Sunday, March 11, 2018

04.16 - அரதைப் பெரும்பாழி (அரித்துவாரமங்கலம்) - சுண்ண நீற்றன்

04.16 - அரதைப் பெரும்பாழி (அரித்துவாரமங்கலம்) - சுண்ண நீற்றன்

2013-10-09

அரதைப் பெரும்பாழி (இக்காலத்தில் - அரித்துவாரமங்கலம்)

----------------------------------

(கலிவிருத்தம் - மா தேமா புளிமா புளிமாங்காய் - வாய்பாடு);

(சம்பந்தர் தேவாரம் - 1.27.1 - "முந்தி நின்ற வினைகள் அவைபோக")


1)

சுண்ண நீற்றன் சுடலை தனிலாடி

கண்ணில் தீயன் கடலின் விடமுண்ட

அண்ணல் மேவும் அரதைப் பெரும்பாழி

நண்ணு வாரை நலியா வினைதானே.


சுண்ண நீற்றன் - திருநீற்றைப் பூசியவன்;

சுடலைதனில் ஆடி - இடுகாட்டில் ஆடுபவன்;

கண்ணில் தீயன் - கண்ணில் நெருப்பை உடையவன்;

கடலின் விடம் உண்ட அண்ணல் - ஆலகாலத்தை உண்ட பெருமான்;

மேவும் அரதைப் பெரும்பாழி நண்ணுவாரை நலியா வினைதானே - அப்பெருமான் உறையும் அரதைப்பெரும்பாழியை (அரித்துவாரமங்கலத்தை) அடைந்து தொழும் பக்தர்களை வினைகள் வருத்தமாட்டா;


2)

தையல் பங்கன் சலம்வெண் மதியோடு

பைகொள் பாம்பைப் படர்செஞ் சடைவைத்த

ஐயன் மேவும் அரதைப் பெரும்பாழி

கைகள் கூப்பித் தொழுவார் கவலாரே.


தையல் பங்கன் - உமைபங்கன்;

சலம் வெண் மதியோடு பைகொள் பாம்பைப் படர் செஞ்சடை வைத்த ஐயன் - கங்கை, வெண்திங்கள் இவற்றோடு படம் உடைய பாம்பையும் படரும் சடைமேல் சூடிய தலைவன்;

மேவும் அரதைப் பெரும்பாழி கைகள் கூப்பித் தொழுவார் கவலார் - அப்பெருமான் உறையும் அரதைப்பெரும்பாழியை (அரித்துவாரமங்கலத்தை) அடைந்து கைகூப்பித் தொழும் பக்தர்கள் மனம் வருந்தமாட்டார்கள் (= கவலை தீரும்); (கவல்தல் - மனம்வருந்துதல்);


3)

நீறு பூசி நிழலார் மழுவாளன்

ஏற தேறும் இறைவன் இருங்கங்கை

ஆறு சூடி அரதைப் பெரும்பாழி

கூறு வார்க்குக் குறையில் நிலைதானே.


நீறு பூசி - திருநீற்றைப் பூசியவன்;

நிழல் ஆர் மழுவாளன் - ஒளி வீசும் மழுவை ஏந்தியவன்;

ஏறுஅது ஏறும் இறைவன் - இடபவாகனன்;

இரும்-கங்கை ஆறு சூடி - பெரிய கங்கையாற்றைச் சூடியவன்;

அரதைப் பெரும்பாழி கூறுவார்க்குக் குறை இல் நிலைதானே - அரதைப்பெரும்பாழியை (அரித்துவாரமங்கலத்தை) ஏத்தும் பக்தர்களது குறைகள் தீரும்;


4)

மஞ்சு லாவும் மலையான் மகள்பங்கன்

அஞ்சி வந்த அமரர்க்(கு) அருள்கண்டன்

அஞ்சு ரும்பார் அரதைப் பெரும்பாழி

நெஞ்சில் வைத்தார்க்(கு) இடரில் நிலைதானே


மஞ்சு உலாவும் மலையான் மகள் பங்கன் - மேகம் உலவும் இமயமலைக்கு மன்னன் மகளான பார்வதியை ஒரு பங்கில் உடையவன்;

அஞ்சி வந்த அமரர்க்கு அருள் கண்டன் - தேவர்களுக்கு அபயம் அளித்த நீலகண்டன்;

அஞ்சுரும்பார் - அம் சுரும்பு ஆர் - அழகிய வண்டுகள் ஒலிக்கின்ற;

இடர் இல் நிலை - துன்பம் இல்லாத நிலை;


5)

குரவம் கொன்றை குளிர்வெண் பிறைசூடும்

குரவன் ஏற்றுக் கொடியன் அரைநாணா

அரவம் ஆர்த்தான் அரதைப் பெரும்பாழி

பரவ வீடும் பழைய வினைதானே.


குரவம் - குராமலர்; குரவன் - குரு; ஆசிரியன்; தலைவன்; ஏற்றுக் கொடியன் - இடபக்கொடி உடையவன்; அரைநாணா அரவம் ஆர்த்தான் - அரைநாணாகப் பாம்பைக் கட்டியவன்; பரவுதல் - புகழ்தல்; வீடும் - அழியும்;


6)

காலன் மாளக் கழலால் உதைபெம்மான்

சூல பாணி தொழுத சுரருக்கா

ஆலம் உண்டான் அரதைப் பெரும்பாழிச்

சீலன் நாமம் தினமும் நினைநெஞ்சே.


சுரருக்கா ஆலம் உண்டான் - தேவர்களுக்காக ஆலகாலத்தை உண்டவன்;


7)

கத்து கின்ற கடலின் விடமுண்ட

பித்தன் அத்தி பிளிற உரிசெய்த

அத்தன் மேவும் அரதைப் பெரும்பாழி

பத்தி யோடு பரவத் திருவாமே.


அத்தி பிளிற உரிசெய்த அத்தன் - யானை பிளிற அதன் தோலை உரித்தவன், நம் தந்தை;


8)

பன்றிக் கொம்பை அணியும் பரமேட்டி

குன்றி டந்தான் குலையார் முடிபத்தும்

அன்ற டர்த்தார் அரதைப் பெரும்பாழிச்

சென்று போற்றச் சிதையும் வினைதானே.


பன்றிக் கொம்பை அணியும் பரமேட்டி - திருமாலாகிய பன்றியினது வெண்மையான கொம்பை அணிந்தவன். (* இதனை இத்தலவரலாற்றில் காண்க). (சம்பந்தர் தேவாரம் - 1.52.9 - "கேழல்-வெண்கொம்பு அணிந்த பெம்மான்"); (பரமேட்டி - பரம்பொருள்);

குன்று இடந்தான் குலை ஆர் முடி பத்தும் அன்று அடர்த்தார் - கயிலையைப் பெயர்த்த இராவணனின் குலை போல் இருக்கும் பத்துத் தலைகளையும் அன்று நெரித்தவர்;

அரதைப் பெரும்பாழிச் சென்று போற்ற - அரதைப் பெரும்பாழியிற் சென்று வழிபட்டால்; (இலக்கணக் குறிப்பு: ஏழாம் வேற்றுமைத்தொகையில் பொதுவாக வலி மிகும்);

சிதையும் வினைதானே - வினைகள் அழியும்; (சிதைதல் - அழிதல்);


9)

கொண்டல் வண்ணன் குளிர்தா மரைமேலான்

பண்டு தேடிப் பரவு சுடரானை

அண்டர் கோனை அரதைப் பெரும்பாழிக்

கண்டு போற்றக் கழலும் வினைதானே.


கொண்டல் வண்ணன் - மேகவண்ணன் - திருமாலும்;

குளிர் தாமரை மேலான் - குளிர்ந்த தாமரைமேல் இருப்பவன் - பிரமனும்;

பண்டு தேடிப் பரவு சுடரானை - முன்பு அடிமுடி தேடிக் காணாராய்த் துதித்த ஜோதியை; (பரவுதல் - துதித்தல்; புகழ்தல்);

அண்டர் கோனை - தேவர்கள் தலைவனை;

அரதைப் பெரும்பாழிக் கண்டு போற்ற - அரதைப் பெரும்பாழியிற் கண்டு தொழ;

கழலும் வினைதானே - வினைகள் நீங்கும்; (கழல்தல் - நீங்குதல்);


10)

கட்டு ரைக்கும் கயவர் அவர்சொல்லை

விட்டு வம்மின் மிகவும் நலமாமே

அட்ட மூர்த்தி அரதைப் பெரும்பாழி

நட்டன் நாமம் நவிலும் அடியார்க்கே.


கட்டுரைக்கும் கயவர் அவர்சொல்லை விட்டு வம்மின் - பொய்யுரை பேசும் கீழோர் பேச்சை மதியாது நீங்கி வாருங்கள்; (கட்டு - பொய்யுரை); (சம்பந்தர் தேவாரம் - 2.119.10 - "உறிதூக்கிய கையினர் சாக்கியர் கட்டுரைக்கும் மொழிகொள்ளலும்");

மிகவும் நலம் ஆமே - இச்சொற்றொடரை இடைநிலைத்தீவகமாக இருபக்கமும் இயைத்துப் பொருள்கொள்ளலாம். ("....விட்டு வம்மின் மிகவும் நலமாமே"; "மிகவும் நலமாமே .... நாமம் நவிலும் அடியார்க்கே");

அட்டமுர்த்தி - அஷ்டமூர்த்தம் உடையவன்; நட்டன் - நடம் செய்பவன்; நவில்தல் - சொல்லுதல்;


11)

மாவி டத்தை மணியா அணியீசன்

ஏவி டுத்தவ் வெயில்கள் எரிசெய்தான்

ஆவி ருப்பன் அரதைப் பெரும்பாழிச்

சேவிப் பார்க்குத் திருவார் நிலைதானே.


மா விடத்தை மணியா அணி ஈசன் - பெரிய நஞ்சை நீலமணியாகக் கண்டத்தில் அணியும் இறைவன்;

ஏ விடுத்து அவ்-எயில்கள் எரிசெய்தான் - அம்பைச் செலுத்தி அந்த முப்புரங்களை எரித்தவன்; (ஏ – அம்பு); (விடுத்தல் - பிரயோகித்தல்); (எயில் - கோட்டை);

ஆவிருப்பன் - இடபத்தை ஊர்தியாக விரும்பியவன் (ஆ விருப்பன்); இடபத்தின்மேல் வீற்றிருப்பவன் (ஆ இருப்பன்); (ஆ - இடபம்; பசு); (இருத்தல் - வீற்றிருத்தல்);

அரதைப் பெரும்பாழிச் சேவிப்பார்க்குத் திரு ஆர் நிலைதானே - அரதைப் பெரும்பாழியில் வணங்குபவர்க்குச் செல்வம் (/நன்மை) நிறையும் நிலை ஆகும். (சேவித்தல் - வணங்குதல்); (ஆர்தல் - பொருந்துதல்; நிறைதல்);


பிற்குறிப்பு : யாப்புக் குறிப்பு :

கலிவிருத்தம் - மா தேமா புளிமா புளிமாங்காய் - என்ற வாய்பாடு;

இந்த வாய்பாட்டு அமைப்பால், 2-3-4 சீர்களிடையே வெண்டளை அமையும். கட்டளை அடிகளும் அமையும்.

இவ்வமைப்புச் சம்பந்தர் தேவாரம் - 1.27.1 - "முந்தி நின்ற வினைகள் அவைபோக" - என்று தொடங்கும் திருப்புன்கூர்ப் பதிகப் பாடல்களின் அமைப்பை ஒத்தது.

(அப்பர் தேவாரத்தில் உள்ள திருக்குறுந்தொகைப் பாடல்களில் 2-3-4 சீர்களிடையே வெண்டளையும் கட்டளை அடிகளும் அமையுமாயினும் அவற்றில் 2-3-4 சீர்கள் வேறு அமைப்புகளிலும் அமையக் காணலாம்).


வி. சுப்பிரமணியன்

----------- --------------

04.15 - குடவாயில் (குடவாசல்) - பாலற்கொலை செய்யப்படு

04.15 - குடவாயில் (குடவாசல்) - பாலற்கொலை செய்யப்படு

2013-10-07

குடவாயில் (இக்கால வழக்கில் - குடவாசல்)

---------------

(கலிவிருத்தம் - மாங்கனி மாங்கனி மாங்கனி மா - வாய்பாடு)

(சம்பந்தர் தேவாரம் - 1.12.1 - "மத்தாவரை நிறுவிக்கடல்");

(சுந்தரர் தேவாரம் - 7.1.1 - "பித்தாபிறை சூடீ");


1)

பாலற்கொலை செய்யப்படு வேகத்தொடு பாய்ந்த

காலற்கொரு கூற்றாகிய காலன்கரி காடன்

பாலைத்துறை நல்லூர்அணி பட்டீச்சரம் மேயான்

கோலப்பொழில் சூழுங்குட வாயிற்பெரு மானே.


பாலன் கொலைசெய்யப் படு வேகத்தொடு பாய்ந்த காலற்கு ஒரு கூற்று ஆகிய காலன் - மார்க்கண்டேயரைக் கொல்வதற்காக மிகுந்த கோபத்தோடு மிக விரைந்து அவர்மேல் பாய்ந்த காலனுக்கே ஒரு காலன் ஆகிய காலினை (திருவடியை) உடையவன்; (இலக்கணக் குறிப்பு : பாலற்கொலைசெய்ய - பாலனைக் கொலைசெய்ய; இரண்டாம் வேற்றுமைத்தொகையில் உயர்திணையில் முதற்சொல்லின் ஈற்றில் உள்ள "ன்" ஒற்று "ற்" என்று திரியும்);

கரிகாடன் - சுடுகாட்டில் இருப்பவன்;

பாலைத்துறை, நல்லூர், அணி பட்டீச்சரம் மேயான் - திருப்பாலைத்துறை, திருநல்லூர், அழகிய பட்டீஸ்வரம் என்ற தலங்களில் உறைபவன்;

கோலப் பொழில் சூழும் குடவாயில் பெருமானே - அழகிய சோலை சூழ்ந்த திருக்குடவாயிலில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமான். (அப்பெருமானைத் தொழுவோம்);


2)

எயிலாரழல் சேரக்கணை எய்தானெரு தேறி

அயிலார்திரி சூலன்புனல் ஆருஞ்சடை அண்ணல்

மயிலாருமை மங்கைக்கொரு பங்கைத்தர வல்லான்

குயிலார்பொழில் சூழுங்குட வாயிற்பெரு மானே.


எயில் ஆரழல் சேரக் கணை எய்தான் - முப்புரங்கள் தீப்புகக் கணையை எய்தவன்;

எருதேறி - இடபவாகனன்;

அயில் ஆர் திரிசூலன் - கூர்மை மிக்க திரிசூலத்தை ஏந்தியவன்;

புனல் ஆரும் சடை அண்ணல் - கங்கையைச் சடையில் உடைய தலைவன்;

மயில் ஆர் உமை மங்கைக்கு ஒரு பங்கைத் தர வல்லான் - மயில் போன்ற உமைக்கு இடப்பக்கத்தைத் தந்தவன்; (ஆர்தல் - ஒத்தல்);

குயில் ஆர் பொழில் சூழும் குடவாயிற் பெருமானே - குயில்கள் ஒலிக்கும் சோலை சூழ்ந்த குடவாயிலில் உறையும் சிவபெருமான்; (ஆர்த்தல் - ஒலித்தல்);


3)

பார்த்தன்படை வேண்டிப்பணி பாந்தட்சடை அண்ணல்

ஓத்தின்பொருள் ஆனானொரு நால்வர்க்குரை பட்டன்

தீர்த்தன்திரு நீற்றன்சிவ லோகன்முடி வில்லாக்

கூத்தன்குளிர் சோலைக்குட வாயிற்பெரு மானே.


பார்த்தன் படை வேண்டிப் பணி பாந்தட்சடை அண்ணல் - அருச்சுனன் பாசுபதாஸ்திரம் வேண்டி வழிபாடு செய்த, சடையில் பாம்பை உடைய தலைவன்; (பாந்தள் - பாம்பு);

ஓத்தின் பொருள் ஆனான் - வேதத்தின் பொருள் ஆனவன்; (ஓத்து - வேதம்);

ஒரு நால்வர்க்கு உரை பட்டன் - சனகாதியர்களுக்கு உபதேசித்த தட்சிணாமூர்த்தி; (பட்டன் - வேதத்தில் வல்லவன்; ஆசாரியன்);

தீர்த்தன், திருநீற்றன், சிவலோகன் - தூயன், திருநீற்றைப் பூசியவன், சிவலோகத்தில் இருப்பவன்;

முடிவு இல்லாக் கூத்தன் - என்றும் திருக்கூத்துச் செய்பவன்;

குளிர்-சோலைக் குடவாயில் பெருமானே - குளிர்ந்த சோலை சூழ்ந்த குடவாயிலில் உறையும் சிவபெருமான்;


4)

தளமோங்கிய பூமாலைகள் சாத்தித்தொழு வார்க்கு

வளமோங்கிட வாரித்தரும் வள்ளல்கடல் நஞ்சைக்

களமாங்கொரு காரார்மணி செய்தான்கரு வண்டார்

குளிர்பூம்பொழில் சூழுங்குட வாயிற்பெரு மானே.


பதம் பிரித்து:

தளம் ஓங்கிய பூமாலைகள் சாத்தித் தொழுவார்க்கு

வளம் ஓங்கிட வாரித் தரும் வள்ளல்; கடல் நஞ்சைக்

களம் ஆங்கு ஒரு கார் ஆர் மணி செய்தான்; கரு வண்டு ஆர்

குளிர் பூம் பொழில் சூழும் குடவாயிற் பெருமானே.


தளம் ஓங்கிய பூமாலைகள் சாத்தித் தொழுவார்க்கு வளம் ஓங்கிட வாரித் தரும் வள்ளல் - இலைகளும் (வில்வம், வன்னி) உயர்ந்த பூக்களும் தொடுக்கப்பெற்ற மாலைகள் அணிவித்து வணங்கும் பக்தர்களுக்கு வளம் பெருக வரங்களை அள்ளித் தரும் வள்ளல்; (தளம் - இலை; பூவிதழ்); (தளம் ஓங்கிய பூமாலைகள் - சிறந்த இதழ்களையுடைய பூக்களால் தொடுத்த மாலைகள் - என்றும் பொருள்கொள்ளலாம்); (சம்பந்தர் தேவாரம் - 2.98.2 - "அடுத்தடுத்த கத்தியோடு வன்னிகொன்றை கூவிளம் தொடுத்துடன் சடைப்பெய்தாய்"); (சாத்துதல் - அணிதல்; அலங்கரித்தல்);

களம் ஆங்கு ஒரு கார் ஆர் மணி செய்தான் - கண்டத்தில் ஒரு கரிய மணி வைத்தவன்; (களம் - கண்டம்); (ஆங்கு - அவ்விடம்; ஏழனுருபு);

கரு வண்டு ஆர் குளிர் பூம் பொழில் சூழும் குடவாயில் பெருமானே - கருவண்டுகள் ரீங்காரம் செய்யும் குளிர்ந்த அழகிய சோலை சூழ்ந்த குடவாயிலில் உறையும் சிவபெருமான்;


5)

நஞ்சத்தினை உண்ணத்தரு வஞ்சச்சமண் ஆதர்

அஞ்சத்தமிழ் பாடிப்பணி அப்பர்க்கருள் அண்ணல்

வஞ்சிக்கொரு பங்கைத்தரும் மைந்தன்மழு வாளன்

குஞ்சிப்பிறை கொண்டான்குட வாயிற்பெரு மானே.


நஞ்சத்தினை உண்ணத் தரு வஞ்சச் சமண் ஆதர் அஞ்சத், தமிழ் பாடிப் பணி அப்பர்க்கு அருள் அண்ணல் - விடத்தை உண்பித்த வஞ்சகம் மிக்க சமணர்கள் அஞ்சும்படி தேவாரம் பாடி வணங்கிய திருநாவுக்கரசருக்கு அருளிய தலைவன்;; (ஆதர் - குருடர்; அறிவிலிகள்); ( தமிழ் - தேவாரம்); (அப்பர் - திருநாவுக்கரசர்);

வஞ்சிக்கு ஒரு பங்கைத் தரும் மைந்தன் - உமைபங்கன்; (வஞ்சி - பெண்); (மைந்தன் - கணவன்; இளைஞன்; வீரன்);

மழுவாளன் - மழு ஏந்தியவன்;

குஞ்சிப் பிறை கொண்டான் - சென்னியில் பிறையை அணிந்தவன்; (குஞ்சி - தலை); (இலக்கணக் குறிப்பு : ஏழாம்வேற்றுமைத்தொகையில் வரும் வலி மிகும்);

குடவாயில் பெருமானே - குடவாயிலில் உறையும் சிவபெருமான்;


6)

பாரார்தொழும் ஈசன்பணி பத்தர்க்கிடர் தீர்ப்பான்

ஏரார்மணி கண்டந்திகழ் எம்மானிள நாகம்

நீரார்சடை மேலேநில வொன்றுந்நிலை செய்தான்

கூரார்மழு வாளன்குட வாயிற்பெரு மானே.


பதம் பிரித்து:

பாரார் தொழும் ஈசன்; பணி பத்தர்க்கு இடர் தீர்ப்பான்;

ஏர் ஆர் மணி கண்டம் திகழ் எம்மான்; இள நாகம்,

நீர் ஆர் சடை மேலே நிலவு ஒன்றும் நிலை செய்தான்;

கூர் ஆர் மழுவாளன்; குடவாயிற் பெருமானே.


பாரார் - உலகத்தார்; (அப்பர் தேவாரம் - 6.22.1 - "பாரார் பரவும் பழனத்தானைப்"); ஏர் - அழகு; ஒன்றுந்நிலை - ஒன்றும் நிலை - ஓசை கருதி நகர ஒற்று விரித்தல் விகாரம்; இள நாகம், நீர் ஆர் சடை மேலே நிலவு ஒன்றும் நிலை செய்தான் - கங்கை பொருந்திய சடைமேல் பாம்பும் சந்திரனும் சேர்ந்து இருக்குமாறு செய்தவன்;


7)

வேதத்தினன் வெண்ணூலணி மார்பன்விடை யேறி

போதைக்கழல் இட்டுப்புகழ் வார்க்குப்புகல் ஆகி

வாதைக்கிடம் ஆம்பூமிசை வாராநிலை வைத்தான்

கோதைக்கிடம் ஈந்தான்குட வாயிற்பெரு மானே.


பதம் பிரித்து:

வேதத்தினன்; வெண்ணூல் அணி மார்பன்; விடையேறி;

போதைக் கழல் இட்டுப் புகழ்வார்க்குப் புகல் ஆகி,

வாதைக்கு இடம் ஆம் பூமிசை வாரா நிலை வைத்தான்;

கோதைக்கு இடம் ஈந்தான்; குடவாயிற் பெருமானே.


விடையேறி - இடபவாகனன்; போது - பூ; மலர்; புகல் ஆகி - பற்றுக்கோடு ஆகி; வாதை - துன்பம்; பூமிசை வாரா நிலை - பூமியின்மேல் பிறவாத நன்னிலை; கோதை - பெண்;


8)

அமரொன்றிலன் மலைபேர்புயம் ஐந்நான்கிற ஊன்றிக்

கமைகொண்டொரு வாளும்தரும் ஈசன்கழ லாலே

நமனெஞ்சினில் அன்றெற்றிய நம்பன்மிக நல்லன்

குமைநஞ்சினை உண்டான்குட வாயிற்பெரு மானே.


அமர் ஒன்று இலன் மலை பேர்-புயம் ஐந்நான்கு இற ஊன்றிக், கமைகொண்டு ஒரு வாளும் தரும் ஈசன் - தன்னை எவரும் எதிர்த்துப் போர் செய்யாத பெரும் வலிமை உடையவனும், சிறிதும் அன்பு இல்லாதவனுமான இராவணன் கயிலையைப் பெயர்த்தபொழுது அவனது இருபது புஜங்களும் நசுங்குமடி திருப்பாத விரலை ஊன்றி நசுக்கிப், பின் அவன் இறைஞ்ச இரங்கி, அவனுக்குச் சந்திரஹாஸம் என்ற வாலையும் அருளிய ஈசன்; (அமர் - யுத்தம்; சண்டை; விருப்பம்); (ஒன்று - ஒன்றும்; உம் தொக்கது); (கமை - அருள்);(சம்பந்தர் தேவாரம் - 1.116.8 - "செரு இல் அரக்கனைச் சீரில் அடர்த்தருள் செய்தவரே");

கழலாலே நமன் நெஞ்சினில் அன்று எற்றிய நம்பன் - கழல் அணிந்த திருவடியால் இயம மார்பில் உதைத்தவன்; (எற்றுதல் - உதைத்தல்); (நம்பன் - விரும்பத்தக்கவன்);

மிக நல்லன் - மிகவும் நல்லவன்;

குமை நஞ்சினை உண்டான் - கொல்லும் விடத்தை உண்டவன்; (குமைத்தல் - கொல்லுதல்);

குடவாயில் பெருமானே - குடவாயிலில் உறையும் சிவபெருமான்;


9)

இடிபோலொலி ஏற்றின்மிசை ஏறும்பர மேட்டி

துடிபோலிடை மாதோர்புடை ஏற்றான்துணை இல்லான்

அடிமாலலர் மேலான்முடி காணாவழல் ஆனான்

கொடிமேல்விடை கொண்டான்குட வாயிற்பெரு மானே.


பதம் பிரித்து:

இடிபோல் ஒலி ஏற்றின்மிசை ஏறும் பரமேட்டி;

துடிபோல் இடை மாது ஓர் புடை ஏற்றான்; துணை இல்லான்;

அடி மால், அலர் மேலான் முடி காணா அழல் ஆனான்;

கொடிமேல் விடை கொண்டான்; குடவாயிற் பெருமானே.


பரமேட்டி - பரம்பொருள் - சிவன்; துடி - உடுக்கை; புடை - பக்கம்; துணை - ஒப்பு; அடி மால், அலர் மேலான் முடி காணா அழல் - திருமாலால் அடியும், பூமேல் இருக்கும் பிரமனால் முடியும் காண இயலாதபடி உயர்ந்த ஜோதி;


10)

ஈனத்தினை என்றுந்தவம் என்றேபுரி எத்தர்

வானத்தினை நண்ணாரவர் வாக்கிற்பொருள் இல்லை

தேனொத்தவன் அன்பர்க்கருள் தேவன்சடை மீது

கூனற்பிறை கொண்டான்குட வாயிற்பெரு மானே.


பதம் பிரித்து:

ஈனத்தினை என்றும் தவம் என்றே புரி எத்தர்,

வானத்தினை நண்ணார், அவர் வாக்கில் பொருள் இல்லை;

தேன் ஒத்தவன் அன்பர்க்கு அருள் தேவன்; சடை-மீது

கூனல்-பிறை கொண்டான்; குடவாயில் பெருமானே.


எத்தர் - வஞ்சகர்; நண்ணார் - அடையமாட்டார்; கூனல்-பிறை - வளைந்த பிறைச்சந்திரன்; (கூனல் - வளைவு);


11)

ஏற்றைக்கொடி மேலேற்றிய எம்மான்அலை ஆர்ந்த

ஆற்றைப்பனி வெண்டிங்களை அஞ்செஞ்சடை ஏற்றான்

நீற்றைப்புனை நெற்றிப்பரன் நேயர்க்கரண் ஆகிக்

கூற்றைக்குமை காலன்குட வாயிற்பெரு மானே.


பதம் பிரித்து:

ஏற்றைக் கொடிமேல் ஏற்றிய எம்மான்; அலை ஆர்ந்த

ஆற்றைப், பனி வெண் திங்களை, அம் செஞ்சடை ஏற்றான்;

நீற்றைப் புனை நெற்றிப் பரன்; நேயர்க்கு அரண் ஆகிக்,

கூற்றைக் குமை காலன்; குடவாயிற் பெருமானே.


ஏற்றைக் கொடிமேல் ஏற்றிய எம்மான் - இடபக்கொடி உடைய எம் சுவாமி;

அலை ஆர்ந்த ஆற்றை, பனி வெண் திங்களை அம் செஞ்சடை ஏற்றான் - அலை மிக்க கங்கைநதியையும், குளிர்ந்த வெண்பிறைச்சந்திரனையும் அழகிய சிவந்த சடையில் சூடினான்; (ஆர்தல் - பொருந்துதல்; நிறைதல்); (அம் - அழகு);

நேயர்க்கு அரண் ஆகிக், கூற்றைக் குமை காலன் - மார்க்கண்டேயர்க்குக் காவல் ஆகி, இயமனை அழித்த காலகாலன்; (குமைத்தல் - அழித்தல்);

குடவாயில் பெருமானே - குடவாயிலில் உறையும் சிவபெருமான்;


பிற்குறிப்பு : * இறைவனைப் படர்க்கையில் பரவும் பாடல்கள். "அவனைத் தொழுவோம்" என்பது குறிப்பு.


வி. சுப்பிரமணியன்

-------------- --------------

04.14 - கற்குடி (உய்யக்கொண்டான்மலை) - பூத்திரள் கொண்டுனை

04.14 - கற்குடி (உய்யக்கொண்டான்மலை) - பூத்திரள் கொண்டுனை

2013-10-05

கற்குடி (திருச்சிராப்பள்ளி அருகே உள்ள உய்யக்கொண்டான்மலை)

----------------------------------

(கட்டளைக் கலித்துறை. திருநாவுக்கரசர் தேவாரத்தில் திருவிருத்தம் என்ற அமைப்பு )

(அப்பர் தேவாரம் - 4.94.1 - "ஈன்றாளுமாய் எனக்கெந்தையுமாய்")


1)

பூத்திரள் கொண்டுனைப் போற்றிமை யோரைப் புரந்தருளிக்

கார்த்த விடத்தைக் கரந்தருள் செய்த கருமிடற்றாய்

தீத்திரள் போல்திகழ் செஞ்சடை யாய்துதி செய்யுமெனைக்

காத்தரு ளாய்திருக் கற்குடி மன்னிய கண்ணுதலே.


பூத்திரள் கொண்டு உனைப் போற்று இமையோரைப் புரந்தருளிக் - மிகுந்த பூக்களால் உன்னை வழிபட்ட தேவர்களைக் காத்தருளி;

கார்த்த விடத்தைக் கரந்தருள் செய்த கருமிடற்றாய் - கரிய கைக்கின்ற நஞ்சை ஒளித்து அருள்செய்த நீலகண்டனே; (கார்த்தல் - கறுப்பாதல்; உறைத்தல்); (கரத்தல் - மறைத்தல்);

தீத்திரள் போல் திகழ் செஞ்சடையாய் - தீயின் தொகுதி போன்று விளங்கும் செஞ்சடையை உடையவனே;

துதி செய்யும் எனைக் காத்தருளாய் - போற்றும் என்னைக் காத்தருள்வாயாக;

திருக்-கற்குடி மன்னிய கண்ணுதலே - திருக்கற்குடியில் எழுந்தருளியிருக்கும் நெற்றிக்கண்ணனே; (மன்னுதல் - நிலைபெறுதல்; தங்குதல்);


2)

நெய்தயிர் பாலொடு நீர்மகிழ்ந் தாடிடும் நின்மலனே

பொய்தவிர் நெஞ்சினர் போற்றிப் பணிந்திடும் புண்ணியனே

மைதழு வும்கயி லைக்கிறை யேவுன் மலரடியைக்

கைதொழு வேற்கருள் கற்குடி மன்னிய கண்ணுதலே.


நெய் தயிர் பாலொடு நீர் மகிழ்ந்து ஆடிடும் நின்மலனே - நெய், தயிர், பால், நீர் இவற்றால் அபிஷேகம் செய்யப்பெறும் தூயவனே;

பொய் தவிர் நெஞ்சினர் - பொய்யை நீங்கிய நன்மனம் உடைய அன்பர்கள்;

மை தழுவும் கயிலைக்கு இறையே - கருமேகம் சூழ்ந்த கயிலைக்கு இறைவனே;

கைதொழுவேற்கு அருள் - கைகூப்பி வணங்கும் எனக்கு அருள்வாயாக ;


3)

பறக்கின்ற நெஞ்சம், பலபல எண்ணும், பதைபதைக்கும்;

மறக்கின்ற நெஞ்சம் இறக்கின்ற போதுனை எண்ணிடுமோ?

மறைக்கின்ற மாய வலையற இங்கு வரமருளாய்,

கறைக்கண்ட னேதிருக் கற்குடி மன்னிய கண்ணுதலே.


பறத்தல் - மிக விரைதல்; அமைதியற்று வருந்துதல்; இங்கு - இப்பொழுது;


4)

பாரிடம் சூழ்ந்திசை பாட நடம்பயில் பாசுபதா

ஊரிடு பிச்சை உகந்துழல் வாய்விடை ஊர்தியினாய்

ஆரிடர் செய்யும் அருவினை தீர அருள்புரியாய்

காரடை கண்டத்த கற்குடி மன்னிய கண்ணுதலே.


பாரிடம் - பூதகணங்கள்; நடம் பயில் - ஆடுதலைச் செய்யும்; பாசுபதன் - சிவபெருமான்; (சுந்தரர் தேவாரம் - 7.20.5 - "வெண்டலையிற் பலி கொண்டுழல் பாசுபதா"); கார் அடை கண்டத்த - கருமை அடைந்த கண்டத்தை உடையவனே;


5)

வாருல வும்முலை மங்கை மணாள வளர்மதியம்

நீருல வும்புன் சடையின னேதிரு நீறணிந்தாய்

சீருல வும்பெயர் சிந்தைவைத் தேன்வினை தீர்த்தருளாய்

காருல வும்திருக் கற்குடி மன்னிய கண்ணுதலே.


வாருலவும்முலை - வார் உலவும் முலை - மகர ஒற்று விரித்தல் விகாரம்; மணாள - மணாளனே; மதியம் - திங்கள்; நீர் - கங்கை; புன்சடை - புகர் நிறம் உடைய சடை - செஞ்சடை; சீர் - நன்மை; புகழ்; பெயர் சிந்தை வைத்தேன் - உன் திருநாமத்தை என் மனத்தில் வைத்தேன்; கார் - கருமேகம்;


6)

ஒருமுகில் வண்ணம் ஒளிர்மணி கண்டம் உடையவனே

திருமயில் அன்ன தெரிவையொர் பங்கு திகழ்பரனே

தருமுகி லேவுன தாள்பணிந் தேற்குத் தயைபுரியாய்

கருமுகி லார்திருக் கற்குடி மன்னிய கண்ணுதலே.


ஒரு - ஒப்பற்ற; திரு - அழகு; தெய்வத்தன்மை; செல்வம்; தெரிவை - பெண்; ஒர் - ஓர் என்பதன் குறுக்கல் விகாரம்; தருமுகில் - (உலகு வாழ மழையைத்) தருகின்ற மேகம் போல் வரம் அருளும் சிவபெருமான்; உன - உன் + அ = உன்னுடைய; ('அ' - ஆறாம் வேற்றுமை உருபு);


7)

அமிழ்தினை வேண்டி அமரர் கடைந்த அலைகடலன்(று)

உமிழ்விடம் கண்(டு)அவர் ஓலம் எனவெடுத் துண்டவனே

தமிழினைப் பாடியுன் தாள்பணிந் தேற்குத் தயைபுரியாய்

கமழ்சடை யாய்திருக் கற்குடி மன்னிய கண்ணுதலே.


ஓலம் என எடுத்து உண்டவனே - ஓலம் என்று உன்னைச் சரண்புகவும், அந்த நஞ்சை எடுத்து உண்டவனே; தமிழினைப் பாடி - தேவாரம் முதலியன பாடி; உன் தாள் பணிந்தேற்கு - உன் திருவடியைப் பணிந்த எனக்கு;


8)

ஆர்க்கின்ற வாயன் அரக்கர்தம் கோன்சென் றருவரையைப்

பேர்க்கின்ற போது பெருவிர லாலடர் பெற்றியனே

நாக்கொண்டுன் நாமம் நவிற்றுகின் றேற்கு நலமருளாய்

கார்க்கண்ட னேதிருக் கற்குடி மன்னிய கண்ணுதலே.


ஆர்க்கின்ற வாயன் அரக்கர்தம் கோன் சென்று அருவரையைப் பேர்க்கின்ற போது - பழித்துப் பேசிக் கத்துகின்ற வாயை உடையவனும் அரக்கர் தலைவனும் ஆன இராவணன் போய்க் கயிலைமலையைப் பெயர்க்க முயன்றபொழுது; (ஆர்த்தல் - கத்துதல்; அலர்தூற்றுதல்); (அருவரை - அரிய மலை - கயிலைமலை);

பெருவிரலால் அடர் பெற்றியனே - திருப்பாதத்தின் பெருவிரலை ஊன்றி நசுக்கியவனே; (பெற்றி - தன்மை; பெருமை); (அப்பர் தேவாரம் - 4.75.10 - "பெருவிரல் இறைதான் ஊன்ற .. .. அரக்கனன் றலறி வீழ்ந்தான்");

நாக்கொண்டு உன் நாமம் நவிற்றுகின்றேற்கு நலம் அருளாய் - நாவால் உன் திருநாமத்தையும் திருப்புகழையும் சொல்லும் அடியேனுக்கு நன்மை அருள்க; (நவிற்றுதல் - சொல்லுதல்);

கார்க்கண்டனே - கரிய கண்டனே;

திருக்-கற்குடி மன்னிய கண்ணுதலே - திருக்கற்குடியில் எழுந்தருளியிருக்கும் நெற்றிக்கண்ணனே;


9)

அரியும் அயனும் அடியும் முடியும் அறியவொணா

எரியின் உருவில் எழுந்தவ னேபுனல் ஏற்றசடைப்

பெரியவ னேவெண் பிறையணிந் தாயென் பிழைபொறுப்பாய்

கரியுரி யாய்திருக் கற்குடி மன்னிய கண்ணுதலே.


புனல் ஏற்ற சடைப் பெரியவனே - கங்கையைத் தாங்கிய சடையை உடைய மகாதேவனே; என் பிழைபொறுப்பாய் - என் குற்றங்களைப் பொறுத்து அருள்வாயாக; கரியுரியாய் - யானைத்தோலைப் போர்த்தவனே;


10)

தத்துவம் தானறி யாது தருக்கும் சமயிகள்தம்

எத்தினை விள்ளுமின் ஈசன் எருதமர் எம்பெருமான்

பத்திசெய் அன்பர் பழவினை பாறப் பரிந்தருள்வான்

கைத்தநஞ் சுண்டவன் கற்குடி மன்னிய கண்ணுதலே.


தத்துவம் தான் அறியாது தருக்கும் சமயிகள்தம் எத்தினை விள்ளுமின் - மெய்ப்பொருளை அறியாது ஆணவத்தோடு பேசும் புறச்சமயிகளது வஞ்சகத்தை நீங்குங்கள்; (தருக்குதல் - செருக்குக்கொள்ளுதல்); (சமயி - மதஸ்தன்); (எத்து - வஞ்சகம்); (விள்ளுமின் - நீங்குங்கள்); சொல்லுங்கள்;

(விள்ளுமின்) ஈசன், எருது அமர் எம்பெருமான் - ஈசனும் இடபவாகனுமான எம்பெருமான் நாமத்தைச் சொல்லுங்கள்; (விள்ளுமின் - சொல்லுங்கள்); ("விள்ளுமின்" - இச்சொல்லை இப்படி இடைநிலைத் தீவகமாக இருமூறை இயைத்துப் பொருள்கொள்ளல் ஆம்);

பத்திசெய் அன்பர் பழவினை பாறப் பரிந்தருள்வான் - பக்திசெய்யும் அடியார் பழவினை அழிய இரங்கி அருள்பவன்; (பாறுதல் - அழிதல்);

கைத்த நஞ்சு உண்டவன் - கசக்கும் நஞ்சை உண்டவன்; (கைத்தல் - கசத்தல்);

கற்குடி மன்னிய கண்ணுதலே - திருக்கற்குடியில் எழுந்தருளியிருக்கும் நெற்றிக்கண்ணன்; (ஏ - ஈற்றசை);


11)

நற்பதம் தன்னில் நறுமலர் தூவி நரைவிடையாய்

மற்புயம் எட்டுடை யாயெனும் மார்க்கண்டர் வாழவைத்தாய்

பற்பல வாறுனைப் பாடுகின் றேற்குப் பரிந்தருளாய்

கற்பக மேதிருக் கற்குடி மன்னிய கண்ணுதலே.


நன்மைமிகும் உன் திருவடியில் வாசமலர்களைத் தூவி, "வெள்ளை ஏற்றை ஊர்தியாக உடையவனே! வலிமைமிகும் எட்டுத் தோள்களை உடையவனே!" என்று போற்றிய மார்க்கண்டேயர் என்றும் இறப்பின்றி வாழ அருள்புரிந்தவனே! கற்பகமே! திருக்கற்குடியில் எழுந்தருளியிருக்கும் நெற்றிக்கண்ணனே! பலவாறு உன்னைப் போற்றிப் பாடும் எனக்கு இரங்கி அருள்புரிவாயாக!

நரைவிடை - வெள்ளேறு; மற்புயம் எட்டு உடையாய் - வலிமைமிக்க எட்டுத் தோள்கள் உடையவனே; (திருவாசகம் - குழைத்த பத்து - 8.33.7 - "எண்தோள் முக்கண் எம்மானே");

* திருக்கற்குடித் தலச்சிறப்பு : மார்க்கண்டேயருக்கு மீண்டும் ஜீவன் அளித்ததால் சுவாமி "உஜ்ஜீவநாதர்" எனப்படுகின்றார். எண்ணிய விருப்பங்களை ஈடேற்றுவதால் "கற்பகநாதர்" என்றும் இவருக்குப் பெயர் உண்டு.


வி. சுப்பிரமணியன்

----------- --------------

04.13 - கற்குடி (உய்யக்கொண்டான்மலை) - நகர்மூன்று அட்டவன்

04.13 - கற்குடி (உய்யக்கொண்டான்மலை) - நகர்மூன்று அட்டவன்

2013-10-05

கற்குடி (இக்காலத்தில் - உய்யக்கொண்டான்மலை)

----------------------------------

(வஞ்சித்துறை - தான தானன - திருவிருக்குக்குறள் அமைப்பு;

தான என்பது தனன / தானா என்றெல்லாம் வரலாம்; மா விளம் - என்ற வாய்பாடு)

(சம்பந்தர் தேவாரம் - 1.92.1 - "வாசி தீரவே");


1)

நகர்மூன் றட்டவன் .. முகிலார் கற்குடி

அகலான் தாளிணை .. புகழ்வார்க் கின்பமே.


நகர் மூன்று அட்டவன் - முப்புரங்களை அழித்தவன்; (அடுதல் - அழித்தல்;)

முகில் ஆர் கற்குடி அகலான் - மேகம் பொருந்தும் கற்குடி மலையில் நீங்காது உறைகின்றவன்;

தாளிணை புகழ்வார்க்கு இன்பமே - அப்பெருமான் இணையடியைப் புகழும் பக்தர்களுக்கு என்றும் இன்பமே.


2)

மத்தம் சூடிய .. பித்தன் கற்குடி

அத்தன் தாள்தொழும் .. பத்தர்க் கின்பமே.


மத்தம் - ஊமத்தமலர்; பித்தன் - பேரருளாளன்; சிவன் திருநாமங்களுள் ஒன்று; அத்தன் - தந்தை;


3)

பெண்ணும் ஆயமுக் .. கண்ணன் கற்குடி

அண்ணல் தாள்தொழ .. நண்ணும் இன்பமே.


பெண்ணும் ஆய முக்கண்ணன் - பெண்ணும் ஆகியவன் (அர்த்தநாரீஸ்வரன்), நெற்றிக்கண்ணன்;

தாள் தொழ நண்ணும் இன்பமே - 1. தாளைத் தொழுதால் இன்பம் நம்மை நண்ணும்; 2. தாளைத் தொழ நீங்கள் நண்ணுங்கள், இன்பமே விளையும்; (நண்ணும் - அடையும்; கிட்டும்; பொருந்தும்);


4)

ஐயன் ஆரழற் .. கையன் கற்குடி

மெய்யன் தாள்தொழ .. உய்யல் ஆகுமே.


ஐயன் - தலைவன்; ஆர் அழல் கையன் - கையில் தீயை ஏந்தியவன்; மெய்யன் - பெய்ப்பொருள் ஆனவன்; தாள் தொழ உய்யல் ஆகும் - திருவடியைத் தொழுதால் உய்தி அடையலாம் (கடைத்தேறலாம்);


5)

அண்டன் நஞ்சணி .. கண்டன் கற்குடி

கண்டு கைதொழ .. மண்டும் இன்பமே.


அண்டன் - அண்டங்களுக்கெல்லாம் தலைவன்; மண்டுதல் - மிகுதல்;


6)

கால னைச்செறு .. காலன் கற்குடிச்

சூலன் தாள்தொழல் .. சீலர் செய்கையே.


காலனைச் செறு காலன் - காலகாலன்; (செறுதல் - அழித்தல்); சூலன் - சூலபாணி;


7)

மங்கை பங்கினன் .. தங்கு கற்குடி

தங்கை யாற்றொழப் .. பொங்கும் இன்பமே.


தம் கையால் தொழ - தங்கள் கைகளால் தொழும் பக்தர்களுக்கு;


8)

மடவ ரக்கனைப் .. படவ டர்த்தருள்

கடவுள் கற்குடி .. அடைய இன்பமே.


அறிவற்ற இராவணன் துன்பப்படும்படி அவனை (மலைக்கீழ்) நசுக்கி அருளிய கடவுள் உறையும் திருக்கற்குடியை அடைந்து தொழுவார்க்கு இன்பமே.


9)

அயன்மால் நேடெரி .. கயமார் வேணியன்

புயலார் கற்குடி .. துயர்நோய் தீர்க்குமே.


அயன் மால் நேடு எரி - பிரமனும் திருமாலும் தேடிய சோதி; (நேடுதல் - தேடுதல்);

கயம் ஆர் வேணியன் - கங்கை பொருந்திய சடையினன்; (கயம் - நீர்நிலை); (சுந்தரர் தேவாரம் - 7.28.9 - "கயமாரும் சடையாய்");

புயல் ஆர் கற்குடி - மேகம் பொருந்தும் கற்குடி;

துயர் நோய் தீர்க்கும் - துயரையும் நோயையும் தீர்க்கும்;


10)

பிட்டர் சொல்விடும் .. நட்டன் கற்குடி

இட்ட மாய்த்தொழக் .. கட்டம் இல்லையே.


பிட்டர் சொல் விடும் - கீழோர் சொற்களை நீங்கள் மதியாது நீங்குங்கள்; (பிட்டர் - பிரஷ்டர்; பிரஷ்டம் - இழிவு); நட்டன் - கூத்தன்; இட்டம் - அன்பு; கட்டம் - கஷ்டம்;


11)

அணியன் ஊட்டியில் .. மணியன் கற்குடி

பணிய வல்லவர் .. பிணிகள் தீர்வரே.


அணியன் - அருகே இருப்பவன்;

ஊட்டியில் மணியன் - நீலகண்டன்; (ஊட்டி - மிடறு; கண்டம்; மணி - நீலமணி); (பெரியபுராணம் - அரிவாட்டாய நாயனார் புராணம் - 12.13.17 - "கழுத்தினோடே ஊட்டியும் அரியா நின்றார்");

கற்குடி பணிய வல்லவர் பிணிகள் தீர்வரே - திருக்கற்குடியை வணங்கும் அன்பர்களது உடற்பிணியும் உயிர்ப்பிணியும் நீங்கும்; (பிணி - பந்தம்; நோய்);


வி. சுப்பிரமணியன்

----------- --------------