Thursday, January 18, 2024

07.28 – இடைச்சுரம் (திருவடிசூலம்) - வழிபடு மறையவன்

07.28 – இடைச்சுரம் (திருவடிசூலம்)

2016-03-09

இடைச்சுரம் (இக்காலத்தில் - திருவடிசூலம்) (இத்தலம் செங்கல்பட்டு அருகே உள்ளது)

-----------------------

(வஞ்சி விருத்தம் - "தானன தானன தானதனா" என்ற சந்தம்)

(சம்பந்தர் தேவாரம் - 1.112.2 - "அன்றடற் காலனைப் பாலனுக்காய்ப்")

(சம்பந்தர் தேவாரம் - 1.114.1 - "குருந்தவன் குருகவன் கூர்மையவன்")


1)

வழிபடு மறையவன் வாழ்வுபெறக்

கழல்கொடு கூற்றுதை கருணையினான்

அழலுறு மேனியன் அமர்பதிதான்

எழிலுறு வயலணி இடைச்சுரமே.


வழிபடு மறையவன் வாழ்வு பெறக் - வழிபட்ட மறைச்சிறுவரான மார்க்கண்டேயர் இறவாது உயிர்வாழும்படி;

கழல்கொடு கூற்று உதை கருணையினான் - கழல் அணிந்த திருவடியினால் எமனை உதைத்த அன்பு உடையவன்; (கொடு - கொண்டு - மூன்றாம் வேற்றுமை உருபு);

அழல் உறு மேனியன் அமர் பதிதான் - தீப்போலச் செம்மேனி உடைய சிவபெருமான் விரும்பி உறையும் தலம் ஆவது; (உறுதல் - ஒத்தல்); (அமர்தல் - விரும்புதல்; இருத்தல்);

எழில் உறு வயல் அணி இடைச்சுரமே - அழகிய வயல்கள் சூழ்ந்த திருவிடைச்சுரம் ஆகும்; (உறுதல் - பொருந்துதல்; மிகுதல்);


2)

ஓரடல் விடையினன் உலகமுய்ய

நீரடை சடையினன் நீள்மதியன்

காரடை மிடறினன் கருதுமிடம்

ஏருடை வயலணி இடைச்சுரமே.


ஓர் அடல் விடையினன் - ஒப்பற்ற வலிய இடபத்தை ஊர்தியாக உடையவன்; (ஓர் - ஒப்பற்ற); (அடல் - வலிமை; வெற்றி);

உலகம் உய்ய நீர் அடை சடையினன் - உலகம் உய்யும்படி கங்கையைச் சடையில் அடைத்தவன்; (திருவாசகம் - திருச்சாழல் - 8.12.7 - "சலமுகத்தால் அவன்சடையிற் பாய்ந்திலளேல் தரணியெல்லாம் பிலமுகத்தே புகப்பாய்ந்து பெருங்கேடாஞ் சாழலோ");

நீள்மதியன் - பிறைச்சந்திரனை அணிந்தவன்;

கார் அடை மிடறினன் கருதும் இடம் - கருமை அடைந்த கண்டத்தை உடைய ஈசன் விரும்பும் இடம்; (கார் - கருமை); (கருதுதல் - விரும்புதல்);

ஏர் உடை வயல் அணி இடைச்சுரமே - அழகிய வயல்கள் சூழ்ந்த திருவிடைச்சுரம் ஆகும்; (ஏர் - அழகு; கலப்பை; உழவு);


3)

ஆறிய சிந்தையர் அடிபரவிக்

கூறிய கோமகன் குளிர்மதியன்

மாறிலன் மகிழிடம் மந்திகள்போய்

ஏறிடும் மதிலணி இடைச்சுரமே.


ஆறிய சிந்தையர் அடி பரவிக் கூறிய கோமகன் - தணிந்த மனம் உடைய அடியவர்கள் திருவடியை வாழ்த்திக் கூறிய தலைவன்; (கோமகன் - அரசன்); (சம்பந்தர் தேவாரம் - 1.50.1 - "ஒல்லை ஆறி உள்ளம் ஒன்றிக் கள்ளம் ஒழிந்து வெய்ய சொல்லை ஆறித்");

குளிர் மதியன் - குளிர்ந்த திங்களை அணிந்தவன்;

மாறு இலன் மகிழ் இடம் - ஒப்பற்றவனான சிவபெருமான் விரும்பி உறையும் தலம்; (மாறு - ஒப்பு );

மந்திகள் போய் ஏறிடும் மதில் அணி இடைச்சுரமே - குரங்குகள் ஏறுகின்ற மதிலை உடைய திருவிடைச்சுரம் ஆகும்;


4)

அறைகடல் நஞ்சினை ஆர்ந்தழகார்

கறைமிட றுடையவன் கண்ணுதலான்

மறையொரு நான்கையும் வாய்மொழிந்த

இறையவன் உறைபதி இடைச்சுரமே.


அறைகடல் நஞ்சினை ஆர்ந்து அழகு ஆர் கறைமிடறு உடையவன் - ஒலிக்கின்ற கடலில் எழுந்த விடத்தை உண்டு அழகிய நீலகண்டம் உடையவன்; (அறைதல் - ஒலித்தல்); (ஆர்தல் - உண்ணுதல்); (மிடறு - கண்டம்);

கண்ணுதலான் - நெற்றிக்கண்ணன்; (நுதல் - நெற்றி);

மறை ஒரு நான்கையும் வாய்மொழிந்த இறையவன் உறை பதி இடைச்சுரமே - நால்வேதங்களைப் பாடியருளிய இறைவன் உறையும் தலம் திருவிடைச்சுரம் ஆகும்;


5)

நீறமர் மார்பினன் நேரிழையைக்

கூறமர் கொள்கையன் குளிர்மதியம்

ஆறமர் சடையினன் அடலுடைய

ஏறமர் இறைபதி இடைச்சுரமே.


நீறு அமர் மார்பினன் - மார்பில் திருநீற்றைப் பூசியவன்;

நேரிழையைக் கூறு அமர் கொள்கையன் - உமையை ஒரு கூறாக விரும்பியவன்;

குளிர் மதியம் ஆறு அமர் சடையினன் - குளிர்ந்த சந்திரனையும் கங்கையையும் சடையில் உடையவன்;

அடல் உடைய ஏறு அமர் இறை பதி இடைச்சுரமே - வலிய எருதை வாகனமாக விரும்பும் இறைவன் உறையும் தலம் திருவிடைச்சுரம் ஆகும்;


6)

காவல அருளெனக் கைதொழுது

பூவலர் கொடுசுரர் போற்றிடவும்

மேவலர் முப்புரம் வேவவெய்த

ஏவலன் உறைபதி இடைச்சுரமே.


"காவல அருள்" எனக் கைதொழுது - "காவலனே! அருள்வாயாக" என்று கைகூப்பி வணங்கி;

பூஅலர் கொடு சுரர் போற்றிடவும் - (அன்று) பூத்த அழகிய மலர்களால் தேவர்கள் துதிக்கவும்; (பூத்தல் - மலர்தல்); (பூ - மலர்; அழகு); (அலர் - மலர்); (சுரர் - தேவர்);

மேவலர் முப்புரம் வேவ எய்த ஏ வலன் - பகைவர்களது முப்புரங்களும் வெந்து அழியும்படி அம்பு எய்தவன்; (மேவலர் - பகைவர்); (ஏ வலன் - அம்பு எய்தலில் வல்லவன்); (சுந்தரர் தேவாரம் - 7.17.1 - "மேவலர் முப்புரம் தீயெழுவித்தவர் ஓரம்பினால் ஏவலனார்");

உறை பதி இடைச்சுரமே - அப்பெருமான் உறையும் தலம் திருவிடைச்சுரம் ஆகும்;


7)

அசைவிலன் ஆற்றினை அணிசடையின்

மிசைமதி புனையரன் விரும்புமிடம்

நசையொடு நறைமலர் நாடுவண்டின்

இசைமலி பொழிலணி இடைச்சுரமே.


அசைவு இலன் - அசைவற்றவன்; (அசைவு இலன் - அசலன் - அசைவில்லாதவன்);

ஆற்றினை அணி சடையின்மிசை மதி புனை அரன் விரும்பும் இடம் - கங்கையை அணிந்த சடையின்மேல் சந்திரனைச் சூடிய ஹரன் விரும்பி உறையும் தலம்;

நசையொடு நறைமலர் நாடு வண்டின் இசைமலி பொழில் அணி இடைச்சுரமே - விருப்பத்தோடு தேன்மலர்களை அடைகின்ற வண்டுகளின் இசை மிகுந்த சோலை சூழ்ந்த திருவிடைச்சுரம் ஆகும்; (நசை - விருப்பம்; ஆசை); (நறை - தேன்); (மலிதல் - மிகுதல்)


8)

வைதரு மலையசை வாளரக்கன்

கைதலை நெரித்தவர் கனல்மழுவர்

கொய்தவர் அயன்சிரம் கூடலரூர்

எய்தவர் உறைபதி இடைச்சுரமே.


வைது அரு மலை அசை வாள் அரக்கன் கை தலை நெரித்தவர் - (தன் தேர் ஓடாது கீழே இறங்கியதும்) இகழ்ந்து பேசிக் கயிலைமலையைப் பேர்க்க முயன்ற கொடிய அரக்கனான இராவணனுடைய கைகளையும் தலைகளையும் நசுக்கியவர்;

கனல் மழுவர் - பிரகாசிக்கும் மழுவை ஏந்தியவர்;

கொய்தவர் அயன் சிரம் - பிரமன் தலையைக் கிள்ளிப் பறித்தவர்;

கூடலர் ஊர் எய்தவர் - பகைவர்களது ஊர்களான முப்புரங்களை ஓர் அம்பால் எய்தவர்; (கூடலர் - கூடார் - பகைவர்);

உறை பதி இடைச்சுரமே - அப்பெருமானார் உறையும் தலம் திருவிடைச்சுரம் ஆகும்;


9)

செம்மலர்க் கண்ணனும் திசைமுகனும்

அம்மலர் அடிமுடி அறிவரியான்

இம்மையும் அம்மையும் இன்பமருள்

எம்மிறை உறைபதி இடைச்சுரமே.


செம்மலர்க் கண்ணனும் திசைமுகனும் - தாமரை போன்ற கண்களை உடைய திருமாலும் பிரமனும்; (செம்மலர் - தாமரை); (திசைமுகன் - நான்முகன்);

அம் மலர்அடி முடி அறிவு அரியான் - (தேடியும்) அழகிய மலர் போன்ற திருவடியையும் முடியையும் அறிய ஒண்ணாத பெருமான்; (அம் - அழகு; அந்த);

இம்மையும் அம்மையும் இன்பம் அருள் எம் இறை - அடியவர்களுக்கு இகபர சுகங்களை அருளும் எம் கடவுள்; (இம்மை - இப்பிறப்பு); (அம்மை - இப்பிறப்பின் பின் எய்தும் நிலை); (அப்பர் தேவாரம் - 5.14.4 - "இம்மை வானவர் செல்வம் விளைத்திடும் அம்மையேல் பிறவித்துயர் நீத்திடும்");

உறை பதி இடைச்சுரமே - அப்பெருமான் உறையும் தலம் திருவிடைச்சுரம் ஆகும்;


10)

வஞ்சக நெஞ்சினர் வாயுரைக்கும்

நஞ்சன சொல்விடும் நன்றறிவீர்

வெஞ்சின விடையினன் வீடருளும்

எஞ்சிவன் உறைபதி இடைச்சுரமே.


வஞ்சக நெஞ்சினர் வாய் உரைக்கும் நஞ்சு அன சொல் விடும் நன்று அறிவீர் - நல்லதை அறிந்தவர்களே! மனத்தில் வஞ்சம் உடையவர்கள் சொல்லும் விஷம் போன்ற சொல்லை நீங்குங்கள்; (அன - அன்ன - போன்ற); (விடும் - விடுங்கள்; நீங்குங்கள்);

வெஞ்சின விடையினன் - மிக்க சினம் உடைய இடபத்தை வாகனமாகக் கொண்டவன்;

வீடு அருளும் எம் சிவன் உறை பதி இடைச்சுரமே - வீடுபேறு அருள்கின்ற எம் சிவபெருமான் உறையும் தலம் திருவிடைச்சுரம் ஆகும்;


11)

நடமிடச் சுடலையை நாடுமரன்

வடமர நிழலமர் மறைமுதல்வன்

இடமலை மகளமர் எம்பெருமான்

இடமலர்ப் பொழிலணி இடைச்சுரமே.


நடம் இடச் சுடலையை நாடும் அரன் - கூத்தாடச் சுடுகாட்டை விரும்பும் ஹரன்;

வடமர நிழல் அமர் மறைமுதல்வன் - கல்லால மரத்தின் அடியில் அமர்ந்த தட்சிணாமூர்த்தி; (வடமரம் - கல்லால மரம்); (மறைமுதல்வன் - மறைமுதல் - சிவன்); (சம்பந்தர் தேவாரம் - 1.20.5 - "அணிபெறு வடமர நிழலினில் அமர்வொடும்");

இடம் மலைமகள் அமர் எம்பெருமான் - இடப்பக்கத்தில் உமாதேவியைப் பங்காக விரும்பிய எம்பெருமான்; (இடம் + மலைமகள் = இடமலைமகள்; இங்கே, புணர்ச்சியில் மகர ஒற்றுக் கெடும்);

இடம் மலர்ப்பொழில் அணி இடைச்சுரமே - அப்பெருமான் உறையும் தலம் மலர்ச்சோலைகள் சூழ்ந்த திருவிடைச்சுரம் ஆகும்;


பிற்குறிப்புகள் :

1) யாப்புக் குறிப்பு:

  • வஞ்சிவிருத்தம் - "தானன தானன தானதனா" என்ற சந்தம். ("விளம் விளம் விளங்காய்");

  • தானன என்பது தனதன என்றும், தானதனா என்பது தனதனனா / தானதானா / தனனதானா என்றும் வரலாம்;

  • சந்தப்பாடல்களில் இடையின ஒற்றுகள் சில இடங்களில் அலகிடப்படா;

2) சம்பந்தர் தேவாரம் - 1.112.5 -

வீறுநன் குடையவள் மேனிபாகம்

கூறுநன் குடையவன் குளிர்நகர்தான்

நாறுநன் குரவிரி வண்டுகிண்டித்

தேறலுண் டெழுதரு சிவபுரமே.


வி. சுப்பிரமணியன்

----------- --------------


No comments:

Post a Comment