Sunday, August 31, 2025

P.443 - அண்ணாமலை (திருவண்ணாமலை) - உண்ணாமுலையாள் உடனாம்

2018-08-15

P.443 - அண்ணாமலை (திருவண்ணாமலை)

-------------------------------

(சந்தக் கலிவிருத்தம் - தனனா தனனா தனனா தனனா)

(சம்பந்தர் தேவாரம் - 2.18 - "சடையாய் எனுமால்")


1)

உண்ணா முலையாள் உடனாம் ஒருவன்

அண்ணா மலையான் அடியார்க் கெளியான்

பண்ணார் தமிழ்கேட் டருளும் பரமன்

எண்ணாய் மனமே இடர்தீர்ந் திடுமே.


உண்ணா முலையாள் உடனாம் ஒருவன் - உண்ணாமுலையாள் உடனாகிய ஒப்பற்றவன்; (சம்பந்தர் தேவாரம் - 1.10.1 - "உண்ணாமுலை உமையாளொடும் உடனாகிய ஒருவன்");

அண்ணாமலையான் - திருவண்ணாமலையில் உறைகின்றவன்;

அடியார்க்கு எளியான் - அடியவர்களால் எளிதில் அடையப்படுபவன்;

பண் ஆர் தமிழ் கேட்டு அருளும் பரமன் - தேவாரம் முதலிய இசைத்தமிழ்ப் பாமாலைகளைக் கேட்டு இரங்கி அருளும் பரமன்;

எண்ணாய் மனமே; இடர் தீர்ந்திடுமே - மனமே, நீ அப்பெருமானை எண்ணுவாயாக;

இடர் தீர்ந்திடுமே - உன் துன்பம் நீங்கும்;


2)

கண்ணார் நுதலன் கருமா மிடறன்

விண்ணோர் தலைவன் விடையார் கொடியான்

அண்ணா மலையான் அடிவாழ்த் திடவே

நண்ணா தறுமே நலிதீ வினையே.


கண் ஆர் நுதலன் - நெற்றிக்கண்ணன்; (நுதல் - நெற்றி);

கரு மா மிடறன் - நீலகண்டன்; (மிடறு - கண்டம்);

விண்ணோர் தலைவன் - தேவர்கள் தலைவன்;

விடையார் கொடியான் - இடபக்கொடி உடையவன்;

அண்ணாமலையான் - திருவண்ணாமலை ஈசன்;

அடி வாழ்த்திடவே நண்ணாது அறுமே நலி-தீவினையே - அப்பெருமானது திருவடியைப் போற்றினால் நம்மை வருத்தும் தீவினைகள் எல்லாம் அழியும்; ( நலிதல் / நலித்தல் - வருத்துதல்);


3)

தண்ணீர்ச் சடைமேல் தவழும் பிறையான்

பெண்ணார் உருவன் பெரிதிற் பெரியன்

அண்ணா மலையான் அடிவாழ்த் திடவே

திண்ணார் வினைகள் சிதையும் திடனே.


தண்ணீர்ச்-சடைமேல் தவழும் பிறையான் - குளிர்ந்த கங்கை இருக்கும் சடைமேல் தவழ்கின்ற இளந்திங்களை அணிந்தவன்;

பெண் ஆர் உருவன் - உமையொருபங்கன்;

பெரிதின் பெரியன் - எப்பொருளினும் எவரினும் பெரியவன்;

அண்ணாமலையான் அடி வாழ்த்திடவே - திருவண்ணாமலை ஈசனது திருவடியை வழிபட்டால்;

திண் ஆர் வினைகள் சிதையும் திடனே - நமது வலிய வினைகள் எல்லாம் அழிவது நிச்சயம்;


4)

அலையார் நதியைத் தலைமேல் அணிவான்

தலையே கலனாப் பலிதேர் தலைவன்

அலகில் புகழான் அருணைப் பெருமான்

மலரார் கழலே மருவாய் மனமே;


அலை ஆர் நதியைத் தலைமேல் அணிவான் - அலை மிக்க கங்கையைத் திருமுடிமேல் அணிந்தவன்;

தலையே கலனாப் பலி தேர் தலைவன் - பிரமனது மண்டையோடே உண்கலனாகப் பிச்சையேற்கும் தலைவன்; (கலனா - கலனாக); (பலி - பிச்சை);

அலகு இல் புகழான் - அளவற்ற புகழை உடையவன்; (அலகு - அளவு);

அருணைப் பெருமான் மலர் ஆர் கழலே மருவாய் மனமே - மனமே, அந்த அண்ணாமலைப் பெருமானது மலர் போன்ற திருவடியையே பொருந்துவாயாக; (அருணை - அருணாசலம் - திருவண்ணாமலை);


5)

விடமுண் மிடறன் விரிநூல் திகழும்

தடமார் பதனில் தவளப் பொடியான்

அடலே றுடையான் அருணைப் பெருமான்

உடையான் கழலுன் னவுறும் திருவே.


விடம் உண் மிடறன் - நஞ்சை உண்ட கண்டன்; (மிடறு - கண்டம்);

விரிநூல் திகழும் தட-மார்பு அதனில் தவளப்-பொடியான் - பூணூல் திகழும் அகன்ற மார்பில் வெண்ணீறு பூசியவன்; (விரி-நூல் - ஒளி பரவிய பூணூல்); (தவளம் - வெண்மை); (பொடி - திருநீறு); (சம்பந்தர் தேவாரம் - 1.107.1 - "வெந்தவெண் ணீறணிந்து விரிநூல் திகழ்மார்பில்");

அடல்-ஏறு உடையான் - வலிய இடபத்தை வாகனமாக உடையவன்; (அடல் - வலிமை; வெற்றி);

அருணைப் பெருமான் - திருவண்ணாமலை ஈசன்;

உடையான் கழல் உன்ன உறும் திருவே - மனமே, நம் சுவாமியான அப்பெருமானது கழல் அணிந்த திருவடியைத் தியானித்தால் திரு வந்தடையும்; (உடையான் - சுவாமி);


6)

நமனைச் செறவல் லபிரான் நறவம்

கமழச் சடைமேல் கதிர்வெண் பிறையன்

அமரர்க் கொருகோன் அருணைப் பெருமான்

கமலக் கழலைக் கருதாய் மனமே.


நமனைச் செற-வல்ல பிரான் - காலனை உதைத்து அழித்த தலைவன்;

நறவம் கமழ் அச்-சடைமேல் கதிர்-வெண்பிறையன் - மணம் கமழும் அந்தச் சடைமேல் ஒளிவீசும் பிறையை அணிந்தவன்; (நறவம் - வாசனை);

அமரர்க்கு ஒரு கோன் - தேவாதிதேவன்; (ஒரு கோன் - ஒப்பற்ற தலைவன்);

அருணைப் பெருமான் - திருவண்ணாமலை ஈசன்;

கமலக்-கழலைக் கருதாய் மனமே - மனமே, அப்பெருமானது கழல் அணிந்த தாமரைமலர் போன்ற பாதத்தைத் தியானிப்பாயாக;


7)

நாகச் சடையான் நரைவெள் விடையான்

மேகத் துநிறம் விரவும் தெரிவை

ஆகத் துடையான் அருணைப் பெருமான்

சோகத் தொடர்தீர் துணைவன் மனமே.


நாகச்-சடையான் - பாம்பைச் சடையில் அணிந்தவன்;

நரை-வெள்-விடையான் - வெண்ணிற இடபத்தை வாகனமாக ஏறியவன்; (நரை - வெண்மை; நரைவெள் - ஒருபொருட்பன்மொழி);

மேகத்து நிறம் விரவும் தெரிவை ஆகத்து உடையான் - மேகம் போன்ற கரிய நிறமுடைய உமையைத் திருமேனியில் ஒரு பாகமாக உடையவன்; (தெரிவை - பெண்); (ஆகம் - மேனி);

அருணைப் பெருமான் - திருவண்ணாமலை ஈசன்;

சோகத்-தொடர் தீர் துணைவன் - அடியவர்களது பிறவித்தொடரைத் தீர்க்கின்ற துணைவன்;

மனமே - மனமே; "அவனைத் தொழுவாயாக" என்பது குறிப்பு;


8)

வரைதூக் கியமா மடையற் கதற

விரலூன் றியருள் விகிர்தன் விமலன்

அரவச் சடையான் அருணைப் பெருமான்

விரவித் தொழுவார் வினைதீர்ப் பவனே.


வரை தூக்கிய மா-மடையன் கதற விரல் ஊன்றியருள் விகிர்தன் - மலையைப் பெயர்த்துத் தூக்கி எறிய முயன்ற பெரிய அறிவீனனான இராவணனைக் கதறி அழும்படி திருப்பாத-விரலை ஊன்றி நசுக்கியவன், விகிர்தன் என்ற திருநாமம் உடையவன்; (வரை - மலை); (மடையன் - அறிவீனன்); (மடையற் கதற - மடையனைக் கதற; இரண்டாம்வேற்றுமைத்தொகையில் உயர்திணையில் பொருளின் தெளிவு கருதி முதற்சொல்லின் ஈற்றில் உள்ள னகர ஒற்று றகர ஒற்றாகத் திரியும்); (விகிர்தன் - மாறுபட்ட செயலினன்);

விமலன் - தூயவன்;

அரவச்-சடையான் - சடைமேல் பாம்பை அணிந்தவன்;

அருணைப் பெருமான் - திருவண்ணாமலை ஈசன்;

விரவித் தொழுவார் வினை தீர்ப்பவனே - அப்பெருமான், அடைந்து மனம் பொருந்தித் தொழும் பக்தர்களது வினைகளை அழிப்பவன்;


9)

எயில்மூன் றினைநக் கெரிசெய் தருளும்

கயிலைக் கிறைவன் கனலும் சுடராய்

அயன்மாற் கரியான் அருணைப் பெருமான்

கயமார் சடையன் கழல்நம் புணையே.


எயில் மூன்றினை நக்கு எரிசெய்து அருளும் கயிலைக்கு இறைவன் - முப்புரங்களைச் சிரித்து எரித்தருளிய, கயிலைநாதன்;

கனலும் சுடராய் அயன் மாற்கு அரியான் - எரிகின்ற ஜோதியாகி, (அடிமுடி தேடிய) பிரமனாலும் திருமாலாலும் அறிய ஒண்ணாதவன்; (கனல்தல் - எரிதல்); (மாற்கு - மாலுக்கு);

அருணைப் பெருமான் - திருவண்ணாமலை ஈசன்;

கயம் ஆர் சடையன் - கங்கையைச் சடையில் உடையவன்; (கயம் - நீர்நிலை);

கழல் நம் புணையே - அப்பெருமானது திருவடிகள் நம்மைப் பிறவிப்-பெருங்கடலைக் கடப்பிக்கும் தெப்பம் ஆகும்; (புணை - தெப்பம்; மரக்கலம்);


10)

வழிதான் அறியார் குழிவீழ் குருடர்

பழியே பகர்வார் மொழிநீங் கிடுமின்

அழியாப் புகழான் அருணைப் பெருமான்

எழிலார் கழலேத் திடவான் எளிதே.


வழிதான் அறியார் குழி வீழ்- குருடர் - செல்லத்தக்க மார்க்கத்தை அறியாதவர்கள், குழியில் விழுகின்ற குருடர்கள்;

பழியே பகர்வார் மொழி நீங்கிடுமின் - ஓயாமல் பழிமொழிகளே பேசுபவர்களான அவர்களது பேச்சைப் பொருட்படுத்தாமல் நீங்குங்கள்; (பகர்தல் - சொல்தல்);

அழியாப் புகழான் - நிலைத்த புகழை உடையவன்;

அருணைப் பெருமான் - திருவண்ணாமலை ஈசன்;

எழில் ஆர் கழல் ஏத்திட வான் எளிதே - அப்பெருமானது அழகிய பாதத்தைத் துதித்தால் சிவலோகம் எளிதில் கிட்டும்;


11)

துணிவான் மதியன் சுடுநஞ் சமுதுண்

மணியார் மிடறன் வரியார் அரவை

அணியாப் புனைவான் அருணைப் பெருமான்

பணிவார் பிணிகள் பறையும் திடனே.


துணி-வான்-மதியன் - அழகிய வெண்திங்கள்-துண்டத்தை அணிந்தவன்; (துணி - துண்டம்); (வான் மதி - 1. வால் மதி; 2. வான் மதி); (வால் - வெண்மை); (வான் - வானம்; அழகிய);

சுடு-நஞ்சு அமுது உண் மணி ஆர் மிடறன் - சுட்டெரித்த ஆலகாலத்தை அமுது போல உண்ட, நீலமணி பொருந்திய கண்டத்தை உடையவன்;

வரி ஆர் அரவை அணியாப் புனைவான் - வரிகள் திகழும் பாம்பை ஆபரணமாக அணிந்தவன்;

அருணைப் பெருமான் - திருவண்ணாமலை ஈசன்;

பணிவார் பிணிகள் பறையும் திடனே - அப்பெருமானை வணங்கும் அடியார்களது நோய்களும் பந்தங்களும் அழிவது நிச்சயம்; (பிணி - பந்தம் - மும்மலக்கட்டு; நோய்);


வி. சுப்பிரமணியன்

----------- --------------


No comments:

Post a Comment