Thursday, February 22, 2024

07.31 – வான்மியூர் (திருவான்மியூர்) - மேகம் ஒத்தொளிர்

07.31 – வான்மியூர் - (திருவான்மியூர்)

2016-03-13

வான்மியூர் (திருவான்மியூர்)

---------------------------------

(கலிவிருத்தம் - திருக்குறுந்தொகை அமைப்பு)

(திருநாவுக்கரசர் தேவாரம் - 5.82.9 - "ஓட்டை மாடத்தில் ஒன்பது வாசலும்")


1)

மேகம் ஒத்தொளிர் நீல மிடற்றினாய்

ஆகத் தோர்புடை ஆயிழை காட்டினாய்

வாக னங்கள் மலிதிரு வான்மியூர்

நாகம் வீக்கிய நாத அருளாயே.


மேகம் ஒத்து ஒளிர் நீல மிடற்றினாய் - கருமேகம் போல விளங்குகின்ற நீலகண்டம் உடையவனே; (மிடறு - கண்டம்);

ஆகத்து ஓர் புடை ஆயிழை காட்டினாய் - திருமேனியில் ஒரு பக்கத்தில் உமாதேவியை காட்டியவனே; (ஆகம் - உடல்); (காட்டினாய் - காட்டியவனே என்ற விளி);

வாகனங்கள் மலி திருவான்மியூர் - வாகன நெரிசல் மிக்க திருவான்மியூரில் உறைகின்ற;

நாகம் வீக்கிய நாத அருளாயே - அரையில் பாம்பைக் கட்டிய நாதனே! அருள்வாயாக! (வீக்குதல் - கட்டுதல்);


2)

பண்டு பாற்கடல் நஞ்சைப் பழமென

உண்ட கண்ட உமையொரு பங்கனே

வண்டி கள்மலி வான்மி நகருறை

அண்ட னேஅடி யேனுக் கருளாயே.


பண்டு பாற்கடல் நஞ்சைப் பழம் என உண்ட கண்ட - முற்காலத்தில் பாற்கடலில் தோன்றிய விஷத்தை நாவற்பழம் போல உண்ட நீலகண்டனே; (பண்டு - முற்காலம்); (என - உவம உருபு); (கண்ட - கண்டனே என்ற விளி);

உமை ஒரு பங்க - உமாதேவியை ஒரு பங்கில் உடையவனே;

வண்டிகள் மலி வான்மிநகர் உறை அண்டனே - வாகன நெரிசல் மிக்க திருவான்மியூரில் உறைகின்ற அண்ட நாயகனே; (அண்டன் - கடவுள் - God, as Lord of the universe);

அடியேனுக்கு அருளாயே - எனக்கு அருள்வாயாக!


3)

தண்ணி லாமதி தாழ்சடைத் தாங்கினாய்

பண்ணின் ஆர்தமிழ் பாடித் தினந்தொறும்

மண்ணி னார்பணி வான்மி நகருறை

அண்ண லேஅடி யேனுக் கருளாயே.


தண் நிலா மதி தாழ்சடைத் தாங்கினாய் - குளிர்ந்த கிரணங்களை உடைய திங்களைத் தாழும் சடையில் தாங்கியவனே; (தண் - குளிர்ச்சி); (நிலா - சந்திரனின் கிரணம்; சந்திரிகை - Moonlight);

பண்ணின் ஆர் தமிழ் பாடித் தினந்தொறும் மண்ணினார் பணி - பண் பொருந்திய தேவாரம் முதலிய பாட்டுகள் பாடி நாள்தோறும் உலக மக்கள் வழிபடுகின்ற;

வான்மிநகர் உறை அண்ணலே - திருவான்மியூரில் உறைகின்ற பெருமானே; (அண்ணல் - தலைவன்; பெருமையிற் சிறந்தோன்);

அடியேனுக்கு அருளாயே - எனக்கு அருள்வாயாக!


4)

வேடங் கள்பல ஏற்ற விகிர்தனே

வாடல் வெண்டலை ஏந்திய வள்ளலே

மாட மாளிகை சூழ்திரு வான்மியை

நாடி னாய்அடி யேனுக் கருளாயே.


வேடங்கள் பல ஏற்ற விகிர்தனே - பல உருவங்கள் ஏற்றவனே, விகிர்தனே; (வேடம் - வேஷம்); (விகிர்தன் - மாறுபட்ட செயலினன்; சுயம்பு என்றும் பொருள்கொள்ளல் ஆம்);

வாடல் வெண் தலை ஏந்திய வள்ளலே - பிச்சை எடுப்பதற்காகக் கையில் ஒரு வாடிய வெள்ளை மண்டையோட்டை ஏந்திய வள்ளலே;

மாட மாளிகை சூழ் திருவான்மியை நாடினாய் - உயர்ந்த பெரிய கட்டிடங்கள் சூழ்ந்த திருவான்மியூரை இடமாக விரும்பியவனே;

அடியேனுக்கு அருளாயே - எனக்கு அருள்வாயாக!


5)

அக்கின் ஆரம் அணிந்த அடிகளே

தக்கன் வேள்வி தகர்த்த சதுரனே

மிக்கொ லித்திடு வீதிசூழ் வான்மியூர்

அக்க ராஅடி யேனுக் கருளாயே.


அக்கின் ஆரம் அணிந்த அடிகளே - எலும்பு மாலையை அணிந்த கடவுளே; (அக்கு - எலும்பு); (ஆரம் - மாலை);

தக்கன் வேள்வி தகர்த்த சதுரனே - தக்கன் செய்த வேள்விய அழித்த வல்லவனே; (சதுரன் - சமர்த்தன்);

மிக்கு ஒலித்திடு வீதி சூழ் வான்மியூர் அக்கரா - ஒலி மிக்க வீதிகள் சூழ்ந்த திருவான்மியூரில் உறைகின்ற அழிவற்றவனே; (அக்கரன் - அக்ஷரன் - அழிவு இல்லாதவன்);

அடியேனுக்கு அருளாயே - எனக்கு அருள்வாயாக!


6)

நாரி பங்கமர் நம்ப சுரர்தொழக்

காரி லங்கிய கண்ட கல(ம்)மலி

வாரி சூழ்திரு வான்மி நகருறை

ஆரி யாஅடி யேனுக் கருளாயே.


நாரி பங்கு அமர் நம்ப - உமையை ஒரு பங்காக விரும்பும் நம்பனே; (நாரி - பெண்); (அமர்தல் - விரும்புதல்); (நம்பன் - விரும்பத்தக்கவன் - சிவபெருமான்);

சுரர் தொழக் கார் இலங்கிய கண்ட - தேவர்கள் போற்றக் கருமை விளங்கும் கண்டம் உடையவனே; (சுரர் - தேவர்); (கார் - கருமை); (இலங்குதல் - விளங்குதல்);

கலம் மலி வாரி சூழ் திருவான்மிநகர் உறை ஆரியா - படகுகள் நிறைந்த கடல் சூழ்ந்த திருவான்மியூரில் உறைகின்ற பெரியோனே; (கலம் - மரக்கலம்; படகு); (வாரி - கடல்); (ஆரியன் - பெரியோன்; குரு); (கலம் + மலி = கலமலி - புணர்ச்சியில் மகர ஒற்றுக் கெடும்);

அடியேனுக்கு அருளாயே - எனக்கு அருள்வாயாக!


7)

செய்ய னேபலி தேர்ந்துழல் செல்வனே

வெய்ய நஞ்சை விரும்பு மிடற்றினில்

மைய னேகலி ஆர்திரு வான்மியூர்

ஐய னேஅடி யேனுக் கருளாயே.


செய்யனே - செம்மேனி உடையவனே; (செய் - சிவப்பு);

பலி தேர்ந்து உழல் செல்வனே - ஐயம் ஏற்றுத் திரியும் செல்வனே;

வெய்ய நஞ்சை விரும்பு மிடற்றினில் மையனே - கொடிய விஷத்தை விரும்பிய கண்டத்தில் கருமை உடையவனே; (வெய்ய - கொடிய); (மை - கருமை);

கலி ஆர் திருவான்மியூர் ஐயனே - ஒலி மிகுந்த திருவான்மியூரில் உறைகின்ற தலைவனே; (கலி - ஒலி); (ஆர்தல் - மிகுதல்; நிறைதல்; பொருந்துதல்); (ஐயன் - தலைவன்);

அடியேனுக்கு அருளாயே - எனக்கு அருள்வாயாக!


8)

மதியி லாத இராவணன் வாய்களால்

துதிசெ யும்படி தூவிரல் ஊன்றினாய்

மதிலி லங்கிய வான்மி நகர்தனில்

அதிப னேஅடி யேனுக் கருளாயே.


மதி இலாத இராவணன் வாய்களால் துதிசெயும்படி தூ விரல் ஊன்றினாய் - அறிவற்ற இராவணன் (கயிலைக்கீழ் நசுக்குண்டு) பத்து வாய்களாலும் உன்னைத் துதிக்கும்படி தூய பாதத்து ஒரு விரலை ஊன்றியவனே;

மதில் இலங்கிய வான்மிநகர்தனில் அதிபனே - மதில்கள் சூழ்ந்த திருவான்மியூரில் உறைகின்ற தலைவனே; (அதிபன் - தலைவன்);

அடியேனுக்கு அருளாயே - எனக்கு அருள்வாயாக!


9)

செங்கண் மாலொடு செம்மலர் மேலயன்

எங்கள் நாத எனவுயர் சோதியே

வங்கம் ஆர்கடல் சூழ்திரு வான்மியூர்

அங்க ணாஅடி யேனுக் கருளாயே.


செங்கண் மாலொடு செம்மலர் மேல் அயன் - சிவந்த கண்களை உடைய திருமாலும் தாமரைமலர்மேல் உறையும் பிரமனும்;

"எங்கள் நாத" என உயர் சோதியே - "எங்கள் நாதனே" என்று துதித்துப் போற்றுமாறு உயர்ந்த சோதியாகிய பெருமானே;

வங்கம் ஆர் கடல் சூழ் திருவான்மியூர் அங்கணா - படகுகள் (/அலைகள்) நிறைந்த கடல் சூழ்ந்த திருவான்மியூரில் உறைகின்ற அருட்கண்ணனே; (வங்கம் - மரக்கலம்; படகு; அலை); (அங்கணன் - அருள்நோக்கு உடையவன் - சிவன்- Šiva, as gracious-eyed);

அடியேனுக்கு அருளாயே - எனக்கு அருள்வாயாக!


10)

நிந்தை பேசியும் காசினை நீட்டியும்

மந்தை தன்னை வளர்ப்பவர் பொய்விடும்

வந்திக் கின்ற அடியரை வான்மியூர்

எந்தை ஏருடை வானுல கேற்றுமே.


நிந்தை பேசியும் காசினை நீட்டியும் மந்தை தன்னை வளர்ப்பவர் பொய் விடும் - வேதநெறியைப் பழித்துப் பேசியும், காசு வேலை முதலியவற்றைக் கொடுத்தும், தங்கள் கூட்டத்தைச் சேர்ப்பவர்கள் சொல்லும் பொய்ச்சொற்களை நீங்குங்கள்;

வந்திக்கின்ற அடியரை வான்மியூர் எந்தை ஏர் உடை வானுலகு ஏற்றுமே - தன்னை வணங்கும் அடியவர்களைத், திருவான்மியூரில் உறைகின்ற எம் தந்தை, நன்மைமிக்க சிவலோகத்திற்கு உயர்த்துவான்; (ஏர் - அழகு; நன்மை); (ஏற்றும் - உயர்த்துவான் - செய்யும் என்ற வாய்பாட்டு வினைமுற்று);

11)

பழுதி லாமறை பாடிப் பதமலர்

தொழுத மாணி துயர்கெடக் கூற்றுதை

மழுவ னைத்திரு வான்மி நகருறை

அழக னைப்பணி அன்பருக் கின்பமே.


பழுது இலா மறை பாடிப் - குற்றமற்ற வேதத்தைப் பாடி;

பதமலர் தொழுத மாணி துயர் கெடக் கூற்று உதை மழுவனைத் - மலர் போன்ற திருவடிகளை வழிபட்ட மார்க்கண்டேயரின் துயரம் நீங்கும்படி எமனை உதைத்தவனும், மழுவாளை ஏந்தியவனுமான ஈசனைத்;

திருவான்மி நகர் உறை அழகனைப் பணி அன்பருக்கு இன்பமே - திருவான்மியூரில் உறைகின்ற அழகனான சிவபெருமானைப் பணிகின்ற பக்தர்களுக்கு என்றும் இன்பமே.


பிற்குறிப்பு:

இலக்கணக் குறிப்பு: செய்யும் என்ற வாய்பாட்டு வினைமுற்று - இது பலர்பால் படர்க்கை, முன்னிலை, தன்மை ஆகியவற்றில் வாராது. ஆண்பால், பெண்பால், ஒன்றன்பால், பலவின்பால் என்னும் படர்க்கைப் பெயர்களோடு மட்டுமே பொருந்தி வரும்.

(.டு) அவன் உண்ணும், அவள் உண்ணும், அது உண்ணும், அவை உண்ணும்.


வி. சுப்பிரமணியன்

-------------------


No comments:

Post a Comment