Sunday, October 11, 2015

02.31 – ஊன்றாப்பு - (Kamakshi temple in Hamm-Uentrop in Germany)

02.31 – ஊன்றாப்பு - (Kamakshi temple in Hamm-Uentrop in Germany)



2011-10-01
ஊன்றாப்பு - (Kamakshi temple in Hamm-Uentrop in Germany)
(ஜெர்மனியில் 'ஹாம்' நகரின் ஒரு பகுதியான 'ஊன்றாப்பு' என்ற இடத்தில் இருக்கும் காமாக்ஷி கோயில்)
----------------------------
(கலிவிருத்தம். 'மா மா மா காய்' என்ற வாய்பாடு.
அடி ஈற்றுச்சீர்கள் பெரும்பாலும் விளங்காய்ச் சீர்; ஒரோவழி மாங்காய்ச்சீர்.)

(எல்லாப் பாடல்களும் ஒரே எதுகை & ஒரே ஈற்றடி)




1)
நான்ம றைகள் நவிலும் நாவினனைப்
பான்ம தித்துண் டணியும் பண்பினனைத்
தேன்ம லர்த்தாள் சிந்தை செய்பவர்சேர்
ஊன்றாப் பரனை ஓதி உய்ம்மனமே.



பான்மதித்துண்டு - பால் மதித்துண்டு - வெண்பிறைச்சந்திரன்;
ஊன்றாப்பரனை - ஊன்றாப்பு அரனை - ஊன்றாப்பில் உறையும் அரனை;


மனமே! நால்வேதங்களை சொல்லியருளிய திருநா உடையவனைப், பால் போன்ற வெண்பிறைச்சந்திரனைச் சூடுபவனைத், தேன்மலர்போல் திகழும் திருவடியைத் தியானிப்பவர்கள் சேரும் ஊன்றாப்பில் உறையும் ஹரனை ஓதி உய்வு பெறுவாயாக.



2)
ஆன்வி ரும்பி ஏறும் அற்புதனை
ஆன்ம கிழ்ந்து மாந்தும் ஆரமுதை
வான்வ ழங்கும் வளம்சேர் மணிநகராம்
ஊன்றாப் பரனை ஓதி உய்ம்மனமே.



ஆன் - இடபம்; காளை;
ஆன்மகிழ்ந்து மாந்தும் - ஆல் மகிழ்ந்து மாந்தும் - விரும்பி விடத்தை உண்ணும்;
ஆரமுதை - அரிய அமுதம் போன்றவனை;
வான் - மேகம்; மழை; வானுலகு;
வளம் - செழுமை; நன்மை;
மணி - அழகு;
வான் வழங்கும் வளம் சேர் மணி நகராம் - மழைவளம் சேரும் அழகிய நகரான; / வானுலகை வழங்கும் நன்மைசேரும் அழகிய நகரான;


(அப்பர் தேவாரம் - 4.40.2 - "ஆலலால் இருக்கை இல்லை ... வேலை ஆலலால் அமுதம் இல்லை ஐயனை யாற னார்க்கே." - ஐயன் ஐயாறனார்க்குக் .... கடல் விடத்தைத் தவிர உணவு வேறு இல்லை.)



3)
கான்றாங் கலர்கள் இட்டுக் கழல்தொழுத
வான்றாங் கிரதத் திட்ட மலரடியைத்
தான்றாங் காதச் சிறவும் மற்றொருதாள்
ஊன்றாப் பரனை ஓதி உய்ம்மனமே.



பதம் பிரித்து:
கான் தாங்கு அலர்கள் இட்டுக் கழல் தொழுத
வான் தாங்கு இரதத்து இட்ட மலரடியைத்
தான் தாங்காது அச்சு இறவும் மற்றொரு தாள்
ஊன்றாப் பரனை ஓதி உய்ம்மனமே.


கான் - வாசனை;
வான் - தேவர்கள்;
இறுதல் - முரிதல்;
ஊன்றாப் பரனை - ஊன்றாத பரனை;


மனமே! (முப்புரம் எரித்த நாளில்) வாச மலர்களை இட்டுத் திருவடியைப் போற்றிய தேவர்கள் உறுப்புகளாக அமைந்த தேரில் சிவபெருமான் ஒரு காலை வைத்து ஏறியதும், அதனைத் தாங்காது அத்தேரின் அச்சு முரிந்ததால், தன் மற்றொரு திருவடியை அத்தேரில் வைத்திடாத பரமனை ஓதி உய்வு பெறுவாயாக.



4)
மீன்போல் விழியாள் கூறார் மேனியனை
மான்தாங் குகரம் காட்டும் மன்னவனைத்
தோன்றாத் துணையைக் கன்றாப் பினில்வருமோர்
ஊன்றாப் பரனை ஓதி உய்ம்மனமே.



பதம் பிரித்து:
மீன்போல் விழியாள் கூறு ஆர் மேனியனை,
மான் தாங்கு கரம் காட்டும் மன்னவனைத்,
தோன்றாத் துணையைக், கன்றாப்பினில் வரும் ஓர்
ஊன்று ஆப்பு அரனை ஓதி உய்ம் மனமே.


ஆர்தல் - பொருந்துதல்;
மீன்போல் விழியாள் கூறு ஆர் மேனியனை - மீன் போன்ற விழியுடைய பார்வதி ஒரு பாகமாகப் பொருந்தும் திருமேனி உடையவனை;
கன்றாப்பு - திருக்கன்றாப்பூர்;
ஓர் - ஒரு; ஒப்பற்ற;
ஊன்றுதல் - நடுதல்; ஆப்பு - முளை - தறி (peg, stake);
ஊன்று ஆப்பு அரன் - நடுதறியப்பர் (ஊன்றிய முளையில் தோன்றிய ஈசன்);
கன்றாப்பினில் வரும் ஓர் ஊன்று ஆப்பு அரன் - கன்றாப்பினில் ஓர் ஊன்று ஆப்பு வரும் அரன் - திருக்கன்றாப்பூரில் நடுதறியில் தோன்றிய அரன் - நடுதறியப்பர்;
ஊன்றாப்பு அரனை ஓதி உய்ம் மனமே - ஊன்றாப்பில் உறையும் ஹரனை ஓதி உய்வு பெறுவாயாக.
குறிப்பு: "ஊன்றாப் பரனை" என்ற சொற்றொடரை இருபுறமும் இயைத்துப் பொருள்கொள்க. (இடைநிலைத்தீவகம் - இடைநிலை விளக்கு);


(திருக்கன்றாப்பூர் - தலவரலாறு - ஊர்க்கும் இறைவர்க்கும் முறையே கன்றாப்பூர், நடுதறியப்பர் எனப் பெயர் ஏற்பட்டமைக்குக் காரணம்: சைவர் குடியில் தோன்றிய ஒரு பெண்ணை, அவரது பெற்றோர் வைணவர் ஒருவர்க்குத் திருமணஞ் செய்துகொடுத்தனர். அப்பெண் மாமியார் வீட்டார்க்குப் புலப்படாதவாறு கன்றுக்குட்டி கட்டியிருக்கும் முளையையே சிவலிங்கமாகப் பாவித்து வழிபட்டுவந்தனர். ஒரு நாள் கணவன் அதைக்கண்டு அம்முளையைக் கோடாலியால் வெட்ட இறைவர் அம்முளையிலிருந்து வெளிப்பட்ட காரணத்தால் அவர் நடுதறியப்பர் என்னும் பெயர் எய்தினார். ஊரும் கன்றாப்பூர் என்னும் பெயர் எய்திற்று.)



5)
ஊன்றான் படைத்த ஒப்பில் வேடரின்கண்
ஏன்றா னைச்சே ஏறும் இறைவனைக்கண்
மூன்றாம் கரும்பை முன்தேர் மேல்மறுதாள்
ஊன்றாப் பரனை ஓதி உய்ம்மனமே.



பதம் பிரித்து:
ஊன்தான் படைத்த ஒப்பு இல் வேடரின் கண்
ஏன்றானைச், சே ஏறும் இறைவனைக், கண்
மூன்று ஆம் கரும்பை, முன் தேர்மேல் மறு தாள்
ஊன்றாப் பரனை ஓதி உய்ம் மனமே.


ஒப்பு இல் வேடர் - ஒப்பற்ற கண்ணப்பர்;
ஏன்றான் - ஏற்றான்; (ஏன்றான் - ஏல் + த் + ஆன்);
சே - எருது;
கண் - விழி; (கரும்பில் இருக்கும் கணுவும் கண் எனப்படும்);
கரும்பு - ஆகுபெயராய்ச் சிவனைக் குறித்தது;


மனமே! அன்போடு மாமிசத்தைப் படைத்துத் தொண்டுசெய்த ஒப்பற்ற பக்தியுடைய வேடரான கண்ணப்பரின் கண்ணை ஏற்றுக்கொண்டவனை, இடபத்தின்மேல் ஏறும் கடவுளை, மூன்று கண்கள் உடைய கரும்பு போன்றவனை, முன்பு ஒரு தாளை வைக்கவும் தேரின் அச்சு முரிந்ததால் அடுத்த தாளை அத்தேரில் ஊன்றாத பரமனை, ஊன்றாப்பில் உறையும் ஹரனை ஓதி உய்வு பெறுவாயாக.



6)
தோன்றால் சோதீ சொல்லெ ழுத்திரண்டும்
மூன்றா னானே முதல்வா என்றிறைஞ்சும்
ஆன்றோர் அகத்தை அகலா அருமருந்தை
ஊன்றாப் பரனை ஓதி உய்ம்மனமே.



பதம் பிரித்து:
"தோன்றால்! சோதீ! சொல் எழுத்து இரண்டும்
மூன்று ஆனானே! முதல்வா!" என்று இறைஞ்சும்
ஆன்றோர் அகத்தை அகலா அருமருந்தை,
ஊன்றாப்பு அரனை ஓதி உய்ம்மனமே.


தோன்றால் - தோன்றல் என்பதன் விளி; (தோன்றல் - மேம்பட்டவன்; தலைவன்);
(அப்பர் தேவாரம் - 6.5.8 - "... துஞ்சாப் பலிதேரும் தோன்றால் போற்றி ...");
சொல் எழுத்து இரண்டும் மூன்று ஆனானே - சொல்லும் அஞ்செழுத்து ஆனவனே;
ஆன்றோர் - ஞானிகள்;
அகம் - மனம்;
அருமருந்து - அரிய அமுதம்;



7)
கான்றான் ஆடும் களமாக் கொள்ளிறையை
மூன்றாய் உலகம் படைத்த முழுமுதலை
வான்றாழ் நதியைச் சடையுள் வைத்தவனை
ஊன்றாப் பரனை ஓதி உய்ம்மனமே.



பதம் பிரித்து:
கான் தான் ஆடும் களமாக் கொள் இறையை,
மூன்றாய் உலகம் படைத்த முழுமுதலை,
வான் தாழ் நதியைச் சடையுள் வைத்தவனை,
ஊன்றாப்பு அரனை ஓதி உய்ம் மனமே.


கான் - சுடுகாடு;
களமா - களமாக; (களம் - சபை; இடம்);
வான் தாழ் நதி - வானிலிருந்து விழுந்த கங்கை;
(அப்பர் தேவாரம் - 4.94.1 - "ஈன்றாளுமாய் .... மூன்றாய் உலகம் படைத்துகந்தான் ...");


மனமே! தான் திருநடம் செய்யும் சபையாகச் சுடுகாட்டைக் கொள்ளும் இறைவனை, மூவுலகங்களையும் படைத்த பூரணனை, வானுகிலிருந்து கீழே இறங்கிய கங்கையைச் சடையுள் அடைத்தவனை, ஊன்றாப்பில் உறையும் ஹரனை ஓதி உய்வு பெறுவாயாக.



8)
நான்றோள் வலியேன் என்றைந் நான்குகையால்
வான்றான் வணங்கும் மலையை அசைத்தவன்தன்
மான்மாய்ந் திடவோர் மலர்போல் விரலூன்றும்
ஊன்றாப் பரனை ஓதி உய்ம்மனமே.



பதம் பிரித்து:
"நான் தோள் வலியேன்" என்று ஐந்நான்கு கையால்
வான்தான் வணங்கும் மலையை அசைத்தவன்தன்
மால் மாய்ந்திட ஓர் மலர்போல் விரல் ஊன்றும்
ஊன்றாப்பு அரனை ஓதி உய்ம் மனமே.


தோள் - புஜம்;
வலி - வலிமை;
மால் - அறியாமை;


மனமே! தேவர்களும் வணங்கும் கயிலை மலையை, 'நான் மிகவும் புஜபலம் உடையவன்' என்று எண்ணி, இருபது கரங்களால் அசைத்த இராவணனின் அறியாமை அழியுமாறு பூப்போல் ஒரு பாதவிரலை ஊன்றிய, ஊன்றாப்பில் உறையும் ஹரனை ஓதி உய்வு பெறுவாயாக.



9)
நான்தான் பெரியேன் எனுமால் நான்முகனார்
வான்பார் எங்கும் தேடி வாட்டமுறத்
தான்தீ ஆகி ஓங்கு சங்கரனை
ஊன்றாப் பரனை ஓதி உய்ம்மனமே.



"நான்தான் பெரியேன்" எனும் மால் நான்முகனார் - "நானே பெரியவன்" என்ற விஷ்ணுவும் பிரமனும்;
வான் பார் எங்கும் தேடி - ஆகாயம் பூமி என்று எங்கும் அடிமுடியைத் தேடி;;
வாட்டம் - வருத்தம்;



10)
கூன்பாண் டியனை நிமிர்த்தும் புகலியர்கோன்
தேன்பாய் தமிழைச் செவிம டுப்பவனை
நோன்பாப் பொய்சொல் நொய்யர் தம்அகத்தில்
ஊன்றாப் பரனை ஓதி உய்ம்மனமே.



பதம் பிரித்து:
கூன்பாண்டியனை நிமிர்த்தும் புகலியர்கோன்
தேன் பாய் தமிழைச் செவி மடுப்பவனை,
நோன்பாப் பொய் சொல் நொய்யர் தம் அகத்தில்
ஊன்றாப் பரனை ஓதி உய்ம்மனமே.


நோன்பா - நோன்பாக; (நோன்பு - விரதம்; தவம்);
நொய்யர் - அற்பர்கள்;
ஊன்றுதல் - நிலைபெறுதல்; நடுதல்; தங்குதல்;


மனமே! மதுரையில் சமணர்களை வாதில் வென்று, கூன்பாண்டியனை நிமிரச் செய்த திருஞான சம்பந்தரின் தேன் பாயும் தமிழான தேவாரத்தை விரும்பிக் கேட்பவனைத், தாம் மேற்கொண்ட தவமாகத் தினந்தோறும் பொய்களையே சொல்லும் அற்பர்கள் நெஞ்சில் நில்லாப் பரமனை ஓதி உய்வு பெறுவாயாக.



11)
ஈன்றாய் காவாய் என்றென் றிறைஞ்சிநிதம்
சான்றோர் தலையால் வணங்கும் தத்துவனைத்
தோன்றா தவனைத் துயர்தீர் தூயவனை
ஊன்றாப் பரனை ஓதி உய்ம்மனமே.



ஈன்றாய் - ஈன்றவனே;
காவாய் - காப்பாயாக;
'என்றென்று' - அடுக்கு, பல்கால் அழைத்தலைக் குறித்தது; (அப்பர் தேவாரம் - 6.31.1 - "இடர்கெடுமா றெண்ணுதியேல் நெஞ்சே நீவா .... ஆரூரா என்றென்றே அலறா நில்லே.");
தத்துவன் - மெய்ப்பொருளானவன்;
தோன்றுதல் - பிறத்தல்;


மனமே! 'அகிலங்களை ஈன்றவனே! என்னை ஈன்றவனே! காத்தருள்வாய்' என்று பலகாலும் சொல்லி நாள்தோறும் பிரார்த்தித்துச் சான்றோர்கள் தலைவணங்கும் சிவபெருமானை, மெய்ப்பொருளானவனைப், பிறப்பில்லாதவனைத், துயரத்தைத் தீர்த்தருளும் தூயவனை, ஊன்றாப்பில் உறையும் அரனை வழிபட்டு உய்வு பெறுவாயாக.



அன்போடு,
வி. சுப்பிரமணியன்



பிற்குறிப்புகள் :
1) இலக்கணக் குறிப்பு : புணர்ச்சி விதி:
ன்+= 'ன்ற' என்று திரியும்.
ல்+= 'ன்ம' என்று திரியும்.



2) ஊன்றாப்பரனை - ஊன்றாப்பு அரனை (ஊன்றாப்பில் உறையும் அரனை) / ஊன்றாப் பரனை (ஊன்றாத பரனை);
அரன் - ஹரன்;



3) இப்பதிகத்தில் உள்ள 11 பாடல்களும் ஒரே ஈற்றடியில் அமைந்தவை.

அப்பர் தேவாரத்தில் திருவெறும்பியூர்த் திருக்குறுந்தொகைப் பதிகத்தில் - 5.74 - பல பாடல்கள் ஒரே ஈற்றடியில் - "எறும்பி யூர்மலை யானெங்க ளீசனே" - என்று முடிவதைக் காணலாம்.
5.74.1 -
விரும்பி யூறு விடேல்மட நெஞ்சமே
கரும்பி னூறல்கண் டாய்கலந் தார்க்கவன்
இரும்பி னூறல றாததோர் வெண்தலை
எறும்பி யூர்மலை யானெங்க ளீசனே.

4) ஊன்றாப்பு - (Kamakshi temple in Hamm-Uentrop in Germany)
ஜெர்மனியில் 'ஹாம்' நகரின் ஒரு பகுதியான 'ஊன்றாப்பு' என்ற இடத்தில் இருக்கும் காமாக்ஷி கோயிலில் எழுந்தருளியுள்ள ஈசன் மேல் பாடப்பெற்றவை இப்பாடல்கள்.
இக்கோயில் தகவல்கள் - http://kamadchi-ampal.olanko.de/index.php/the-tempel.html
இக்கோயில் இருக்கும் இடம்: Google Map link: Hindu Shankarar Sri Kamadchi Ampal Tempel :
https://www.google.com/maps/@51.6869249,7.9510107,172m/data=!3m1!1e3

-------------- --------------

02.30 – கண்டியூர் - (திருக்கண்டியூர்)

02.30 – கண்டியூர் - (திருக்கண்டியூர்)



2011-09-26
திருக்கண்டியூர்
----------------------------------

(சந்தக் கலிவிருத்தம் - "தானனாதன தானனா தானனாதன தானனா")

(அறுசீர்ச் சந்தவிருத்தம் - "தான தானன தானனா தான தானன தானனா")

(சம்பந்தர் தேவாரம் - 2.77.1 - "பீடினாற்பெரி யோர்களும் பேதைமைகெடத் தீதிலா")




1)
ஆவிபோய்மனை யாரெலாம் ஐயகோவென நாலுபேர்
காவியங்கியி டாமுனம் கண்கள்மூன்றுடை நாயகன்
தேவிபங்கினன் கையிலோர் சிரமதேந்திய செல்வனூர்
காவிரிக்கரைக் கண்டியூர் கருதிஉய்ம்மட நெஞ்சமே.



பதம் பிரித்து:
ஆவி போய் மனையார் எலாம் ஐயகோ என நாலுபேர்
காவி அங்கி இடாமுனம் கண்கள் மூன்றுடை நாயகன்
தேவி பங்கினன் கையில் ஓர் சிரமது ஏந்திய செல்வன் ஊர்
காவிரிக்கரைக் கண்டியூர் கருதி உய்ம் மட நெஞ்சமே.


ஐயகோ - இரக்கம் துக்கங்களின் குறிப்பு (An exclamation of pity, sorrow);
காவுதல் - தோளிற் சுமத்தல் (To carry on the shoulder);
அங்கி - நெருப்பு;
நாலுபேர் காவி அங்கி இடாமுனம் - நான்குபேர் சுமந்து நெருப்பு இடுவதன் முன்னம்;
கையில் ஓர் சிரமது ஏந்திய செல்வன் - கையில் பிச்சைக்காக ஒரு மண்டையோட்டை ஏந்திய செல்வன்;
காவிரிக்கரைக் கண்டியூர் - காவிரியின் கரையில் இருக்கும் கண்டியூர்;
கருதுதல் - எண்ணுதல்; விரும்புதல்;


(சம்பந்தர் தேவாரம் - 3.38.1 -
"வினவினேனறி யாமையில்லுரை செய்ம்மினீரருள் வேண்டுவீர்
கனைவிலார்புனற் காவிரிக்கரை மேயகண்டியூர் வீரட்டன்")



2)
எந்தநாளெம தூதுவர் எய்துவாரறி கின்றிலோம்
அந்தநாளடை யாமுனம் ஆதிஅந்தமி லாதவன்
வெந்தநீறணி வேதியன் வெண்டலைக்கரன் மேவிய
கந்தமார்பொழிற் கண்டியூர் கருதிஉய்ம்மட நெஞ்சமே.



பதம் பிரித்து:
எந்த நாள் எம தூதுவர் எய்துவார் அறிகின்றிலோம்;
அந்த நாள் அடையாமுனம், ஆதி அந்தம் இலாதவன்,
வெந்த நீறு அணி வேதியன், வெண்தலைக் கரன் மேவிய
கந்தம் ஆர் பொழிற் கண்டியூர் கருதி உய்ம் மட நெஞ்சமே.


அந்த நாள் - அந்நாள்; இறுதி நாள்;
வெண்தலைக் கரன் - வெள்ளை மண்டையோட்டைக் கையில் ஏந்தும் சிவபெருமான்;
கந்தம் ஆர் பொழில் - வாசம் கமழும் சோலை;



3)
நாளைநாளையென் றெண்ணியே நாள்கள்போய்நம னார்வரும்
வேளைவந்தடை யாமுனம் மென்மலர்க்கணை ஏவிய
வேளைநீறது வாக்கிய விமலன்மாதொரு பங்கினன்
காளைவாகனன் கண்டியூர் கருதிஉய்ம்மட நெஞ்சமே.



பதம் பிரித்து:
நாளை நாளைன்று எண்ணியே நாள்கள் போய் நமனார் வரும்
வேளை வந்து அடையாமுனம் மென் மலர்க்கணை ஏவிய
வேளை நீறது க்கிய விமலன் மாது ஒரு பங்கினன்
காளை வாகனன் கண்டியூர் கருதி உய்ம் மட நெஞ்சமே.


மென் மலர்க்கணை ஏவிய வேளை நீறது ஆக்கிய - மென்மையான மலரம்பைச் செலுத்திய மன்மதனைச் சாம்பல் ஆக்கிய;



4)
ஆட்டமானதென் றுற்றவர் அழுதுகானிடை இட்டெரி
மூட்டுநாளடை யாமுனம் முளைமதிக்கயல் பாம்பையும்
கூட்டுசென்னியன் வாசமார் குழலிபங்கினன் ஓர்விழி
காட்டுநெற்றியன் கண்டியூர் கருதிஉய்ம்மட நெஞ்சமே.



பதம் பிரித்து:
ஆட்டம் ஆனது என்றுற்றவர் அழுது கானிடை இட்டு எரி
மூட்டு நாள் அடையாமுனம் முளைமதிக்கு அயல் பாம்பையும்
கூட்டு சென்னியன் வாசம் ஆர் குழலி பங்கினன் ஓர் விழி
காட்டு நெற்றியன் கண்டியூர் கருதி உய்ம் மட நெஞ்சமே.


ஆட்டம் - விளையாட்டு (game); One's turn in a game; சஞ்சாரம் (Moving about);
கான் - சுடுகாடு;
முளைமதி - பிறைச்சந்திரன்;
அயல் - அருகு (adjacent place);
முளைமதிக்கு அயல் பாம்பையும் கூட்டு சென்னியன் - பிறைச்சந்திரனோடு பாம்பையும் சேர்க்கும் தலையினன்;
வாசம் ஆர் குழலி - மணம் கமழும் கூந்தலை உடைய பார்வதி;



5)
காதல்மாதொடு மக்களும் கண்கலங்கிடப் பாடைமேல்
போதலென்பதெய் தாமுனம் புரமெரித்தவன் கையினில்
வேதன்வெண்டலை ஏந்திய வேணியன்குழை தாங்கிய
காதன்மேவிய கண்டியூர் கருதிஉய்ம்மட நெஞ்சமே.



பதம் பிரித்து:
காதல் மாதொடு மக்களும் கண் கலங்கிடப் பாடைமேல்
போதல் என்பது எய்தாமுனம், புரம் எரித்தவன், கையினில்
வேதன் வெண்லை ஏந்திய வேணியன், குழை தாங்கிய
காதன் மேவிய கண்டியூர் கருதி உய்ம் மட நெஞ்சமே.


காதல் மாது - அன்புடைய மனைவி;
வேதன் வெண்டலை - வேதன் வெண்லை - பிரமனின் மண்டையோடு;
வேணியன் - சடையினன்;
தாங்குதல் - அணிதல் (To assume, wear, as crown);
குழை தாங்கிய காதன் - காதில் குழை அணிந்தவன்;



6)
நண்ணிவந்தடை தூதுவர் நரகினில்விழுத் தாமுனம்
விண்ணுலாவிய முப்புரம் வேவநக்கவன் நற்பெயர்
எண்ணிலாரருள் செய்பவன் ஈரமாகிய செஞ்சடைக்
கண்ணுதற்பரன் கண்டியூர் கருதிஉய்ம்மட நெஞ்சமே.



பதம் பிரித்து:
நண்ணிவந்து அடை தூதுவர் நரகினில் விழுத்தாமுனம்,
விண்லாவிய முப்புரம் வேவ நக்கவன் நற்பெயர்
எண்ணில் ஆர் அருள் செய்பவன், ஈரமாகிய செஞ்சடைக்
கண்ணுதல் ரன் கண்டியூர் கருதி உய்ம் மட நெஞ்சமே.


விழுத்துதல் - விழச்செய்தல் (To cause to fall; to throw down);
நண்ணிவந்து அடை தூதுவர் நரகினில் விழுத்தாமுனம் - எம தூதர்கள் நெருங்கி வந்து அடைந்து, நம்மை நரகத்தில் விழச்செய்யும் முன்;
விண்லாவிய முப்புரம் வேவ நக்கவன் - விண்ணில் திரிந்த முப்புரங்களும் சாம்பலாகச் சிரித்தவன்;
நற்பெயர் எண்ணில் ஆரருள் செய்பவன் - நன்மை அளிக்கும் திருநாமத்தை தியானித்தால் மிகவும் அருள்புரிபவன்;
ஈரமாகிய செஞ்சடைக் கண்ணுதல் ரன் - கங்கை தங்கும் செஞ்சடையும் நெற்றிக்கண்ணும் உடைய பரமன்;
கண்டியூர் கருதி உய்ம்மட நெஞ்சமே - அப்பெருமான் உறையும் திருக்கண்டியூரைக் கருதி உய்வாய் பேதை மனமே!



7)
மெய்யைவிட்டுயிர் போனது விரைந்தெடுங்களெ னாமுனம்
செய்யமேனியன் மாற்றிலாச் செம்பொன் ஏறமர் பெற்றியன்
வையம்வானகம் வந்தடி வாழ்த்துமன்னவன் மான்மறிக்
கையன்மேவிய கண்டியூர் கருதிஉய்ம்மட நெஞ்சமே.



பதம் பிரித்து:
மெய்யை விட்டுயிர் போனது விரைந்து எடுங்கள் எனாமுனம்,
செய்ய மேனியன், மாற்று இலாச் செம்பொன், று அமர் பெற்றியன்,
வையம் வானகம் வந்து அடி வாழ்த்து மன்னவன், மான்மறிக்
கையன் மேவிய கண்டியூர் கருதி உய்ம் மட நெஞ்சமே.


மெய் - உடல்;
செய்ய மேனியன் - செம்மேனியன்;
மாற்று இலாச் செம்பொன் - உயர்ந்த பொன் போன்றவன்;
று அமர் பெற்றியன் - இடபத்தை ஊர்தியாக விரும்பும் பெருமை உடையவன்;
வையம் வானகம் - மண்ணுலகமும் வானுலகும்;
மான்மறிக் கையன் - மான்கன்றை ஏந்திய கரத்தினன்;



8)
விண்டதாவியென் றுற்றவர் மிகவருந்துவ தன்முனம்
அண்டன்வெற்பசைத் தான்சிரம் அஞ்சொடஞ்சுநெ ரித்தவன்
அண்டுன்பர கத்தினன் அமுதமாகவி டத்தையுண்
கண்டன்மேவிய கண்டியூர் கருதிஉய்ம்மட நெஞ்சமே.



பதம் பிரித்து:
விண்டது ஆவி என்று உற்றவர் மிக வருந்துவதன் முனம்,
அண்டன் வெற்பு அசைத்தான் சிரம் அஞ்சொடு அஞ்சு நெரித்தவன்,
அண்டும் அன்பர் அகத்தினன், அமுதமாக விடத்தைண்
கண்டன் மேவிய கண்டியூர் கருதி உய்ம் மட நெஞ்சமே.


விள்ளுதல் - நீங்குதல் (To be separated from; to leave);
அண்டன் - அண்டங்களுக்கெல்லாம் தலைவன் - கடவுள்;
விண்டது ஆவின்றுற்றவர் மிக வருந்துவதன் முனம் - "இவர் உயிர் பிரிந்தது" என்று உற்றார் உறவினர் எல்லாம் மிகவும் துக்கம் அடைவதன் முன்னமே;
அண்டன் வெற்பு அசைத்தான் சிரம் அஞ்சொடு அஞ்சும் நெரித்தவன் - சிவனாரின் மலையை அசைத்த இராவணனின் பத்துத்தலைகளையும் நசுக்கியவன்;
அண்டும் அன்பர் அகத்தினன் - சரண்புகுந்த பக்தர்களின் மனத்தில் இருப்பவன்;
அமுதமாக விடத்தை உண் கண்டன் - அமுதமாக விஷத்தை உண்ட நீலகண்டன்;



9)
பிரியமானவர் தாமழப் பிரியுமாவிய தன்முனம்
அரியும்வேதனும் நேடியும் அடியுமுச்சியும் காண்பதற்
ரியசோதியன் ஆதியன் ஆறுபாய்சடை யன்களம்
கரியவன்பதி கண்டியூர் கருதிஉய்ம்மட நெஞ்சமே.



பதம் பிரித்து:
பிரியமானவர் தாம் அழப் பிரியும் ஆவி; தன் முனம்,
அரியும் வேதனும் நேடியும் அடியும் உச்சியும் காண்பதற்கு
அரிய சோதியன், ஆதியன், ஆறு பாய் சடையன், களம்
கரியவன் பதி கண்டியூர் கருதி உய்ம் மட நெஞ்சமே.


களம் - கண்டம் (Throat);
பிரியமானவர் தாம் அழப் பிரியும் ஆவி; அதன் முனம் - சுற்றத்தினர் அழுமாறு உயிர் நீங்கும்; அதற்கு முன்னே;
அரியும் வேதனும் நேடியும் அடியும் உச்சியும் காண்பதற்கு அரிய சோதியன் - திருமாலும் பிரமனும் தேடியும் அடியும் முடியும் காணாத அருஞ்சோதி;
ஆதியன்; ஆறு பாய் சடையன் - முதல்வன்; கங்கை பாயும் சடையன்;
களம் கரியவன் பதி கண்டியூர் கருதி உய்ம் மட நெஞ்சமே - நீலகண்டன் உறையும் தலம் திருக்கண்டியூரைக் கருதி உய்வாய் பேதை மனமே!



10)
தங்கையாலரன் தாள்தொழாச் சழக்கர்பொய்ம்மொழி கைவிடார்
அங்கயல்விழி மாதினை அன்பினாலிடம் ஏற்றவன்
பொங்கழல்புரை மேனியன் போற்றுவார்வினை தீர்ப்பவன்
கங்கைசூடரன் கண்டியூர் கருதிஉய்ம்மட நெஞ்சமே.



பதம் பிரித்து:
ம் கையால் அரன் தாள் தொழாச்ழக்கர் பொய்ம்மொழி கைவிடார்;
ம் கயல்விழி மாதினை அன்பினால் இடம் ஏற்றவன்,
பொங்கு அழல் புரை மேனியன், போற்றுவார் வினை தீர்ப்பவன்,
கங்கை சூடு அரன் கண்டியூர் கருதி உய்ம் மட நெஞ்சமே.


சழக்கர் - தீயவர்;
ம் கயல்விழி மாது - அழகிய கயல் போன்ற கண்கள் உடைய பார்வதி;
புரைதல் - ஒத்தல்;
பொங்கு அழல் புரை மேனியன் - தீப்போன்ற செம்மேனியன்;



11)
ஓலமிட்டுற வாரழ உடலைவிட்டுயிர் செல்லுமுன்
கோலவெண்மதி கோளரா குளிர்புனல்முடி வைத்தவன்
ஆலமுண்டவன் அன்பரை அணுகுகாலனை வீட்டிய
காலன்மேவிய கண்டியூர் கருதிஉய்ம்மட நெஞ்சமே.



பதம் பிரித்து:
ஓலமிட்டுறவார் அ உடலை விட்டுயிர் செல்லுமுன்,
கோல வெண்மதி கோள் அரா குளிர் புனல் முடி வைத்தவன்,
ஆலம் உண்டவன், அன்பரை அணுகு காலனை வீட்டிய
காலன் மேவிய கண்டியூர் கருதி உய்ம் மட நெஞ்சமே.


கோல வெண்மதி - அழகிய வெண்பிறைச்சந்திரன்;
கோள் அரா - கொடிய பாம்பு;
குளிர் புனல் - குளிர்ந்த கங்கை;
வீட்டுதல் - கொல்லுதல்; அழித்தல்;
அன்பரை அணுகு காலனை வீட்டிய காலன் - மார்க்கண்டேயரை நெருங்கிய எமனை உதைத்த காலினன்;



அன்போடு,
வி. சுப்பிரமணியன்



பிற்குறிப்பு :
1) யாப்புக் குறிப்பு :
கலிவிருத்தம். "தானனாதன தானனா தானனாதன தானனா" என்ற சந்தம்.
பாடல்களில் முதற்சீர் 'தனதனாதன' என்றும் வரலாம்.
மற்ற சீர்களில், ஒரோவழி தான என்பது தனன என்று வரலாம்.



2) சம்பந்தர் தேவாரம் - 2.77.1 -
பீடினாற்பெரி யோர்களும் பேதைமைகெடத் தீதிலா
வீடினாலுயர்ந் தார்களும் வீடிலாரிள வெண்மதி
சூடினார்மறை பாடினார் சுடலைநீறணிந் தாரழல்
ஆடினாரறை யணிநல்லூர் அங்கையாற்றொழு வார்களே.



3) திருக்கண்டியூர்: அட்டவீரட்டானத் தலங்களுள் ஒன்று கண்டியூர். பிரமனின் சிரத்தைக் கொய்த தலம் இது.
4) திருவையாறு உள்ளிட்ட சப்தஸ்தானத் தலங்கள்:
  • திருவையாறு ஐயாறப்பர் கோயில்
  • திருப்பழனம்
  • திருச்சோற்றுத்துறை
  • திருவேதிகுடி
  • திருக்கண்டியூர்
  • திருப்பூந்துருத்தி
  • திருநெய்த்தானம் (தில்லைஸ்தானம்)
5) திருக்கண்டியூர் - கோயில் தகவல்கள் - தினமலர் தளத்தில்: http://temple.dinamalar.com/New.php?id=885

-------------- --------------