04.19 - கஞ்சனூர் - வாராரும் வனமுலையாள்
2013-11-02
கஞ்சனூர்
----------------------------------
(நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா - அந்தாதி)
(சம்பந்தர் தேவாரம் - 2.47.1 - "மட்டிட்ட புன்னையங் கானல் மடமயிலைக்")
முற்குறிப்புகள்: பாடல்தோறும் ஈற்றடியின் மூன்றாம்சீர் அடுத்த பாடலின் முதற்சீரோடு அந்தாதித்தொடை அமைய மண்டலித்து வரும் 11 பாடல்கள். முதற் பாடல் "வாராரும்" என்று தொடங்கிப் 11-ஆம் பாடல் "வார்சடையாய் அடிபோற்றி" என்று நிறைவுறுகின்றது.
எல்லாப் பாடல்களிலும் ஈசன் எல்லையற்ற ஜோதிப்பிழம்பாக நின்றது சுட்டப்பெறுகின்றது.)
1)
வாராரும் வனமுலையாள் மலைமங்கை ஒருபங்கா
காராரும் பொழில்சூழ்ந்த கஞ்சனூர்க் கற்பகமே
ஓராதார்க் கரியானே ஒளித்தூணே அடியார்தம்
தீராத வினைதீர்க்கும் சிவனேநின் அடிபோற்றி.
வாராரும் வனமுலையாள் மலைமங்கை ஒரு பங்கா - கச்சணிந்த அழகிய முலையையுடைய உமையை ஒரு பங்கிலுடையவனே; (வார் - முலைக்கச்சு; ஆர்தல் - பொருந்துதல்; வனமுலை - அழகிய முலை); (அப்பர் தேவாரம் - 6.81.5 - "வாரார்ந்த வனமுலையாள் பங்கன் கண்டாய்");
கார் ஆரும் பொழில் சூழ்ந்த கஞ்சனூர்க் கற்பகமே - மேகம் பொருந்தும் சோலை சூழ்ந்த கஞ்சனூரில் உறைகின்ற கற்பகமரம் போன்றவனே; (கார் - மேகம்);
ஓராதார்க்கு அரியானே - எண்ணாதவர்களுக்கு அரியவனே; (ஓர்தல் - தியானித்தல்);
ஒளித்தூணே - எல்லையின்றி நீண்ட ஜோதியே;
தீராத வினைதீர்க்கும் சிவனேநின் அடிபோற்றி - தீராத வினையைத் தீர்த்தருளும் சிவபெருமானே, உன் திருவடிகளை வணங்குகின்றேன்;
2)
சிவனேநின் மலனேவெண் திங்களணி செஞ்சடையாய்
கவினாரும் பொழில்சூழ்ந்த கஞ்சனூர்க் கற்பகமே
பவனேமுன் நான்முகனும் பாம்பணைமேல் துயின்றானும்
உவனாரென் றறியாத ஒளித்தூணே அடிபோற்றி.
நின்மலன் - மலமற்றவன்; கவின் - அழகு; பவன் - என்றும் இருப்பவன்; சிவன் திருநாமம்; பாம்பணைமேல் துயின்றான் - ஆதிசேஷனாகிய படுக்கையின்மேல் துயிலும் திருமால்; உவன் - முன்நிற்பவன்; ஆர் - யார்; (நம்பியாண்டார் நம்பிகள் - ஆளுடைய பிள்ளையார் திருத்தொகை - 11.39.1 - "காழி முதல்வன் கவுணியர்தம் போர்ஏறு ஊழி முதல்வன் உவன் என்று காட்டவலான்");
3)
ஒளித்தூணே விரைந்திழிந்த உயர்கங்கை தனைச்சடையில்
ஒளித்தானே ஓர்தலையில் ஊரார்பெய் பலிகொண்டு
களித்தானே கவின்பொழில்சூழ் கஞ்சனூர்க் கற்பகமே
அளித்தானே அமுதுவிடம் ஆர்ந்தானே அடிபோற்றி.
ஒளித்தானே, களித்தானே, அளித்தானே - ஒளித்தவனே, களித்தவனே, அளித்தவனே; ஊரார் பெய் பலிகொண்டு - ஊரினர் இடும் பிச்சையை ஏற்று; (பெய்தல் - கலம் முதலியவற்றில் இடுதல்; பலி - பிச்சை); அளித்தானே அமுது விடம் ஆர்ந்தானே - அமுது அளித்தவனே, விடம் உண்டவனே; (ஆர்தல் - உண்ணுதல்);
4)
ஆர்ந்தவனே அருநஞ்சை அரியயன்நே டொளித்தூணே
சார்ந்தவருக் கன்புடையாய் தலைமீது பாந்தள்வெண்
காந்தளணி கின்றவனே கஞ்சனூர்க் கற்பகமே
சாந்தமென நீறணியும் சங்கரனே அடிபோற்றி.
ஆர்ந்தவனே அருநஞ்சை - அரிய விடத்தை உண்டவனே; அரி அயன் நேடு ஒளித்தூணே - திருமாலும் பிரமனும் தேடிய சோதியே; (நேடுதல் - தேடுதல்); சார்ந்தவருக்கு அன்பு உடையாய் - அடி அடைந்தவர்களுக்கு அன்பு உடையவனே; தலைமீது பாந்தள் வெண்காந்தள் அணிகின்றவனே - முடிமேல் பாம்பையும் வெண்காந்தள் மலரையும் அணிந்தவனே; (பாந்தள் - பாம்பு); (வெண்காந்தள் - கோடல்); (சம்பந்தர் தேவாரம் - 2.29.9 - "கோடலொடு கூன்மதி குலாய சடைதன்மேல் ஆடரவம் வைத்தருளும் அப்பன்"); கஞ்சனூர்க் கற்பகமே - கஞ்சனூரில் உறைகின்ற கற்பகமே; சாந்தம் என நீறு அணியும் சங்கரனே - சந்தனம்போல் திருநீற்றைத் தரிக்கும் சங்கரனே;
5)
சங்கரனே சதாசிவனே தடவரைபோல் வந்துபொரு
வெங்கரியை உரிசெய்த வித்தகனே விண்ணிழிந்த
கங்கையடை செஞ்சடையாய் கஞ்சனூர்க் கற்பகமே
பொங்கியெழும் ஒளித்தூணே போதாநின் அடிபோற்றி.
தட வரைபோல் வந்து பொரு வெங்கரியை உரி செய்த வித்தகனே - பெரிய மலைபோல் வந்து போர்செய்த கொடிய யானையின் தோலை உரித்த வல்லவனே; (உரிசெய்தல் - தோலை உரித்தல்); (வித்தகன் - வல்லவன்); விண் இழிந்த கங்கை அடை செஞ்சடையாய் - வானிலிருந்து கீழே பாய்ந்த கங்கையைச் செஞ்சடையில் அடைத்தவனே; போதன் - ஞானன்;
6)
போதாரும் சடையானே புகழ்பாடு சுந்தரர்க்காத்
தூதேகும் தோழாமால் தொழுதேத்தும் ஒளித்தூணே
காதோர்வெண் குழையானே கஞ்சனூர்க் கற்பகமே
யாதோரொப் பில்லாத அற்புதனே அடிபோற்றி.
போது ஆரும் சடையானே - மலர்களைச் சடையில் அணிந்தவனே; புகழ் பாடு சுந்தரர்க்காத் தூது ஏகும் தோழா - பாமாலைகள் பாடிய சுந்தரருக்காகத் (திருவாரூரில் பரவை மனைக்குத்) தூது செல்லும் தோழனே; மால் தொழுதேத்தும் ஒளித்தூணே - திருமால் வணங்கிய சோதியே; காது ஓர் வெண்குழையானே - ஒரு காதில் வெண்குழையை அணிந்தவனே; (அர்தநாரீஸ்வரன்); யாது ஓர் ஒப்பு இல்லாத அற்புதனே - எவ்வித ஒப்பும் இல்லாத அற்புதனே;
7)
அற்புதனே அயன்மாலும் அறியாத ஒளித்தூணே
வெற்புதனை வில்லாக்கி வியனரணம் எய்தவனே
கற்பனையைக் கடந்துநிற்கும் கஞ்சனூர்க் கற்பகமே
மற்புயமெட் டுடையானே மணிகண்டா அடிபோற்றி.
வெற்புதனை - மலையை; வியன் அரணம் - பெரிய மதில்களை - முப்புரங்களை; (திருநாவுக்கரசர் தேவாரம் - 6.5.1 - "வில்லால் வியனரணம் எய்தாய் போற்றி"); கற்பனை - அறிவு; (பெரிய புராணம் - தில்லைவாழந்தணர் புராணம் - "கற்பனை கடந்த சோதி"); மற்புயம் எட்டு - வலிமை மிக்க எட்டுப் புஜங்கள்; (மல் - வலிமை; புயம் - தோள்); மணிகண்டன் - நீலகண்டன்;
8)
மணிகண்டா மலரவன்மால் வணங்கநின்ற ஒளித்தூணே
அணிகுன்றின் அடியரக்கன் அழநெரித்தாய் வெண்திங்கட்
கணியொன்று புனைவோனே கஞ்சனூர்க் கற்பகமே
பணிகண்டு பார்த்தற்குப் படையீந்தாய் அடிபோற்றி.
மலரவன் - பூமேல் உறையும் பிரமன்; அணி குன்று - அழகிய மலை - கயிலைமலை; வெண்திங்கள்-கணி ஒன்று புனைவோனே - வென்பிறையைக் கண்ணிமாலை போலத் திருமுடியில் அணிந்தவனே; (கணி - கண்ணி; இடைக்குறை விகாரம்; கண்ணி - தலையில் அணியும் மாலைவகை); (சம்பந்தர் தேவாரம் - 2.18.5 - "கணிநீலவண்டார் குழலாள் இவள்தன்"); பணி கண்டு பார்த்தற்குப் படை ஈந்தாய் - அருச்சுனனுடைய தொண்டினைக் கண்டு அவனுக்குப் பாசுபதாஸ்திரம் அளித்தவனே; (அப்பர் தேவாரம் - 6.19.11 - "பார்த்தனைப் பணிகண்டு பரிந்தான் தன்னை");
9)
படைப்பவனே முடிவிலெலாம் துடைப்பவனே மாலயனார்
இடைப்பெருகும் ஒளித்தூணே இடுமினென் றேந்திழையார்
கடைப்பலிக்கு நடப்பவனே கஞ்சனூர்க் கற்பகமே
சடைப்புனித கங்கையெனும் சலமுடையாய் அடிபோற்றி.
துடைத்தல் - ஒடுக்குதல்; பெருகுதல் - வளர்தல்; அளவுமிகுதல்; இடுமின் என்று ஏந்திழையார் கடைப் பலிக்கு நடப்பவனே - "இடுங்கள்" என்று பெண்களிடம் பிச்சை ஏற்க நடப்பவனே; (கடை - வாயில்; ஏழாம் வேற்றுமை உருபு) ;("இடுங்கள்" என்று பெண்கள் இருக்கும் இல்லங்களின் வாயிலுக்கு நடப்பவனே - என்றும் பொருள்கொள்ளலாம்); சடைப் புனித கங்கை எனும் சலம் உடையாய் - சடையில் தூய கங்கை என்ற ஆற்றை உடையவனே; ("சடையை உடைய புனிதனே; கங்கையென்ற நதியை அணிந்தவனே;" - என்றும் பொருள்கொள்ளலாம்); (சலம் - ஜலம் - நீர்);
10)
சலமுடைய சொல்லுரைத்தல் தவமாக்கொள் சழக்கருக்கு
நலமிலனே நான்முகன்மால் நடுவெழுந்த ஒளித்தூணே
கலமுடையார் தலையுடையாய் கஞ்சனூர்க் கற்பகமே
வலமுடையாய் மாதுதிகழ் வாமத்தாய் அடிபோற்றி.
சலம் - வஞ்சனை; பொய்ம்மை; தவமாக்கொள் - தவமாகக் கொள்கின்ற; சழக்கருக்கு - தீயவர்களுக்கு; நலம் இலனே - நலம் இல்லாதவனே - நன்மையைக் கொடாதவனே; (அப்பர் தேவாரம் - 4.11.6 - "சலம் இலன், சங்கரன், சார்ந்தவர்க்கு அலால் நலம் இலன்"); கலம் முடை ஆர் தலை உடையாய் - (பிச்சைப்)பாத்திரமாகப் புலால் நாறும் மண்டையோட்டை உடையவனே; வலம் - வெற்றி; வலிமை; வலப்பக்கம்; மாது திகழ் வாமத்தாய் - உமையம்மையைத் திருமேனியில் இடப்பக்கத்தில் உடையவனே; (வாமம் - இடப்பக்கம்);
11)
வாமத்துக் காலெடுத்த மாநடனே கடல்கடைய
ஓர்மத்தைத் தாங்கியவன் அயனறியா ஒளித்தூணே
காமுத்தா எனிலருளும் கஞ்சனூர்க் கற்பகமே
மாமத்த மலரணிந்த வார்சடையாய் அடிபோற்றி.
வாமத்துக் கால் எடுத்த மாநடனே - இடக்காலை உயர்த்தி ஆடும் நடராஜனே; (வாமம் - இடப்பக்கம்); (எடுத்தல் - உயர்த்துதல்); (நடன் - கூத்தன்);
கடல் கடைய ஓர் மத்தைத் தாங்கியவன், அயன் அறியா ஒளித்தூணே - தேவர்களும் அசுரர்களும் அமுதம் வேண்டிப் பாற்கடலில் மந்தரமலையை மத்தாக நட்டுக் கடைந்தபோது, அந்த மத்தை ஆமை வடிவில் சென்று தாங்கிய திருமாலும் பிரமனும் அறியாத ஒளித்தூணாக நின்றவனே;
"கா முத்தா" எனில் அருளும் கஞ்சனூர்க் கற்பகமே - "காக்கின்ற முக்தனே / காத்தருளாய் முக்தனே" என்று வேண்டினால் அருள்கின்றவனே, கஞ்சனூரில் உறைகின்ற, கற்பகமரம் ஒத்தவனே; (முத்தன் - இயல்பாகவே பாசங்களின் நீங்கியவன் - சிவபெருமான்);
மா மத்த-மலர் அணிந்த வார்-சடையாய் அடிபோற்றி - அழகிய ஊமத்த மலரை அணிந்த, நீண்ட சடை உடையவனே, உன் திருவடிகளுக்கு வணக்கம்;
வி. சுப்பிரமணியன்
----------- --------------