07.29 – கச்சி அனேகதங்காவதம்
2016-03-10
கச்சி அனேகதங்காவதம்
--------------------------------
(கட்டளைக் கலித்துறை) (தேவாரத்தில் "திருவிருத்தம்" என்ற அமைப்பு);
(திருநாவுக்கரசர் தேவாரம் - 4.94.1 - "ஈன்றாளுமாய் எனக்கெந்தையுமாய் உடன் தோன்றினராய்")
1)
பண்ணிற் பொலிதமிழ் கொண்டடி போற்றிசெய் பத்தரினி
மண்ணிற் பிறவிகள் இன்றி மகிழ வரமருள்வான்
வண்ணக் கடிமலர் வாளி மதனனை மாய்த்தநுதற்
கண்ணன் இடம்திருக் கச்சி அனேகதங் காவதமே.
பண்ணிற் பொலி தமிழ் கொண்டு அடி போற்றிசெய் பத்தர் - பண் பொருந்திய தேவாரம் பாடித் திருவடியைத் துதிக்கும் பக்தர்கள்;
இனி மண்ணில் பிறவிகள் இன்றி மகிழ வரம் அருள்வான் - மீண்டும் உலகில் பிறவாமல் இன்புறும்படி வரம் அருள்பவன்;
வண்ணக் கடிமலர் வாளி மதனனை மாய்த்த நுதற்கண்ணன் - அழகிய வாசமலர்களை அம்பாக உடைய மன்மதனை அழித்த நெற்றிக்கண்ணன்; (வண்ணம் - அழகு); (கடி - வாசனை); (வாளி - அம்பு); (மதனன் - மன்மதன்); (மாய்த்தல் - கொல்லுதல்; அழித்தல்);
இடம் திருக்-கச்சி அனேகதங்காவதமே - அப்பெருமான் உறையும் இடம் காஞ்சிபுரத்தில் உள்ள அனேகதங்காவதம் என்ற கோயில் ஆகும்;
2)
ஏலும் வகையினில் தொண்டுசெய் வாரைவிண் ஏற்றுமரன்
ஆல நிழலமர் ஐயன் அடியை அருச்சனைசெய்
பாலனைக் காத்துப் பரிவில் நமனைப் படவுதைத்த
காலன் இடம்திருக் கச்சி அனேகதங் காவதமே.
ஏலும் வகையினில் தொண்டு செய்வாரை விண் ஏற்றும் அரன் - இயலும் அளவில் திருத்தொண்டு செய்து திருவடியை வழிபடும் பக்தர்களைச் சிவலோகத்திற்கு உயர்த்தும் ஹரன்; (ஏல்தல் - ஏலுதல் - இயலுதல்); (சம்பந்தர் தேவாரம் - 2.31.1 - "அடியார்கள் மற்றவரை வானவர்தம் வானுலகம் ஏற்றக் கற்றவன்" - அடியவர்களைத் தேவர்கள் வாழும் வானுலகம் ஏற்றலைச் செய்யும் சிவபிரான்);
ஆல நிழலமர் ஐயன் அடியை அருச்சனைசெய் பாலனைக் காத்துப் - கல்லால மரத்தின்கீழ் விரும்பி வீற்றிருக்கும் ஈசன் திருவடியை அருச்சித்த மார்க்கண்டேயரைக் காத்து; (அமர்தல் - விரும்புதல்; இருத்தல்); (ஐயன் - குரு; தலைவன்);
பரிவு இல் நமனைப் பட உதைத்த காலன் - இரக்கம் இல்லாத காலனை அழியும்படி உதைத்த காலினன், காலகாலன்; (பரிவில் - பரிவு இல் - இரக்கம் இல்லாத); (படுதல் - சாதல்; அழிதல்);
இடம் திருக்-கச்சி அனேகதங்காவதமே - அப்பெருமான் உறையும் இடம் காஞ்சிபுரத்தில் உள்ள அனேகதங்காவதம் என்ற கோயில் ஆகும்;
==== line-2x) ஆல நிழலில் அமர்ந்த பிரானை அருச்சனைசெய்
3)
மெய்யினில் நீற்றினைப் பூசி உளங்கசி மெய்யடியார்
வெய்ய வினைத்தொடர் வீட்டி அருள்புரி விண்ணவர்கோன்
ஐயன் அருநடம் ஆடிடும் அண்ணல் அழல்திகழும்
கையன் இடம்திருக் கச்சி அனேகதங் காவதமே.
மெய்யினில் நீற்றினைப் பூசி உளம் கசி மெய்யடியார் - உடம்பில் திருநீற்றைப் பூசி மனம் உருகி வழிபடும் மெய்யன்பர்களுடைய;
வெய்ய வினைத்தொடர் வீட்டி அருள்புரி விண்ணவர்கோன் - கொடிய வினைத்தொடரை அழித்து அருள்கின்றவன், தேவர்கள் பெருமான்; (வெய்ய - கொடிய); (வீட்டுதல் - அழித்தல்; நீக்குதல்);
ஐயன் அரு-நடம் ஆடிடும் அண்ணல் - தலைவன், அரிய திருநடம் ஆடும் கடவுள்;
அழல் திகழும் கையன் - தீயைக் கையில் ஏந்தியவன்; (அழல் - நெருப்பு);
இடம் திருக்-கச்சி அனேகதங்காவதமே - அப்பெருமான் உறையும் இடம் காஞ்சிபுரத்தில் உள்ள அனேகதங்காவதம் என்ற கோயில் ஆகும்;
4)
கரையும் மனத்தொடு கைதொழும் அன்பரைக் காத்தருள்வான்
திரைமலி கங்கையைச் செஞ்சடை ஏற்ற சிவபெருமான்
வரையை வளைத்துப் புரமெரி மைந்தன் மதியணிந்த
அரையன் இடம்திருக் கச்சி அனேகதங் காவதமே.
கரையும் மனத்தொடு கைதொழும் அன்பரைக் காத்தருள்வான் - கசிந்து உருகும் மனத்தோடு கைகூப்பி வணங்கும் பக்தர்களைக் காப்பவன்;
திரை மலி கங்கையைச் செஞ்சடை ஏற்ற சிவபெருமான் - அலை மிகுந்த கங்கையைச் செஞ்சடையில் ஏற்ற சிவன்; (திரை - அலை); (மலிதல் - மிகுதல்);
வரையை வளைத்துப் புரம் எரி மைந்தன் - மேருமலையை வில்லாக வளைத்து முப்புரங்களை எரித்த வீரன்; (வரை - மலை); (மைந்தன் - வீரன்);
மதி அணிந்த அரையன் - சந்திரனை அணிந்த அரசன்; (அரையன் - அரசன்);
இடம் திருக்-கச்சி அனேகதங்காவதமே - அப்பெருமான் உறையும் இடம் காஞ்சிபுரத்தில் உள்ள அனேகதங்காவதம் என்ற கோயில் ஆகும்;
5)
தெண்ட னிடும்அடி யார்பழ வல்வினை தீர்த்தருள்வான்
பண்டு சுரர்கள் கடைந்த கடலில் படுவிடத்தைக்
கண்டு நடுங்கிக் கழல்தொழு தேத்தக் கரந்தருள்செய்
கண்டன் இடம்திருக் கச்சி அனேகதங் காவதமே.
தெண்டனிடும் அடியார் பழ-வல்வினை தீர்த்து அருள்வான் - வணங்கும் பக்தர்களின் பழைய வலிய வினைகளைத் தீர்ப்பவன்; (தெண்டனிடுதல் - தண்டனிடுதல் - நமஸ்கரித்தல்);
பண்டு, சுரர்கள் கடைந்த கடலில் படுவிடத்தைக் கண்டு நடுங்கிக் - முன்பு, தேவர்கள் அமுது வேண்டிக் கடைந்த பாற்கடலில் தோன்றிய கொடிய நஞ்சைக் கண்டு அஞ்சி; (பண்டு - முற்காலம்); (சுரர் - தேவர்); (படுதல் - உண்டாதல்; தோன்றுதல்; சம்பவித்தல்); (படு - கொடிய);
கழல் தொழுது ஏத்தக் கரந்து அருள்செய் கண்டன் - திருவடியை வழிபடவும் அவர்களுக்கு இரங்கி அதனைக் கண்டத்தில் ஒளித்தவன்;
இடம் திருக்-கச்சி அனேகதங்காவதமே - அப்பெருமான் உறையும் இடம் காஞ்சிபுரத்தில் உள்ள அனேகதங்காவதம் என்ற கோயில் ஆகும்;
6)
நறைமலி பூக்கொடு போற்றடி யார்க்கு நலமருள்வான்
பிறையையும் பாம்பையும் ஒன்றிட வைத்த பெருமையினான்
அறைகழல் வாழ்த்திய அண்டர்க் கிரங்கி அருள்மிடற்றில்
கறையன் இடம்திருக் கச்சி அனேகதங் காவதமே.
நறை மலி பூக்கொடு போற்று அடியார்க்கு நலம் அருள்வான் - தேன் மிக்க பூக்களால் வழிபடும் பக்தர்களுக்கு நன்மை அருள்பவன்; (நறை - தேன்; வாசனை); (மலிதல் - மிகுதல்);
பிறையையும் பாம்பையும் ஒன்றிட வைத்த பெருமையினான் - திருமுடிமேல் பிறைச்சந்திரனையும் நாகத்தையும் சேர்ந்து வாழ வைத்த பெருமையுடையவன்;
அறை-கழல் வாழ்த்திய அண்டர்க்கு இரங்கி அருள் மிடற்றில் கறையன் - ஒலிக்கின்ற கழல் அணிந்த திருவடியைத் துதித்த தேவர்களுக்கு இரங்கி அருளிய கண்டத்தில் கறையை உடையவன்;
இடம் திருக்-கச்சி அனேகதங்காவதமே - அப்பெருமான் உறையும் இடம் காஞ்சிபுரத்தில் உள்ள அனேகதங்காவதம் என்ற கோயில் ஆகும்;
7)
இயலும் வகையில் இணையடி போற்றில் இனிதருள்வான்
கயலை நிகர்த்தகண் ணாளொரு பங்கன் கனவிடையான்
அயிலுடை மூவிலை வேலினன் நால்வர்க் கறமுரைத்த
கயிலைக் கிறையிடம் கச்சி அனேகதங் காவதமே.
இயலும் வகையில் இணையடி போற்றில் இனிது அருள்வான் - இயன்றவாறு இரு திருவடிகளைப் போற்றினால் இனிய அருளைப் பொழிபவன்; (போற்றில் - போற்றினால்);
கயலை நிகர்த்த கண்ணாள் ஒரு பங்கன் - கயல்மீன் போன்ற கண்களை உடைய உமையை ஒரு பங்கில் உடையவன்;
கனவிடையான் - பெரிய, பெருமை மிக்க இடபத்தை வாகனமாக உடையவன்; (கனம் - பெருமை; பருமன்); (விடை - எருது); (அப்பர் தேவாரம் - 5.3.9 - "காழியானைக் கனவிடை ஊருமெய் வாழியானை");
அயில்உடை மூவிலை வேலினன் - கூர்மையுடைய திரிசூலம் ஏந்தியவன்; (அயில் - கூர்மை); (மூவிலை வேல் - மூன்று இலை போன்ற முனையுடைய வேல் - திரிசூலம்);
நால்வர்க்கு அறம் உரைத்த கயிலைக்கு இறை - (கல்லால மரத்தின்கீழே) சனகாதியர்கள் நால்வருக்கு மறைப்பொருளை விளக்கிய கயிலாயநாதன்;
இடம் கச்சி அனேகதங்காவதமே - அப்பெருமான் உறையும் இடம் காஞ்சிபுரத்தில் உள்ள அனேகதங்காவதம் என்ற கோயில் ஆகும்;
8)
பத்திமை கொண்டு பரவிடு பத்தர் பழவினைதீர்
அத்தன் அரையில் அரவினை நாணென ஆர்த்தபிரான்
பத்துத் தலையனை ஓர்விரல் ஊன்றிப் பனிமலைக்கீழ்க்
கத்தவைத் தானிடம் கச்சி அனேகதங் காவதமே.
பத்திமை கொண்டு பரவிடு பத்தர் பழவினை தீர் அத்தன் - பக்தியால் போற்றித் துதிக்கும் பக்தர்களுடைய பழைய வினைகளைத் தீர்க்கும் தந்தை; (பத்திமை - பக்தி; காதல்); (பரவுதல் - புகழ்தல்; துதித்தல்); (அப்பர் தேவாரம் - 6.54.3 - "பத்திமையாற் பணிந்தடியேன் தன்னைப் பன்னாள் பாமாலை பாடப் பயில்வித்தானை");
அரையில் அரவினை நாண் என ஆர்த்த பிரான் - அரையினில் பாம்பை அரைநாணாகக் கட்டிய தலைவன்; (ஆர்த்தல் - கட்டுதல்); (பிரான் - தலைவன்);
பத்துத் தலையனை ஓர் விரல் ஊன்றிப் பனிமலைக்கீழ்க் கத்தவைத்தான் - பத்துத்தலை உடைய இராவணனை ஒரு விரலை ஊன்றிக் கயிலைமலையின் கீழே நசுக்கி அவனை அலறச்செய்தவன்; (பனிமலை - இங்கே, பனி பொருந்திய கயிலைமலை);
இடம் கச்சி அனேகதங்காவதமே - அப்பெருமான் உறையும் இடம் காஞ்சிபுரத்தில் உள்ள அனேகதங்காவதம் என்ற கோயில் ஆகும்;
9)
சமயங்கள் ஆறென நின்றவன் தாளைத் தலைவணங்கித்
தமிழ்மறை பாடும் அடியவர் தம்வினை சாய்த்தருள்வான்
கமலத் தயனரி காணற் கரிய கனலுருக்கொள்
அமலன் இடம்திருக் கச்சி அனேகதங் காவதமே.
சமயங்கள் ஆறு என நின்றவன் தாளைத் தலைவணங்கித் - (சைவம், சாக்தம், வைஷ்ணவம், கௌமாரம், காணபத்தியம், சௌரம் என்ற) ஷண்மதங்கள் காட்டும் இறைவனான அவன் திருவடியைத் தலையால் வணங்கித்;
தமிழ்மறை பாடும் அடியவர்தம் வினை சாய்த்தருள்வான் - தமிழ்வேதமாகிய திருமுறைகளைப் பாடுகின்ற பக்தர்களுடைய வினைகள் அழிப்பான்; (சாய்த்தல் - அழித்தல்); (பெரிய புராணம் - சம்பந்தர் புராணம் - 12.28.319 - "பன்னு தமிழ்மறை யாம்பதிகம் பாடித்");
கமலத்து அயன் அரி காணற்கு அரிய கனல்-உருக் கொள் அமலன் - தாமரைப்பூமேல் உறையும் பிரமனும் திருமாலும் தேடியும் காண இயலாத அரிய சோதியின் வடிவம் கொண்டவன், தூயவன்;
இடம் திருக்-கச்சி அனேகதங்காவதமே - அப்பெருமான் உறையும் இடம் காஞ்சிபுரத்தில் உள்ள அனேகதங்காவதம் என்ற கோயில் ஆகும்;
10)
அருத்தம் இலாததைத் தத்துவம் என்னும் அவர்நெறிகள்
வருத்தத்தை மாற்றகில் லாவினை மாய்த்திட வல்லபிரான்
நிருத்தம் பயிலும் நிமலன் சுடலையின் நீறணிந்த
கருத்தன் இடம்திருக் கச்சி அனேகதங் காவதமே.
அருத்தம் இலாததைத் தத்துவம் என்னும் அவர் நெறிகள் வருத்தத்தை மாற்றகில்லா - பொருளற்ற வார்த்தைகளைத் தத்துவம் என்று பேசும் அவர்கள் சொல்லும் மார்க்கங்கள் துன்பத்தைத் தீர்க்கமாட்டா; (அருத்தம் - அர்த்தம் - பொருள்); (கில்தல் - இயலுதல்);
வினை மாய்த்திட வல்ல பிரான் - பக்தர்களின் வினையை அழிக்கவல்ல தலைவன்;
நிருத்தம் பயிலும் நிமலன் - இடைவிடாது கூத்தாடுகின்ற தூயன்; (நிருத்தம் - ஆடல்); (பயில்தல் - தொடர்ந்து செய்தல்); (நிமலன் - மலங்கள் அற்றவன்); (திருக்கோவையார் - 6.1 - "நிருத்தம் பயின்றவன் சிற்றம்பலத்து");
சுடலையின் நீறு அணிந்த கருத்தன் - சுடுகாட்டுச் சாம்பலைப் பூசிய கடவுள்; (சுடலை - சுடுகாடு); (கருத்தன் - கர்த்தா - கடவுள்); (சம்பந்தர் தேவாரம் - 3.16.1 - நிணம்படு சுடலையின் நீறு பூசி);
இடம் திருக்-கச்சி அனேகதங்காவதமே - அப்பெருமான் உறையும் இடம் காஞ்சிபுரத்தில் உள்ள அனேகதங்காவதம் என்ற கோயில் ஆகும்;
11)
கடகரி தன்னை உரித்தவன் வானவர் கைதொழவும்
கடல்விடம் உண்டருள் கண்டன் நுதலிடைக் கண்ணுடையான்
அடல்விடை ஊர்தியன் ஆறும் பிறையும் அணிந்தசடைக்
கடவுள் இடம்திருக் கச்சி அனேகதங் காவதமே.
கடகரி தன்னை உரித்தவன் - மதயானையின் தோலை உரித்தவன்; (கடகரி - மதம் பொழிகின்ற யானை);
வானவர் கைதொழவும் கடல்விடம் உண்டு அருள் கண்டன் - தேவர்கள் இறைஞ்சவும் அவர்களுக்கு இரங்கிக் கடல்விஷத்தை உண்ட நீலகண்டன்;
நுதலிடைக் கண் உடையான் - நெற்றியில் கண் உடையவன்; (நுதல் - நெற்றி);
அடல்விடை ஊர்தியன் - வலிய, வெற்றி உடைய இடபத்தை ஊர்தியாக உடையவன்; (அடல் - வலிமை; வெற்றி);
ஆறும் பிறையும் அணிந்த சடைக் கடவுள் - கங்கையையும் பிறைச்சந்திரனையும் சடையில் அணிந்த கடவுள்;
இடம் திருக்-கச்சி அனேகதங்காவதமே - அப்பெருமான் உறையும் இடம் காஞ்சிபுரத்தில் உள்ள அனேகதங்காவதம் என்ற கோயில் ஆகும்;
பிற்குறிப்புகள் :
கச்சி அனேகதங்காவதம் - இத்தலம் காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயிலிலிருந்து சுமார் 1000 அடி தூரத்தில், அதே சாலையில் SSKV பள்ளிக்கூடத்தின் பின்னே உள்ளது.
வி. சுப்பிரமணியன்
-------------- --------------
No comments:
Post a Comment