Sunday, August 31, 2025

N.051 - சுந்தரர் துதி - ஆறுதனில் இட்டு

2018-07-16

N.051 - சுந்தரர் துதி - சுந்தரர் குருபூஜை - ஆடிச் சுவாதி - 2018

----------------

(வெண்பா)


ஆறுதனில் இட்டுப்பின் ஆரூர்க் குளத்தெடுக்கும்

வீறுடையார் தோழனென வேணியனாம் - பேறுடையார்

சங்கிலிக்கும் கேள்வனார் தாளிணை போற்றிசெய

நங்கலிதீர்ந் தெய்தும் நலம்.


ஆறுதனில் இட்டுப் பின் ஆரூர்க் குளத்து எடுக்கும் வீறு உடையார் - திருமுதுகுன்றத்தில் ஆற்றில் பொன்னை இட்டுப் பிறகு திருவாரூரில் கமலாலயக் குளத்தில் அப்பொன்னை எடுக்கின்ற பெருமை உடையவர்; (வீறு - தனிச்சிறப்பு);

தோழன் என வேணியன் ஆம் பேறு உடையார் - சடையை உடைய சிவபெருமானைத் தோழனாகப் பெறும் பேற்றை உடையவர்; (வேணி - சடை);

சங்கிலிக்கும் கேள்வனார் - (முன்னர்த் திருவாரூரிற் பரவையை மணந்து பின்னர்த் திருவொற்றியூரில்) சங்கிலியையும் மணந்தவர்; (கேள்வன் - கணவன்);

தாள்-இணை போற்றிசெய நம் கலி தீர்ந்து எய்தும் நலம் - அத்தகைய சுந்தரமூர்த்தி நாயனாரது இரு-திருவடிகளை வணங்கினால் நம் துன்பங்கள் தீர்ந்து நன்மை வந்து சேரும்.


வி. சுப்பிரமணியன்

------------- -------------


No comments:

Post a Comment