Sunday, August 31, 2025

P.445 - ஆமூர் (திருவாமூர்) - அஞ்செழுத்தை ஓதிநிதம்

2018-08-22

P.445 - ஆமூர் (திருவாமூர்)

-------------------------------

(நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா)

(சம்பந்தர் தேவாரம் - 2.48.1 - "கண்காட்டு நுதலானும்")


1)

அஞ்செழுத்தை ஓதிநிதம் அடிபணியும் அன்புடையார்

அஞ்சுவினை அவைநீக்கி ஆனந்தம் தருமீசன்

செஞ்சொலுரை வாகீசர் சிந்தைதனை நீங்காதான்

அஞ்சிறைவண் டார்பொழில்சூழ் ஆமூரெம் பசுபதியே.


அஞ்செழுத்தை ஓதி நிதம் அடிபணியும் அன்பு உடையார் - திருவைந்தெழுத்தைத் தினமும் ஓதி வழிபடும் பக்தர்கள்;

அஞ்சு-வினை அவை நீக்கி ஆனந்தம் தரும் ஈசன் - அவர்கள் அஞ்சுகின்ற வினைகளை நீக்கி அவர்களுக்கு இன்பத்தை நல்கும் ஈசன்;

செஞ்சொல் உரை வாகீசர் சிந்தைதனை நீங்காதான் - தேவாரம் பாடிய திருநாவுக்கரசரது நெஞ்சில் நீங்காமல் உறைந்தவன்; (* திருவாமூர் - திருநாவுக்கரசர் அவதரித்த தலம்); (* பசுபதீஸ்வரர் - இத்தலத்து ஈசன் திருநாமம்);

ஞ்சிறை வண்டு ஆர்-பொழில் சூழ் ஆமூர் எம் பசுபதியே - அழகிய சிறகுகளை உடைய வண்டுகள் ஒலிக்கின்ற சோலை சூழ்ந்த திருவாமூரில் எழுந்தருளியுள்ள எம் பசுபதி; (அம் - அழகு); (சிறை - இறகு);


2)

தணிமனத்துத் தவசீலர் தாள்பரவ நின்றபரன்

மணிமிளிரும் கண்டத்தன் வானவரும் தானவரும்

பணியுமிறை பாய்புனலைப் படர்சடையில் தாங்குமரன்

அணிபொழிலில் வண்டறையும் ஆமூரெம் பசுபதியே.


தணி-மனத்துத் தவசீலர் தாள் பரவ நின்ற பரன் - அடங்கிய மனத்தை உடைய தவசீலர்கள் தன் திருவடியைத் துதிக்க நின்ற பரமன்;

மணி மிளிரும் கண்டத்தன் - நீலகண்டன்;

வானவரும் தானவரும் பணியும் இறை - தேவரும் அசுரரும் வழிபடும் இறைவன்; (தானவர் - அசுரர்);

பாய்-புனலைப் படர்-சடையில் தாங்கும் அமரன் - வானிலிருந்து பாய்ந்த கங்கையைப் படர்ந்த சடையில் தாங்கிய ஹரன்;

அணி பொழிலில் வண்டு அறையும் ஆமூர் எம் பசுபதியே - அழகிய சோலையில் வண்டுகள் ஒலிக்கின்ற திருவாமூரில் எழுந்தருளியுள்ள எம் பசுபதி;


3)

அழலாரும் ஆகத்தில் ஆயிழையோர் பாகத்தன்

நிழலாரும் வெண்மழுவன் நிலவேறும் சடைதன்னுள்

சுழலாரும் கங்கையினான் துடியேந்தும் அங்கையினான்

அழகாரும் பொழில்சூழ்ந்த ஆமூரெம் பசுபதியே.


அழல் ஆரும் ஆகத்தில் ஆயிழை ஓர் பாகத்தன் - தீப் போன்ற செம்மேனியில் உமையை ஒரு பாகமாக உடையவன்; (ஆர்தல் - ஒத்தல்); (ஆகம் - மேனி); (ஆயிழை - பெண்);

நிழல் ஆரும் வெண்மழுவன் - ஒளி திகழும் வெண்மழுவை ஏந்தியவன்; (நிழல் - ஒளி); (ஆர்தல் - மிகுதல்; பொருந்துதல்);

நிலவு ஏறும் சடைதன்னுள் சுழல் ஆரும் கங்கையினான் - சந்திரன் ஏறிய சடையுள் சுழல் மிக்க கங்கையை உடையவன்; (நிலவு - நிலா - சந்திரன்);

துடி ஏந்தும் அங்கையினான் - கையில் உடுக்கையை ஏந்தியவன்; (துடி - உடுக்கை)

அழகு ஆரும் பொழில் சூழ்ந்த ஆமூர் எம் பசுபதியே - அழகிய சோலை சூழ்ந்த திருவாமூரில் எழுந்தருளியுள்ள எம் பசுபதி;


4)

பாலனுயிர் கொல்வதற்குப் பாசத்தோ டோடிவந்த

காலனுயிர் வீடவுதை கண்ணுதலான் மண்முதலாம்

ஞாலமெலாம் படைத்தருளும் நாதன்முன் முனிநால்வர்க்(கு)

ஆலதன்கீழ் அறஞ்சொன்ன ஆமூரெம் பசுபதியே.


பாலன் உயிர் கொல்வதற்குப் பாசத்தோடு ஓடிவந்த - மார்க்கண்டேயரது உயிரைக் கொல்வதற்காகப் பாசத்தை ஏந்தி விரைந்து அடைந்த;

காலன் உயிர் வீட உதை கண்ணுதலான் - கூற்றுவனது உயிரே நீங்குமாறு உதைத்தருளிய நெற்றிக்கண்ணன்;

மண் முதலாம் ஞாலம் எலாம் படைத்தருளும் நாதன் - பூமி முதலிய உலகங்களையெல்லாம் படைத்த தலைவன்; (ஞாலம் - உலகம்);

முன் முனி நால்வர்க்கு ஆல் அதன்கீழ் அறம் சொன்ன ஆமூர் எம் பசுபதியே - முன்னர்ச் சனகாதியர்களான நான்கு முனிவர்களுக்குக் கல்லால-மரத்தின்கீழ் அறம் உரைத்த, ஆமூரில் எழுந்தருளிய எம் பசுபதி; (ஆல் - ஆலமரம்);


5)

கானஞ்செய் வண்டமரும் கருங்குழலி ஒருபங்கன்

மானஞ்சு வன்புலியின் வரியதளை வீக்கியவன்

வானஞ்சு வன்னஞ்சை மகிழ்ந்துண்ட மணிகண்டன்

ஆனஞ்சும் ஆடியவன் ஆமூரெம் பசுபதியே.


கானம் செய் வண்டு அமரும் கருங்குழலி ஒரு பங்கன் - இசைபாடும் வண்டுகள் விரும்பும் கரிய கூந்தலையுடைய உமையை ஒரு பங்கில் உடையவன்; (கானம் - இசைப்பாட்டு); (அமர்தல் - விரும்புதல்);

மான் அஞ்சு வன்-புலியின் வரி அதளை வீக்கியவன் - மானுக்கு அச்சம் தரும் கொடிய புலியின் வரித்தோலை ஆடையாகக் கட்டியவன்; (அதள் - தோல்); (வீக்குதல் - கட்டுதல்);

வான் அஞ்சு வன்-நஞ்சை மகிழ்ந்து உண்ட மணிகண்டன் - தேவர்கள் அஞ்சிய கொடிய விடத்தை விரும்பி உண்ட நீலகண்டன்;

ஞ்சும் ஆடியவன் - பசுவிடமிருந்து பெறப்படும் ஐந்து பொருள்களால் அபிஷேகம் செய்யப்பெறுபவன்; (ஆனஞ்சு - பஞ்சகவ்வியம்);

ஆமூர் எம் பசுபதியே - ஆமூரில் எழுந்தருளிய எம் பசுபதி;


6)

ஏறணிந்த வெல்கொடியான் எழில்திகழ இடுகாட்டு

நீறணிந்த மேனியிலே நெடுவேல்போற் கண்ணியையோர்

கூறணிந்த கொள்கையினான் கொன்றைவன்னி கூவிளத்தோ(டு)

ஆறணிந்த செஞ்சடையான் ஆமூரெம் பசுபதியே.


ஏறு அணிந்த வெல்கொடியான் - வெற்றியுடைய இடபக்கொடி உடையவன்;

எழில் திகழ இடுகாட்டு நீறு அணிந்த மேனியிலே நெடுவேல் போல் கண்ணியை ஓர் கூறு அணிந்த கொள்கையினான் - அழகுறச் சுடுகாட்டுச் சாம்பலைப் பூசிய திருமேனியில் நீண்ட வேல் போன்ற கண்களையுடைய உமையை ஒரு கூறாகக் கொண்டவன்;

கொன்றை வன்னி கூவிளத்தோடு ஆறு அணிந்த செஞ்சடையான் - கொன்றைமலர், வன்னியிலை, வில்வம், கங்கை இவற்றையெல்லாம் சிவந்த சடையில் அணிந்தவன்; (கூவிளம் - வில்வம்);

ஆமூர் எம் பசுபதியே - ஆமூரில் எழுந்தருளிய எம் பசுபதி;


7)

வாடல்வெண் தலையொன்றில் மடவார்கள் இடுமூணை

நாடல்செய் மாதேவன் நக்கெயில்கள் மூன்றெரித்தான்

பாடல்கள் பாரிடங்கள் பலபாட நள்ளிருளில்

ஆடல்செய் பாதத்தன் ஆமூரெம் பசுபதியே.


வாடல் வெண்-தலை ஒன்றில் மடவார்கள் இடும் ஊணை நாடல்-செய் மாதேவன் - வற்றிய மண்டையோட்டில் பெண்கள் இடும் பிச்சையை விரும்புகின்ற மகாதேவன்; (வாடல் - வாடுதல்); (ஊண் - உணவு - பிச்சை); (நாடல் - நாடுதல்);

நக்கு எயில்கள் மூன்று எரித்தான் - சிரித்து முப்புரங்களை எரித்தவன்; (நகுதல் - சிரித்தல்);

பாடல்கள் பாரிடங்கள் பல பாட நள்ளிருளில் ஆடல்செய் பாதத்தன் - பூதகணங்கள் பாடல்கள் பாட, நள்ளிரவில் திருநடம் செய்பவன்; (பாரிடம் - பூதம்); (சம்பந்தர் தேவாரம் - 1.57.3 - "பூதம் பாடப் புறங்காட் டிடையாடி");

ஆமூர் எம் பசுபதியே - ஆமூரில் எழுந்தருளிய எம் பசுபதி;


8)

தொட்டுமலை தூக்கியவன் தோள்நாலஞ் சடர்பாதன்

எட்டுருவம் உடையீசன் இகழ்தக்கன் தன்தலையை

வெட்டியவன் மலர்வாளி வேள்தன்னைப் பொடிசெய்தான்

அட்டபுயம் உடையண்ணல் ஆமூரெம் பசுபதியே.


தொட்டு மலை தூக்கியவன் தோள் நாலஞ்சு அடர்-பாதன் - கயிலைமலையைப் பற்றி பெயர்த்துத் தூக்கி எறிய முயன்ற இராவணனது இருபது புஜங்களையும் நசுக்கிய திருப்பாதன்; ( அடர்த்தல் - நசுக்குதல்);

எட்டு-உருவம் உடையீசன் - அட்டமூர்த்தம் உடைய ஈசன்;

இகழ்-தக்கன்-தன் தலையை வெட்டியவன் - இகழ்ந்த தக்கனது தலையை வெட்டியவன்;

மலர்-வாளி வேள்தன்னைப் பொடிசெய்தான் - மலரம்புகளை உடைய மன்மதனைச் சாம்பலாக்கியவன்; (வாளி - அம்பு); (வேள் - காமன்);

அட்ட-புயமுடை அண்ணல் - எட்டுப் புஜங்களை உடைய பெருமான்;

ஆமூர் எம் பசுபதியே - ஆமூரில் எழுந்தருளிய எம் பசுபதி;


9)

முன்பிருவர் நேடவெழு முடிவில்லாப் பரஞ்சோதி

தென்புகலி மகனார்க்குத் திருமுலைப்பால் தந்தாளைத்

தன்புடையில் வைத்துகந்தான் தமிழ்பாடித் தாள்பணியும்

அன்புடையார்க் கன்புடையான் ஆமூரெம் பசுபதியே.


முன்பு இருவர் நேட எழு முடிவு இல்லாப் பரஞ்சோதி - முன்னர்ப் பிரமனும் திருமாலும் தேடும்படி உயர்ந்த எல்லையற்ற மேலான ஒளி-வடிவினன்;

தென்-புகலி மகனார்க்குத் திருமுலைப்பால் தந்தாளைத் தன் புடையில் வைத்து உகந்தான் - அழகிய சீகாழியில் அவதரித்த திருமகனாரான ஞானசம்பந்தருக்குத் திருமுலைப்பால் தந்த உமாதேவியைத் தன் திருமேனியில் ஒரு பக்கத்தில் (ஒரு கூறாக) வைத்தவன்; (தென் - அழகிய); (புகலி - சீகாழியின் 12 பெயர்களில் ஒன்று); (புடை - பக்கம்);

தமிழ் பாடித் தாள் பணியும் அன்பு உடையார்க்கு அன்பு உடையான் - தேவாரம் திருவாசகம் முதலியவற்றைப் பாடி வழிபடும் அன்பர்களுக்கு அன்பன்;

ஆமூர் எம் பசுபதியே - ஆமூரில் எழுந்தருளிய எம் பசுபதி;


10)

கரவுமலி நெஞ்சத்தர் கைதவத்தால் ஆள்சேர்க்க

இரவுபகல் பொய்யுரைப்பர் இவர்குழியில் வீழாதே

விரவியடி பரவியவர் வேண்டுவரம் நல்குபவன்

அரவவரை நாணுடையான் ஆமூரெம் பசுபதியே.


கரவு மலி நெஞ்சத்தர் கைதவத்தால் ஆள் சேர்க்க இரவுபகல் பொய் உரைப்பர் - பொய்ம்மை மிக்க நெஞ்சத்தை உடையவர்கள் வஞ்சனையால் கூட்டம் சேர்ப்பதற்காக இராப்பகலாகப் பொய்கள் சொல்வர்; (கரவு - பொய்; வஞ்சனை); (கைதவம் - கபடம்);

இவர் குழியில் வீழாதே - இவர்களது அவக்குழியில் விழுந்துவிடாதே / விழுந்துவிடாமல்;

விரவி அடி பரவியவர் வேண்டு வரம் நல்குபவன் - தன்னை அடைந்து போற்றி வழிபடுபவர்களுக்கு அவர்கள் விரும்பிய வரங்களையெல்லாம் அளிப்பவன்; (விரவுதல் - அடைதல்);

அரவ-அரைநாண் உடையான் - பாம்பை அரைநாணாகக் கட்டியவன்;

ஆமூர் எம் பசுபதியே - ஆமூரில் எழுந்தருளிய எம் பசுபதி;


11)

கொடியிடையாள் ஒருகூறன் கூரியமூ விலைவேலன்

முடிமிசைவெண் பிறையணிந்த முக்கண்ணன் நால்வேதன்

கடிமலர்கள் பலதூவிக் காதலராய்த் தமிழ்பாடி

அடிதொழுதார் வினைதீர்ப்பான் ஆமூரெம் பசுபதியே.


கொடியிடையாள் ஒரு கூறன் - கொடி போன்ற சிற்றிடையை உடைய உமையை ஒரு கூறாக உடையவன்;

கூரிய மூவிலை வேலன் - கூர்மையான, இலை போன்ற மூன்று நுனிகளை உடைய திரிசூலத்தை ஏந்தியவன்;

முடிமிசை வெண்பிறை அணிந்த முக்கண்ணன் - சென்னிமேல் வெண்திங்களை அணிந்த நெற்றிக்கண்ணன்;

நால்வேதன் - நால்வேதங்களைப் பாடியருளியவன்; நால்வேதப் பொருள் ஆனவன்;

கடிமலர்கள் பல தூவிக் காதலராய்த் தமிழ் பாடி அடிதொழுதார் வினை தீர்ப்பான் - வாசமலர்கள் பல தூவி, அன்போடு தேவாரம் திருவாசகம் பாடி வழிபடும் பக்தர்களது தீவினையைத் தீர்ப்பவன்; (கடி - வாசனை);

ஆமூர் எம் பசுபதியே - ஆமூரில் எழுந்தருளிய எம் பசுபதி;


வி. சுப்பிரமணியன்

----------- --------------


No comments:

Post a Comment