07.27 – கச்சூர் (திருக்கச்சூர்)
2016-03-09
கச்சூர் (திருக்கச்சூர்) (இத்தலம் செங்கல்பட்டு அருகே உள்ளது)
----------------------
(வஞ்சித்துறை - "தானா தனதானா"; திருவிருக்குக்குறள் அமைப்பு; "மா மாங்காய்" - வாய்பாடு);
(சம்பந்தர் தேவாரம் - 1.93.1 - "நின்று மலர்தூவி")
1)
ஆமை தொழுதேத்து
மாமை திகழ்கண்டன்
காமர் கச்சூரான்
நாமம் நினைநெஞ்சே.
ஆமை தொழுது ஏத்து - ஆமை வடிவில் வந்த திருமால் வழிபாடு செய்த; (* கூர்மமாக வந்த திருமால் ஈசனை வழிபட்ட தலம் திருக்கச்சூரில் உள்ள கச்சபேஸ்வரர் கோயில்);
மா மை திகழ் கண்டன் - அழகிய கறை திகழும் கண்டத்தை உடையவன் - நீலகண்டன்; (மா - அழகு); (மை - கருமை; கறை);
காமர் கச்சூரான் - அழகிய திருக்கச்சூரில் உறையும் ஈசன்; (காமர் - அழகு);
நாமம் நினை நெஞ்சே - அப்பெருமானுடைய திருநாமத்தை நெஞ்சே எண்ணுவாயாக;
2)
கூர்மம் அடிபோற்று
சீர்மன் னிறையெம்மான்
ஏர்மன் கச்சூரான்
நீர்மை நினைநெஞ்சே.
கூர்மம் அடி போற்று - ஆமை வழிபட்ட; (கூர்மம் - ஆமை);
சீர் மன்னு இறை எம்மான் - புகழ் பொருந்திய இறைவன், எம் தலைவன்; (மன்னுதல் - நிலைபெறுதல்; தங்குதல்; பொருந்துதல்);
ஏர் மன் கச்சூரான் - அழகு பொருந்திய திருக்கச்சூரில் உறையும் ஈசனுடைய; (ஏர் - அழகு);
நீர்மை நினை நெஞ்சே - தன்மையை எண்ணு மனமே; (நீர்மை - தன்மை); (அப்பர் தேவாரம் - 4.8.1 - "அவனது பெற்றி கண்டும் அவன்நீர்மை கண்டும் அகநேர்வர் தேவர் அவரே");
3)
நாறு கணையெய்தான்
நீறு படநோக்கி
சோறு தருகச்சூர்
கூறு மடநெஞ்சே.
நாறு கணை எய்தான் நீறுபட நோக்கி - வாசம் கமழும் மலரம்பை எய்த மன்மதனைச் சாம்பல் ஆகும்படி நோக்கியவன்; (நாறுதல் - மணம் வீசுதல்);
சோறு தரு கச்சூர் - வீடுபேறு அளிக்கும் திருக்கச்சூரை; (சோறு - அன்னம்; முக்தி); (சுந்தரருக்கு இரந்து உணவிட்டதைக் குறித்தது என்றும் பொருள்கொள்ளல் ஆம்); (அப்பர் தேவாரம் - 5.1.1 - "அன்னம் பாலிக்கும் தில்லைச் சிற்றம்பலம்");
கூறு மட நெஞ்சே - வாழ்த்து என் பேதை மனமே;
4)
வாசத் திருநீறு
பூசு மணிமார்பன்
தேசன் உறைகச்சூர்
பேச நினைநெஞ்சே.
வாசத் திருநீறு பூசு மணி மார்பன் - மணம் மிக்க திருநீற்றைப் பூசிய அழகிய மார்பை உடையவன்;
தேசன் - ஒளி உருவினன்;
உறை கச்சூர் பேச நினை நெஞ்சே - அப்பெருமான் உறையும் திருக்கச்சூரைப் புகழ்ந்து பேச நெஞ்சே எண்ணுவாயாக;
5)
கல்லே சிலையாகப்
பொல்லார் புரமெய்ய
வல்லான் கச்சூரைச்
சொல்லாய் மடநெஞ்சே.
கல்லே சிலையாகப் - மேருமலையையே வில்லாக ஏந்தி; (கல் - மலை); (சிலை - வில்);
பொல்லார் புரம் எய்ய வல்லான் - பொல்லாதவர்களான அசுரர்களது முப்புரங்களைக் கணை எய்து அழித்த சிவபெருமான்;
கச்சூரைச் சொல்லாய் மடநெஞ்சே - அப்பெருமான் உறையும் திருக்கச்சூரைப் புகழ் நெஞ்சே;
6)
ஆற்றுச் சடையீசன்
கூற்றை உதைபாதன்
ஏற்றன் கச்சூரைப்
போற்றிப் பணிநெஞ்சே.
ஆற்றுச் சடை ஈசன் - சடையில் கங்கையை உடைய ஈசன்;
கூற்றை உதை பாதன் - எமனை உதைத்த திருப்பாதன்;
ஏற்றன் கச்சூரைப் போற்றிப் பணி நெஞ்சே - இடபவாகனன் உறையும் திருக்கச்சூரைப் போற்றி வணங்கு மனமே;
7)
ஆனை உரிமூடி
கானை இடமாக்கொள்
கோனைக் கச்சூரெம்
மானைத் துதிநெஞ்சே.
ஆனை உரி மூடி - யானையின் தோலைப் போர்த்தவனை; (உரி - தோல்); (மூடி - மூடியவன் - பெயர்ச்சொல்);
கானை இடமாக்கொள் கோனைக் - சுடுகாட்டை இடமாக விரும்பிய தலைவனை;
கச்சூர் எம்மானைத் துதி நெஞ்சே - திருக்கச்சூரில் உறையும் எம் பெருமானை வணங்கு நெஞ்சே;
8)
தலைபத் துடையான்வாய்
அலற விரலூன்ற
வலவர் கச்சூரெம்
தலைவர் நினைநெஞ்சே.
தலை பத்து உடையான் வாய் அலற விரல் ஊன்ற வலவர் - பத்துத்தலைகள் உடைய இராவணனுடைய வாய்கள் அலறும்படி ஒரு விரலை ஊன்ற வல்லவர்; (வலவர் - வல்லவர் - இடைக்குறையாக வந்தது);
கச்சூர் எம் தலைவர் நினை நெஞ்சே - திருக்கச்சூரில் உறையும் எம் தலைவரை, நெஞ்சே, எண்ணுவாயாக;
9)
நேடி அயன்மாலார்
வாடித் தொழுசோதி
ஆடி கச்சூரைப்
பாடிப் பணிநெஞ்சே.
நேடி அயன் மாலார் வாடித் தொழு சோதி - பிரமனும் திருமாலும் தேடி வாடி வணங்கிய சோதி; (நேடுதல் - தேடுதல்);
ஆடி - கூத்தன்; (ஆடி - ஆடுபவன் - பெயர்ச்சொல்); (சம்பந்தர் தேவாரம் - 1.57.3 - "பூதம் பாடப் புறங்காட் டிடையாடி வேத வித்தகன்");
கச்சூரைப் பாடிப் பணி நெஞ்சே - அப்பெருமான் உறையும் திருக்கச்சூரைப் பாடி வணங்கு மனமே;
10)
கையர் சுவரொட்டும்
பொய்கள் மதியேன்மின்
உய்ம்மின் கச்சூரெம்
ஐயன் பணிசெய்தே.
கையர் சுவர் ஒட்டும் பொய்கள் மதியேன்மின் - கீழோர்கள் சுவர்களில் ஒட்டுகின்ற பொய்ப்பிரசாரத்தை நீங்கள் மதிக்கவேண்டா; (கையர் - வஞ்சகர்; கீழோர்);
உய்ம்மின் கச்சூர் எம் ஐயன் பணி செய்தே - திருக்கச்சூரில் உறையும் எம் தலைவனான சிவபெருமானுக்குத் தொண்டு செய்து உய்யுங்கள்;
11)
சேவார் கொடியீசன்
காவார் கச்சூரான்
நாவால் நவில்வார்கட்
கோவா தருள்வானே.
சே ஆர் கொடி ஈசன் - இடபச்சின்னம் பொறித்த கொடியை உடைய ஈசன்; (சே - எருது);
கா ஆர் கச்சூரான் - சோலை சூழ்ந்த திருக்கச்சூரில் உறையும் பெருமான்; (கா - சோலை);
நாவால் நவில்வார்கட்கு ஓவாது அருள்வானே - அவன் பெயரையும் புகழையும் நாவினால் சொல்லும் அடியவர்களுக்கு முடிவின்றி அருள்புரிவான்; (நவில்தல் - சொல்லுதல்); (ஓவுதல் - முடிதல்; நீங்குதல்); ("நாவால் ஓவாது நவில்வார்கட்கு அருள்வானே" - என்று இயைத்தும் பொருள்கொள்ளள் ஆம்);
பிற்குறிப்புகள் :
யாப்புக் குறிப்பு :
வஞ்சித்துறை - "தானா தனதானா" - சந்தம்; "மா மாங்காய்" என்ற வாய்பாடு.
தானா என்பது தான, தனன, என்றெல்லாம் வரலாம்
தனதானா என்பது தானானா என்று வரலாம்.
தேவாரத்தில் திருவிருக்குக்குறள் அமைப்பு.
சம்பந்தர் தேவாரம் - 1.93.1 - "நின்று மலர்தூவி".
வி. சுப்பிரமணியன்
----------- --------------
No comments:
Post a Comment