2018-08-16
P.444 - அண்ணாமலை (திருவண்ணாமலை)
-------------------------------
(கலிவிருத்தம் - மா மாங்காய் மா மாங்காய் - வாய்பாடு)
(சம்பந்தர் தேவாரம் - 1.80.1 - "கற்றாங் கெரியோம்பி")
1)
சுகத்தைத் தருவோனே சூலப் படையானே
பகைத்த புர(ம்)மூன்றும் படர்தீப் படுமாறு
நகைத்த முக்கண்ணா நாளும் உனையெண்ணும்
அகத்தை அருளாயே அண்ணா மலையானே.
சுகத்தைத் தருவோனே - சங்கரனே;
சூலப்-படையானே - சூலபாணியே;
பகைத்த புர(ம்)மூன்றும் படர்-தீப் படுமாறு நகைத்த முக்கண்ணா - தேவர்களைப் பகைத்த முப்புரங்களும் படரும் தீயில் புக்கு அழியும்படி சிரித்த முக்கண்ணனே; (படுதல் - அழிதல்);
நாளும் உனை எண்ணும் அகத்தை அருளாயே - என்றும் உன்னை நினைகின்ற நெஞ்சை எனக்கு அருள்வாயாக;
அண்ணாமலையானே - திருவண்ணாமலை ஈசனே;
2)
மறியொண் மழுவேந்தீ மழவெள் விடையேறீ
பொறிகொள் அரவூரும் பொன்னார் சடைமீது
வெறிகொள் மலர்சூடீ விரும்பி உனையோதும்
அறிவை அருளாயே அண்ணா மலையானே.
மறி, ஒண் மழு ஏந்தீ - மான்கன்றையும் ஒளி திகழும் மழுவையும் ஏந்தியவனே;
மழ வெள் விடை ஏறீ - இள வெள்ளை இடபத்தை வாகனமாக உடையவனே;
பொறிகொள் அரவு ஊரும் பொன் ஆர் சடைமீது வெறிகொள் மலர் சூடீ - புள்ளிகள் திகழும் பாம்பு ஊரும் பொற்சடைமேல் மணம் கமழும் மலர்களை அணிந்தவனே; (பொறி - புள்ளி); (ஆர்தல் - ஒத்தல்); (வெறி - மணம்);
விரும்பி உனை ஓதும் அறிவை அருளாயே - அன்போடு உன்னைப் போற்றும் அறிவை எனக்கு அருள்வாயாக;
அண்ணாமலையானே - திருவண்ணாமலை ஈசனே;
3)
என்பும் புனைகின்ற இறைவா எருதேறீ
துன்பம் தருகின்ற தொல்லை வினைநீக்கி
இன்பம் தரவல்ல எந்தாய் உனையேத்தும்
அன்பை அருளாயே அண்ணா மலையானே.
என்பும் புனைகின்ற இறைவா - எலும்பையும் அணிகின்ற இறைவனே; (என்பு - எலும்பு); (உம் - 1. இழிவுசிறப்பும்மை; எச்சவும்மை);
எருது-ஏறீ - இடபவாகனனே;
துன்பம் தருகின்ற தொல்லை-வினை நீக்கி - துன்பம் தருகின்ற பழைய வினைகளை அழித்து; (தொல்லை - பழைய);
இன்பம் தர-வல்ல எந்தாய் - இன்பம் தருகின்ற எந்தையே;
உனை ஏத்தும் அன்பை அருளாயே - உன்னைப் போற்றி வணங்கும் அன்பை எனக்கு அருள்வாயாக;
அண்ணாமலையானே - திருவண்ணாமலை ஈசனே;
4)
நாலு மறையோதும் நாவா இலையாரும்
வேலும் மழுவாளும் ஏந்தும் பெருமானே
ஏலும் வகையுன்னை ஏத்தும் மதிநல்காய்
ஆலும் மயிலாரும் அண்ணா மலையானே.
நாலு மறை ஓதும் நாவா - நான்கு வேதங்களைத் திருநாவால் பாடியருளியவனே;
இலை ஆரும் வேலும் மழுவாளும் ஏந்தும் பெருமானே - மூவிலைவேலையும் (= திரிசூலத்தையும்), மழுவையும் ஏந்தும் பெருமானே; (ஆர்தல் - நிறைதல்);
ஏலும் வகை உன்னை ஏத்தும் மதி நல்காய் - இயன்ற வகையில் உன்னைத் தொழுகின்ற அறிவை எனக்கு அருள்வாயாக;
ஆலும் மயில் ஆரும் அண்ணாமலையானே - ஆடும் மயில்கள் பொருந்தும் திருவண்ணாமலையில் உறைகின்ற ஈசனே; (ஆலுதல் - ஆடுதல்); (திருவண்ணாமலையில் ரமணாசிரமம் முதலிய இடங்களில் மயில்கள் உலவுவதைக் காணலாம்);
5)
வஞ்சி இடைமாதை வாமம் மகிழ்வோனே
மஞ்சின் நிறமேறும் மணிபோல் முனமுண்ட
நஞ்சை அணிகண்டா நமனை உதைபாதா
அஞ்சல் அருளாயே அண்ணா மலையானே.
வஞ்சி-இடை மாதை வாமம் மகிழ்வோனே - வஞ்சிக்கொடி போன்ற சிற்றிடையை உடைய உமையை இடப்பாகமாக விரும்பியவனே; (வஞ்சி - வஞ்சிக்கொடி); (வாமம் - இடப்பக்கம்);
மஞ்சின் நிறம் ஏறும் மணி போல், முனம் உண்ட நஞ்சை அணி கண்டா - முன்பு உண்ட விஷத்தை மேகம் போல் நிறம் திகழும் மணியாகக் கண்டத்தில் அணிந்தவனே; (மஞ்சு - மேகம்);
நமனை உதை-பாதா - காலனைத் திருவடியால் உதைத்தவனே;
அஞ்சல் அருளாயே - அஞ்சல் அளித்து என்னைக் காப்பாயாக;
அண்ணாமலையானே - திருவண்ணாமலை ஈசனே;
6)
கூறும் அடியார்தம் குறைகள் களைவோனே
சீறும் இளநாகம் சேரும் முடிதன்மேல்
ஆறும் அணிவோனே அடியேற் கருளாயே
ஆறு முகனத்தா அண்ணா மலையானே.
கூறும் அடியார்தம் குறைகள் களைவோனே - புகழ்பாடும் பக்தர்களது குறைகளைத் தீர்ப்பவனே;
சீறும் இள-நாகம் சேரும் முடிதன்மேல் ஆறும் அணிவோனே - சீறும் இளம்-பாம்பு திகழும் சென்னிமேல் கங்கையையும் அணிந்தவனே;
அடியேற்கு அருளாயே - எனக்கு அருள்வாயாக;
ஆறுமுகன் அத்தா - முருகனுக்கு அப்பனே; (அத்தன் - அப்பன்);
அண்ணாமலையானே - திருவண்ணாமலை ஈசனே;
7)
காடும் இடமாகக் கருதி நடமாடி
ஓடும் கலனாக ஊரூர் உழல்வோனே
பாடும் அடியேனைப் பாலித் தருளாயே
ஆடும் மயிலாரும் அண்ணா மலையானே.
காடும் இடமாகக் கருதி நடம் ஆடி - சுடுகாட்டையும் நல்ல அரங்கம் என்று விரும்பித் திருநடம் செய்து;
ஓடும் கலனாக ஊர்ஊர் உழல்வோனே - பிரமனது மண்டையோடும் உண்கலன் என்று கொண்டு பல ஊர்களில் பிச்சைக்குத் திரிபவனே;
பாடும் அடியேனைப் பாலித்து அருளாயே - உன் புகழைப் பாடும் என்னைக் காத்து அருள்வாயாக;
ஆடும் மயில் ஆரும் அண்ணாமலையானே - ஆடும் மயில்கள் பொருந்தும் திருவண்ணாமலையில் உறைகின்ற ஈசனே; (ஆர்தல் - பொருந்துதல்); (திருவண்ணாமலையில் ரமணாசிரமம் முதலிய இடங்களில் மயில்கள் உலவுவதைக் காணலாம்);
8)
மலையைப் பெயர்மூடன் வாட விரல்வைத்தாய்
சிலையை வளைவித்துச் சேரார் புரமெய்தாய்
தலைமேல் பிறையானே தமியேற் கருளாயே
அலைபோல் அடியார்சேர் அண்ணா மலையானே;
மலையைப் பெயர் மூடன் வாட விரல் வைத்தாய் - கயிலைமலையைப் பெயர்த்த அறிவற்ற இராவணன் வாடும்படி திருவடி-விரல் ஒன்றை ஊன்றி அவனை நசுக்கியவனே;
சிலையை வளைவித்துச் சேரார் புரம் எய்தாய் - மேருமலையை வில்லாக வளைத்து, அந்த வில்லை வளைத்துப் பகைவர்களது முப்புரங்களை எய்தவனே; (சிலை - மலை; வில்); (சேரார் - பகைவர்); (அப்பர் தேவாரம் - 6.47.4 - "திரிபுரங்கள் தீயில் வேவச் சிலை வளைவித்து");
தலைமேல் பிறையானே - சந்திரசேகரனே;
தமியேற்கு அருளாயே - தனித்து வாடும் அடியேனுக்கு அருள்வாயாக;
அலைபோல் அடியார் சேர் அண்ணாமலையானே - பக்தர்கள் கடல்போல் திரள்கின்ற திருவண்ணாமலையில் உறைகின்ற ஈசனே;
9)
மயலார் அயன்மாலார் வாட வளர்சோதீ
புயல்போல் நிறமாரும் பொருவில் மணிகண்டா
மயிலார் உமைகேள்வா வலிய வினைதீராய்
அயில்மூ விலைவேலா அண்ணா மலையானே;
மயல் ஆர் அயன் மாலார் வாட வளர் சோதீ - ஆணவம் மிகுந்த பிரமனும் திருமாலும் (அடிமுடி தேடிக் காணாராய்) வாடும்படி எல்லையின்றி வளர்ந்த ஜோதியே; (ஆர்தல் - மிகுதல்; பொருந்துதல்);
புயல் போல் நிறம் ஆரும் பொருவில் மணிகண்டா - மேகம் போன்ற நிறம் பொருந்திய ஒப்பற்ற நீலமணி திகழும் கண்டத்தை உடையவனே; (பொருவில் - பொரு இல் - ஒப்பு இல்லாத);
மயில் ஆர் உமை கேள்வா - மயில் போன்ற சாயலை உடைய உமைக்குக் கணவனே; (ஆர்தல் - ஒத்தல்);
வலிய வினை தீராய் - என் வலிய வினையைத் தீர்த்து அருள்வாயாக;
அயில்-மூவிலைவேலா - கூர்மையான திரிசூலத்தை ஏந்தியவனே;
அண்ணாமலையானே - திருவண்ணாமலை ஈசனே;
10)
பண்டை நெறிதன்னைப் பழித்துப் பலபொய்சொல்
மிண்டர் தமைநீங்கும் விரும்பு வரமெல்லாம்
தொண்டர்க் கருள்செய்யும் துணைவன் சுடுநீற்றன்
அண்டர் தொழுதேத்தும் அண்ணா மலையானே;
பண்டை நெறிதன்னைப் பழித்துப் பல பொய் சொல் மிண்டர்தமை நீங்கும் - தொன்மையான வேதநெறியைப் பழித்துத் தினமும் பல பொய்களைச் சொல்லும் கல்நெஞ்சர்களை நீங்குங்கள்; (மிண்டர் - கல்நெஞ்சர்);
விரும்பு வரம்-எல்லாம் தொண்டர்க்கு அருள்செய்யும் துணைவன் - வேண்டிய வரங்களையெல்லாம் பக்தர்களுக்குத் தந்தருளும் துணைவன்;
சுடு-நீற்றன் - வெந்த வெண்ணீற்றைப் பூசியவன்;
அண்டர் தொழுது ஏத்தும் அண்ணாமலையானே - தேவர்களால் வழிபடப்பெறும் திருவண்ணாமலை ஈசன்;
11)
பூதி புனைமேனிப் பூத கணநாதன்
ஓதித் தொழுவார்வான் உறையத் தருவள்ளல்
நீதி வடிவானான் நெய்பால் தயிராடி
ஆதி அழிவில்லா அண்ணா மலையானே.
பூதி புனை-மேனிப் பூதகணநாதன் - திருநீற்றைத் திருமேனிமேல் பூசிய, பூதகணத்தலைவன்; (பூதி - திருநீறு);
ஓதித் தொழுவார் வான் உறையத் தரு-வள்ளல் - துதித்து வணங்கும் பக்தர்களுக்குச் சிவலோக வாழ்வைத் தரும் வள்ளல்;
நீதி வடிவு ஆனான் - அறவடிவினன்;
நெய் பால் தயிர் ஆடி - நெய், பால், தயிர் இவற்றால் அபிஷேகம் பெறுபவன்; (சம்பந்தர் தேவாரம் - 3.61.2 - "பாலொடு நெய்தயிரும் பயின்றாடிய பண்டரங்கன்");
ஆதி அழிவு இல்லா அண்ணாமலையானே - ஆதியும் அந்தமும் இல்லாத இல்லாத திருவண்ணாமலை ஈசன்;
வி. சுப்பிரமணியன்
----------- --------------
No comments:
Post a Comment