Thursday, February 22, 2024

07.32 – கச்சி மேற்றளி - பரிவொடு பத்தருக்கா

07.32 – கச்சி மேற்றளி

2016-03-15

கச்சி மேற்றளி

---------------------------------

(அறுசீர் விருத்தம் - "விளம் மா தேமா" என்ற அரையடி வாய்பாடு)

(திருநேரிசை அமைப்பு) (திருநாவுக்கரசர் தேவாரம் - 4.43.1 - "மறையது பாடி")


1)

பரிவொடு பத்த ருக்காப் .. பாண்டிநன் னாடு தன்னில்

நரிகளைப் பரிகள் ஆக்கி .. நாடகம் ஆட வல்லான்

சுரிகுழல் மங்கை பங்கன் .. தூமதி துலங்கு கின்ற

விரிசடை அண்ணல் கச்சி .. மேற்றளி மேவி னானே.


பரிவொடு பத்தருக்காப் பாண்டி நன்னாடு தன்னில் - பக்தருக்கு இரங்கிப் பாண்டிநாட்டினில்; (பத்தருக்கா - பத்தருக்காக); (குறிப்பு: "பத்தருக்கா" என்பதுபோல் வரும் இடத்தில் வல்லொற்று மிகும். உதாரணம் - சுந்தரர் தேவாரம் - 7.82.2 - "புரம் எரியச்சிலை வளைத்தான்இமை யவர்க்காத் திண்டேர்மிசை நின்றான்");

நரிகளைப் பரிகள் ஆக்கி நாடகம் ஆட வல்லான் - நரிகளைக் குதிரைகள் ஆக்கித் திருவிளையாடல் செய்தவன்;

சுரிகுழல் மங்கை பங்கன் - சுருண்ட கூந்தலை உடைய உமையை ஒரு பங்கில் உடையவன்; (சுரிதல் - சுருள்தல்; குழல்தல்);

தூ மதி துலங்குகின்ற விரிசடை அண்ணல் - தூய திங்கள் விளங்குகின்ற, விரிந்த சடையை உடைய கடவுள்; (துலங்குதல் - பிரகாசித்தல்);

கச்சி மேற்றளி மேவினானே - அப்பெருமான் காஞ்சிபுரத்தில் மேற்றளி என்ற கோயிலில் உறைகின்றான்;


2)

சீலநன் முனிவர் நால்வர் .. திருவடிக் கீழி ருக்க

ஆலதன் நீழல் தன்னில் .. அருமறை விரித்த ஐயன்

சூலமும் மழுவும் ஏந்தி .. சூரனைச் சமரில் வென்ற

வேலனுக் கத்தன் கச்சி .. மேற்றளி மேவி னானே.


சீல நன் முனிவர் நால்வர் திருவடிக்கீழ் இருக்க - சீலம் மிக்க நல்ல முனிவர்களான சனகாதியர் நால்வரும் திருவடியின்கீழ் அமர்ந்திருக்க;

ஆல்அதன் நீழல் நாடி, அருமறை விரித்த ஐயன் - கல்லால மரத்தடியில் அரிய வேதப்பொருளை விளக்கிய குரு;

சூலமும் மழுவும் ஏந்தி - திரிசூலத்தையும் மழுவாயுதத்தையும் ஏந்தியவன்; (ஏந்தி - ஏந்தியவன் என்ற பெயர்ச்சொல்);

சூரனைச் சமரில் வென்ற வேலனுக்கு அத்தன் - சூரபதுமனைப் போரில் வென்ற வடிவேலனுக்குத் தந்தை;

கச்சி மேற்றளி மேவினானே - அப்பெருமான் காஞ்சிபுரத்தில் மேற்றளி என்ற கோயிலில் உறைகின்றான்;


3)

பாரொடு விண்ணும் போற்றிப் .. பதமலர் ஏத்த நின்றான்

பேருரு ஒன்றும் இல்லான் .. பெண்ணொரு பங்கும் ஆனான்

ஊரொரு மூன்றெ ரிக்க .. ஒள்ளழற் கணைதொ டுக்க

மேருவில் ஏந்தி கச்சி .. மேற்றளி மேவி னானே.


பாரொடு விண்ணும் போற்றிப் பதமலர் ஏத்த நின்றான் - மண்ணுலகோரும் தேவர்களும் தன் திருவடியைப் போற்றி வணங்கும்படி நின்றவன்;

பேர், உரு ஒன்றும் இல்லான் - தனக்கென்று ஒரு பெயரோ உருவமோ இல்லாதவன்;

பெண் ஒரு பங்கும் ஆனான் - உமாதேவியை ஒரு பங்கில் உடையவன்;

ஊர் ஒரு மூன்று எரிக்க, ஒள் அழல் கணை தொடுக்க, மேரு வில் ஏந்தி - முப்புரங்களை எரிப்பதற்காக, ஒளியுடைய தீப் பொருந்திய அம்பினைத் தொடுப்பதற்காக, மேருமலையை வில்லாக ஏந்தியவன்; (ஏந்தி - ஏந்தியவன் என்ற பெயர்ச்சொல்);

கச்சி மேற்றளி மேவினானே - அப்பெருமான் காஞ்சிபுரத்தில் மேற்றளி என்ற கோயிலில் உறைகின்றான்;


4)

தண்மதி சடையில் தாங்கும் .. தலைமகன் தன்னைப் போற்றிப்

பண்மலி தமிழைப் பாடும் .. பத்தர்தம் வினைகள் தீர்ப்பான்

பெண்மயில் அன்ன மாதைப் .. பிரிகிலன் கூர்மை மிக்க

வெண்மழு வாளன் கச்சி .. மேற்றளி மேவி னானே.


தண்-மதி சடையில் தாங்கும் தலைமகன்-தன்னைப் போற்றிப் - குளிர்ந்த சந்திரனைச் சடையில் தாங்கும் தலைவனைப் போற்றி; (தலைமகன் - தலைவன்);

பண் மலி தமிழைப் பாடும் பத்தர்தம் வினைகள் தீர்ப்பான் - இசை பொருந்திய தேவாரம் முதலியவற்றைப் பாடும் பக்தர்களுடைய வினைகளைத் தீர்ப்பவன்; (தீர்ப்பான் - தீர்ப்பவன் என்ற பெயர்ச்சொல்);

பெண்மயில் அன்ன மாதைப் பிரிகிலன் - பெண்மயில் போன்ற சாயல் உடைய உமாதேவியை என்றும் பிரியாதவன்; (பிரிகிலன் - பிரியமாட்டான்);

கூர்மை மிக்க வெண் மழுவாளன் - கூர்மை மிகுந்த, ஒளி வீசும் மழுவை ஏந்தியவன்;

கச்சி மேற்றளி மேவினானே - அப்பெருமான் காஞ்சிபுரத்தில் மேற்றளி என்ற கோயிலில் உறைகின்றான்;


5)

மண்டிய அன்பி னாலே .. மலரடி வாழ்த்து கின்ற

தொண்டரின் மனத்தை நீங்காத் .. தூயவன் புலியின் தோலன்

வண்டமர் குழலி மார்கள் .. மனைதொறும் சென்றி ரக்கும்

வெண்டலை ஏந்தி கச்சி .. மேற்றளி மேவி னானே.


மண்டிய அன்பினாலே மலரடி வாழ்த்துகின்ற - மிகுந்த அன்பால் மலர் போன்ற திருவடிகளைப் போற்றுகின்ற;

தொண்டரின் மனத்தை நீங்காத் தூயவன் - அடியவர்களின் மனத்தில் என்று நீங்காமல் உறைகின்ற நின்மலன்;

புலியின் தோலன் - புலித்தோலை அரையில் அணிந்தவன்;

வண்டு அமர் குழலிமார்கள் மனைதொறும் சென்று இரக்கும் வெண் தலை ஏந்தி - வண்டுகள் விரும்பும் கூந்தலை உடைய பெண்களின் வீடுதோறும் சென்று யாசிக்க வெள்ளை மண்டையோட்டைக் கையில் ஏந்தியவன்; (ஏந்தி - ஏந்தியவன் என்ற பெயர்ச்சொல்);

கச்சி மேற்றளி மேவினானே - அப்பெருமான் காஞ்சிபுரத்தில் மேற்றளி என்ற கோயிலில் உறைகின்றான்;


6)

தடமெனக் கங்கை தங்கு .. சடையினன் இமவான் பெற்ற

மடமயில் தன்னை வாமம் .. மகிழ்ந்தவன் ஈமக் காட்டில்

நடமிடு நாதன் தேவர் .. நாடிய அமுதை உண்ண

விடமணி கண்டன் கச்சி .. மேற்றளி மேவி னானே.


தடம் எனக் கங்கை தங்கு சடையினன் - குளம் போல் கங்கை தங்குகின்ற சடையை உடையவன்; (தடம் - நீர்நிலை);

இமவான் பெற்ற மட-மயில் தன்னை வாமம் மகிழ்ந்தவன் - இமவான் மகளான, அழகிய மயில் போன்ற சாயல் உடைய உமையை இடப்பக்கம் பங்காக விரும்பியவன்; (மடமயில் - அழகிய பெண் - Woman, beautiful like a peafowl);

ஈமக்காட்டில் நடமிடு நாதன் - சுடுகாட்டில் திருநடம் செய்யும் தலைவன்; (ஈமக்காடு - சுடுகாடு);

தேவர் நாடிய அமுதை உண்ண, விடம் அணி கண்டன் - தேவர்களெல்லாம் அவர்கள் விரும்பிய அமுதினை உண்ண, ஆலகால விடத்தை உண்டு அதனைக் கண்டத்தில் அணிந்தவன்;

கச்சி மேற்றளி மேவினானே - அப்பெருமான் காஞ்சிபுரத்தில் மேற்றளி என்ற கோயிலில் உறைகின்றான்;


7)

ஆதியன் ஆல நீழல் .. அமர்ந்தவன் என்றும் மாறா

நீதியன் நெற்றிக் கண்ணன் .. நீள்நய னத்து மாதோர்

பாதியன் மார்க்கண் டேயர் .. பாலடை நமனைச் செற்ற

வேதியன் கவினார் கச்சி .. மேற்றளி மேவி னானே.


ஆதியன் - முதற்பொருள் ஆனவன்; (சுந்தரர் தேவாரம் - 7.97.1 - "ஆதியன் ஆதிரையன் ");

ஆலநீழல் அமர்ந்தவன் - கல்லாலின்கீழ் விரும்பி வீற்றிருக்கும் தட்சிணாமூர்த்தி; (அமர்தல் - விரும்புதல்; இருத்தல்);

என்றும் மாறா நீதியன் - என்றும் மாறாத மெய்ப்பொருள் ஆனவன், நீதி வடிவாக விளங்குபவன்;

நெற்றிக் கண்ணன் - முக்கண்ணன்;

நீள் நயனத்து மாது ஓர் பாதியன் - நீண்ட கண்களை உடைய உமையை ஒரு பாதியாக உடையவன்;

மார்க்கண்டேயர்பால் அடை நமனைச் செற்ற வேதியன் - மார்க்கண்டேயரிடம் நெருங்கிய காலனை உதைத்து அழித்த கடவுள்; (செறுதல் - அழித்தல்); (வேதியன் - வேதங்களைப் பாடியவன்; வேதப்பொருள் ஆனவன்; வேதித்தல் செய்பவன்);

கவின் ஆர் கச்சி மேற்றளி மேவினானே - அப்பெருமான் அழகிய காஞ்சிபுரத்தில் மேற்றளி என்ற கோயிலில் உறைகின்றான்;


8)

எண்ணுதல் இன்றி வெற்பை .. இடந்தவன் முடிகள் பத்தும்

திண்ணிய தோள்நா லஞ்சும் .. திருவிரல் இட்ட டர்த்தான்

பண்ணொடு பாடி னார்க்குப் .. பரிந்தருள் கின்ற பண்பன்

விண்ணவர் நாதன் கச்சி .. மேற்றளி மேவி னானே.


எண்ணுதல் இன்றி வெற்பை இடந்தவன் முடிகள் பத்தும் - சிறிதும் யோசியாமல் கயிலைமலையைப் பெயர்த்தவனான இராவணனது பத்துத் தலைகளையும்;

திண்ணிய தோள் நாலஞ்சும் திருவிரல் இட்டு அடர்த்தான் - வலிய இருபது புஜங்களையும் திருப்பாத விரலை ஊன்றி நசுக்கியவன்; (திண்ணிய - வலிய); (அடர்த்தல் - நசுக்குதல்);

பண்ணொடு பாடினார்க்குப் பரிந்து அருள்கின்ற பண்பன் - இசையோடு கீதம் பாடி வழிபடும் பக்தர்களுக்கு இரங்கி அருளும் குணம் உடையவன்;

விண்ணவர் நாதன் - தேவர்கள் தலைவன்;

கச்சி மேற்றளி மேவினானே - அப்பெருமான் காஞ்சிபுரத்தில் மேற்றளி என்ற கோயிலில் உறைகின்றான்;


9)

புள்ளமர் திருமா லோடு .. பூவுறை அயனும் நேட

ஒள்ளிய தழல தாகி .. ஓங்கிய தேவ தேவன்

உள்ளிய அன்பர்க் கென்றும் .. உறுதுணை ஆனான் மார்பில்

வெள்ளிய நீற்றன் கச்சி .. மேற்றளி மேவி னானே.


புள் அமர் திருமாலோடு பூ உறை அயனும் நேட - கருட வாகனம் உடைய விஷ்ணுவும் தாமரைப்பூவின்மேல் உறையும் பிரமனும் தேடும்படி; (புள் - பறவை); (அயன் - பிரமன்); (நேடுதல் - தேடுதல்);

ஒள்ளிய தழல்அது ஆகி ஓங்கிய தேவதேவன் - ஒளி வீசும் சோதியாகி உயர்ந்த மகாதேவன்; (ஒண்மை - விளக்கம்);

உள்ளிய அன்பர்க்கு என்றும் உறுதுணை ஆனான் - தியானிக்கும் பக்தர்களுக்கு என்றும் உற்ற துணைவன்; (உள்ளுதல் - நினைதல்; எண்ணுதல்; நன்கு மதித்தல்);

மார்பில் வெள்ளிய நீற்றன் - மார்பில் வெண் திருநீற்றைப் பூசியவன்;

கச்சி மேற்றளி மேவினானே - அப்பெருமான் காஞ்சிபுரத்தில் மேற்றளி என்ற கோயிலில் உறைகின்றான்;


10)

அஞ்சுதல் இன்றிப் பொய்யை .. அனுதினம் உரைக்கும் ஈனர்

தஞ்சிறு நெறிகள் நீங்கும் .. சாகர நஞ்சை உண்டு

மஞ்செனத் திகழும் கண்டன் .. மலரடி மறவார்க் கன்பன்

வெஞ்சின விடையன் கச்சி .. மேற்றளி மேவி னானே.


அஞ்சுதல் இன்றிப் பொய்யை அனுதினம் உரைக்கும் ஈனர்தம் சிறு-நெறிகள் நீங்கும் - சிறிதும் கூசாமல், அச்சம் இல்லாமல், தினந்தோறும் பொய்களைப் பேசுகின்ற கீழோர்கள் சொல்லும் அவர்களுடைய புன்னெறிகளைச் சேராமல் நீங்குங்கள்; (உம் - ஏவல் பன்மை விகுதி);

சாகர நஞ்சை உண்டு மஞ்சு எனத் திகழும் கண்டன் - கடலில் தோன்றிய விஷத்தை உண்டு மேகம் போலத் திகழ்கின்ற கண்டத்தை உடையவன்; (சாகரம் - கடல்); (மஞ்சு - மேகம்);

மலரடி மறவார்க்கு அன்பன் - தாமரைத்திருவடியை என்றும் எண்ணி வழிபடும் அன்பருக்கு அன்பன்;

வெஞ்சின விடையன் - கொடிய சினம் உடைய எருதினை ஊர்தியாக உடையவன்;

கச்சி மேற்றளி மேவினானே - அப்பெருமான் காஞ்சிபுரத்தில் மேற்றளி என்ற கோயிலில் உறைகின்றான்;


11)

ஆண்டியாய்ப் பழநி நின்ற .. அழகிய மைந்தற் கத்தன்

மாண்டவர் எலும்பைப் பூணும் .. மாண்பினன் எங்கும் ஆகித்

தாண்டினான் அண்ட மெல்லாம் .. தண்டமிழ் பாடிப் போற்றி

வேண்டினார்க் கருளக் கச்சி .. மேற்றளி மேவி னானே.


ஆண்டியாய்ப் பழநி நின்ற அழகிய மைந்தற்கு அத்தன் - கோவண ஆண்டி ஆகிப் பழநிமலைமேல் நின்ற (பழனியாண்டியான) அழகிய மகனான முருகனுக்குத் தந்தை; (மைந்தன் - மகன்);

மாண்டவர் எலும்பைப் பூணும் மாண்பினன் - (ஊழிக் காலத்தில் எல்லாம் அழிந்த பிறகும் தான் இருப்பதன் அடையாளமாக) இறந்தவர்களுடைய எலும்பை அணியும் பெருமை உடையவன் - கங்காளன்;

எங்கும் ஆகித், தாண்டினான் அண்டம் எல்லாம் - எங்கும் இருப்பவன், அண்டங்களை எல்லாம் கடந்தவன்;

தண்-தமிழ் பாடிப் போற்றி வேண்டினார்க்கு அருளக் கச்சி மேற்றளி மேவினானே - குளிர்ந்த தமிழான தேவாரம் திருவாசகம் முதலியவற்றைப் பாடிப் போற்றி வழிபடும் பக்தர்களுக்கு அருள்புரிவதற்கு அப்பெருமான் காஞ்சிபுரத்தில் மேற்றளி என்ற கோயிலில் உறைகின்றான்;


வி. சுப்பிரமணியன்

-------------- --------------


No comments:

Post a Comment