Wednesday, January 17, 2024

07.25 – முதுகுன்றம் (விருத்தாசலம்) - பூவடி இட்டுநிதம்

07.25 – முதுகுன்றம் (விருத்தாசலம்)

2016-03-03

முதுகுன்றம் (திருமுதுகுன்றம் - விருத்தாசலம்)

----------------------

(சந்த விருத்தம் - "தானன தானதனா தன தானன தானதனா" - என்ற சந்தம்)

(சம்பந்தர் தேவாரம் - 3.56.1 - "இறையவன் ஈசனெந்தை இமை யோர்தொழு தேத்தநின்ற")


1)

பூவடி இட்டுநிதம் புகழ் மாணி உயிர்த்துணையாய்ச்

சேவடி யால்நமனைச் செறு காவல னேஅருளாய்

சேவமர் சேவகனே சிறு மான்மறிக் கையினனே

மூவரின் முன்னவனே முது குன்றம் அமர்ந்தவனே.


பூ அடி இட்டு, நிதம் புகழ் மாணி உயிர்த்துணை ஆய்ச் - திருவடியில் பூக்களைத் தூவித் தினமும் துதிக்கும் மார்க்கண்டேயரின் உயிருக்குத் துணை ஆகி; (மாணி - அந்தணச் சிறுவன்);

சேவடியால் நமனைச் செறு காவலனே, அருளாய்; - சிவந்த திருவடியால் காலனை அழித்த காவலனே, அருள்வாயாக; (செறுதல் - அழித்தல்); (காவலன் - பாதுகாப்பவன்; அரசன்);

சே அமர் சேவகனே - இடப வாகனம் விரும்பிய வீரனே; (சேவகன் - வீரன்);

சிறு மான்மறிக் கையினனே - சிறிய மான்கன்றைக் கையில் ஏந்தியவனே; (மறி - ஆடு குதிரை மான் முதலியவற்றின் இளமை);

மூவரின் முன்னவனே - மும்மூர்த்திகளுக்கும் முற்பட்டவனே;

முதுகுன்றம் அமர்ந்தவனே - திருமுதுகுன்றத்தில் விரும்பி உறைகின்ற சிவபெருமானே;


2)

இப்பெரு மண்மிசையோர் இடர் இன்றி மகிழ்ந்திடவே

அப்ப உனைத்தினமும் அடி வாழ்த்தும் எனக்கருளாய்

ஒப்பரு வில்லெனவே உயர் வெற்பை வளைத்தவுணர்

முப்புரம் எய்தவனே முது குன்றம் அமர்ந்தவனே.


இப்-பெரு-மண்மிசை ஓர் இடர் இன்றி மகிழ்ந்திடவே - இந்தப் பெரிய பூமியில் எவ்விதத் துன்பமும் இல்லாமல் நான் இன்புறும்படி;

அப்ப - அப்பனே - தந்தையே;

உனைத் தினமும் அடி வாழ்த்தும் எனக்கு அருளாய் - உன்னைத் தினமும் வணங்கும் எனக்கு அருள்வாயாக;

ஒப்பரு வில்லெனவே உயர் வெற்பை வளைத்து - உயர்ந்த மலையை ஒப்பற்ற வில்லாக வளைத்து;

அவுணர் முப்புரம் எய்தவனே - அசுரர்களது முப்புரங்களைக் கணையால் எய்தவனே;


3)

பன்னிய செந்தமிழால் பர வும்தமி யேற்கருளாய்

சென்னியில் ஊரரவும் திகழ் மாமதி யும்புனைந்தாய்

கன்னலை ஏந்திமலர்க் கணை எய்த அனங்கனைக்காய்

முந்நய னத்திறைவா முது குன்றம் அமர்ந்தவனே.


பன்னிய செந்தமிழால் பரவும் தமியேற்கு அருளாய் - பெரியோர் பாடியருளிய செந்தமிழ்ப் பாக்களால் உன்னைத் துதிக்கும் தமியேனாகிய எனக்கு அருள்வாயாக; (பன்னுதல் - ஆராய்ந்து செய்தல்; பாடுதல்; புகழ்தல்); (தமியேன் - தனித்து இருக்கும் நான்; கதியற்ற நான்);

(அப்பர் தேவாரம் - 6.91.1 - "பன்னியசெந் தமிழறியேன் கவியேன் மாட்டேன்" - பன்னிய - தொல்லாசிரியர் ஆராய்ந்து சொல்லிய. "செந்தமிழ்" - செவ்விதாகிய திருத்தமான தமிழ்);

சென்னியில் ஊர் அரவும் திகழ் மா மதியும் புனைந்தாய் - திருமுடிமேல் ஊர்கின்ற பாம்பையும் ஒளிவீசும் அழகிய சந்திரனையும் அணிந்தவனே;

கன்னலை ஏந்தி மலர்க்கணை எய்த அனங்கனைக் காய் முந்நயனத்து இறைவா - கரும்பை வில்லாக ஏந்தி மலர் அம்பை ஏவிய மன்மதனை எரித்த முக்கண் இறைவனே; (கன்னல் - கரும்பு); (அனங்கன் - மன்மதன்); (நயனம் - கண்);

முதுகுன்றம் அமர்ந்தவனே - திருமுதுகுன்றத்தில் விரும்பி உறைகின்ற சிவபெருமானே;


4)

பாடி அடித்தலமே பணி வேன்வினை தீர்த்தருளாய்

வாடிய வெண்டலையில் மட வாரிடும் உண்பலியை

நாடிய சீருடையாய் நக ரும்மலை போற்கரித்தோல்

மூடிய மார்பினனே முது குன்றம் அமர்ந்தவனே.


பாடி அடித்தலமே பணிவேன் வினை தீர்த்தருளாய் - திருப்புகழைப் பாடி உன் திருவடிகளையே வழிபடும் என் வினைகளைத் தீர்த்து அருள்வாயாக;

வாடிய வெண் தலையில் மடவார் இடும் உண்பலியை நாடிய சீர் உடையாய் - உலர்ந்த வெண்மையான மண்டையோட்டில் பெண்கள் இடும் பிச்சையை விரும்பிய பெருமை உடையவனே;

நகரும் மலைபோல் கரித்தோல் மூடிய மார்பினனே - நகர்கின்ற மலை போன்ற பெரிய யானையின் தோலை உரித்துப் போர்வையாக அணிந்தவனே;

முதுகுன்றம் அமர்ந்தவனே - திருமுதுகுன்றத்தில் விரும்பி உறைகின்ற சிவபெருமானே;


5)

கூப்பிய கையுடையேன் குறை தீர அருள்புரியாய்

நாப்பிணை அஞ்செழுத்தை நவில் நாவர சர்க்கருளி

ஆர்ப்புறும் ஆழியிற்கல் அது வேபுணை ஆக்கிடுவாய்

மூப்படை யாதவனே முது குன்றம் அமர்ந்தவனே.


கூப்பிய கை உடையேன் குறை தீர அருள்புரியாய் - உன்னைக் கைகூப்பி வணங்கும் என் குறைகளைத் தீர்த்து அருள்வாயாக;

நாப் பிணை அஞ்செழுத்தை நவில் நாவரசர்க்கு அருளிக் - நாவில் திருவைந்தெழுத்துப் பொருந்திய திருநாவுக்கரசருக்கு அருள்புரிந்து;

ஆர்ப்பு உறும் ஆழியில் கல் அதுவே புணை ஆக்கிடுவாய் - பேரொலி செய்யும் கடலில் அவரைப் பிணித்த கல்லையே அவருக்குத் தெப்பம் ஆக்கியவனே; (ஆர்ப்பு - பேரொலி); (ஆழி - கடல்); (புணை - தெப்பம்; மரக்கலம்);

மூப்பு அடையாதவனே - என்றும் இளமையோடு இருப்பவனே;

முதுகுன்றம் அமர்ந்தவனே - திருமுதுகுன்றத்தில் விரும்பி உறைகின்ற சிவபெருமானே;


6)

பக்குவம் உற்றுனையே பணி நெஞ்சை அருள்புரியாய்

செக்கர் நிறச்சடைமேல் திகழ் கொன்றை அணிந்தவனே

அக்கணி மார்பினிலே அர வாரமும் ஏற்றவனே

முக்கண னேகவினார் முது குன்றம் அமர்ந்தவனே.


பக்குவம் உற்று உனையே பணி நெஞ்சை அருள்புரியாய் - கனிந்து உன்னையே பணியும் மனத்தை அருள்வாயாக;

செக்கர் நிறச் சடைமேல் திகழ் கொன்றை அணிந்தவனே - செஞ்சடைமேல் விளங்கும் கொன்றைமலரை அணிந்தவனே; (செக்கர் - சிவப்பு);

அக்கு அணி மார்பினிலே அரவு ஆரமும் ஏற்றவனே - எலும்பை அணிந்த மார்பில் பாம்பையும் மாலையாக அணிந்தவனே; (அக்கு - எலும்பு);

முக்கணனே - மூன்று கண்கள் உடையவனே;

கவின் ஆர் முதுகுன்றம் அமர்ந்தவனே - அழகிய திருமுதுகுன்றத்தில் விரும்பி உறைகின்ற சிவபெருமானே;


7)

ஐம்மலர் வாளிமதன் அழ காருடல் நீறுசெய்தாய்

கொய்ம்மல ரால்தொழுதார் குறை தீர்த்தருள் கின்றவனே

பெய்கழல் ஆர்த்திடவே பெரு நட்டம் இடும்பரனே

மொய்குழல் மங்கைபங்கா முது குன்றம் அமர்ந்தவனே.


* "எனக்கு அருள்புரிக" என்பது முந்தைய பாடல்களிலிருந்து பெறப்படும் குறிப்பு;


ஐம்மலர் வாளி மதன் அழகு ஆர் உடல் நீறு செய்தாய் - ஐந்து மலர்களை அம்பாக உடைய மன்மதனுடைய அழகிய உடலைச் சாம்பல் ஆக்கியவனே; (வாளி - அம்பு); (மதன் - மன்மதன்);

கொய்ம் மலரால் தொழுதார் குறை தீர்த்து அருள்கின்றவனே - கொய்த பூக்களைத் தூவித் தொழும் பக்தர்களது குறைகளைத் தீர்ப்பவனே; (கொய்ம்மலரால் :- இலக்கணக் குறிப்பு: தனிக்குறிலை அடுத்து ய் வரும் சொற்களை அடுத்து மெல்லினத்தில் தொடங்கும் சொல் வரின் அந்த மெல்லினம் மிகும்);

பெய் கழல் ஆர்த்திடவே பெரு நட்டம் இடும் பரனே - காலில் கட்டிய கழல்கள் ஒலிக்கும்படி பெருங்கூத்து இயற்றுகின்ற பரமனே; (பெய்தல் - கட்டுதல்; அணிதல்); (ஆர்த்தல் - ஒலித்தல்); (நட்டம் - நடனம்);

மொய் குழல் மங்கை பங்கா - அடர்ந்த கூந்தலை உடைய உமையை ஒரு பங்காக உடையவனே;

முதுகுன்றம் அமர்ந்தவனே - திருமுதுகுன்றத்தில் விரும்பி உறைகின்ற சிவபெருமானே;


8)

அத்த உனைப்பரவும் அடி யேனிடர் தீர்த்தருளாய்

மத்த மனத்தினனாய் மலை ஆட்டிய வல்லரக்கற்

கத்திட ஊன்றியொரு கதிர் வாளும் அளித்தவனே

முத்தமிழ் நச்சிறையே முது குன்றம் அமர்ந்தவனே.


அத்த உனைப் பரவும் அடியேன் இடர் தீர்த்து அருளாய் - தந்தையே, உன்னைப் போற்றும் என் துன்பத்தைத் தீர்ப்பாயாக; (அத்த - அத்தனே - தந்தையே);

மத்த மனத்தினனாய் மலை ஆட்டிய வல்லரக்கற் கத்திட ஊன்றி - மதம் பிடித்த மனம் உடையவனாகிக் கயிலைமலையை அசைத்த வலிய அரக்கனான இராவணன் கத்தும்படி அம்மலைமேல் ஒரு விரலை ஊன்றி அவனை நசுக்கி; (மத்தம் - மயக்கம்; மதம்; செருக்கு; பைத்தியம்); ( வல்லரக்கற் கத்திட = வல்லரக்கன் + கத்திட);

ஒரு கதிர் வாளும் அளித்தவனே - பின் அவன் பாடித் தொழவும், அவனுக்கு இரங்கி ஒளிவீசும் ஒரு வாளையும் அருள்புரிந்தவனே; (கதிர் - ஒளி)

முத்தமிழ் நச்சு இறையே - முத்தமிழை விரும்பும் இறைவனே;

முதுகுன்றம் அமர்ந்தவனே - திருமுதுகுன்றத்தில் விரும்பி உறைகின்ற சிவபெருமானே;


இலக்கணக் குறிப்பு:

வல்லரக்கற் கத்திட ஊன்றி = (வல் அரக்கன் + கத்திட ஊன்றி) = வல்லரக்கன் கத்திட அவனை ஊன்றி நசுக்கி;

இரண்டாம் வேற்றுமைத்தொகையில் உயர்திணைப் பெயர்கள் வரின், பொருள் தெளிவாக வேண்டி வல்லொற்று மிகுவதும், பெயரின் இறுதியிலுள்ள னகர ஒற்று றகர ஒற்றாகத் திரிவதும் உண்டு;

உதாரணம் - சம்பந்தர் தேவாரம் - 1.114.5 - "கறையணி மிடற்றண்ணல் காலற்செற்ற மறையவன் வளநகர் மாற்பேறே";


9)

வந்த வணம்தமிழால் வழி பாடுசெய் வேற்கருளாய்

முந்தயன் மாலிவர்கள் முடி சேவடி நேடியுனை

வந்தனை செய்திடவே வளர் சோதிய தானவனே

முந்திய முக்கணனே முது குன்றம் அமர்ந்தவனே.


வந்த வணம் தமிழால் வழிபாடு செய்வேற்கு அருளாய் - இயன்ற அளவில் தமிழ் பாடி உன்னை வணங்கும் எனக்கு அருள்வாயாக;

முந்து அயன் மால் இவர்கள் முடி சேவடி நேடி உனை வந்தனை செய்திடவே வளர் சோதியது ஆனவனே - முன்னர்ப் பிரமனும் திருமாலும் உன் திருமுடியையும் திருவடியையும் தேடி உன்னை வணங்குமாறு வளர்ந்த சோதி உருக் கொண்டவனே; (முந்து - முன்பு);

முந்திய முக்கணனே - முதன்மையான நெற்றிக்கண்ணனே; (முந்துதல் - முதன்மையாதல்);

முதுகுன்றம் அமர்ந்தவனே - திருமுதுகுன்றத்தில் விரும்பி உறைகின்ற சிவபெருமானே;


10)

குற்ற மனக்கயவர் குறி ஒன்றறி யாக்குருடர்

வெற்றுரை விட்டொழிமின் விரை ஆர்பொடி பூசியடி

பற்றிடும் அன்பரவர் பழ வல்வினை தீர்த்தருள்வான்

முற்றும் அறிந்தபிரான் முது குன்றம் அமர்ந்தவனே.


குற்ற மனக் கயவர், குறி ஒன்று அறியாக் குருடர் - குற்றம் பொருந்திய மனம் உடைய கீழோர்கள், குறியை அறியாத குருட்டுத்தன்மை உடையவர்கள்;

வெற்றுரை விட்டு ஒழிமின் - அவர்கள் பேசும் பொருளற்ற வார்த்தைகளை நீங்குங்கள்;

விரை ஆர் பொடி பூசி அடி பற்றிடும் அன்பர்அவர் பழ வல்வினை தீர்த்து அருள்வான் - மணம் பொருந்திய திருநீற்றைப் பூசித் திருவடியைப் பற்றுக்கோடாகப் பற்றிய அன்பர்களுடைய பழைய வலிய வினைகளைத் தீர்ப்பவன்;

முற்றும் அறிந்த பிரான் - எல்லாம் அறிந்த தலைவன்;

முதுகுன்றம் அமர்ந்தவனே - திருமுதுகுன்றத்தில் விரும்பி உறைகின்ற சிவபெருமானே;


11)

கோத்த தமிழ்த்தொடைகள் கொடு பொன்னடி போற்றிடுவேன்

பூத்திரள் தூவிநிதம் புகழ் பாடிடும் அன்பர்களைக்

காத்தருள் கண்ணுதலே கடல் நஞ்சணி கண்டமிக

மூத்தவ னேகவினார் முது குன்றம் அமர்ந்தவனே.


கோத்த தமிழ்த்தொடைகள் கொடு பொன்னடி போற்றிடுவேன் - தொடுத்த தமிழ்ப்பாமாலைகளால் உன் பொன் போன்ற திருவடியைப் போற்றுவேன்; (கொடு - கொண்டு - மூன்றாம் வேற்றுமை உருபு);

பூத் திரள் தூவி நிதம் புகழ் பாடிடும் அன்பர்களைக் காத்து அருள் கண்ணுதலே - பல பூக்களைத் தூவி நாள்தோறும் உன் புகழ் பாடும் பக்தர்களைக் காக்கும் நெற்றிக்கண்ணனே;

கடல் நஞ்சு அணி கண்ட - கடல்விடத்தை அணிந்த நீலகண்டனே;

மிக மூத்தவனே - மிகவும் தொன்மையானவனே;

கவின் ஆர் முதுகுன்றம் அமர்ந்தவனே - அழகிய திருமுதுகுன்றத்தில் விரும்பி உறைகின்ற சிவபெருமானே;


பிற்குறிப்புகள் :

1) யாப்புக் குறிப்பு :

  • சந்த விருத்தம் - "தானன தானதனா தன தானன தானதனா" என்ற சந்தம்.

  • அடிகளின் முதற்சீர் - "தானன" என்பது "தனதன" என்றும் வரலாம்.

  • "தானன" என்ற சீர் "தான" என்றும் வரலாம். அப்படி அச்சீர் "தான" என்று வரின், அதை அடுத்த சீர் நிரையசையில் தொடங்கும் - (தனதனனா / தனாதனனா

  • இரண்டாம் / நாலாம் சீர் - "தானதனா" என்பது "தானதானா" என்றும் வரலாம்.

  • இச்சந்தத்தைத் “தானன தானதனா தனதானன தானதனா” என்று நோக்கில் சந்தக் கலிவிருத்தம் என்று கருதலாம்.

  • இப்பாடல்கள் கட்டளைக் கலித்துறை இலக்கணத்திற்கும் பொருந்தும் - ("தானன தானன தானன தானன தானதனா" என்று நோக்கினால்).


2) சம்பந்தர் தேவாரம் - 3.61.1 -

ஆதியன் ஆதிரையன் அனல் ஆடிய ஆரழகன்

பாதியொர் மாதினொடும் பயி லும்பர மாபரமன்

போதிய லும்முடிமேற் புன லோடர வம்புனைந்த

வேதியன் மாதிமையால் விரும் பும்மிடம் வெண்டுறையே.


வி. சுப்பிரமணியன்

----------- --------------


No comments:

Post a Comment