Sunday, August 31, 2025

P.442 - பொது - வாகனமென்று - (குறும்பா - Limerick)

2018-07-24

P.442 - பொது - (குறும்பா - Limerick)

-------------------------------

(குறும்பா - Limerick)

(யாப்புக்குறிப்பைக் கீழே பிற்குறிப்பில் காண்க)


1)

வாகனமென் றாகியதோர் ஏறு

.. வாசமிகு சாந்தமும்வெண் ணீறு

நாகமுமாம் நல்லாரம்

.. நாலுமறை தன்சாரம்

பாகமுமை ஆவதென்ன கூறு.


வாகனம் என்று ஆகியது ஓர் ஏறு - இடபமே வாகனம்;

வாசம் மிகு சாந்தமும் வெண்ணீறு - திருநீறே மணக்கின்ற சந்தனம்;

நாகமும் ஆம் நல் ஆரம் - பாம்பே நல்ல மாலை;

நாலுமறைதன் சாரம் - நால்வேதத்தின் சாரமாக உள்ளவன்;

பாகம் உமை ஆவது என்ன கூறு - அப்பெருமான் உமையை ஒரு பாகமாகக் கொண்டது என்ன கூறு?! (கூறு - சொல்லு; பாகம்);


2)

காதினிலே காண்பதொரு தோடு

.. கையினிலே பிச்சைபெற ஓடு

மாதிரைவான் நீர்பாயும்

.. வார்சடைநி லாக்காயும்

ஆதிவிடம் உண்டதென்ன பாடு.


காதினிலே காண்பது ஒரு தோடு - ஒரு தோடே அணிந்திருக்கின்றான்; (திருமேனியில் ஒரு பாதியை உமைக்கு அளித்துவிட்டான்); (அர்த்தநாரீஸ்வரன்);

கையினிலே பிச்சைபெற ஓடு - கையிலோ பிச்சையெடுப்பதற்காக ஒரு மண்டையோடு;

மா-திரை வான்நீர் பாயும் வார்-சடை நிலாக் காயும் - பெரிய அலைகளையுடைய ஆகாய கங்கை பாயும் நீண்ட சடைமேல் திங்கள் ஒளிவீசும். (திரை - அலை); (திருமுறையில் மாகடல், மாதமிழ், முதலிய பிரயோகங்களைக் காணலாம். அவ்வாறே, மாதிரை = மா திரை = பெரிய அலை);

ஆதி விடம் உண்டது என்ன பாடு - ஆதிமூர்த்தியான சிவபெருமான் விடம் உண்டது என்ன என்று வியந்து பாடு! இத்தனை சிரமங்களுக்கும் மேல், அப்பெருமான் ஆதிகாலத்தில் விடத்தையும் உண்ணும்படி ஆகியதே! என்னே அவன் கஷ்டம்! (ஆதி - பழங்காலம்; ஆதிமுர்த்தி); (பாடு - கஷ்டம்; புகழ்ந்து பாடு);


3)

இடமிருக்கப் பெற்றாளோர் மங்கை

.. ஈனமிலி செஞ்சடையிற் கங்கை

படமெடுக்கும் நாகங்கள்

.. பதைபதைக்கும் வெண்திங்கள்

விடையவனைக் காணிலிலை சங்கை.


இடம் இருக்கப் பெற்றாள் ஓர் மங்கை - திருமேனியில் உமாதேவி இடப்பாகத்தப் பெற்றாள்;

ஈனமிலி செஞ்சடையில் கங்கை படமெடுக்கும் நாகங்கள் பதைபதைக்கும் வெண்திங்கள் - பூரணனான ஈசன் செஞ்சடையில் கங்கையையும், சடையிலும் திருமேனியிலும் நாகங்களையும் அணிந்தவன்; அங்கே அவற்றைக் கண்டு சந்திரன் அஞ்சும்; (ஈனம் - குறைபாடு) (சம்பந்தர் தேவாரம் - 3.43.11 - "காழியுள் ஈனமில்லி இணையடி");

விடையவனைக் காணில் இலை சங்கை - 1. இடபவாகனனான சிவனை அடைந்தவர்க்கு அச்சம் இல்லை; 2. சிவபெருமானது கோலத்தைக் காண்பவர்களுக்கு இவற்றில் சந்தேகம் இல்லை; (விடை - 1. எருது; 2. உத்தரம் ( Answer)); (சங்கை - 1. அச்சம்; 2. ஐயம்; சந்தேகம்);


4)

வந்துகணை எய்தமலர் அம்பன்

.. மாரனையெ ரித்தருளும் நம்பன்

சுந்தரர்சொல் சங்கிலிக்கும்

.. சொன்னபிரான் சங்கொலிக்கும்

செந்தளிர்க்கை காட்டியென்றும் வம்பன்.


வந்து கணை எய்த மலர் அம்பன் மாரனை எரித்தருளும் நம்பன் - அணுகிக் கணை எய்தவனான மலரம்புகளை உடைய மன்மதனை எரித்த நம்பன்; (மாரன் - மன்மதன்); (நம்பன் - விரும்பத்தக்கவன் - சிவன் திருநாமம்);

சுந்தரர்-சொல் சங்கிலிக்கும் சொன்ன பிரான் - (திருவொற்றியூரில் சத்தியம் செய்யும்போது மகிழமரத்தில் போய் இரு என்று) சுந்தரர் சொன்ன சொல்லை (அவர் அறியாமல்) சங்கிலிநாச்சியாருக்கும் சொன்ன தலைவன்; (சுந்தரர் தேவாரம் - 7.89.9 - "போய்மகிழ்க் கீழிருவென்று சொன்னஎனைக் காணாமே சூளுறவு மகிழ்க்கீழே என்னவல்ல பெருமானே");

சங்கு ஒலிக்கும் செந்தளிர்க்கை காட்டி என்றும் வம்பன் - வளை ஒலிக்கின்ற அழகிய தளிர் போன்ற கையை உடையவன் (= உமையொரு பங்கன்), என்றும் புதியவன்; (சங்கு - வளையல்); (காட்டி - காட்டியவன்); (வம்பு - 1. புதுமை; 2. வாசனை; 3. படிறு; வஞ்சனை); (சுந்தரர் தேவாரம் - 7.83.7 - "நீறணிந்த வம்பனை"); (அப்பர் தேவாரம் - 5.78.1 - "சங்குலா முன்கைத் தையலோர் பாகத்தன்);


5)

வலியவிடை ஒன்றமர்ந்த சூலன்

.. வன்கூற்றை மாளவுதை காலன்

நலிவிலன்வே தம்சொல்வன்

.. நமக்குவரம் நல்குசெல்வன்

பலியிடுமின் என்றுழல்க பாலன்.


வலிய விடை ஒன்று அமர்ந்த சூலன் - வலிமைமிக்க இடபத்தை வாகனமாக விரும்பியவன், திரிசூலத்தை ஏந்தியவன்;

வன்-கூற்றை மாள உதை காலன் - கொடிய கூற்றுவனை இறக்குமாறு உதைத்த காலகாலன்;

நலிவு இலன் வேதம் சொல்வன் - அழிவற்றவன்; வேதம் ஓதியவன்; (சொல்வன் = சொல்வான்);

நமக்கு வரம் நல்கு செல்வன் - அடியவர்களான நமக்கு வரங்களை அளிக்கின்ற செல்வன்;

"பலி இடுமின்" என்று உழல் கபாலன் - (ஆயினும்) அவன், பிரமன் மண்டையோட்டைக் கையில் ஏந்திப், "பிச்சை இடுங்கள்" என்று திரிகின்றவன்;


6)

நெற்றிக்கண் தீயுமிழும் கண்ணன்

.. நிறத்தினிலே செவ்வந்தி வண்ணன்

அற்றைக்கல் லாலமர்ந்தான்

.. அமுதுண்டான் ஆலமுந்தான்

பெற்றிக்கும் பங்கமுண்டு பெண்ணன்.


நெற்றிக்கண் தீ உமிழும் கண்ணன் - நெற்றியில் தீ உமிழும் கண்ணை உடையவன்; (கண் - 1. ஏழாம்வேற்றுமை உருபு; 2. விழி);

நிறத்தினிலே செவ்வந்தி வண்ணன் - மாலைநேரச் செவ்வானம் போலச் செம்மேனியன்;

அற்றைக் கல்லால் அமர்ந்தான் - அன்று (தட்சிணாமூர்த்தி வடிவில்) கல்லால-மரத்தின்கீழ் இருந்து அறம் உரைத்தவன்;

அமுதுண்டான் ஆலமும் தான் - ஆலகாலத்தையும் அமுதம் போல உண்டருளியவன்;

பெற்றிக்கும் பங்கம் உண்டு பெண்ணன் - அவன் பெருமைக்கும் ஒரு பங்கு பெண் உண்டு - உமையொரு பங்கன்; (பங்கம் - 1. குறை; குற்றம்; 2. பங்கு; பிரிவு); (அவன் பெருமைக்கும் ஒரு குறை / குற்றம் உண்டு என்பது போலத் தொனித்து அவனது பெருமையை இன்னும் போற்றியது); (சம்பந்தர் தேவாரம் - 2.37.4 - "உடலம் உமை பங்கமதாகியும் என்கொல் கடல்நஞ்சமுதா அதுவுண்ட கருத்தே");


7)

செங்கணுடை மால்சக்க ரத்தான்

.. திருப்பெயர்ஆ கத்தருக ரத்தான்

மங்கையுமை பாகத்தான்

.. மலர்ப்பாதம் நோகத்தான்

அங்கையிலூண் தேரும்சி ரத்தான்.


செங்கணுடை மால் சக்கரத்தான் திருப்பெயர் ஆகத் தரு கரத்தான் - செங்கண் திகழும் திருமால் "சக்கரதாரி" என்ற பெயர் அடையும்படி சக்கரத்தை அருள்புரிந்தவன்; (தரு கரத்தான் = வரதஹஸ்தன்); (மாலுக்குச் சக்கரம் அருளியது - திருவீழிமிழலைத் தலவரலாற்றில் காண்க);

மங்கை-உமை பாகத்தான் - உமையை ஒரு பாகத்தில் உடையவன்;

மலர்ப்பாதம் நோகத்தான் அங்கையில் ஊண் தேரும் சிரத்தான் - அப்பெருமான் தனது மலர்ப்பாதம் நோகும்படி கையில் ஒரு மண்டையோட்டை ஏந்திப் பிச்சைக்கு உழல்பவன்;


8)

மலைபேர்த்தான் திட்டியவாய் பத்தன்

.. வாடவிரல் ஊன்றியருள் அத்தன்

இலையாரும் வேலேந்தி

.. எரிநஞ்சைத் தான்மாந்தி

தலைமீது கங்கையணி சுத்தன்.


மலை பேர்த்தான் திட்டிய வாய்-பத்தன் வாட விரல் ஊன்றியருள் அத்தன் - (வானிற் செல்லும் தன் தேர் ஓடாது கீழே இறங்கக்கண்டு சினந்து) பத்து-வாய்களாலும் இகழ்ந்து பேசிக் கயிலைமலையைப் பெயர்த்த இராவணன் வாடும்படி ஒரு விரலைச் சிறிதே ஊன்றிய நம் தந்தை;

இலை ஆரும் வேல் ஏந்தி - திரிசூலத்தை ஏந்தியவன்;

எரி நஞ்சைத் தான் மாந்தி - எரிக்கின்ற விடத்தை உண்டவன்; (மாந்துதல் - உண்தல்);

தலைமீது கங்கை அணி சுத்தன் - திருமுடிமேல் கங்கையை அணியும் தூயன் (பரிசுத்தன்);


9)

அரியயனும் காண்போமென் றோடி

.. அகழ்ந்துயர்ந்து தேடிமிக வாடிப்

பெரியபிரான் சீர்பாடிப்

.. பேணநின்றான் பேர்கோடி

வரியதளே ஆனதொரு கோடி.


அரியனும் காண்போம் என்று ஓடி, அகழ்ந்துயர்ந்து தேடி, மிக வாடிப் - திருமாலும் பிரமனும் அடிமுடி காண்போம் என்று நிலத்தை அகழ்ந்தும் வானில் பறந்தும் தேடி, மிகவும் வாடி;

பெரிய-பிரான் சீர் பாடிப் பேண நின்றான் பேர் கோடி - "மகாதேவா" என்று புகழ் பாடி வழிபடுமாறு ஓங்கிய பெருமானுக்குக் எண்ணற்ற திருநாமங்கள்;

வரி-அதளே ஆனது ஒரு கோடி - ஆனால், அப்பெருமானுக்கு வரிகளையுடைய புலித்தோலே ஒப்பற்ற ஆடை ஆனது; (அதள் - தோல்); (ஒரு - ஒப்பற்ற); (கோடி - ஆடை; புதிய ஆடை);


10)

நீறணியா நீசருரை நீங்கும்

.. நீலகண்ட னுக்கன்பு தாங்கும்

ஆறணியும் வேணியன்பார்

.. அனைத்தையும்ப டைத்தவன்பேர்

கூறடியார் வாழ்வுசிறந் தோங்கும்.


நீறு அணியா நீசர் உரை நீங்கும் - திருநீற்றைப் பூசாத கீழோர் சொல்லும் பேச்சை நீங்குங்கள்;

நீலகண்டனுக்கு அன்பு தாங்கும் - நீலகண்டனுக்கு அன்பை மனத்தில் தாங்குங்கள்;

ஆறு அணியும் வேணியன் - கங்கையைச் சடையில் உடையவன்; (வேணி - சடை);

பார் அனைத்தையும் படைத்தவன் பேர் - உலகங்கள் எல்லாவற்றையும் (/ பார்க்கின்ற அனைத்தையும்) படைத்தவனான சிவபெருமானது திருநாமத்தை; (பார் - உலகம்); (பார்த்தல் - கண்ணாற் காண்டல்);

கூறு அடியார் வாழ்வு சிறந்து ஓங்கும் - சொல்லும் பக்தர்களது வாழ்க்கை சிறக்கும்;


11)

கொடியவிடம் கண்டுசுரர் அண்டன்

.. குரைகழலைப் போற்றியிட்டார் தெண்டன்

கடியவிடை ஏறுமத்தன்

.. காதலினார் கூறுபித்தன்

கொடியிடையாள் காணநஞ்சுண் கண்டன்.


கொடிய விடம் கண்டு சுரர் அண்டன் குரைகழலைப் போற்றி இட்டார் தெண்டன் - (பாற்கடலைக் கடைந்தபோது எழுந்த) கொடிய ஆலகாலத்தைக் கண்டு தேவர்கள் அஞ்சி, "அண்டன்" என்ற திருநாமமுடைய சிவபெருமானது ஒலிக்கும் கழல் அணிந்த திருவடிகளை வணங்கினார்கள்; (தெண்டன் - தண்டன் - நெடுஞ்சாண்கிடையாக விழுந்து வணங்குதல்);

கடிய விடை ஏறும் அத்தன் - விரைவுடைய இடபத்தை வாகனமாக உடைய தந்தை;

காதலினார் கூறு பித்தன் - அன்புடையவர்கள் புகழ்ந்து கூறும் பேரருளாளன்; (பித்தன் - 1. பைத்தியக்காரன்; 2. பேரருள் உடையவன்);

கொடியிடையாள் காண நஞ்சு உண் கண்டன் - கொடி போன்ற இடையை உடைய உமை காணும்படி விஷத்தை உண்ட நீலகண்டன்;


பிற்குறிப்பு - யாப்புக்குறிப்பு:

குறும்பா - (Limerick) - இப்பாடல்களின் அமைப்பு:

  • தம்மில் அளவு வேறுபாடு உடைய 3 அடிகள்.

அடி-1 = x x a .. x x a

அடி-2 = x b .. x b

அடி-3 = x x a


  • படிப்போர் வசதி கருதி, எழுதும்பொழுது அரையடிகளை மடக்கி 5 வரிகளாக (ஆங்கிலத்தில் உள்ள Limerick பாடல் போல) எழுதுவது வழக்கம்.

x x a

.. x x a

x b

.. x b

x x a


  • குறியீடுகளின் விளக்கம்:

x = காய்ச்சீர்

a = மாச்சீர்; (பெரும்பாலும் தேமா)

b = காய்ச்சீர்

  • அடி-1 & அடி-2: அரையடியுள் வெண்டளை பயிலும். அரையடிகளிடையேயும் & அடிகளிடையேயும் அக்கட்டுப்பாடு இல்லை.

  • அடி-3: அடியுள் வெண்டளை பயிலும்.

  • அடிகளிடையே எதுகை.

  • அடி-1 & அடி-2: அரையடி தொடக்கத்தில் மோனை.

  • a என்ற சீர்களிடையே ஓர் இயைபு (end rhyme). (i..e. அடி-1 அரையடிகளின் ஈற்றிலும் அடி-3 ஈற்றிலும் இயைபு).

  • b என்ற சீர்களிடையே ஓர் இயைபு (end rhyme). (i..e. அடி-2 அரையடிகளின் ஈற்றில் இயைபு).


வி. சுப்பிரமணியன்

----------- --------------


No comments:

Post a Comment