனிதனின் பெயர்; (உதாரணம் - கடையேழு வள்ளல்களுள் ஒருவர் பெயர்);

பாரித்தல் - காத்தல்; வளர்த்தல்; (திருவாசகம் - சிவபுராணம் - அடி 64 - "பாசமாம் பற்றறுத்துப் பாரிக்கும் ஆரியனே");

மைந்தன் - 1. மகன்; கணவன்; இளைஞன்; / 2. வீரன்; (அப்பர் தேவாரம் - 6.32.1 -"வானவர்கள் போற்றும் மருந்தே போற்றி")

சிவனே - இங்கே, - 1. வினா ஏகாரம்; / 2. தேற்ற ஏகாரம்; ஈற்று அசை;


சிவன் அல்லன்:

தந்தை உடையவன் - இவனுக்குத் தந்தை உள்ளார்;

ஓர் விழி இலாதவன் - குருடன்;

சிந்திப்பார்க்கு எள்-தான் அவன் (/எட்டான் அவன்) - கற்றவர்களால் அற்பமாகக் கருதப்படுபவன்; (- அல்லது - சிந்திப்பவர்களுக்குப் புலப்படாதவன்);

வீடு தேடிவந்து வந்திப்பார் ஏவல் செய் தேய்-மதியன் - தன் இல்லத்தைத் தேடிவந்து புகழ்பவர்களுக்குப் பணிசெய்கின்றவன், அறிவற்றவன்.

பாரிக்கு மைந்தன் - பாரி என்பவனுக்கு மகன்.

இவன் சிவனே? - இவன் சிவனா? (அல்லன்).


சிவன்:

தந்தை - தந்தை;

உடையவன் - எல்லாம் உடையவன்; (-- அல்லது -- எம்மை உடையவன்);

ஓர் விழியில் ஆதவன் - ஒரு கண்ணில் வெம்மை இருக்கும். (ஆதவன் = சூரியன் என்று பொருள்கொண்டால், "சூரியனை ஒரு கண்ணாக உடையவன்);

சிந்திப்பார்க்கு எட்டு ஆனவன் - சிந்திப்பவர்களுக்கு எட்டு (அட்டமூர்த்தி) ஆனவன்;

வீடு தேடி, வந்து வந்திப்பார் ஏவல் செய் தேய்-மதியன் - முக்தியை நாடி வந்து அன்பர்கள் தொண்டுசெய்து வழிபடும் சந்திரசேகரன்;

பாரிக்கு(ம்) மைந்தன் - காத்தருளும் வீரன்;

இவன் சிவனே - இவன் சிவன்தான்;


பிற்குறிப்புகள்:

1) இப்பாடலை எழுதத் தூண்டிய விஷயம்:

சந்தவசந்தக் குழுவில் பாலு என்ற அன்பர் எழுதியது:

கொள்ளை கொள்ளையாகச் சிலேடை எழுதித்தள்ளிக்கொண்டிருக்கிறீர்கள்! எல்லாவற்றுக்கும் ஒரே பொது அம்சம் - சிலேடைச்சொற்களைப் போட்டு நிறுவப்படுவது

"ஒரு பொருள் = இன்னொரு பொருள்" (அதாவது A = B.)

Now, கேளுங்கள், சிலேடையைப் பயன்படுத்தி,

A is NOT equal to A

என்ற திசையில் யாரேனும் சென்றதுண்டா? முயன்று பாருங்களேன் - "சிவனும் சிவனும் ஒன்றல்ல, வெவ்வேறு". எப்படி!


2) ** - திருவாசகம் - நீத்தல் விண்ணப்பம் - 8.06.46 -

உழைதரு நோக்கியர் கொங்கைப் பலாப்பழத்து ஈயின் ஒப்பாய்

விழைதருவேனை, விடுதி கண்டாய், விடின், வேலை நஞ்சு உண்

மழைதரு கண்டன், குணம் இலி, மானிடன், தேய்மதியன்,

பழைதரு மாபரன் என்றென்று அறைவன் பழிப்பினையே.


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------

03.04.043 - சிவன் - நான்கு - சிலேடை

03.04 – சிவன் சிலேடைகள்

2006-04-23

3.4.43 - சிவன் - நான்கு - சிலேடை

-------------------------------------------------------------

மக்களுக்கு வாழ்வின் நிலையாம் நெறிகாட்டும்

திக்குமாம் செப்பும் படையாகும் தக்க

இலக்காம் மறைகளவை எல்லாமாம் எண்ணில்

நலத்தையருள் நாரிபங்கன் நான்கு.


சொற்பொருள்:

வாழ்வினிலை - வாழ்வின் நிலை; / வாழ்வில் நிலை;

நிலை - 1. ஆசிரமம்; / 2. நெறி; உறுதி;

இன் - 1. சாரியை; 2. ஏழாம் வேற்றுமை உருபு;

நெறி - வழி;

திக்கு - 1. திசை; / 2. புகலிடம்;

படை - 1. சேனை; / 2. ஆயுதம்;

இலக்கு - இலட்சியம்; நாடும் பொருள்; குறி;

எண்ணில் - 1. எண்களில்; / 2. a. எண் + இல் (எண்ணற்ற); b. எண்ணினால் (சிந்தித்தால் / தியானித்தால்);

நாரி - பெண்;


நான்கு:

மக்களுக்கு வாழ்வின் நிலை ஆம் - மனிதருக்கு வாழ்க்கையின் நிலைகள் நான்கு - (பிரமசரியம், கிருஹஸ்தம், வானப்பிரஸ்தம், சன்னியாசம்);

நெறி காட்டும் திக்கும் ஆம் - வழி காட்டும் திசைகள் நான்கு;

செப்பும் படை ஆகும் - சொல்லப்படும் படைகள் நான்கு - (யானை, தேர், பரி, காலாள்);

தக்க இலக்கு ஆம் - தகுந்த குறிக்கோள்கள் நான்கு - (அறம், பொருள், இன்பம், வீடு).

மறைகளவை எல்லாம் ஆம் - வேதங்கள் நான்கு.

எண்ணில் நான்கு - எண்களில் நான்கு;


சிவன்:

மக்களுக்கு வாழ்வின் நிலை ஆம் நெறி காட்டும் திக்கும் ஆம் - மக்களுக்கு வாழ்க்கையில் ஸ்திரமான நிலை ஆகும் நன்னெறி காட்டும் புகலிடம் ஆவான்;

செப்பும் படை ஆகும் - (நாவால்) சொல்லும் ஆயுதம் ஆவான்; (அவன் திருநாமம் நம்மைக் காக்கும்); (அப்பர் தேவாரம் - 4.81.8 – "படைக்கலமாக உன் நாமத்தெழுத் தஞ்சென் நாவிற்கொண்டேன்" - என்னைத் தீங்குகளிலிருந்து பாதுகாக்கும் படைக்கருவியாக உன் திருநாமமாகிய திருவைந்தெழுத்தை என் நாவில் எப்பொழுதும் தாங்கியுள்ளேன்");

தக்க இலக்கு ஆம் - நல்ல குறிக்கோள் ஆவான்;

மறைகளவை எல்லாம் ஆம் - வேதங்கள் எல்லாம் அவன். (அப்பர் தேவாரம் - 6.5.8 - "நான்மறையோ டாறங்கம் ஆனாய் போற்றி");

எண்ணில் நலத்தை அருள் நாரிபங்கன் - நினைப்பவர்களுக்கு எண்ணற்ற நலங்கள் அருள்கின்ற உமைபங்கன்; (எண்ணில் - என்ற சொல்லை இப்படி இருமுறை இயைத்துப் பொருள்கொள்ளல் ஆம்);


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------

03.04.042 - சிவன் - குயவன் - சிலேடை

03.04 – சிவன் சிலேடைகள்

2006-04-23

3.4.42 - சிவன் - குயவன் - சிலேடை

-------------------------------------------------------------

உளியின்றி ஏரார் உருக்கொள்ளும் மண்ணிற்

களிவிரும்பிக் கையேந்திச் சுற்றி எளிதிலெலாம்

செய்து மதனைச் சுடுமொருவன் சேவேறு

மைதிகழ்கண் டன்குய வன்.


சொற்பொருள்:

உளி - டங்கம்; (Stone-cutter's chisel; கற்றச்சன் உளி);

விடங்கன் - 1. உளியினாற் செதுக்கப்படாது தானே உண்டான சுயம்பு லிங்கம்; 2. பேரழகு திகழும் உருவம் உடையவன்;

ஏர் ஆர் - அழகிய;

மண் - 1. மண்; / 2. பூமி;

களி - 1. களிமண்; / 2. a. களிப்பு; மகிழ்ச்சி; b. உணவில் ஒரு வகை (திருவாதிரைக் களி, கஞ்சி, போன்றவை);

ஏந்துதல் - 1. கையிலெடுத்தல்; / 2. கையில் தாங்குதல்;

கையேந்துதல் - பிச்சையெடுத்தல்;

சுற்றுதல் - 1. சுழலும்படிச் செய்தல்; (spin); / 2. அலைதல்;

செய்துமதனை - 1. செய்தும் அதனை; / 2. செய்து மதனை;

மதன் - மன்மதன்;

சுடுதல் - 1. சூளையில் சுடுதல்; / 2. எரித்தல்;

ஒருவன் - 1. ஒருத்தன்; / 2. ஒப்பற்றவன்;

சே - எருது;

மை - கருமை;


குயவன்:

உளி ன்றி ஏர் ஆர் உருக் கொள்ளும் மண்ணில் களி விரும்பிக் கை ந்திச் சுற்றி - உளியைப் பயன்படுத்தாமல் அழகிய உருவம் பெறும் களிமண்ணை விரும்பிக் கையில் எடுத்துச் (சக்கரத்தில் வைத்துச்) சுற்றி;

எளிதில் எலாம் செய்தும் அதனைச் சுடும் ஒருவன் - சுலபமாக எல்லாப் பொருள்களையும் (மட்பாண்டங்களையெல்லாம்) செய்து, (அப்படி ஒரு மட்பாண்டத்தைச் செய்தபின்) அதனைச் சூளையில் சுடுபவன்; (எலாம் செய்தும் அதனை - ஒருமைபன்மை மயக்கம்; உம் - அசை);

குயவன் - ஒரு குயவன்;


சிவன்:

உளி ன்றி ஏர் ஆர் உருக் கொள்ளும் - விடங்கனாக அழகிய உருவம் கொள்வான். (பல கோயில்களில் சுயம்பு மூர்த்தம்); (திருவாரூர் முதலாகிய சப்தவிடங்கத் தலங்கள் காண்க);

மண்ணில் களி விரும்பிக் கையேந்திச் சுற்றி - பூமியில் உணவை விரும்பிப் பிச்சையேற்றுத் திரிந்து; (களி - இங்கே பலி (உணவு) என்ற பொருளில்);

எளிதில் எலாம் செய்து - திருவுளம் வைத்த அளவில் எல்லாவற்றையும் நிகழ்த்தி; (எல்லாவற்றையும் சங்கற்பத்தாலே செய்கின்ற பெருமான்);

மதனைச் சுடும் ஒருவன் - மன்மதனை எரித்த ஒப்பற்றவன்;

சே ஏறு மை திகழ் கண்டன் - இடபவாகனத்தை உடைய நீலகண்டன்;


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------

03.04.041 - சிவன் - கைக்கடிகாரம் (wristwatch) - சிலேடை

03.04 – சிவன் சிலேடைகள்

2006-04-22

3.4.41 - சிவன் - கைக்கடிகாரம் (wristwatch) - சிலேடை

-------------------------------------------------------------

மணிகாட்டு முள்ளிருக்கும் மாந்தர்கரம் சேரும்

அணிவார் குழலாரும் அங்குப் பணிசெய்வார்

பார்க்கவிழை கோலம் பலவிருக்கும் சங்கரன்கை

ஆர்க்கும் கடிகாரம் ஆம்.


சொற்பொருள்:

மணிகாட்டு முள்ளிருக்கும் - 1. மணி காட்டு முள் இருக்கும்; / 2. மணி காட்டும் உள் இருக்கும்;

உள் - உள்ளம்; மனம்;

சேர்தல் - 1. பொருந்துதல்; / 2. ஒன்றுகூடுதல்;

அணிதல் - தரித்தல்;

அணி - அழகு;

வார் - நீண்ட;

குழல் - 1. பெண்ணின் கூந்தல் / 2. ஆகுபெயராய் வந்து பெண்ணைக் குறித்தது;

ஆர்தல் - பொருந்துதல்;

அங்கு - அசைச்சொல்;

பணிசெய்தல் - 1. வேலை செய்தல்; / 2. தொண்டு செய்தல்;

பார்த்தல் - 1. கண்ணால் நோக்குதல்; / 2. தரிசித்தல்; ஆராய்தல்; வணங்குதல்;

விழைதல் - விரும்புதல்;

கோலம் - வடிவம்;

ஆர்த்தல் - கட்டுதல்;


கடிகாரம்:

மணி காட்டு முள் ருக்கும் - நேரத்தைக் காட்டுகின்ற முள் இருக்கும்.

மாந்தர்-கரம் சேரும் - மக்களது கையில் பொருந்தும்; (கையில் அணிவர்).

அணிவார் குழலாரும் அங்குப் - பெண்களும் அதனை அணிவார்கள்;

பணிசெய்வார் பார்க்க விழை கோலம் பல இருக்கும் - வேலைசெய்கின்றவர்கள் பார்க்க விரும்பும், பல வடிவம் இருக்கும்;

கை ஆர்க்கும் கடிகாரம் ஆம் - கையில் கட்டும் கடிகாரம் ஆகும்;


சிவன்:

மணி காட்டும் - (கண்டத்தில் ஆலகாலத்தால் ஆன) மணியைக் காட்டுவான்.

ள் ருக்கும் மாந்தர் கரம் சேரும் - (அவன் தங்கள்) மனத்தில் இருக்கும் மக்களது கை கூப்பும் (கைகூப்பி வணங்குவர்);

அணி வார்-குழல் ஆரும் அங்குப் - அழகிய நீண்ட கூந்தலை உடைய உமையும் அங்கே (திருமேனியில்) பொருந்துவாள்; (உமையொரு பங்கன்);

அணி வார்-குழலாரும் அங்குப் பணிசெய்வார் - அழகிய நீண்ட கூந்தலை உடைய பெண்களும் தொண்டுசெய்வார்கள்; ("அணிவார் குழலாரும் அங்குப் பணிசெய்வார்" - என்ற சொற்றொடர் இப்படி இருமுறை இயைத்துப் பொருள்கொள்ளுமாறு நின்றது);

பணிசெய்வார் பார்க்க விழை கோலம் பல இருக்கும் - தொண்டுசெய்பவர்கள் தரிசிக்க விரும்பும் வடிவங்கள் பல இருக்கும்;

சங்கரன் ஆம் - சங்கரன் (நன்மையைச் செய்பவன்) என்ற திருநாமம் உடைய சிவபெருமான்;


யாப்புக் குறிப்பு :

மாந்தர்கரம் - ரகர ஒற்றை நீக்கி அலகிட்டுக் கூவிளங்காய் என்று கொள்க.

உதாரணமாக:

நம்பியாண்டார் நம்பி - திருநாரையூர் விநாயகர் இரட்டை மணிமாலை - 11.31.9 -

வனஞ்சாய வல்வினைநோய் நீக்கி வனசத்

தனஞ்சாய லைத்தருவா னன்றோ - இனஞ்சாயத்

தேரையூர் நம்பர்மகன் திண்தோள் நெரித்தருளும்

நாரையூர் நம்பர்மக னாம்.


"நம்பர்மகன்" இரண்டிலும் ரகர ஒற்று அலகு பெறாது நின்றது.


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------