Saturday, September 3, 2016

03.03-41 – அடியும் முடியும் - (பொது)

03.03 – அடியும் முடியும் - (பொது)



2009-01-01 - 2009-07-02
அடியும் முடியும்
--------------------------------------
(108 குறள்வெண்பாக்கள்)
41) மான்
-------------
மான்மழு ஏந்தி; மலைமகள் ஓர்கூறன்;
கூன்பிறை சூடி;எம் மான்.



மான் - 1) மான் (deer); 2) சுவாமி; (எம்மான் = எம் சுவாமி);
மான் மழு ஏந்தி - மானையும் மழுவையும் ஏந்தியவன்;
கூன்பிறை சூடி - வளைந்த பிறைச்சந்திரனைச் சூடியவன்;



42) துணை
------------------
துணையில்லாச் சோதியன், தூமதி சூடி
இணையடியே நல்ல துணை.



துணை - 1) ஒப்பு; 2) காவல்;
தூ மதி சூடி - தூய வெண் பிறையைச் சூடியவன்;



43) தொண்டு
----------------------
தொண்டு கிழவனெனச் சொல்லுமுன் னேநீல
கண்டனுக்குச் செய்திருத் தொண்டு.



தொண்டு கிழவன் - முதிர்ந்த கிழவன்;
திருத் தொண்டு பணிவிடை;



44) நடு
------------
நடுமுதல்ஈ றானான் அரக்கனைஅ டர்க்க
இடுதாளை நெஞ்சில் நடு.



பதம் பிரித்து:
நடு முதல் ஈறு ஆனான் அரக்கனை அடர்க்க
இடு தாளை நெஞ்சில் நடு.


நடு - 1) இடைப்பட்டது (That which is intermediate, as in place or time); 2) "ஊன்று" என்ற ஏவல்; (நடுதல் - ஊன்றுதல்);
நடு முதல் ஈறு ஆனான் - காலத்தைக் கடந்த சிவபெருமான்;
அரக்கனை அடர்க்க இடு தாளை நெஞ்சில் நடு - இராவணனை நசுக்க ஊன்றிய திருவடியை மனத்தில் ஸ்தாபனம் செய்;



45) ஈறு
------------
ஈறுபல் இல்லாக் கபாலத்தை ஏந்தினார்க்
காறுசடை மேல்;இல்லை ஈறு.



பதம் பிரித்து:
ஈறு பல் இல்லாக் கபாலத்தை ஏந்தினார்க்கு
ஆறு சடைமேல்; இல்லை ஈறு.

ஈறு - 1) வாயில் உள்ள தசைப்பகுதி;  2) முடிவு; அந்தம்;
ஈறு பல் இல்லாக் கபாலத்தை ஏந்தினார்க்கு - ஈறும் பல்லும் இல்லாத மண்டையோட்டை ஏந்தியவரான சிவபெருமானாருக்கு; (சம்பந்தர் தேவாரம் - 1.51.4 - "பல்லிலோடு கையிலேந்திப் பல்கடையும் பலிதேர்ந்து");
இல்லை ஈறு - முடிவு இல்லை - என்றும் இருப்பவர்;


46) மணி
---------------
மணிகண்டன் கோயிலில் மாலைப் பொழுதில்
பணிவோர் அடிப்பார் மணி.



மணி - 1) நீலமணி; 2) கண்டை (Bell; gong);



2009-02-12
47) அடி
-----------
அடிபடுதல் ஏனோ? அருவினை நீங்கப்
பிடிமனமே ஈசன் அடி.



48) கழல்
-------------
கழலா வினையும் கழலும் மனமே
விழைவாய் இறைவன் கழல்.



கழல்தல் - நீங்குதல்;
கழல் - வீரக்கழல் அணிந்த திருவடி;
விழைதல் - விரும்புதல்;



2009-02-13
49) கொடி
---------------
கொடியிடையாள் கூறுடையான் கோலமதி சூடும்
அடிகளுக் கேற்றுக் கொடி.



கொடி - 1) படர்கின்ற கொடி (தாவர வகை) (Creeper); 2) துவஜம் (Flag);
கோல மதி - அழகிய பிறைச்சந்திரன்;
அடிகள் - கடவுள்;
ஏற்றுக் கொடி - இடபச் சின்னம் பொறித்த கொடி;



2009-02-13
50) என்
------------
என்நெஞ்சே! முன்வினைகள் போக, இறைவனைநீ
உன்னா திருப்பதும் என்?



என் - 1) என்னுடைய; 2) என்ன (why);
உன்னுதல் - நினைத்தல்;



அன்போடு,

வி. சுப்பிரமணியன்

No comments:

Post a Comment