07.26 – கச்சூர் (திருக்கச்சூர்)
2016-03-08
கச்சூர் (திருக்கச்சூர்) (இத்தலம் செங்கல்பட்டு அருகே உள்ளது)
"பசிதீர் பரமன்"
----------------------
(கலித்துறை - "மா மா மா மா விளங்காய்" என்ற வாய்பாடு);
(சம்பந்தர் தேவாரம் - 2.64.1 - "தேவா சிறியோம் பிழையைப் பொறுப்பாய் பெரியோனே")
1)
தேடும் பொருளே குறியாய்த் தினமும் திகைத்துநின்று
வாடும் அடியேன் மயல்கள் மாயும் வகையருளாய்
பாடும் அடியார் பசிதீர் பரமா பல்பிணஞ்சேர்
காடும் இடமா ஆடும் கச்சூர்க் கண்ணுதலே.
* இத்தலத்திற்கு வந்த சுந்தரர் பசியைத் தீர்க்க ஈசன் இரந்து அவருக்கு உணவளித்தான்.
தேடும் பொருளே குறியாய்த் தினமும் திகைத்துநின்று - செல்வத்தை ஈட்டலே குறி என்று கருதி எந்நாளும் மயங்கி; (திகைத்தல் - மயங்குதல்);
வாடும் அடியேன் மயல்கள் மாயும் வகை அருளாய் - வாடுகின்ற என் மயக்கங்கள் தீருமாறு அருள்வாயாக; (மயல் - மயக்கம்); (வகை - முறை; உபாயம்);
பாடும் அடியார் பசி தீர் பரமா - உன்னைப் பாடும் பக்தர் பசியைத் தீர்க்கும் பரமனே;
பல்-பிணம் சேர் காடும் இடமா ஆடும் கச்சூர்க் கண்ணுதலே - பல பிணங்கள் சேர்கின்ற சுடுகாட்டையும் இடமாக விரும்பிக் கூத்தாடுகின்றவனே, திருக்கச்சூரில் எழுந்தருளியுள்ள நெற்றிக்கண்ணனே; (கண்ணுதல் - நெற்றிக்கண்);
2)
இரவும் பகலும் பொருளே எண்ணும் இந்நிலைபோய்க்
குரவம் சூடும் உன்னைக் கூறும் குணமருளாய்
பரவும் அடியார் பசிதீர் பரமா படர்சடையாய்
கரவில் லாமல் அருளும் கச்சூர்க் கண்ணுதலே.
இரவும் பகலும் பொருளே எண்ணும் இந்நிலை போய்க் - இராப்பகலாகப் பொருளையே எண்ணுகின்ற இந்த நிலை நீங்கி;
குரவம் சூடும் உன்னைக் கூறும் குணம் அருளாய் - குராமலரைச் சூடும் உன்னைப் போற்றும் பக்தியை அருள்வாயாக; (குரவம் - குராமலர்); (கூறுதல் - புகழ்தல்);
பரவும் அடியார் பசிதீர் பரமா - துதிக்கும் அடியார்களது பசியைத் தீர்க்கும் பரமனே; (பரவுதல் - துதித்தல்);
படர்சடையாய் - படரும் சடை உடையவனே;
கரவு இல்லாமல் அருளும் கச்சூர்க் கண்ணுதலே - வஞ்சம் இன்றி வாரி வழங்கி அருள்கின்ற, திருக்கச்சூரில் எழுந்தருளியுள்ள நெற்றிக்கண்ணனே;
3)
ஏதம் மிக்க எண்ணம் எல்லாம் இங்கொழிந்து
நாத என்று நின்னை நாடும் நலமருளாய்
பாதம் பணிவார் பசிதீர் பரமா பனிமதியாய்
காதில் தோடும் காட்டும் கச்சூர்க் கண்ணுதலே.
ஏதம் - குற்றம்;
நலம் - குணம்; நன்மை;
பனிமதியாய் - குளிந்த சந்திரனை அணிந்தவனே;
காதில் தோடும் காட்டும் - ஒரு காதில் தோடும் அணிந்த; (சம்பந்தர் தேவாரம் - 1.1.1 - "தோடுடைய செவியன்");
4)
குற்றம் மிக்க எண்ணம் குறுகாக் குணமருளிப்
பெற்றம் ஊரும் உன்றன் பெருமை பேசவையாய்
பற்றொன் றில்லார் பசிதீர் பரமா பால்மதியைக்
கற்றைச் சடைமேல் வைத்த கச்சூர்க் கண்ணுதலே.
குற்றம் மிக்க எண்ணம் குறுகாக் குணம் அருளிப் - தீய எண்ணங்கள் அடையாத நல்ல குணத்தை எனக்கு அருள்புரிந்து; (குறுகுதல் - அடைதல்; நெருங்குதல்);
பெற்றம் ஊரும் உன்றன் பெருமை பேசவையாய் - இடப வாகனம் உடைய உன்னுடைய பெருமையைப் பேசவைப்பாயாக; (பெற்றம் - எருது; இடபம்); (ஊர்தல் - ஏறுதல்); (வையாய் - வைப்பாயாக);
பற்று ஒன்று இல்லார் பசி தீர் பரமா - வேறு பற்றுகள் இல்லாத அடியவர் பசியைத் தீர்க்கும் பரமனே;
பால்மதியைக் கற்றைச் சடைமேல் வைத்த கச்சூர்க் கண்ணுதலே - பால் போன்ற வெண்திங்களைக் கற்றையாக உள்ள சடையின்மேல் அணிந்த, திருக்கச்சூர் நெற்றிக்கண்ணனே;
5)
நிதியார் தருவார் என்று நித்தல் நினைந்தியங்கும்
மதிமால் நீக்கி நின்னை வணங்கும் வகையருளாய்
பதிநீ என்றார் பசிதீர் பரமா பாசுபதா
கதிரோர் கோடி ஒளியாய் கச்சூர்க் கண்ணுதலே.
நிதி யார் தருவார் என்று நித்தல் நினைந்து இயங்கும் - யார் நமக்குப் பொருள் தருவார் என்றே நினைத்துத் தினந்தோறும் செயல்படுகின்ற;
மதி மால் நீக்கி நின்னை வணங்கும் வகை அருளாய் - என்னுடைய அறிவுமயக்கத்தைத் தீர்த்து உன்னை வழிபடுமாறு அருள்வாயாக;
"பதி நீ" என்றார் பசி தீர் பரமா பாசுபதா - "நீயே தலைவன்" என்று உன்னைப் போற்றிய பக்தர் பசியைத் தீர்க்கும் பரமனே, பாசுபதனே; (பாசுபதன் - பாசுபதாஸ்திரத்தை உடைய சிவபெருமான்; பாசுபத வேடம் உடையவன்); (சுந்தரர் தேவாரம் - 7.69.1 - "பரவிடும் அடியேன் படுதுயர் களையாய் பாசுபதா பரஞ்சுடரே");
கதிர் ஓர் கோடி ஒளியாய் கச்சூர்க் கண்ணுதலே - ஆயிரம் கோடி சூரியர்களின் ஒளி உடைய, திருக்கச்சூர் நெற்றிக்கண்ணனே; (கதிர் - சூரியன்);
6)
உண்ணா உறங்கா உடலே ஓம்பல் ஒழிந்துனையே
அண்ணா என்றென் றேத்தி அடைய அருள்புரியாய்
பண்ணால் பணிவார் பசிதீர் பரமா பாய்கயல்போல்
கண்ணாள் பங்கா மதில்சூழ் கச்சூர்க் கண்ணுதலே.
உண்ணா உறங்கா உடலே ஓம்பல் ஒழிந்து - உண்டு உறங்கி இந்த உடலையே பேணுவதை விடுத்து; (உண்ணா, உறங்கா - உண்டு, உறங்கி; - செய்யா என்ற வாய்பாட்டு வினையெச்சம் - செய்து என்ற பொருள்); (திருவாசகம் - பிரார்த்தனைப்பத்து - 8.32.8 - "துணியா உருகா அருள்பெருகத் தோன்றுந் தொண்ட ரிடைப்புகுந்து");
உனையே "அண்ணா" என்றுஎன்று ஏத்தி அடைய அருள்புரியாய் - உன்னை "அண்ணா" என்று பலமுறை சொல்லித் துதித்து அடையும்படி அருள்புரிவாயாக; (அண்ணா - தந்தையே; தலைவனே; அண்ணல் என்பதன் விளியான அண்ணால் என்பது அண்ணா என்று மருவிற்று); (சுந்தரர் தேவாரம் - 7.1.6 - "அண்ணா உனக்காளாய் இனி அல்லேன் எனல் ஆமே");
பண்ணால் பணிவார் பசி தீர் பரமா - பண்ணோடு பொருந்திய பாட்டுப் பாடி வழிபடும் பக்தர் பசியைத் தீர்க்கும் பரமனே;
பாய் கயல் போல் கண்ணாள் பங்கா - பாய்கின்ற கயல்மீன் போன்ற கண்கள் உடைய உமையம்மையை ஒரு பங்காக உடையவனே;
மதில் சூழ் கச்சூர்க் கண்ணுதலே - மதில் சூழ்ந்த திருக்கச்சூர்க் கோயிலில் உறைகின்ற நெற்றிக்கண்ணனே;
7)
கேட்டை நாளும் நினையும் கீழ்மை கெட்டுமனம்
ஓட்டை ஏந்தி இரக்கும் உன்சீர் ஓதவையாய்
பாட்டை விரும்பிப் பசிதீர் பரமா பாரிடமார்
காட்டை இடமாக் கருதும் கச்சூர்க் கண்ணுதலே.
கேட்டை நாளும் நினையும் கீழ்மை கெட்டு மனம் - தீயவற்றையே தினமும் எண்ணும் சிறுமை நீங்கி என் மனத்தை;
ஓட்டை ஏந்தி இரக்கும் உன் சீர் ஓதவையாய் - பிரமன் மண்டையோட்டைக் கையில் ஏந்தி யாசிக்கும் உன் புகழைப் பாடவைத்து அருள்வாயாக; (பாடவையாய் - பாடவைப்பாயாக);
பாட்டை விரும்பிப் பசி தீர் பரமா - சுந்தரரின் பாட்டை விரும்பி அவர் பசியைத் தீர்த்த பரமனே;
பாரிடம் ஆர் காட்டை இடமாக் கருதும் கச்சூர்க் கண்ணுதலே - பேய்கள் நிறைந்த சுடுகாட்டை இடமாக விரும்பிய, திருக்கச்சூர்க் கோயிலில் உறைகின்ற நெற்றிக்கண்ணனே;
8)
நித்தல் மயங்கி உழலும் நிலையை நீக்கியுனைப்
புத்தி ஒன்றிப் பாடிப் போற்றப் புரிந்தருளாய்
பத்தர் பசிதீர் பரமா பத்து வாயரக்கன்
கத்த விரலிட் டவனே கச்சூர்க் கண்ணுதலே.
நித்தல் மயங்கி உழலும் நிலையை நீக்கி - தினமும் மதிமயங்கி இங்கு உழல்கின்ற நிலையை மாற்றி;
உனைப் புத்தி ஒன்றிப் பாடிப் போற்றப் புரிந்து அருளாய் - உன்னை மனம் ஒன்றிப் பாடி வணங்க விரும்பி அருள்வாயாக; (புரிதல் - விரும்புதல்);
பத்தர் பசி தீர் பரமா - சுந்தரரின் பாட்டை விரும்பி அவர் பசியைத் தீர்த்த பரமனே;
பத்துவாய் அரக்கன் கத்த விரல் இட்டவனே - இராவணனுடைய பத்து வாய்களும் கத்தி அழும்படி மலைமேல் ஒரு விரலை ஊன்றியவனே;
கச்சூர்க் கண்ணுதலே - திருக்கச்சூர்க் கோயிலில் உறைகின்ற நெற்றிக்கண்ணனே;
9)
பெரியாய் உனையே நாளும் பேசும் பெற்றியருள்
புரியாய் புலியின் அதளாய் பொன்னார் புரிசடையாய்
பரிவால் அன்பர் பசிதீர் பரமா பைம்மலரான்
கரியான் அறியா ஒளியே கச்சூர்க் கண்ணுதலே.
பெரியாய் உனையே நாளும் பேசும் பெற்றி அருள்புரியாய் - பெரியவனே, உன்னையே தினமும் புகழ்ந்து பேசும் குணத்தை அருள்வாயாக; (பெற்றி - இயல்பு);
புலியின் அதளாய் - புலித்தோலை அணிந்தவனே; (அதள் - தோல்);
பொன் ஆர் புரி சடையாய் - பொன் போன்ற, முறுக்கிய சடையை உடையவனே; (ஆர்தல் - ஒத்தல்); (புரிதல் - முறுக்கொள்ளுதல்);
பரிவால் அன்பர் பசி தீர் பரமா - இரங்கி அடியவர் பசியைத் தீர்த்த பரமனே;
பைம்மலரான் கரியான் அறியா ஒளியே - அழகிய தாமரை மலர்மேல் இருக்கும் பிரமனும் கரிய நிறத்துத் திருமாலும் அறியாத சோதியே; (கரியான் - கரியவன் - திருமால்); (அப்பர் தேவாரம் - 6.57.6 - "கரியானுக்கு ஆழி அன்று ஈந்தாய் போற்றி");
கச்சூர்க் கண்ணுதலே - திருக்கச்சூர்க் கோயிலில் உறைகின்ற நெற்றிக்கண்ணனே;
10)
அவமே சொல்லும் மதத்தார் அறியா அருள்நெறியாய்
சிவனே நவனே பழையாய் செல்வா செஞ்சடையாய்
பவனே என்றார் பசிதீர் பரமா பசுமைமிகு
கவினார் வயல்கள் புடைசூழ் கச்சூர்க் கண்ணுதலே.
* முந்தைய பாடல்களில் உள்ள வேண்டுகோள்களை இங்கேயும் இயைத்துப் பொருள்கொள்க;
மதம் - ஆணவம்; செருக்கு; சமயம்;
நவன் - புதியவன்;
பவன் - சிவன் திருநாமங்களுள் ஒன்று; (ருத்ரத்தில் - நமோ பவாய ச ருத்ராய ச - नमो भवाय च रुद्राय च । - भवाय च - To Parameswara, cause of birth of the universe, नमः- prostration. );
கவின் ஆர் வயல்கள் புடை சூழ் - அழகிய வயல்கள் சூழ்ந்திருக்கும்;
11)
அடையார் புரங்கள் அவிய அழலார் அம்புதொட்டாய்
முடையார் தலையிற் பலிகொள் முதல்வா மூவிலைவேற்
படையாய் என்றார் பசிதீர் பரமா பாற்கடலைக்
கடைநாள் எழுநஞ் சுண்டாய் கச்சூர்க் கண்ணுதலே.
* முந்தைய பாடல்களில் உள்ள வேண்டுகோள்களை இங்கேயும் இயைத்துப் பொருள்கொள்க;
அடையார் புரங்கள் அவிய அழல் ஆர் அம்பு தொட்டாய் - பகைவர்களது முப்புரங்களும் வெந்து அவியும்படி ஒரு தீக்கணையை எய்தவனே; (அடையார் - பகைவர்);
முடை ஆர் தலையிற் பலிகொள் முதல்வா - புலால் நாற்றம் உடைய பிரமன் மண்டையோட்டில் பிச்சை ஏற்கும் முதல்வனே;
மூவிலைவேற் படையாய் - திரிசூல ஆயுதம் ஏந்தியவனே;
என்றார் பசிதீர் பரமா - என்று போற்றியவர் பசியைத் தீர்க்கும் பரமனே;
பாற்கடலைக் கடை நாள் எழு நஞ்சு உண்டாய் - தேவாசுரர்கள் பாற்கடலைக் கடைந்தபொழுது தோன்றிய விடத்தை உண்டவனே;
கச்சூர்க் கண்ணுதலே - திருக்கச்சூர்க் கோயிலில் உறைகின்ற நெற்றிக்கண்ணனே;
பிற்குறிப்புகள் :
யாப்புக் குறிப்பு :
கலித்துறை - "மா மா மா மா விளங்காய்" என்ற வாய்பாடு; (1,4,5 சீர்களில் மோனை);
இவ்வமைப்புக் கீழ்க்காணும் சம்பந்தர் பதிகத்தைப் பெரும்பாலும் ஒத்தது. சம்பந்தர் பதிகத்தில் அடியீற்றுச் சீர் மாங்காய்ச்சீர்; இந்தப் பதிகத்தில் அடியீற்றுச்சீர் விளங்காய்ச்சீர்;
சம்பந்தர் தேவாரம் - 2.64.1 - "தேவா சிறியோம் பிழையைப் பொறுப்பாய் பெரியோனே"
வி. சுப்பிரமணியன்
----------- --------------
No comments:
Post a Comment