Thursday, January 18, 2024

07.30 – கச்சிக் கயிலாயநாதர் கோயில் - சக்கரம் கீறிச்

07.30 – கச்சிக் கயிலாயநாதர் கோயில்

2016-03-11

கச்சிக் கயிலாயநாதர் கோயில் (காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயில்)

--------------------------------

(12 பாடல்கள்) (நேரிசை வெண்பா.

எல்லாப் பாடல்களும் ஒரே ஈற்றடி)


1)

சக்கரம் கீறிச் சலந்தரனைச் செற்றவன்

செக்கர்வான் வண்ணத்தன் தீயுமிழும் அக்கன்

புயலாரும் கண்டன் புகழார்ந்த கச்சிக்

கயிலாய நாதன்தாள் காப்பு.


சக்கரம் கீறிச் சலந்தரனைச் செற்றவன் - தரையில் ஒரு சக்கரத்தைக் கீறி அதனைக்கொண்டு சலந்தராசுரனை அழித்தவன்; (கீறுதல் - வரிகீறுதல் - To draw lines);

செக்கர்-வான் வண்ணத்தன் - செவ்வானம் போன்ற செம்மேனி உடையவன்;

தீ உமிழும் அக்கன் - தீயை உமிழும் நெற்றிக்கண் உடையவன்; (அக்கம் - அக்ஷம் - கண்);

புயல் ஆரும் கண்டன் - மேகம் போன்ற நீலகண்டம் உடையவன்; (புயல் - மேகம்); (ஆர்தல் = ஒத்தல்); (அப்பர் தேவாரம் - 6.5.2 - "கார்மேகம் அன்ன மிடற்றாய் போற்றி");

புகழ் ஆர்ந்த கச்சிக் கயிலாய நாதன் தாள் காப்பு - புகழ் மிக்க காஞ்சிபுரத்தில் உள்ள கயிலாயநாதன் திருவடிகளே நமக்குத் துணை; (புயல் - மேகம்); (ஆர்தல் = நிறைதல்; மிகுதல்); (காப்பு - காவலாயுள்ளது); (சுந்தரர் தேவாரம் - 7.39.8 - "கறைக்கண்டன் கழலடியே காப்புக்கொண் டிருந்த கணம்புல்ல நம்பிக்கும்"); (பட்டினத்து அடிகள் - திருவிடைமருதூர் மும்மணிக் கோவை - 11.28.5 - "கண்ணென்றும் நந்தமக்கோர் காப்பென்றும்");


2)

விண்ணில் உறைதேவர் வேண்ட அவரமுதம்

உண்ண அருவிடம் உண்டருள் அண்ணல்

அயனார் சிரமொன் றறுத்தவன் கச்சிக்

கயிலாய நாதன்தாள் காப்பு.


வானோர்கள் வேண்ட அவர்களுக்கு இரங்கி, அவர்கள் அமுதம் உண்ணும்பொருட்டுத் தான் கொடிய நஞ்சை உண்ட பெருமான்; பிரமனுடைய தலை ஒன்றை அறுத்தவன்; காஞ்சிபுரத்தில் உள்ள கயிலாயநாதன் திருவடிகளே நமக்குத் துணை;

அயனார் - பிரமன்; ஆர் விகுதி பெற்று வந்தது; (சம்பந்தர் தேவாரம் - 3.89.5 - "பிரமனார் சிரமறுத்த இறைவனது...");


3)

கண்ணை இடந்திட்டுக் கைதொழுத கேசவனுக்

கெண்ணிய சக்கரம் ஈந்தருள் அண்ணல்

அயிரா வணமேறான் ஆனேற்றன் கச்சிக்

கயிலாய நாதன்தாள் காப்பு.


கண்ணை இடந்து இட்டுக் கைதொழுத கேசவனுக்கு எண்ணிய சக்கரம் ஈந்தருள் அண்ணல் - ஆயிரம் தாமரையில் ஒரு பூக்குறையக் கண்டு தம் மலர்க்கண் ஒன்றைத் தோண்டிப் பூவாக இட்டு அருச்சித்த திருமாலுக்கு அவர் கருதிய சக்கராயுதத்தை அருள்புரிந்தவன்; (இடத்தல் - தோண்டுதல்); (எண்ணுதல் - கருதுதல்; நினைத்தல்);

அயிராவணம் ஏறான் ஆனேற்றன் - அயிராவணம் என்ற யானையின்மேல் ஏறிச் செல்லாமல் எருதின்மேல் ஏறிச் செல்பவன்; (அயிராவணம் - சிவபெருமானுடைய யானை); (அப்பர் தேவாரம் - 6.25.1 - "அயிராவணம் ஏறாது ஆனேறு ஏறி அமரர்நாடு ஆளாதே ஆரூர் ஆண்ட");

கச்சிக் கயிலாய நாதன் தாள் காப்பு - காஞ்சிபுரத்தில் உள்ள கயிலாயநாதன் திருவடிகளே நமக்குத் துணை;


4)

தக்கன்செய் வேள்வி தகர்த்துத் தலையரிந்த

முக்கண் முதல்வனென்றும் மூவாத சொக்கன்

தயிர்பால் மகிழ்ந்தாடும் சங்கரன் கச்சிக்

கயிலாய நாதன்தாள் காப்பு.


தக்கன் செய்த வேள்வியை அழித்து அவன் தலையை வெட்டியவன்; முக்கண் உடைய முதல்வன்; என்றும் மூப்பு இல்லாமல் இளமையோடு திகழும் அழகன்; தயிர், பால் இவற்றால் அபிஷேகம் செய்யப்பெறுபவன்; நன்மை செய்யும் சங்கரன்; காஞ்சிபுரத்தில் உள்ள கயிலாயநாதன் திருவடிகளே நமக்குத் துணை;

மூவாத - மூத்தல் இல்லாத; சொக்கன் - அழகன்; சுந்தரன்; (சம்பந்தர் தேவாரம் - 3.109.6 - "தக்கனைத் தலையரி தழலுருவர்");


5)

பெருமத வேழம் பிளிற உரித்த

ஒருவன் கருதும் உருவன் அருவன்

அயிலார்சூ லத்தன் அழகார்ந்த கச்சிக்

கயிலாய நாதன்தாள் காப்பு.


பெரிய மதயானை பிளிறும்படி அதன் தோலை உரித்தவன்; ஒப்பற்றவன்; அடியவர்கள் விரும்பும் உருவம் எல்லாம் உடையவன்; அருவமாகவும் உள்ளவன்; கூர்மை பொருந்திய சூலத்தை ஏந்தியவன்; அழகிய காஞ்சிபுரத்தில் உள்ள கயிலாயநாதன் திருவடிகளே நமக்குத் துணை;

ஒருவன் - ஒப்பற்றவன்; அயில் - கூர்மை; ஆர்தல் - பொருந்துதல்; நிறைதல்;


6)

தேவாரம் பாடுவார் தீவினை தீர்த்தொரு

நாவாயாய் வான்சேர்க்கும் நல்லவன் மேவார்

எயில்மூன்றை எய்தவன் ஏராரும் கச்சிக்

கயிலாய நாதன்தாள் காப்பு.


தேவாரம் பாடிப் பணியும் பக்தர்களுடைய தீவினைகளைத் தீர்த்துப், பிறவிக்கடலைக் கடப்பிக்கும் கப்பலாகி, அவர்களைச் சிவலோகம் சேர்க்கும் நல்லவன்; பகைவர்களது முப்புரங்களை ஒரு கணை எய்து அழித்தவன்; அழகிய காஞ்சிபுரத்தில் உள்ள கயிலாயநாதன் திருவடிகளே நமக்குத் துணை;

நாவாய் - படகு; கப்பல்; மேவார் - பகைவர்; எயில் - கோட்டை; ஏர் - அழகு;


7)

கானத்தால் போற்றிசெயும் காதலர்க் கன்புடையான்

வானத்தார் வாழ்த்தும் மணிகண்டன் ஏனத்

தெயிறாரும் மார்பன் எழிலாரும் கச்சிக்

கயிலாய நாதன்தாள் காப்பு.


கானத்தால் போற்றிசெயும் காதலர்க்கு அன்புடையான் - இசைபாடி வழிபடும் அன்பர்களுக்கு அன்பு உடையவன்; (கானம் - இசைப்பாட்டு); (போற்றிசெய்தல் - துதித்தல்); (காதலர் - அன்புள்ளவர்; பக்தர்);

வானத்தார் வாழ்த்தும் மணிகண்டன் - தேவர்கள் துதிக்கும் நீலகண்டன்;

ஏனத்து எயிறு ஆரும் மார்பன் - பன்றிக்கொம்பை மார்பில் அணிந்தவன்; (ஏனம் - பன்றி); (எயிறு - பல்); (சம்பந்தர் தேவாரம் - 1.1.2 - "முற்றலாமை இளநாகமோடு ஏன முளைக்கொம்பு அவைபூண்டு");

எழில் ஆரும் கச்சிக் கயிலாய நாதன்தாள் காப்பு - அழகிய காஞ்சிபுரத்தில் உள்ள கயிலாயநாதன் திருவடிகளே நமக்குத் துணை;


8)

பித்தாகி வெற்பினைப் பேர்த்த இராவணன்வாய்

பத்தால் பரவவொரு பாதவிரல் வைத்தான்

குயிலார் மொழியுமையோர் கூறுடையான் கச்சிக்

கயிலாய நாதன்தாள் காப்பு.


பித்தாகி வெற்பினைப் பேர்த்த இராவணன் வாய் பத்தால் பரவ ஒரு பாதவிரல் வைத்தான் - மதிமயங்கிக் கயிலைமலையை பெயர்க்க முயன்ற இராவணனுடைய பத்து வாய்களும் போற்றிப் பாடுமாறு திருப்பாதத்தின் விரல் ஒன்றை ஊன்றியவன்; (பித்து - அறியாமை; பைத்தியம்); (வெற்பு - மலை - கயிலைமலை); (பரவுதல் - புகழ்தல்);

குயில் ஆர் மொழி உமை ஓர் கூறு உடையான் - குயில் போன்ற இனிய மொழியுடைய உமையை ஒரு கூறாக உடையவன்; (ஆர்தல் - ஒத்தல்); (சம்பந்தர் தேவாரம் - 2.16.1 - "குயிலாரு மென்மொழியாள் ஒரு கூறாகி");

கச்சிக் கயிலாய நாதன்தாள் காப்பு - காஞ்சிபுரத்தில் உள்ள கயிலாயநாதன் திருவடிகளே நமக்குத் துணை;


9)

அந்தகன்றன் மார்பில் அயிற்சூலம் பாய்ச்சியவன்

சந்தத் தமிழ்சொல் தமரிடர்தீர் தந்தை

அயனோ டரிநே டருஞ்சோதி கச்சிக்

கயிலாய நாதன்தாள் காப்பு.


அந்தகன்தன் மார்பில் அயிற்-சூலம் பாய்ச்சியவன் - அந்தகாசுரனை மார்பில் கூர்மை பொருந்திய சூலத்தால் குத்தியவன்; (அந்தகன் - அந்தகாசுரன்); (அயில் - கூர்மை); (பாய்ச்சுதல் - குத்துதல்); (அப்பர் தேவாரம் - 6.96.5 - "அந்தகனை அயிற்சூலத் தழுத்திக் கொண்டார்");

சந்தத் தமிழ் சொல் தமர் இடர் தீர் தந்தை - சந்தத்தமிழான தேவாரத்தைப் பாடும் அடியவர்களுடைய துன்பத்தைத் தீர்க்கும் தந்தை; (தமர் - அடியவர்);

அயனோடு அரி நேடு அருஞ்சோதி - பிரமனும் திருமாலும் தேடிய அரிய சோதி; (நேடு - தேடு);

கச்சிக் கயிலாய நாதன்தாள் காப்பு - காஞ்சிபுரத்தில் உள்ள கயிலாயநாதன் திருவடிகளே நமக்குத் துணை;


10)

நல்ல நெறியறியார் நாளுமுரை பொய்யொழிமின்

அல்லும் பகலுநினை அன்பரைக் கொல்லக்

கயிறேந்து காலனைக் காய்ந்தபிரான் கச்சிக்

கயிலாய நாதன்தாள் காப்பு.


நல்ல-நெறி அறியார் நாளும் உரை பொய் ஒழிமின் - நல்ல மார்க்கத்தை அறியாதவர்கள் ஓயாமல் உரைக்கின்ற பொய்களை நீங்குங்கள்; (நெறி - மார்க்கம்);

அல்லும் பகலு(ம்) நினை அன்பரைக் கொல்லக் கயிறு ஏந்து காலனைக் காய்ந்த பிரான் - இரவும் பகலும் நினைத்து வழிபட்ட மார்க்கண்டேயரைக் கொல்வதற்காகப் பாசத்தை ஏந்தி அடைந்த காலனைச் சினந்து உதைத்த பெருமான்; (கயிறு - பாசம்); (காய்தல் - அழித்தல்; சினத்தல்);

கச்சிக் கயிலாய நாதன்தாள் காப்பு - காஞ்சிபுரத்தில் உள்ள கயிலாயநாதன் திருவடிகளே நமக்குத் துணை;


11)

மன்மதனை நீறுசெய்த மாதவன் வாரணிந்த

மென்முலையாள் பங்கமர் வேடத்தன் வன்மை

பயில்தோள்கள் எட்டினில் பால்நீற்றன் கச்சிக்

கயிலாய நாதன்தாள் காப்பு.


மன்மதனை நீறுசெய்த மா-தவன் - காமனைச் சாம்பலாக்கிய பெரிய தவக்கோலத்தை உடையவன்; (கருவூர்த் தேவர் - திருவிசைப்பா - 9.10.9 - "கீழ்க்கோட்டூர் மாதவன் மணியம்பலத்துள் நின்றாடும் மைந்தன்");

வார் அணிந்த மென்முலையாள் பங்கு அமர் வேடத்தன் - கச்சு அணிந்த மென்மையான் முலைகளையுடைய உமையை ஒரு பங்காக உடைய கோலம் உடையவன்; (வார் - முலைக்கச்சு); (அமர்தல் - விரும்புதல்); (வேடம் - கோலம்);

வன்மை பயில்-தோள்கள் எட்டினில் பால்-நீற்றன் - வலிமை பொருந்திய எட்டுப் புயங்களில் பால் போன்ற திருநீற்றைப் பூசியவன்; (வன்மை - வலிமை); (பயில்தல் - பொருந்துதல்);

கச்சிக் கயிலாய நாதன்தாள் காப்பு - காஞ்சிபுரத்தில் உள்ள கயிலாயநாதன் திருவடிகளே நமக்குத் துணை;


12)

காடவர்கோன் தன்கனவில் கற்கோயில் நாள்மாற்றென்

றாடவலான் பூசலார்க் கன்புடையான் மாட

மயிலாப்பூர் மேயான் மணிகண்டன் கச்சிக்

கயிலாய நாதன்தாள் காப்பு.


காடவர்கோன்தன் கனவில், "கற்கோயில் நாள் மாற்று" என்று ஆட-வலான் - பல்லவ மன்னனது கனவில் சென்று, "அடுத்த நாள் யாம் பூசலார் கட்டிய கோயிலுக்குச் செல்கின்றோம்; அதனால் நீ கட்டிய (காஞ்சிபுரம் கைலாசநாதர்) கற்கோயிலின் கும்பாபிஷேக தினத்தை வேறொரு நாளில் வைத்துக்கொள்" என்று சொன்னவன்; கூத்தாடுபவன்; (காடவர்கோன் - பல்லவ மன்னன்); (ஆடுதல் - சொல்லுதல்; கூத்தாடுதல்); ("ஆடவலான்" என்ற சொற்றொடரை இப்படி இருமுறை இயைத்துக் "கூத்தாடுபவன்" என்றும் பொருள்கொள்ளல் ஆம்);

பூசலார்க்கு அன்பு உடையான் - பூசலார் நாயனாருக்கு அன்பு உடையவன்;

மாட மயிலாப்பூர் மேயான் - மாடிக்கட்டடங்கள் மிக்க மயிலாப்பூரில் எழுந்தருளியவன்; (அப்பர் தேவாரம் - 6.11.7 - "நிரையார் மணிமாட நீடூரானை");

மணிகண்டன் - நீலமணி கண்டன்;

கச்சிக் கயிலாய நாதன்தாள் காப்பு - காஞ்சிபுரத்தில் உள்ள கயிலாயநாதன் திருவடிகளே நமக்குத் துணை;


பிற்குறிப்புகள் :

இப்பதிகத்தில் ஈசனது அட்டவீரட்டச் செயல்கள் சுட்டப்பெறுகின்றன: திரிபுரம் எரித்தது (திருவதிகை), ஜலந்தரனை வதம் செய்தது (திருவிற்குடி), தக்கன் யாகம் அழித்து (திருப்பறியலூர்), மன்மதனை எரித்தது (திருக்குறுக்கை), எமனை அழித்தது (திருக்கடவூர்), யானையை வதம் செய்தது (திருவழுவூர்), அந்தகனை அழித்தது (திருக்கோவலூர்), பிரமன் தலை கொய்தது (திருக்கண்டியூர்);


வி. சுப்பிரமணியன்

-------------- --------------


No comments:

Post a Comment