Saturday, June 29, 2019

04.70 – அன்னியூர் - (பொன்னூர்)


04.70 – அன்னியூர் - (பொன்னூர்)



2014-06-22
அன்னியூர் (இக்காலத்தில் 'பொன்னூர்'. மயிலாடுதுறை அருகே உள்ளது)
---------------------------------------------------------------
(அறுசீர் விருத்தம் - 'தான தான தானனா' என்ற சந்தம் உள்ள அரையடி அமைப்பு ;
தான என்பது தனன என்றும் ஒரோவழி வரலாம்)
(சம்பந்தர் தேவாரம் - 3.53.1 - "வானைக் காவல் வெண்மதி மல்கு புல்கு வார்சடை");
(சம்பந்தர் தேவாரம் - 2.99.1 - "இன்று நன்று நாளைநன் றென்று நின்ற விச்சையால்");



1)
ஏற மர்ந்த எம்மிறை .. ஏல ஓதி மாதுமை
கூற மர்ந்த அன்பினான் .. கூர்ம ழுப்ப டைக்கரன்
நீற ணிந்த மேனியான் .. நெற்றி மேலொர் கண்ணினான்
ஆற ணிந்த சென்னியான் .. அன்னி யூரில் அண்ணலே.



ஏறு அமர்ந்த எம் இறை - இடபவாகனன் எம் இறைவன்; (அமர்தல் - விரும்புதல்; இருத்தல்);
ஏல ஓதி மாதுமை கூறு அமர்ந்த அன்பினான் - வாசக் குழலினளான உமையம்மையை ஒரு பாகமாக உடைய அன்பன்; (ஏலம் - மயிர்ச்சாந்து); (ஓதி - கூந்தல்);
கூர் மழுப்படைக் கரன் - கூரிய மழுவாயுதத்தைக் கையில் ஏந்தியவன்;
நீறு அணிந்த மேனியான் - திருமேனியில் திருநீற்றைப் பூசியவன்;
நெற்றிமேல் ஒர் கண்ணினான் - னெற்றிக்கண்ணன்; (ஓர் - ஓர் என்பதன் குறுக்கல் விகாரம்);
ஆறு அணிந்த சென்னியான் - கங்காதரன்;
அன்னியூரில் அண்ணலே - அன்னியூரில் உறைகின்ற பெருமான்; (அண்ணல் - பெருமையிற் சிறந்தவன்; கடவுள்);



2)
இரவில் மாந டஞ்செயும் .. இன்பன் அன்பர் ஏத்திடும்
கரவி லாத கையினான் .. கைகள் கூப்பி வானவர்
பரவ நின்ற பண்பினான் .. பால்ம திக்குப் பக்கமோர்
அரவ ணிந்த சென்னியான் .. அன்னி யூரில் அண்ணலே.



இரவில் மா நடம் செயும் இன்பன் - நள்ளிரவில் பெரும் திருக்கூத்து ஆடுகின்றவன், இன்பவடிவினன்;
அன்பர் ஏத்திடும் கரவு இலாத கையினான் - பக்தர்கள் போற்றுகின்ற வள்ளல்; (கரவு இலாத கையினான் - வஞ்சம் இன்றிக் கொடுப்பவன்);
கைகள் கூப்பி வானவர் பரவ நின்ற பண்பினான் - தேவர்கள் கைகூப்பிப் போற்றுகின்ற ஈசன்;
பால்மதிக்குப் பக்கம் ஓர் அரவு அணிந்த சென்னியான் - பால் போன்ற வெண்திங்களுக்கு அருகே ஒரு பாம்பைத் தலைமேல் அணிந்தவன்;
அன்னியூரில் அண்ணலே - அன்னியூரில் உறைகின்ற பெருமான்;



3)
மும்ம லங்கள் அற்றவன் .. மூப்பி றப்பி லாதவன்
அம்ம லர்ச்ச ரத்தனை .. அட்ட நெற்றி நேத்திரன்
நம்மை ஈன்ற தாயவன் .. நாடி னார்க்கு நல்லவன்
அம்மை பாகம் ஆயினான் .. அன்னி யூரில் அண்ணலே.



மும்மலங்கள் அற்றவன் - தூயவன்;
மூப்பு இறப்பு இலாதவன் - முதுமையும் மரணமும் இல்லாதவன்;
அம் மலர்ச் சரத்தனை அட்ட நெற்றி நேத்திரன் - அழகிய மலரை அம்பாக உடைய மன்மதனை எரித்த நெற்றிக்கண்ணன்; (அப்பர் தேவாரம் - 4.84.10 - “... கைம்மா வரிசிலைக் காமனை அட்ட கடவுள்முக்கண் எம்மான் ...”);
நம்மை ஈன்ற தாய் அவன் - நம்மைப் பெற்ற தாய் அவன்;
நாடினார்க்கு நல்லவன் - சரணடைந்தவர்களுக்கு நன்மை செய்பவன்;
அம்மை பாகம் ஆயினான் .- உமையொரு பங்கன்;
அன்னியூரில் அண்ணலே - அன்னியூரில் உறைகின்ற பெருமான்;



4)
மினலங் காட்டும் நுண்ணிடை .. வெற்பன் பாவை பங்கினான்
கனலங் கொக்கும் வார்சடை .. காட்டு கின்ற சென்னிமேல்
புனலம் போது போழ்மதி .. புற்ற ராப்பு னைந்தவன்
அனலங் கையில் ஏந்தினான் .. அன்னி யூரில் அண்ணலே.



மின் நலம் காட்டும் நுண்ணிடை வெற்பன் பாவை பங்கினான் - மின்னல் போன்ற நுண்ணிடை உடையவளும் மலையான் மகளுமான உமையம்மையை ஒரு பங்காக உடையவன் ; (மினலம் - மின் + நலம்); (மின் - மின்னல்); (நலம் - அழகு; குணம்);
(இலக்கணக் குறிப்பு : மின்+நலம் = மின்னலம். மினலம் என்றது தொகுத்தல் விகாரம்);
கனல் அங்கு ஒக்கும் வார்சடை காட்டுகின்ற சென்னிமேல் - தீப்போன்ற நீள்சடை திகழும் திருமுடிமேல்; (அங்கு - அசைச்சொல்);
புனல் அம் போது போழ்மதி புற்று அராப் புனைந்தவன் - கங்கை, அழகிய மலர், பிளவுபட்ட சந்திரன், புற்றில் வாழும் தன்மையையுடைய பாம்பு ஆகியவற்றை அணிந்தவன்;
அனல் அங்கையில் ஏந்தினான் - கையில் தீயை ஏந்தியவன்; (அனலங் கையில் = அனலம் + கையில் / அனல் + அங்கையில்); (அனலம் / அனல் - நெருப்பு); (அங்கை - உள்ளங்கை; அம் கை - அழகிய கை);
அன்னியூரில் அண்ணலே - அன்னியூரில் உறைகின்ற பெருமான்;



5)
பொங்கு நஞ்சு கண்டுவான் .. போற்ற உண்டு கார்மணி
தங்கு மாமி டற்றினான் .. தக்கன் வேள்வி சாடினான்
எங்கும் நாகம் பூண்டவன் .. ஏழை பங்கன் நான்மறை
அங்கம் ஆறும் ஓதினான் .. அன்னி யூரில் அண்ணலே.



பொங்கு நஞ்சு கண்டு வான் போற்ற உண்டு கார்மணி தங்கு மா மிடற்றினான் - பொங்கிய ஆலகால விடத்தைக் கண்டு அஞ்சித் தேவர்கள் இறைஞ்ச அவ்விடத்தை உண்டு நீலமணி திகழும் அழ்கிய கண்டத்தை உடையவன்; (கார் - கருமை; கரிய); (மா - அழகு); (மிடறு - கண்டம்);
தக்கன் வேள்வி சாடினான் - தக்கன் செய்த வேள்வியை அழித்தவன்;
எங்கும் நாகம் பூண்டவன் - நாகாபரணன்;
ஏழை பங்கன் - உமைபங்கன்; (ஏழை - பெண்);
நான்மறை அங்கம் ஆறும் ஓதினான் - நால்வேதங்களையும் ஆறு அங்கங்களையும் பாடியருளியவன்;
அன்னியூரில் அண்ணலே - அன்னியூரில் உறைகின்ற பெருமான்;



6)
கருணை யற்ற காலனைக் .. காலி னாலு தைத்தவன்
மரணம் அற்ற வாழ்வினை .. மாணி யார்க்கு நல்கினான்
சரணம் என்று சார்ந்தவர் .. தம்மைக் காக்கும் தன்மையான்
அரணம் மூன்றை அட்டவன் .. அன்னி யூரில் அண்ணலே.



மரணம் அற்ற வாழ்வினை மாணியார்க்கு நல்கினான் - மார்க்கண்டேயர்க்கு இறப்பின்மையை அருள்புரிந்தவன்;
சரணம் என்று சார்ந்தவர் தம்மைக் காக்கும் தன்மையான் - சரண் புகுந்தவர்களைக் காப்பவன்;
அரணம் மூன்றை அட்டவன் - மும்மதில்களை எரித்தவன்;



7)
பல்லில் ஓட்டில் உண்பலி .. பாவை மாரி டம்பெறச்
செல்லும் செல்வன் வாலுடைச் .. சேவ தேறும் சேவகன்
வில்லில் அம்பைக் கோத்தெயில் .. வேவு மாறு நக்கவன்
அல்லில் நட்டம் ஆடுவான் .. அன்னி யூரில் அண்ணலே.



பல் இல் ஓட்டில் உண்பலி பாவைமாரிடம் பெறச் செல்லும் செல்வன் - பல் இல்லாத மண்டையோட்டினில் பிச்சையைப் பெண்களிடம் பெறுவதற்காகப் போகின்ற செல்வன்; ("பல் இல் – பல வீடுகளில்” என்றும் பொருள் கொள்ளல் ஆம்);
வாலுடைச் சேஅது ஏறும் சேவகன் - வெள்ளை எருதை வாகனமாக உடைய வீரன்; (வால் - வெண்மை); (சே - எருது); (சேவகன் - வீரன்); (அப்பர் தேவாரம் - 4.63.9 - “.... வாலுடை விடையா யுன்றன் மலரடி மறப்பி லேனே.” - வாலுடை விடை - வெள்விடை);
வில்லில் அம்பைக் கோத்து எயில் வேவுமாறு நக்கவன் - மேருவில்லில் ஒரு கணையைக் கோத்து முப்புரங்களும் எரியும்படி சிரித்தவன்; (எயில் - கோட்டை);
அல்லில் நட்டம் ஆடுவான் - இருளில் திருநடம் செய்பவன்;
அன்னியூரில் அண்ணலே - அன்னியூரில் உறைகின்ற பெருமான்;



8)
வரையி டந்த தூர்த்தனை .. வாட ஊன்று தாளினான்
கரையி லாத அன்பினான் .. காதிற் றோட ணிந்தவன்
உரையி றந்த சீரினான் .. உம்பர் நாதன் நாணென
அரையில் நாகம் ஆர்த்தவன் .. அன்னி யூரில் அண்ணலே.



வரை இடந்த தூர்த்தனை - கயிலை மலையைப் பெயர்த்த கொடியவனான இராவணனை;
வாட ஊன்று தாளினான் - வாடி வருந்துமாறு விரலை ஊன்றிய திருப்பாதன்;
கரை இலாத அன்பினான் - அளவற்ற அன்பு உடையவன்; (கரையில்லாத கருணைக்கடல்);
காதிற்றோடணிந்தவன் - காதில் தோடு அணிந்தவன்; (உமைபங்கன்);
உரை இறந்த சீரினான் - சொல்லற்கு அரிய புகழ் உடையவன்;
உம்பர் நாதன் - தேவர்கள் தலைவன்;
நாண் என அரையில் நாகம் ஆர்த்தவன் - அரையில் நாணாகப் பாம்பைக் கட்டியவன்;
அன்னியூரில் அண்ணலே - அன்னியூரில் உறைகின்ற பெருமான்;



9)
சுழலி லங்கு வானதி .. தூய திங்கள் சூடினான்
தழலை ஏந்திக் கானிடைத் .. தாண்ட வஞ்செய் தத்துவன்
கழலும் மேலும் மாலயன் .. காணொ ணாத வண்ணமோர்
அழல தாக ஓங்கினான் .. அன்னி யூரில் அண்ணலே.



சுழல் இலங்கு வானதி தூய திங்கள் சூடினான் - சுழல்கள் இருக்கும் கங்கையையும் வெண்பிறைச் சந்திரனையும் சூடியவன்; (வானதி - வான் நதி - கங்கை);
தழலை ஏந்திக் கானிடைத் தாண்டவம் செய் தத்துவன் - நெருப்பை ஏந்திச் சுடுகாட்டில் கூத்தாடும் மெய்ப்பொருள்;
கழலும் மேலும் மால் அயன் காணொணாத வண்ணம் ஓர் அழல் அது ஆக ஓங்கினான் - தன் அடியையும் முடியையும் திருமாலும் பிரமனும்; காண இயலாதவாறு ஓர் எல்லையற்ற சோதியாக உயர்ந்தவன்;
அன்னியூரில் அண்ணலே - அன்னியூரில் உறைகின்ற பெருமான்;



10)
பொக்கம் மிக்க நெஞ்சினர் .. பொய்த்த வத்தைப் பேசுவார்
துக்கம் நல்கும் அம்மொழி .. துச்சம் என்று தள்ளுமின்
செக்கர் வான்நி றத்தினான் .. சீலர் சேரும் செந்நெறி
அக்கின் ஆரம் பூண்டவன் .. அன்னி யூரில் அண்ணலே.



பொக்கம் மிக்க நெஞ்சினர் பொய்த்தவத்தைப் பேசுவார் - வஞ்சம் நிறைந்த நெஞ்சை உடையவர்கள் பொய்யான தவத்தைப் பேசுவார்கள்; (பொய்த்தவத்தைப் பேசுவார் = பொய்த்து அவத்தைப் பேசுவார்" என்றும் பிரித்துப் பொருள்கொள்ளல் ஆம்); (பொய்த்தல் - பொய்யாகப் பேசுதல்; வஞ்சித்தல்); (அவம் - பயனின்மை; கேடு);
துக்கம் நல்கும் அம்மொழி துச்சம் என்று தள்ளுமின் - துன்பத்தைத் தரும் அவர் வார்த்தைகளைத் துச்சம் என்று தள்ளுங்கள்; மதிக்கவேண்டா; (துச்சம் - இழிவு; பொய்);
செக்கர்வான் நிறத்தினான் - செவ்வானம் போன்ற நிறத்தை உடையவன்;
சீலர் சேரும் செந்நெறி - சீலம் உடையவர்கள் சேர்கின்ற நன்மார்க்கமாகத் திகழ்பவன் ; (செந்நெறி - செவ்விய வழி; சன்மார்க்கம்);
அக்கின் ஆரம் பூண்டவன் - உருத்திராக்க மாலை, எலும்பு மாலை இவற்றை அணிந்தவன்; (அக்கு - ருத்ராக்ஷம்; எலும்பு );
அன்னியூரில் அண்ணலே - அன்னியூரில் உறைகின்ற பெருமான்;



11)
மலர்கள் எய்த மன்மதன் .. மாய நோக்கிக் காதலி
வலவ எம்பி ரானென .. வாட்டம் தீர்த்த அங்கணன்
உலக நாதன் உம்பரான் .. உன்னும் நெஞ்சில் உள்ளவன்
அலகி லாத சோதியான் .. அன்னி யூரில் அண்ணலே.



* இத்தலத்தில் இரதி வழிபட்டதைத் தலபுராணத்திற் காண்க.


மலர்கள் எய்த மன்மதன் மாய நோக்கிக் - மலர்க்கணையை எய்த மன்மதனைச் சாம்பலாகும்படி நெற்றிக்கண்ணால் பார்த்து ;
காதலி வலவ எம்பிரான் என வாட்டம் தீர்த்த அங்கணன் - பின் அவன் மனைவியான இரதி, "வல்லவனே, எம்பெருமானே" என்று இறைஞ்சவும் அவளது வாட்டத்தைத் தீர்த்த அருட்கண் உடைய பெருமான்; (காதலி - மனைவி); (வலவ - வலவனே என்ற விளி; வலவன் - சமர்த்தன்; வெற்றியாளன்);
உலக நாதன் உம்பரான் - அகில உலகங்களுக்கும் தலைவன், சிவலோகன்; (அப்பர் தேவாரம் - 5.62.7 - "உம்ப ரானை யுருத்திர மூர்த்தியை");
உன்னும் நெஞ்சில் உள்ளவன் - தியானிக்கும் பக்தர்கள் நெஞ்சில் உறைகின்றவன்;
அலகு இலாத சோதியான் - அளவற்ற சோதி வடிவினன்;
அன்னியூரில் அண்ணலே - அன்னியூரில் உறைகின்ற பெருமான்;



அன்போடு,
வி. சுப்பிரமணியன்



பிற்குறிப்பு :
1) அன்னியூர் - (பொன்னூர்) - ஆபத்சகாயேஸ்வரர் கோயில் - தினமலர் தளத்தில்: https://temple.dinamalar.com/New.php?id=217
-------------------

04.69 – கோடிகா - (திருக்கோடிக்காவல்)


04.69 – கோடிகா - (திருக்கோடிக்காவல்)



2014-06-15
கோடிகா (திருக்கோடிகா - திருக்கோடிக்காவல்)
---------------------------------------------------------------
(எண்சீர் விருத்தம் - "விளம் விளம் மா தேமா" என்ற அரையடி வாய்பாடு)
(காரைக்கால் அம்மையார் அருளிய மூத்த திருப்பதிகம் - 11.2.9 - "துத்தம்கைக் கிள்ளை விளரி தாரம்" )
(சம்பந்தர் தேவாரம் - 1.8.1 - “புண்ணியர் பூதியர் பூத நாதர்”)



1)
தளிர்மதி தாழ்சடைத் தாங்கி னானைத்
.. தன்னிகர் இல்லியைச் சாந்த மாக
ஒளிர்பொடி பூசிய மார்பி னானை
.. ஒண்டமிழ் மாலைகள் ஓதி ஏத்தி
அளிபவர் வேண்டு வரங்கள் எல்லாம்
.. அருளிடும் அண்ணலை வண்டு பாடும்
குளிர்பொழில் சூழ்திருக் கோடி காவிற்
.. கூத்தனை நாள்தொறும் கூறு நாவே.



தளிர்மதி தாழ்சடைத் தாங்கினானைத் - இளமதியைத் தாழும் சடையில் தரித்தவனை;
தன் நிகர் இல்லியைச் - தனக்கு ஒப்பு இல்லாதவனை;
சாந்தமாக ஒளிர்பொடி பூசிய மார்பினானை - சந்தனம் போல் வெண்திருநீற்றை மார்பில் பூசியவனை; (சாந்தம் - சந்தனம்);
ஒண் தமிழ் மாலைகள் ஓதி ஏத்தி அளிபவர் வேண்டு வரங்கள் எல்லாம் அருளிடும் அண்ணலை - ஒளியுடைய தமிழ்ப் பாமலைகளைப் பாடித் துதித்து உருகுகின்ற அன்பர்கள் வேண்டிய வரங்களையெல்ளாம் கொடுத்தருளும் தலைவனை; (அளிதல் - மனம் குழைதல்);
வண்டு பாடும் குளிர்பொழில் சூழ் திருக்கோடிகாவிற் கூத்தனை - வண்டுகள் ஒலிக்கின்ற குளிர்ந்த சோலை சூழ்ந்த திருக்கோடிகாவில் உறைகின்ற ஆடல் வல்லானை;
நாள்தொறும் கூறு நாவே - நாக்கே, நீ தினமும் சொல்லுவாயாக;



2)
வெங்கரி ஈருரி போர்த்தி னானை
.. விருப்பொடு மாலொரு கண்ணி டந்து
பங்கயம் என்றிடக் கண்டோர் ஆழி
.. பரிவொடு தந்தருள் பண்பி னானைப்
பொங்கர வத்தினை நாண தாகப்
.. பூண்ட புராணனை வண்டு பாடும்
கொங்கலர் ஆர்பொழிற் கோடி காவிற்
.. கூத்தனை நாள்தொறும் கூறு நாவே.



வெம் கரி ஈர் உரி போர்த்தினானை - கொடிய யானையின் உரித்த தோலைப் போர்த்தியவனை;
விருப்பொடு மால் ஒரு கண் இடந்து பங்கயம் என்று இடக் கண்டு ஓர் ஆழி பரிவொடு தந்தருள் பண்பினானைப் - பக்தியோடு திருமால் தன் கண் ஒன்றைத் தோண்டித் தாமரைப்பூவாக இட்டுப் பூசிக்கவும் அது கண்டு இரங்கி அவனுக்குச் சக்கராயுதத்தை அருளியவனை;
பொங்கு அரவத்தினை நாண்அது ஆகப் பூண்ட புராணனை - சீறும் பாம்பை அரையில் நாணாகக் கட்டிய பழமையானவனை;
வண்டு பாடும் கொங்கு அலர் ஆர் பொழிற் கோடிகாவிற் கூத்தனை - வண்டுகள் ஒலிக்கின்ற வாச மலர்கள் நிறைந்த சோலை சூழ்ந்த திருக்கோடிகாவில் உறைகின்ற ஆடல் வல்லானை;
நாள்தொறும் கூறு நாவே - நாக்கே, நீ தினமும் சொல்லுவாயாக;



3)
வெண்டிரை வேலையை வெற்பு மத்தால்
.. விண்ணவர் கடைய எழுந்த நஞ்சைக்
கண்டவர் அஞ்சி இறைஞ்ச உண்டு
.. காத்தமு தீந்தருள் நீல கண்டன்
பண்டடர் கானிடை ஏனம் எய்து
.. பார்த்தனுக் கோர்படை தந்த வேடன்
கொண்டலு லாம்பொழிற் கோடி காவிற்
.. கூத்தனை நாள்தொறும் கூறு நாவே.



வெண் திரை வேலையை வெற்பு மத்தால் விண்ணவர் கடைய - வெண்மையான அலைகளை உடைய பாற்கடலை ஒரு மலையை மத்தாக நிறுவித் தேவர்கள் கடைந்தபோது;
எழுந்த நஞ்சைக் கண்டு அவர் அஞ்சி இறைஞ்ச உண்டு காத்து அமுது ஈந்து அருள் நீலகண்டன் - தோன்றிய விடத்தைக் கண்டு அவர்கள் பயந்து துதிக்கவும், அவ்விடத்தை உண்டு இரட்சித்து அவர்களுக்கு அமுதத்தைத் தந்த நீலகண்டன்;
பண்டு அடர் கானிடை ஏனம் எய்து பார்த்தனுக்கு ஓர் படை தந்த வேடன் - முன்பு, அடர்ந்த காட்டின் இடையே ஒரு பன்றியை அம்பால் எய்து அருச்சுனனுக்குப் பாசுபதாஸ்திரம் அருள்செய்த வேடன்;
கொண்டல் உலாம் பொழில் கோடிகாவில் கூத்தனை நாள்தொறும் கூறு நாவே - மேகம் உலவுகின்ற சோலை சூழந்த திருக்கோடிகாவில் உறையும் கூத்தனைத் தினந்தோறும் சொல்லு நாக்கே!



4)
செக்கர் இளங்கதிர் போல்நி றத்துச்
.. சிவபெரு மானை அரண்கள் மூன்றை
நக்கெரி செய்ய வலானை நாக
.. நாணரை ஆர்த்த பிரானை அன்று
சக்கரம் ஒன்றை நிலத்திற் கீறிச்
.. சலந்தரன் தனதுடல் கீண்ட தேவைக்
கொக்கிரை தேர்வயற் கோடி காவிற்
.. கூத்தனை நாள்தொறும் கூறு நாவே.



செக்கர் இளங்கதிர் போல் நிறத்துச் சிவபெருமானை - இளம் செஞ்சூரியன் போன்ற செம்மேனிச் சிவபெருமானை; (செக்கர் - சிவப்பு);
அரண்கள் மூன்றை நக்கு எரிசெய்ய வலானை - முப்புரங்களைச் சிரித்து எரிக்க வல்லவனை;
நாக நாண் அரை ஆர்த்த பிரானை - நாகத்தை அரைநாணாகக் கட்டிய தலைவனை;
அன்று சக்கரம் ஒன்றை நிலத்திற் கீறிச் சலந்தரன் தனது உடல் கீண்ட தேவைக் - முன்பு தரையில் ஒரு சக்கரத்தை வரைந்து சலந்தரனுடைய உடலைப் பிளந்த தேவனை; (கீறுதல் - எழுதுதல்; வரைதல்); (கீள்தல் - கிழித்தல்);
கொக்கு இரை தேர் வயற் கோடிகாவிற் கூத்தனை - கொக்குகள் இரைதேர்கின்ற நீர்வளம் மிக்க வயல் சூழ்ந்த திருக்கோடிகாவில் உறைகின்ற ஆடல் வல்லானை;
நாள்தொறும் கூறு நாவே - நாக்கே, நீ தினமும் சொல்லுவாயாக;



5)
தயிரொடு பாலுகந் தாடி னானைத்
.. தாணுவை அந்தகன் தன்னைச் செற்ற
அயில்நுனை மூவிலை வேலி னானை
.. அங்கையில் ஆரழல் ஏந்தி னானை
மயிலன மாதொரு பங்கி னானை
.. வண்டினம் தேன்மலர் நாடிப் பாடக்
குயில்பயில் குளிர்பொழிற் கோடி காவிற்
.. கூத்தனை நாள்தொறும் கூறு நாவே.



தயிரொடு பால் உகந்து ஆடினானைத் - தயிர் பால் இவற்றால் அபிஷேகத்தை விரும்பியவனை;
தாணுவை - தாணு என்ற திருநாமம் உடைய சிவனை;
அந்தகன் தன்னைச் செற்ற அயில்நுனை மூவிலை வேலினானை - அந்தகாசுரனை அழித்த கூரிய முனையையுடைய திரிசூலத்தை ஏந்தியவனை;
அங்கையில் ஆரழல் ஏந்தினானை - கையில் நெருப்பை ஏந்தியவனை;
மயில் அன மாது ஒரு பங்கினானை - மயில் போன்ற உமையம்மையை ஒரு பங்காக உடையவனை;
வண்டு இனம் தேன்மலர் நாடிப் பாடக் குயில் பயில் குளிர்பொழிற் கோடிகாவிற் கூத்தனை - வண்டுகள் மது நிறைந்த பூக்களை நாடி இசை எழுப்பக், குயில்கள் ஒலிக்கின்ற குளிர்ந்த சோலை சூழ்ந்த திருக்கோடிகாவில் உறைகின்ற ஆடல் வல்லானை;
நாள்தொறும் கூறு நாவே - நாக்கே, நீ தினமும் சொல்லுவாயாக;



6)
வெடிபடு தமருகம் ஏந்தி னானை
.. விண்ணவர் ஏத்த அவர்க்கி ரங்கிக்
கடிமதில் மூன்றொர் கணத்தில் வேவக்
.. கணைதொடு மாமலை வில்லி னானைப்
பொடியணி மார்பனைத் தொண்டு செய்து
.. போற்றி மகிழ்ந்திடும் அன்பர் நெஞ்சில்
குடிகொளும் ஈசனைக் கோடி காவிற்
.. கூத்தனை நாள்தொறும் கூறு நாவே.



வெடிபடு தமருகம் ஏந்தினானை - வெடி போன்று ஒலிக்கும் உடுக்கையை ஏந்தியவனை; (தமருகம் -உடுக்கை);
விண்ணவர் ஏத்த அவர்க்கு இரங்கிக் கடிமதில் மூன்று ஒர் கணத்தில் வேவக் கணைதொடு மாமலை வில்லினானைப் - தேவர்கள் இறைஞ்ச அவர்களுக்கு இரங்கிக் , காவலுடைய முப்புரங்களும் ஒரு கணப்பொழுதில் வெந்து சாம்பலாகும்படி மேருமலையை வில்லாக ஏந்திக் கணையைத் தொடுத்தவனை; (கடி - காவல்); (ஒர் - ஓர் என்பதன் குறுக்கல் விகாரம்);
பொடி அணி மார்பனைத் - திருநீற்றை மார்பில் பூசியவனை;
தொண்டு செய்து போற்றி மகிழ்ந்திடும் அன்பர் நெஞ்சில் குடிகொளும் ஈசனைக் - திருத்தொண்டு செய்து வணங்கி மகிழும் பக்தர்கள் மனமே கோயிலாகக் கொண்ட ஈசனை;
கோடிகாவிற் கூத்தனை - திருக்கோடிகாவில் உறைகின்ற ஆடல் வல்லானை;
நாள்தொறும் கூறு நாவே - நாக்கே, நீ தினமும் சொல்லுவாயாக;



7)
கழலிணை போற்றிடும் அன்பர் தம்மைக்
.. கடலிடைப் புணையெனக் காக்கும் தேவை
நிழலெறி கூர்மழு வாளி னானை
.. நெற்றியிற் கண்ணனை நீற்றி னானை
அழலன வேணியிற் றிங்கட் டுண்டம்
.. அரவொடு வைத்துகந் தானை ஏலக்
குழலுமை கூறனைக் கோடி காவிற்
.. கூத்தனை நாள்தொறும் கூறு நாவே.



கழல் இணை போற்றிடும் அன்பர் தம்மைக் கடலிடைப் புணை எனக் காக்கும் தேவை - இரு திருவடிகளை வழிபடும் பக்தர்கள் வினைக்கடலில் (/துன்பக்கடலில்) ஆழாதபடி அவர்களைக் காக்கின்ற மரக்கலம் போன்ற தேவனை;
நிழல் எறி கூர் மழு வாளினானை - ஒளி வீசும் கூரிய மழுவாயுதத்தை ஏந்தியவனை; (நிழல் - ஒளி); (எறித்தல் - ஒளிவீசுதல்);
நெற்றியிற் கண்ணனை நீற்றினானை - முக்கண்ணனைத், திருநீற்றைப் பூசியவனை;
அழல் அன வேணியில் திங்கள் துண்டம் அரவொடு வைத்து உகந்தானை - தீப்போன்ற செஞ்சடையில் பிறைச்சந்திரனைப் பாம்போடு வைத்து மகிழ்ந்தவனை;
ஏலக் குழல் உமை கூறனைக் - நறுமணம் கமழும் கூந்தலை உடைய உமையம்மையை ஒரு கூறாக உடையவனை;
கோடிகாவிற் கூத்தனை - திருக்கோடிகாவில் உறைகின்ற ஆடல் வல்லானை;
நாள்தொறும் கூறு நாவே - நாக்கே, நீ தினமும் சொல்லுவாயாக;



8)
வஞ்சி நடுங்கிட வெற்ப சைத்த
.. வல்லவு ணன்முடி பத்த டர்த்த
மஞ்சனை இன்னிசை பாடக் கேட்டு
.. வாளொடு நாளருள் செய்த கோனை
நஞ்சணி கண்டனை வேத மோது
.. நாவனை நூலணி மார்பி னானைக்
குஞ்சியில் ஆற்றனைக் கோடி காவிற்
.. கூத்தனை நாள்தொறும் கூறு நாவே.



வஞ்சி நடுங்கிட வெற்பு அசைத்த வல் அவுணன் முடி பத்து அடர்த்த மஞ்சனை - உமையம்மை நடுங்குமாறு கயிலைமலையைப் பெயர்த்த வலிய கொடிய இராவணனது பத்துத் தலைகளையும் நசுக்கிய வீரனை; (வஞ்சி - பெண்); (மஞ்சன் - மைந்தன் - வீரன்);
(அவுணன், அரக்கன் என்ற இரு சொற்களும் ஒத்த பொருள் உடையனவென்றே கருதுகின்றேன். இராவணனை அவுணர்கோன் என்றும் தேவாரத்திற் கூறக் காணலாம். - சம்பந்தர் தேவாரம் - 1.51.8 - "... இலங்கைமன்னு வாளவுணர் கோனையெழில் விரலால் துலங்கவூன்றி வைத்துகந்தாய் சோபுரமே யவனே.")
இன்னிசை பாடக் கேட்டு வாளொடு நாள் அருள்செய்த கோனை - பின்னர் அவன் இசைபாடக் கேட்டு இரங்கி அவனுக்குச் சந்திரஹாஸம் என்ற வாளையும் நீண்ட ஆயுளையும் கொடுத்த தலைவனை;
நஞ்சு அணி கண்டனை - நீலகண்டனை;
வேதம் ஓது நாவனை - வேதங்களைப் பாடியருளிய நாவை உடையவனை;
நூல் அணி மார்பினானைக் - மார்பில் பூணூல் அணிந்தவனை;
குஞ்சியில் ஆற்றனைக் - தலையில் கங்கையை அணிந்தவனை;
கோடிகாவிற் கூத்தனை - திருக்கோடிகாவில் உறைகின்ற ஆடல் வல்லானை;
நாள்தொறும் கூறு நாவே - நாக்கே, நீ தினமும் சொல்லுவாயாக;



9)
பார்தனை அகழ்திரு மாலும் அன்னப்
.. பறவையும் நேட வளர்ந்த தீயைச்
சீர்தனைப் பாடிய மாணி வாழத்
.. திருவடி யால்கொடுங் கூற்று மாள
மார்பில் உதைத்தருள் செய்பெம் மானை
.. வாணுத லாளொரு பங்கி னானைக்
கூர்மழு வாளனைக் கோடி காவிற்
.. கூத்தனை நாள்தொறும் கூறு நாவே.



பார்தனை அகழ் திருமாலும் அன்னப் பறவையும் நேட வளர்ந்த தீயைச் - பன்றியுருவில் நிலத்தை அகழ்ந்த திருமாலும் அன்னப்பறவை உருவில் சென்ற பிரமனும் தேடும்படி ஓங்கிய சோதியை; (பார் - நிலம்); (நேடுதல் - தேடுதல்);
சீர்தனைப் பாடிய மாணி வாழத் திருவடியால் கொடுங் கூற்று மாள மார்பில் உதைத்தருள்செய் பெம்மானை - புகழ் பாடி வழிபட்ட மார்க்கண்டேயர் இறவாமல் வாழும்படி கொடிய நமனை மார்பில் உதைத்து அழித்தவனே; (மாணி - பிரமசாரி - மார்க்கண்டேயர்);
வாள் நுதலாள் ஒரு பங்கினானைக் - ஒளி பொருந்திய நெற்றியை உடைய உமையை ஒரு பங்காக உடையவனை; (வாள் - ஒளி); (நுதல் - நெற்றி);
கூர் மழுவாளனைக் - கூரிய மழுவை ஏந்தியவனை;
கோடிகாவிற் கூத்தனை - திருக்கோடிகாவில் உறைகின்ற ஆடல் வல்லானை;
நாள்தொறும் கூறு நாவே - நாக்கே, நீ தினமும் சொல்லுவாயாக;



10)
நாவினிற் பொய்யணி வஞ்ச கர்க்கு
.. நன்மையி லாதவன் அன்பர் பாலன்
ஆவினில் அஞ்சுகந் தாடும் ஐயன்
.. அஞ்சடை மேல்மணம் நாறு கொன்றைப்
பூவிள நாகம் அலைத்தொ லிக்கும்
.. புனல்தலை மாலைவெண் திங்க ளோடு
கூவிளம் சூடியைக் கோடி காவிற்
.. கூத்தனை நாள்தொறும் கூறு நாவே.



நாவினில் பொய் அணி வஞ்சகர்க்கு நன்மை இலாதவன் - நாவால் ஓயாமல் பொய்யுரைத்து வஞ்சிக்கும் கீழோர்க்கு அருள் இல்லாதவன்; (அப்பர் தேவாரம் - 4.11.6 - “சலம் இலன் சங்கரன் சார்ந்தவர்க்கு அலால் நலம் இலன்”);
அன்பர் பாலன் - பக்தர்கள் அருகில் இருப்பவன்; பக்தர்களைக் காப்பவன்; (பால் - பக்கம்); (பாலன் - காப்பவன்; பூபாலன், கோபாலன், முதலியன போல்);
ஆவினில் அஞ்சு உகந்து ஆடும் ஐயன் - பசுவிடமிருந்து பெறப்படும் ஐந்து பொருள்களால் அபிஷேகம் விரும்பும் தலைவன்;
அம் சடைமேல் மணம் நாறு கொன்றைப்பூ, இள நாகம், அலைத்து ஒலிக்கும் புனல், தலைமாலை, வெண் திங்களோடு கூவிளம் சூடியை - அழகிய சடையின்மேல் வாசம் கமழும் கொன்றைமலர், இளம் பாம்பு, அலைமோதி ஒலிக்கின்ற கங்கை, மண்டையோட்டுமாலை, சந்திரன், வில்வம் ஆகியவற்றை அணிந்தவனை;
கோடிகாவிற் கூத்தனை - திருக்கோடிகாவில் உறைகின்ற ஆடல் வல்லானை;
நாள்தொறும் கூறு நாவே - நாக்கே, நீ தினமும் சொல்லுவாயாக;



11)
கன்றினைக் கொன்றதன் மைந்தன் மேல்தேர்க்
.. காலுற ஊர்ந்துயர் நீதி காட்டி
நின்றசெங் கோல்மனு விற்கி ரங்கு
.. நின்மல னைப்புரை ஒன்றி லானை
வென்றி விடைக்கொடி யானைக் காம
.. வேளுடல் வெந்தற நோக்கி னானைக்
கொன்றையந் தாரனைக் கோடி காவிற்
.. கூத்தனை நாள்தொறும் கூறு நாவே.



* முதல் இரண்டு அடிகள் மனுநீதிச்சோழன் வரலாற்றைச் சுட்டின. பெரியபுராணத்திற் காண்க.


கன்றினைக் கொன்ற தன் மைந்தன்மேல் தேர்க்கால் உற ஊர்ந்து உயர் நீதி காட்டி நின்ற – (அரசகுமாரன் தேரோட்டும்போது சிக்கி உயிரிழந்த கன்றின் தாய்ப்பசுவைக் கண்டு ) அக்கன்றைக் கொன்ற தன் மைந்தன் மீது தன் தேர்ச்சக்கரத்தை ஏற்றிச் செலுத்தி உயர்ந்த நீதியை வழங்கிய; (கால் - சக்கரம்); (ஊர்தல் - ஏறிச் செலுத்துதல்);
செங்கோல் மனுவிற்கு இரங்கு நின்மலனை - செங்கோல் வழுவாத மனுநீதிச் சோழனுக்கு இரங்கி அருளிய தூயனை;
புரை ஒன்றிலானை - ஓப்பற்றவனைக், குற்றமற்றவனை; (புரை - ஒப்பு ; குற்றம்);
வென்றி விடைக்கொடியானை - வெற்றியுடைய இடபக்கொடி உடையவனை;
காமவேள் உடல் வெந்து அற நோக்கினானை - மன்மதனது உடல் வெந்து அழியும்படி அவனை நெற்றிக்கண்ணால் பார்த்தவனை;
கொன்றையந் தாரனை - கொன்றைமாலை அணிந்தவனை;
கோடிகாவிற் கூத்தனை - திருக்கோடிகாவில் உறைகின்ற ஆடல் வல்லானை;
நாள்தொறும் கூறு நாவே - நாக்கே, நீ தினமும் சொல்லுவாயாக;



அன்போடு,
வி. சுப்பிரமணியன்



பிற்குறிப்பு :
1) இப்பதிகத்தின் யாப்புக் குறிப்பு :
எண்சீர் விருத்தம் - 'விளம் விளம் மா தேமா' என்ற அரையடி வாய்பாடு.
விளச்சீர் வரும் இடத்தில் மாங்காய்ச்சீரோ மாச்சீரோ வரலாம். விளச்சீர் வரும் இடத்தில் மாச்சீர் வரின் அடுத்த சீர் நிரையசையில் தொடங்கும்.
காரைக்கால் அம்மையார் அருளிய மூத்த திருப்பதிகம் இவ்வமைப்பு என்று கருதுகின்றேன்.
2) காரைக்கால் அம்மையார் அருளிய மூத்த திருப்பதிகம் - 11.2.1 -
கொங்கை திரங்கி நரம்பெ ழுந்து
.. குண்டுகண் வெண்பற் குழிவ யிற்றுப்
பங்கி சிவந்திரு பற்கள் நீண்டு
.. பரடுயர் நீள்கணைக் காலோர் வெண்பேய்
தங்கி யலறி யுலறு காட்டில்
.. தாழ்சடை எட்டுத் திசையும் வீசி
அங்கங் குளிர்ந்தன லாடும் எங்கள்
.. அப்ப னிடந்திரு ஆலங் காடே.
3) கோடிகா - (திருக்கோடிக்காவல்) - தினமலர் தளத்தில்: http://temple.dinamalar.com/New.php?id=1064
-------------------

Friday, June 28, 2019

04.68 – பந்தணைநல்லூர் (பந்தநல்லூர்)


04.68 – பந்தணைநல்லூர் (பந்தநல்லூர்)



2014-06-15
பந்தணைநல்லூர் (இக்காலத்தில் 'பந்தநல்லூர்')
--------------------------------
(சந்தக் கலிவிருத்தம் - "தனதன தனதானா தனதன தனதானா” என்ற சந்தம்.
தனதன என்பது தானன என்றும் வரலாம். தனதானா என்பது தானானா என்றோ தானதனா என்றோ வரலாம்.)
(சுந்தரர் தேவாரம் - 7.85.1 - 'வடியுடை மழுவேந்தி மதகரி யுரிபோர்த்து')



1)
அசுரரும் இமையோரும் அலைகடல் கடைநாளில்
விசுவம தழிநஞ்சே வெளிவர அதுவுண்டான்
பசுமயில் உமைபங்கன் பசுபதி பதியென்பர்
பசிதணி வயல்சூழ்ந்த பந்தணை நல்லூரே.



* பசுபதீசுவரர் - திருப்பந்தணைநல்லூர் ஈசன் திருநாமம்;
கடைநாளில் - வினைத்தொகை - கடைந்த சமயத்தில்;
விசுவமது அழிநஞ்சு - அகிலத்தை அழிக்கும் விடம்;
அது உண்டான் - அதனை உண்டவன்;
பசுமயில் உமை - பசிய மயில் போன்ற உமையம்மை;
பசிதணி வயல் - உலகின் பசியைத் தணிக்கும் வயல்;



2)
சுடரெரி கரமேந்தி சுடலையில் நடமாடி
இடர்புரி எயில்மூன்றும் நொடியினில் எரிமூழ்கிப்
படவொரு கணையெய்த பசுபதி பதியென்பர்
படர்பொழில் புடைசூழ்ந்த பந்தணை நல்லூரே.



சுடரெரி கரம் ஏந்தி - சுடர்விட்டு எரியும் நெருப்பைக் கையில் ஏந்தியவன்;
சுடலையில் நடமாடி - சுடுகாட்டில் கூத்தாடுபவன்;
இடர்புரி எயில் மூன்றும் நொடியினில் எரிமூழ்கிப் பட - துன்பம் செய்த முப்புரங்களும் கணப்பொழுதில் தீப்பற்றி அழியும்படி;



3)
நிலவினைச் சடைமீது நிலவிட அருளண்ணல்
நிலைபெறத் தமிழ்பாடி நிரைகழல் தொழுவார்க்குப்
பலவினின் பழமொக்கும் பசுபதி பதியென்பர்
பலசுரம் அளிபாடும் பந்தணை நல்லூரே.



நிலவுதல் - நிலைத்திருத்தல்; தங்குதல்;
நிலைபெறுதல் - துன்பமற்ற நிலையை அடைதல்;
நிரைகழல் - வரிசையாகக் கழல் அணிந்த திருவடி;
பலவின் இன் பழம் ஒக்கும் - பலாவின் இனிய பழம் போன்ற; (பலவு - பலா);
பலசுரம் அளி பாடும் - பல சுரங்களை வண்டுகள் பாடுகின்ற;



4)
அங்கமும் மறைநாலும் அருளிய திருநாவன்
அங்கமும் அணியீசன் அணிமயில் உமைபங்கன்
பங்கமில் புகழாளன் பசுபதி பதியென்பர்
பைங்கிளி பயில்சோலைப் பந்தணை நல்லூரே.



அங்கமும் மறைநாலும் - நால்வேதமும் ஆறங்கமும்;
அங்கமும் அணி ஈசன் - எலும்பையும் பூணுகின்ற தலைவன்;
அணி மயில் உமை பங்கன் - அழகிய மயில் போன்ற உமையம்மையை ஒரு பங்காக உடையவன்;
பங்கம் இல் புகழாளன் - குற்றமற்ற புகழை உடையவன்;
பைங்கிளி பயில் சோலை - பசிய கிளிகள் ஒலிக்கும் சோலை; (பயில்தல் - ஒலித்தல்; தங்குதல்);



5)
துணிமதி புனைதூயன் சுடுபொடி துதைமார்பன்
அணியிழை ஒருபாகன் அருவிடம் அடைகண்டன்
பணியினை அரையார்த்த பசுபதி பதியென்பர்
பணிபவர் பவம்நீக்கும் பந்தணை நல்லூரே.



துணிமதி - பிளவுபட்ட திங்கள்;
சுடுபொடி - சுடுநீறு - திருநீறு;
துதைதல் - படிதல் (To be steeped);
அணியிழை - பெண் (Woman, as adorned with jewels);
அருவிடம் அடைகண்டன் - கொடிய நஞ்சை அடைத்த கண்டத்தை உடையவன்;
பணியினை அரை ஆர்த்த - நாகப்பாம்பை அரையில் நாணாகக் கட்டிய;
பவம் - பிறவி; பாவம்;



6)
சுறவமர் கொடியானைச் சுடுநுதற் கணனெந்தை
இறவொடு பிறவில்லான் இணையிலி இடுகானிற்
பறையொலி தரவாடும் பசுபதி பதியென்பர்
பறவைகள் பயில்சோலைப் பந்தணை நல்லூரே.



சுற / சுறவு - சுறா - மகரமீன் (Shark);
சுறவு அமர் கொடியான் - மகரக்கொடி உடைய மன்மதன்; (சம்பந்தர் தேவாரம் - 2.23.4 - "சுறவக் கொடிகொண் டவன்நீ றதுவாய் உறநெற் றிவிழித் தஎம் உத் தமனே....");
இறவு, பிறவு - இறப்பு, பிறப்பு;
இணையிலி - இணை இல்லாதவன்;
பறை ஒலிதர ஆடும் - பறை ஒலிக்க ஆடும்; (தருதல் - ஒரு துணைவினை);
பயில்தல் - ஒலித்தல்; தங்குதல்;



7)
இனியவன் எருதேறும் இறையவன் மறைபாடும்
தனியவன் வரம்யாவும் தருபவன் அலைமோதும்
பனிநனை சடையேந்தல் பசுபதி பதியென்பர்
பனிமதி தொடுசோலைப் பந்தணை நல்லூரே.



தனியவன் - ஒப்பற்றவன்; (தனி - ஒப்பின்மை);
பனி நனைசடை - நீர் நனைக்கின்ற சடை;
ஏந்தல் - பெருமையிற் சிறந்தவன்;
பனிமதி - குளிர்ச்சி பொருந்திய சந்திரன்;



8)
நிசியன வணமேனி நிசிசரன் முடிபத்தும்
நசிவுற விரலூன்றி நனியருள் புரிபெம்மான்
பசியெனப் பலிதேரும் பசுபதி பதியென்பர்
பசியதண் பொழிலாரும் பந்தணை நல்லூரே.



நிசி அன வண மேனி நிசிசரன் முடி பத்தும் - இருளைப் போன்ற கரிய நிறத்து அரக்கனான இராவணனின் பத்துத்தலைகளும்; (நிசி - இரவு; இருள்); (நிசிசரன் - இரவில் திரிபவன் - அசுரன்; அரக்கன்); (அப்பர் தேவாரம் - 5.65.11 - "மைக்க டுத்த நிறத்தரக் கன்வரை புக்கெ டுத்தலும் ..." - மைக்கடுத்த நிறத்து அரக்கன் - கரிய இருளை ஒத்த நிறத்தினை உடைய இராவணன்.);
நசிவுற விரல் ஊன்றி நனி அருள் புரி பெம்மான் - நெரிவுற ஒரு விரலை ஊன்றிப் பின் பேரருள் செய்த பெருமான்; (நசிவு - நெரிவு - Bruise, contusion); (நனி - மிகவும்);
பலி - பிச்சை;
பசிய தண் பொழில் ஆரும் - பசுமையான குளிர்ந்த சோலைகள் பொருந்திய;



9)
மண்ணகழ் அரிவேதன் மலரடி முடிகாணார்
கண்ணமர் நுதலெந்தை கழலிணை தொழுமன்பர்
பண்ணிய வினைதீர்க்கும் பசுபதி பதியென்பர்
பண்ணிசை மிகுசோலைப் பந்தணை நல்லூரே.



மண் அகழ் அரி வேதன் - நிலத்தை அகழ்ந்த திருமாலும் பிரமனும்;
கண் அமர் நுதல் எந்தை - நெற்றிக்கண் திகழும் எம் தந்தை;
கழல் இணை - இரு திருவடிகள்;
பண் இசை மிகு சோலை - வண்டுகள் முரல்வதால் பண் இசை மிகுந்த பொழில் சூழ்ந்த;



10)
நுழைவிலர் பலபொய்கள் நுவல்பவர் உரைநம்பேல்
மழையன மணிகண்டன் மலரடி மறவாதார்
பழவினைத் தொடர்நீக்கும் பசுபதி பதியென்பர்
பழமலி பொழில்சூழ்ந்த பந்தணை நல்லூரே.



நுழைவு இலர் - (நுழைவு - நுட்பவறிவு - Keen understanding or perception);
நுவல்தல் - சொல்லுதல்;
நம்பேல் - நம்ப வேண்டா;
மழை அன மணிகண்டன் - மேகம் போன்ற நீலமணி திகழும் கண்டத்தை உடையவன்;
பழமலி பொழில் - பழங்கள் மிகுந்த சோலை;



11)
கடிமலர் பலதூவிக் கசிவொடு தமிழ்பாடி
அடியிணை தொழுவாரை அமர்சிவ புரமேற்றும்
படியென அருள்கையன் பசுபதி பதியென்பர்
படியுறு பசிதீர்செய்ப் பந்தணை நல்லூரே.



கடிமலர் பல தூவிக் கசிவொடு தமிழ் பாடி - வாசமலர்கள் பல தூவி உருகிச் செந்தமிழ்ப் பாமாலைகளைப் பாடி; (கடி - வாசனை);
அடியிணை தொழுவாரை அமர் சிவபுரம் ஏற்றும் - இரு திருவடிக்ஃளை வழிபட்டாரை விரும்பிய சிவலோகத்திற்கு ஏற்றுகின்ற ; (அமர்தல் - விரும்புதல்);
படி என அருள் கையன் பசுபதி பதி என்பர் - படி போல அருள்கின்ற திருக்கையை உடைய பசுபதி உறைகின்ற இடம் என்பர்;
படி உறு பசி தீர் செய்ப் பந்தணை நல்லூரே - உலகின் பசியைத் தீர்க்கும் வயல் சூழ்ந்த திருப்பந்தணைநல்லூர் ஆகும்; (படி பூமி); (உறுபசி - உற்ற பசி; மிக்க பசி); (செய் - வயல்);



அன்புடன்,
வி. சுப்பிரமணியன்
-------------- --------------