2018-07-21
P.441 - அறையணிநல்லூர்
(அரகண்டநல்லூர். இத்தலம் திருக்கோவலூர் அருகுள்ளது)
-------------------------------
(கலிவிருத்தம் - தானன தனதான தானன தனதான)
(சுந்தரர் தேவாரம் - 7.85.1 - "வடியுடை மழுவேந்தி")
1)
கண்ணமர் நுதல்காட்டி கானமர் பரமேட்டி
பெண்ணையின் வடபாலோர் பெண்ணை இடங்காட்டும்
அண்ணலின் இடமான அறையணி நல்லூரை
நண்ணிய அடியாரை நலிவினை நணுகாவே.
கண் அமர் நுதல் காட்டி - நெற்றிக்கண்ணன்; (காட்டி - காட்டுபவன்);
கான் அமர் பரமேட்டி - சுடுகாட்டை விரும்புகின்ற பரமன்; (பரமேட்டி - பரமேஷ்டி - பரம்பொருள்);
பெண்ணையின் வடபால் ஓர் பெண்ணை இடம் காட்டும் - பெண்ணையாற்றின் வடக்கே, உமையைத் தன் திருமேனியின் இடப்பாகமாகக் காட்டுகின்ற;
அண்ணலின் இடம் ஆன அறையணிநல்லூரை - சிவபெருமான் உறையும் தலமான அறையணிநல்லூரை;
நண்ணிய அடியாரை நலி-வினை நணுகாவே - அடைந்த அடியவர்களைத் துன்பத்தைத் தரும் தீவினை அணுகமாட்டா; (நலிதல் / நலித்தல் - வருத்துதல்); (நலிவினை - நலிக்கின்ற வினை);
2)
கறையணி மிடறானைக் கமழ்சடை அதன்மீது
பிறையணி பெருமானைப் பெண்ணையின் வடபால்தென்
அறையணி நல்லூரில் அடிகளின் அடிவாழ்த்தி
நறையணி தமிழ்பாட நலிவினை நணுகாவே.
கறை அணி மிடறானைக் - நீலகண்டனை; (மிடறு - கண்டம்);
கமழ்-சடை அதன்மீது பிறை அணி பெருமானைப் - மணம் கமழும் சடைமேல் சந்திரனை அணிந்த பெருமானை;
பெண்ணையின் வடபால் தென் அறையணிநல்லூரில் அடிகளின் அடி வாழ்த்தி - பெண்ணையாற்றின் வடகரையில் இருக்கும் அழகிய அறையணிநல்லூரில் உறைகின்ற கடவுளின் திருவடியைப் போற்றி; (தென் - அழகிய);
நறை அணி தமிழ் பாட நலி-வினை நணுகாவே - மணம் கமழும் தமிழ்ப்பாமாலைகளைப் பாடி வழிபாடு செய்தால், துன்பத்தைத் தரும் தீவினைகள் அணுகமாட்டா; (நறை - தேன்; வாசனை); (நலிதல் / நலித்தல் - வருத்துதல்);
3)
மதிலவை விழவெய்த மாமலை வில்லானை
முதலிடை முடிவான மூர்த்தியை வரிவேங்கை
அதளுடை உடையானை அறையணி நல்லூர்க்கண்
ணுதலனை மறவாரை நோய்வினை நலியாவே.
மதில்அவை விழ எய்த மாமலை வில்லானை - முப்புரங்களும் அழியும்படி ஒரு கணை எய்த, மேருமலையை வில்லாக ஏந்தியவனை;
முதல் இடை முடிவு ஆன மூர்த்தியை - முதல், நடு, இறுதி ஆன இறைவனை;
வரி-வேங்கை அதள்-உடை உடையானை - கோடுகள் திகழும் புலித்தோலை உடையாக உடையவனை; (அதள் - தோல்);
அறையணிநல்லூர்க் கண்ணுதலனை மறவாரை நோய் வினை நலியாவே - அறையணிநல்லூரில் உறைகின்ற நெற்றிக்கண்ணனை மறவாமல் வழிபடும் அடியவர்களை நோய்களும் வினைகளும் வருத்தா; (நுதல் - நெற்றி);
4)
ஒப்பனை எனநீறும் உரகமும் அணிவானை
வைப்பனை விடமுண்ட மணிமிட றுடையானை
அப்பணி சடையானை அறையணி நல்லூரில்
அப்பனை அடைவாரை அருவினை அடையாவே.
ஒப்பனை என நீறும் உரகமும் அணிவானை - அலங்காரம் என்று திருநீற்றையும் பாம்பையும் புனைந்தவனை;
வைப்பனை - சேமநிதியாக உள்ளவன்; (வைப்பன் - சேமநிதி போன்றவன்);
விடம் உண்ட மணிமிடறு உடையானை - நஞ்சை உண்ட நீலகண்டனை;
அப்பு அணி சடையானை - சடையில் கங்கையை அணிந்தவனை; (அப்பு - நீர்);
அறையணிநல்லூரில் அப்பனை அடைவாரை அருவினை அடையாவே - அறையணிநல்லூரில் உறைகின்ற தந்தையைச் சரணடைந்த அடியவர்களை வினைகள் அடையா;
5)
பொங்கிள அரவோடு போழ்மதி புனைவானை
மங்கையொர் புடையானை மால்விடை உடையானை
அங்கையில் மழுவானை அறையணி நல்லூரில்
தங்கிய பெருமானைச் சார்ந்தவர் மகிழ்வாரே.
பொங்கு இள-அரவோடு போழ்-மதி புனைவானை - சீறும் இளநாகத்தையும் திங்களின் துண்டத்தையும் அணிந்தவனை; (போழ் - துண்டம்);
மங்கையொர் புடையானை - உமையை ஒரு பக்கத்தில் மகிழ்ந்தவனை;
மால்விடை உடையானை - பெரிய எருதை வாகனமாக உடையவனை; (மால் - பெருமை);
அங்கையில் மழுவானை - கையில் மழுவை ஏந்தியவனை;
அறையணிநல்லூரில் தங்கிய பெருமானைச் சார்ந்தவர் மகிழ்வாரே - அறையணிநல்லூரில் நீங்காமல் உறைகின்ற பெருமானைச் சரணடைந்த அடியவர்கள் இன்புறுவார்கள்;
6)
வெந்துயர் தருகூற்றை விழவுதை கழலானைச்
செந்தழல் உருவானைச் சேவமர் பெருமானை
ஐந்தொழில் உடையானை அறையணி நல்லூரில்
எந்தையை அடைவாரை இருவினை அடையாவே.
வெந்துயர் தரு கூற்றை விழ உதை கழலானைச் - கொடிய துன்பத்தைத் தரவல்ல நமனை விழும்படி திருவடியால் உதைத்தவனை;
செந்தழல் உருவானைச் - செந்தீப் போன்ற செம்மேனி உடையவனை;
சே அமர் பெருமானை - இடபவாகனம் உடைய பெருமானை; (சே - எருது);
ஐந்தொழில் உடையானை - பஞ்சகிருத்தியம் செய்பவனை; (பஞ்சகிருத்தியம் - படைத்தல், காத்தல், ஒடுக்குதல், மறைத்தல், அருளல்);
அறையணிநல்லூரில் எந்தையை அடைவாரை இருவினை அடையாவே - அறையணிநல்லூரில் உறைகின்ற எம் தந்தையைச் சரணடைந்த அடியவர்களைக் கொடுவினை அடையமாட்டா;
7)
நெய்யணி திரிசூலம் நிழல்மழு உடையானை
மெய்யனை மிளிர்கொன்றை வெண்மதி நதிசூடும்
ஐயனை அழகாரும் அறையணி நல்லூரிற்
செய்யனை அடைவாரைச் செய்வினை சேராவே.
நெய் அணி திரிசூலம், நிழல் மழு உடையானை - நெய் பூசப்பெற்ற திரிசூலத்தையும் ஒளி திகழும் மழுவாயுதத்தையும் ஏந்தியவனை; (ஆயுதங்களுக்கு நெய் பூசுவது மரபு);
மெய்யனை - மெய்ப்பொருளாக உள்ளவனை;
மிளிர் கொன்றை வெண்மதி நதி சூடும் ஐயனை - விளங்கும் கொன்றைமலரையும், வெண்பிறையையும் கங்கையையும் அணிந்த தலைவனை;
அழகு ஆரும் அறையணிநல்லூரில் செய்யனை அடைவாரைச் செய்வினை சேராவே - அழகிய அறையணிநல்லூரில் உறைகின்ற செம்மேனிப் பெருமானைச் சரணடைந்த அடியவர்களை முன்செய்த வினைகள் சேரமாட்டா; (செய்யன் - செம்மேனியன்);
8)
வரைபெயர் மதிகேடன் வலிகெட விரலூன்றிச்
சுர(ம்)மலி துதிகேட்டு வரமருள் பெருமானை
அரையினில் அரவார்த்த அறையணி நல்லூரெம்
அரையனை அடைவாரை அருவினை அடையாவே.
வரை பெயர் மதிகேடன் வலி கெட விரல் ஊன்றிச் - கயிலைமலையைப் பெயர்த்த அறிவீனனான இராவணனது வலிமை அழியும்படி ஒரு விரலை ஊன்றி அவனை நசுக்கி; (வரை - மலை); (வலி - வலிமை);
சுரம் மலி துதி கேட்டு வரம் அருள் பெருமானை - பிறகு, அவன் ஏழு சுரங்கள் பொருந்திய இன்னிசையால் துதிகள் பாடக் கேட்டு இரங்கி, அவனுக்கு வரம் அருளிய பெருமானை;
அரையினில் அரவு ஆர்த்த - அரையில் அரைநாணாகப் பாம்பைக் கட்டிய; (ஆர்த்தல் - கட்டுதல்);
அறையணிநல்லூர் எம் அரையனை அடைவாரை அருவினை அடையாவே - அறையணிநல்லூரில் உறைகின்ற எம் அரசனைச் சரணடைந்த அடியவர்களை வினைகள் நெருங்கமாட்டா; (அரையன் - அரசன்);
9)
கத்திடு கடல்மேலான் கடிமலர் அதன்மேலான்
எய்த்தடி தொழுதேத்த எரியென உயர்கோனை
அத்தனை அழகாரும் அறையணி நல்லூரெம்
சித்தனை வழிபாடு செய்பவர் வினைவீடே.
கத்திடு கடல்மேலான், கடிமலர் அதன்மேலான் - ஒலிக்கின்ற கடல்மேல் இருக்கும் திருமாலும், வாசத்தாமரையின்மேல் இருக்கும் பிரமனும்;
எய்த்து அடி தொழுது ஏத்த எரி என உயர் கோனை - அடிமுடி தேடிக் காணாது வருந்தித் திருவடியை வழிபடுமாறு ஜோதியாக உயர்ந்த தலைவனை; (எரி - தீ);
அத்தனை - தந்தையை;
அழகு ஆரும் அறையணிநல்லூர் எம் சித்தனை வழிபாடு செய்பவர் வினை வீடே - அழகிய அறையணிநல்லூரில் உறைகின்றவனும் எம் சித்தத்தில் இருப்பவனுமான சிவபெருமானை வழிபடும் அடியவர்களது வினைகள் அழியும்;
10)
நீற்றினை அணியாத நீசர்கள் உரைசெய்யும்
கூற்றினை மதியேன்மின் குரவணி சடைதன்னில்
ஆற்றனை அழகாரும் அறையணி நல்லூரில்
ஏற்றனை இசைபாடி ஏத்திட வருமின்பே.
நீற்றினை அணியாத நீசர்கள் உரைசெய்யும் கூற்றினை மதியேன்மின் - திருநீற்றைப் பூசாத கீழோர்கள் சொல்கின்ற வார்த்தைகளை நீங்கள் மதிக்கவேண்டா;
குரவு அணி சடைதன்னில் ஆற்றனை - குராமலரை அணிந்த சடையில் கங்கையை உடையவனை;
அழகு ஆரும் அறையணிநல்லூரில் ஏற்றனை இசை பாடி ஏத்திட வரும் இன்பே - அழகிய அறையணிநல்லூரில் உறைகின்ற இடபவாகனனை இசையோடு பாடிப் போற்றி வழிபட்டால் இன்பமே வரும்;
11)
சுறவணி கொடிவேளைச் சுட்டெரி நுதலானை
மறைசொலும் ஒருதேவை மன்னிய புகழானை
அறவனை அழகாரும் அறையணி நல்லூரில்
இறைவனை மறவாமல் எண்ணிட வருமின்பே.
சுறவு அணி கொடி வேளைச் சுட்டு எரி நுதலானை - சுறவக்கொடியை உடைய மன்மதனைச் சுட்டெரித்த நெற்றிக்கண்ணனை; (சுறவு - சுறா); (சம்பந்தர் தேவாரம் - 2.23.4 - "சுறவக் கொடிகொண்டவன் நீறதுவாய் உற நெற்றிவிழித்த எம் உத்தமனே");
மறை சொலும் ஒரு தேவை - வேதங்கள்-எல்லாம் சொல்கின்ற ஒப்பற்ற தேவனை; வேதங்களைப் பாடியருளிய தேவனை; (சொலும் - சொல்லும்); (தே / தேவு - தெய்வம்);
மன்னிய புகழானை - நிலைபெற்ற புகழை உடையவனை;
அறவனை - அறத்தின் வடிவம் ஆனவனை;
அழகு ஆரும் அறையணிநல்லூரில் இறைவனை மறவாமல் எண்ணிட வரும் இன்பே - அழகிய அறையணிநல்லூரில் உறைகின்ற கடவுளை மறவாமல் எண்ணி வழிபட்டால் இன்பமே வரும்;
பிற்குறிப்பு - யாப்புக்குறிப்பு:
கலிவிருத்தம் - தானன தனதான தானன தனதான - சந்தம்; இதனை "விளம் காய் விளம் காய்" என்ற வாய்பாடு போலவும் கருதலாம்;
தானன - என்ற இடங்கள் தனதன என்றும் வரக்கூடும்;
தனதான - என்ற இடங்கள் தானதன, தானான, என்றெல்லாம் வரக்கூடும்;
(சுந்தரர் தேவாரம் - 7.85.1 - "வடியுடை மழுவேந்தி")
வி. சுப்பிரமணியன்
----------- --------------
No comments:
Post a Comment